Rama's lament | Aranya-Kanda-Sarga-60 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதை குறித்து மரத்துக்கு மரம் விசாரித்த ராமனின் வேதனை...
{ஆசிரமத்தை நோக்கித்} திரும்பி வந்து கொண்டிருந்த ராமனுக்கு, இடது கண்ணின் கீழ் இமை அடிக்கடி துடித்தது, {நடையில்} தடுமாற்றமும், உடல் நடுக்கமும் ஏற்பட்டது.(1) அசுபமான நிமித்தங்களை கவனமாக அவதானித்தவன், "சீதைக்கு க்ஷேமம் {நன்மை} நேருமா?" என்று மீண்டும் மீண்டும் கூச்சலிட்டான்.(2) பிறகு, துரிதமாக சீதையை தரிசிக்கும் ஆவலில் சென்று, சூனியமான வசிப்பிடத்தைக் கண்டு, மனக்கவலையடைந்தான்.(3) இரகுநந்தனன், வேகத்தால் மேலெழும்புகிறவன் போல, கைகளை வீசி நடந்து, அங்கேயும் இங்கேயுமென குடில் ஸ்தானங்கள் {ஓலைக் குடிசைகள்} எங்கும் சுற்றி அலைந்த பிறகு, சீதை இல்லாமல் ஹேமந்த ருதுவில் {பனிக்காலத்தில்} அழிந்த பத்மினீயை {தாமரைத் தடாகத்தைப்} போல அழகற்றிருக்கும் பர்ணசாலையைக் கண்டான்.(4,5)
அழுவது போன்ற விருக்ஷங்களையும், உதிர்ந்த புஷ்பங்களையும், பொலிவற்றிருந்த மிருகங்களையும், துவிஜங்களையும் {பறவைகளையும்}, முற்றிலும் தகர்ந்து, முழுமையாகக் கைவிடப்பட்ட வன தைவதங்களையும், முற்றாகச் சிதறிக் கிடக்கும் மான்தோல்களையும், குசப் புற்களையும், முற்றாகக் கலைந்து கிடக்கும் புல்லாசனங்களையும், பாய்களையும் கண்டு, சூனியமாக இருந்த குடில் ஸ்தானத்தில் மீண்டும் மீண்டும் {பின்வருமாறு ராமன்} புலம்பினான்:(6,7) "அச்சமுடையவள் அபகரிக்கப்பட்டிருப்பாள், அல்லது கொல்லப்பட்டிருப்பாள், அல்லது {வழிதெரியாமல் எங்காவது} திரிந்து கொண்டிருப்பாள், அல்லது பக்ஷிக்கப்பட்டிருப்பாள் {உண்ணப்பட்டிருப்பாள்}, அல்லது {விளையாட்டாக} மறைந்திருப்பாள், அல்லது வனத்தில் எங்காவது இருப்பாள்.(8) அல்லது புஷ்பங்களையும், பழங்களையும் பறிக்க மீண்டும் சென்றிருப்பாள், அல்லது பத்மினிக்கு {தாமரைத் தடாகத்திற்குச்} சென்றிருப்பாள், அல்லது ஜலத்திற்காக நதிக்குச் சென்றிருப்பாள்" {என்றான் ராமன்}.(9)
விடாமுயற்சியுடன் தன் பிரியையை {காதலியை} வனத்தில் தேடினாலும் அடையாமல், சோகத்தால் சிவந்த பார்வையுடன் கூடிய அந்த ஸ்ரீமான் {ராமன்} உன்மத்தனை {பைத்தியக்காரனைப்} போலத் தெரிந்தான்[1].(10) இராமன், விருக்ஷத்திலிருந்து விருக்ஷத்திற்கும், {கிரியிலிருந்து} கிரிக்கும், நதியிலிருந்து நதத்திற்கும்[2] அழுது கொண்டே அலைந்தோடினான். அவன் சோக ஆர்ணவத்தில் {கடலில்} மூழ்கினான்.(11) "கதம்பமே {கதம்ப மரமே}, கதம்பங்களில் {கதம்ப மலர்களில்} விருப்பமுள்ளவள் என் பிரியை {காதலி}. அவளை எங்கேனும் கண்டாயா? அழகிய முகம்படைத்த அந்த சீதையை நீ அறிந்தால் சொல்வாயாக.(12) பில்வமே {பில்வ மரமே}, மென்மையில் தளிர்களுக்கு ஒப்பானவளும், மஞ்சள் பட்டாடை உடுத்தியவளும், பில்வத்திற்கு ஒப்பான ஸ்தனங்களைக் கொண்டவளுமான அவளைக் கண்டிருந்தால் சொல்வாயாக.(13) அல்லது அர்ஜுனமே {மருத மரமே}, அர்ஜனங்களில் {மருத மலர்களில்} விருப்பமுள்ளவனும், மெலிந்தவளும், ஜனகரின் மகளுமான என் பிரியை எங்கேனும் ஜீவித்திருக்கிறாளா? இல்லையா? சொல்வாயாக.(14)
[1] கைத்த சிந்தையன் கனங்குழை அணங்கினைக் காணான்உய்த்து வாழ்தர வேறு ஒரு பொருள் இலான் உதவவைத்த மாநிதி மண்ணொடும் மறைந்தன வாங்கிப்பொய்யுளோர் கொள திகைத்து நின்றானையும் போன்றான்- கம்பராமாயணம் 3474ம் பாடல், ஜடாயு உயிர்நீத்த படலம்பொருள்: வெறுத்த மனம் உடைய ராமன், சிறந்த காதணியை அணிந்த, தெய்வத்தன்மை பொருந்திய பெண்ணான சீதையைக் காணாமல், வைத்து வாழ்வதற்கு ஒரு பொருளும் இல்லாதவன் போலும், வாழ்வதற்காகக் கொண்டு சென்று, மண்ணில் புதைத்து மறைத்து வைத்த பெரும் செல்வத்தை வஞ்சகர்கள் தோண்டி எடுத்துக் கொண்டதும் திகைத்து நின்றவனைப் போலும் இருந்தான்.
[2] நதி என்றால் கிழக்கு நோக்கி ஓடும் ஆறு. நதம் என்றால் மேற்கு நோக்கி ஓடும் ஆறு. பஞ்சவடி இருக்கும் திசையில் கோதாவரியைத் தவிர நர்மதை, தபதி போன்ற ஆறுகள் மேற்கு நோக்கி ஓடும் நதங்களே. கோதாவரி கிழக்கு நோக்கிப் பாயும் ஆறு. பஞ்சவடி, ஜனஸ்தானம் போன்ற இடங்களை நிர்ணயம் செய்வதில் இந்த சுலோகமும் உதவக்கூடும்.
இலதைகள் {கொடிகள்}, தளிர்கள், புஷ்பங்கள் ஆகியவற்றால் நிறைந்ததாக இந்த வனஸ்பதி ஒளிர்ந்து கொண்டிருப்பதால், ககுபத்தை {கருமருதத்தைப்} போன்ற தொடைகளைக் கொண்ட அந்த மைதிலியை இந்த ககுபம் உள்ளபடியே அறிந்திருக்கும்.(15) மரங்களில் சிறந்த இந்தத் திலகத்தின் {மஞ்சாடி மரத்தின்} அருகில் தேனீக்கள் கீதம் பாடுவதால், திலகத்தில் விருப்பமுள்ளவளை இஃது உள்ளபடியே அறிந்திருக்கும்.(16) சோகத்தை நீக்கும் அசோகமே {அசோக மரமே}, என் பிரியையை {காதலியைக்} காட்டி சோகத்தால் தவிக்கும் புத்தியைக் கொண்ட என்னை சீக்கிரமே உன் பெயருடையவனாக {சோகமற்ற அசோகனாக} மாற்றுவாயாக.(17) தாலமே {பனை மரமே}, பழுத்த தாலம்பழம் {பனம்பழம்} போன்ற ஸ்தனங்களைக் கொண்டவளை நீ கண்டாயா? உனக்கு, என்னிடம் கருணையுண்டானால், அந்த அழகிய இடை கொண்டவளைக் குறித்துச் சொல்வாயாக.(18) ஜம்புவே {நாவல் மரமே}, நீ சீதையைக் கண்டிருந்தால், ஜம்பூநத {பொன்} நிறம் கொண்ட என் பிரியையை {காதலியை} உள்ளபடியே நீ அறிந்திருந்தால் என்னிடம் தயங்காமல் சொல்வாயாக[3].(19) கர்ணீகாரமே {கோங்கு மரமே}, நீ இப்போது புஷ்பித்து அழகாகப் பிரகாசிக்கிறாய். அஹோ, கர்ணீகாரங்களை {கோங்கு மலர்களை} விரும்பும் சாத்வியான {களங்கமற்றவளான} என் பிரியையை {காதலியைக்} கண்டிருந்தால் சொல்வாயாக" {என்று புலம்பினான் ராமன்}.(20)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த சுலோகத்திற்கான மற்றொரு வடிவம் {வேறு பாடங்களில் உள்ள சுலோகத்திற்கு ஏற்ப} கொடுக்கப்பட்டிருக்கிறது, அது பின்வருமாறு, "ஜம்புவே, நீ சீதையைக் கண்டிருந்தால், நாவல் பழத்தின் மென்மையான நிறம் கொண்ட என் பிரியையை {காதலியை} உள்ளபடியே நீ அறிந்திருந்தால் என்னிடம் தயங்காமல் சொல்வாயாக" என்றருக்கிறது.
பெரும்புகழ்வாய்ந்தவனும், ராமனுமான {இதயங்கவர்பவனுமான} ராமன் வனத்தில் சூதம் {மா}, நீபம் {கடம்பு}, மஹாசாலம் {பெரும் ஆச்சா}, பனசம் {பலா}, குரவம் {மருதாணி}, தவம் {மாதுளம்}, பகுளம் {மகிழம்}, புன்னாகம் {புன்னை}, சந்தனம், கேதகம் {தாழை} முதலிய மரங்களைக் கண்டு,[4] அவற்றிடம் சென்று {இவ்வாறு} கேட்டுத் திரிந்த போது உன்மத்தனை {பைத்தியக்காரனைப்} போலத் தெரிந்தான்.(21,22)
[4] வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "சூதம் {மா}, நீபம் {கடம்பு}, மஹாசாலம் {பெரும் ஆச்சா}, பனசம் {பலா}, மருதாணி, மாதுளம், வேங்கை முதலிய மரங்களையும், மல்லிகை, முல்லை, சம்பகம், தாழை முதலிய செடிகளையும் கண்டு" என்றிருக்கிறது. தமிழ்ப்பதிப்புகளான தர்மாலயப்பதிப்பிலும், தாதாசாரியர் பதிப்பிலும் இவ்வாறே இருக்கிறது.
{பிறகும் ராமன்}, "அல்லது, மிருகமே {மானே}, மான் குட்டியைப் போன்ற கண்களைக் கொண்ட மைதிலியை அறிவாயா? மான் போலப் பார்க்கும் அந்த காந்தை, பெண்மான் கூட்டத்துடன் இருக்கிறாளா?(23) கஜமே {யானையே}, கஜநாசியை {யானையின் துதிக்கையைப்} போன்ற தொடைகளைக் கொண்டவளை நீ கண்டிருந்தால், என்னிடம் சொல்வாயாக. வரவாரணமே {யானைகளில் சிறந்தவனே}, அவளைக் குறித்து நீ அறிவாய் என்று நினைக்கிறேன்.(24) சார்தூலமே {புலியே}, சந்திரனைப் போல ஒளிரும் முகம் படைத்த என் பிரியையான {காதலியான} அந்த மைதிலியைக் கண்டிருந்தால், நம்பிக்கையுடன் என்னிடம் சொல்வாயாக. உனக்குப் பயம் வேண்டாம்.(25)
கமலம் போன்ற கண்களைக் கொண்ட பிரியே {காதலியே}, ஏன் ஓடுகிறாய்? நான் உன்னைக் கண்டுவிட்டேன். நீ விருக்ஷத்தில் மறைந்திருக்கிறாய். எனக்கு ஏன் மறுமொழி கூறாதிருக்கிறாய்?(26) அழகிய இடையைக் கொண்டவளே, நில், நிற்பாயாக. உனக்கு என்னிடம் கருணை இல்லையா? வெகுநேரம் பரிகாசம் செய்யாதே. எதற்காக என்னைப் புறக்கணிக்கிறாய்?(27) வரவர்ணினியே {அழகிய நிறம் கொண்டவளே}, நீ ஓடினாலும், மஞ்சள் பட்டாடை உன்னைக் காட்டிக் கொடுக்கிறது. நல்ல ஹிருதயம் கொண்டவளென்றால் நிற்பாயாக.(28) அல்லது {இஃது} அவள் இல்லையோ? அந்த சாருஹாசினி {அழகிய புன்னகை கொண்டவள்} நிச்சயம் கொல்லப்பட்டிருப்பாள். இத்தகைய இழிந்த நிலையை அடைந்திருக்கும் என்னை நிச்சயம் அவள் புறக்கணிக்கமாட்டாள்.(29)
என்னைவிட்டுப் பிரிந்தவளும், சிறுமியுமான என் பிரியையின் {காதலியின்}, சர்வ அங்கங்களையும் பகுத்து {துண்டித்து} பிசிதாசனர்களான {பச்சை மாமிசம் உண்பவர்களான} ராக்ஷசர்கள் பக்ஷித்திருப்பார்கள் {உண்டிருப்பார்கள்} என்பது வெளிப்படை.(30) அப்போது அழகிய பற்களையும், உதடுகளையும், அழகிய நாசியையும், அழகிய குண்டலங்களையும் கொண்டவளின் பூர்ண சந்திரனுக்கு ஒப்பான முகம், நிச்சயம் ஒளியற்றதாக மாறியிருக்கும்.(31) அந்த காந்தை அழுது கொண்டிருக்கும்போது, சம்பக வர்ண ஒளியுடன் கூடிய உசிதமான கழுத்தாபரணங்களுடனும் {அட்டிகைகளுடனும்}, வடிவழகுடனும் கூடிய அவளது கழுத்து பக்ஷிக்கப்பட்டிருக்கும் {உண்ணப்பட்டிருக்கும்}.(32) தளிர்போல் நெளிந்து படபடக்கும் மென்மையான கைவிரல்கள், ஹஸ்த ஆபரணங்கள் {கைவளைகள்}, அங்கதங்கள் {தோள்வளைகள்} ஆகியவற்றுடன் கூடிய அவளது கைகள் இரண்டும் நிச்சயம் பக்ஷிக்கப்பட்டிருக்கும்.(33) என்னைப் பிரிந்த அந்தச் சிறுமி, ராக்ஷசர்களின் பக்ஷணம் {சிற்றுண்டி} போலவும், பந்துக்கள் பலராலும், உறவினர் கூட்டத்தாலும் கைவிடப்பட்டவள் போலவும் பக்ஷிக்கப்பட்டிருப்பாள் {உண்ணப்பட்டிருப்பாள்}.(34) மஹாபலவானே, ஹா லக்ஷ்மணா, நீ எங்கேனும் என் பிரியையை {காதலியைப்} பார்த்தாயா? பத்ரையே {மங்கலமான பெண்ணே}, ஹா பிரியே {அன்புக்குரிய காதலியே}, எங்கே சென்றுவிட்டாய்? ஹா சீதே" என்று மீண்டும் மீண்டும் சொன்னான் {ராமன்}.(35)
இராமன், இவ்வாறு புலம்பியபடியே வனத்திற்கு வனம் ஓடினான். சில இடங்களில் வேகத்தால் சுழன்றான்; சில இடங்களில் பலத்தால் திகைத்தான்; சில இடங்களில் அந்த காந்தையைத் தேடி உணர்ச்சிவசப்பட்ட உன்மத்தனைப் போல அலைந்தான்.(36,37அ) அவன், வனங்களிலும், நதிகளிலும், சைலங்களிலும் {மலைகளிலும்}, கிரிகளின் பிரஸ்ரவணங்களிலும் {மலை அருவிகளிலும்}, கானகங்களிலும் {அடர்ந்த காடுகளிலும்} ஓய்வில்லாமல் வேகமாகச் சுற்றித் திரிந்தான்.(37ஆ,இ) பரந்த மஹத்தான வனத்தில் இவ்வாறே அவன் எங்கும் தேடினாலும், மைதிலியை நோக்கிச் செல்லும் இஷ்டம் நிறைவேறாதவனாக மீண்டும் மீண்டும் தன் பிரியையின் மார்க்கத்தில் {காதலி சென்ற பாதையில்} பரம சிரமத்துடன் வேண்டிய முயற்சிகளைச் செய்து கொண்டிருந்தான்.(38)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 60ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |