Back to Hermitage in Pachavati | Aranya-Kanda-Sarga-58 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் அழுகை; பஞ்சவடியில் உள்ள குடிலிலும், வெளியேயும் எனச் சுற்றிலும் சீதையைத் தேடி வருந்தியது...
தர்மாத்மாவான அந்த தசரதாத்மஜன் {ராமன்}, சூனியத்தில் {யாருமற்ற இடத்தில்} வைதேஹி இல்லாமல் தீனமாக {கவலையில் சோர்வுற்றவனாக} வந்த லக்ஷ்மணனைக் கண்டதும் {பின்வருமாறு} கேட்டான்:(1) "இலக்ஷ்மணா, தண்டகாரண்யத்திற்குப் புறப்பட்ட என்னை, எவள் பின்தொடர்ந்து வந்தாளோ, எவளை விட்டு நீ இங்கே வந்தாயோ, அந்த வைதேஹி எங்கே?[1](2) இராஜ்ஜியத்தை இழந்து, தண்டகம் விரைந்து, தீனமடைந்த என் துக்கத்தில் சஹாயம் {உதவி} செய்தவளும், மெல்லிடையாளுமான அந்த வைதேஹி எங்கே?(3) வீரா, எவள் இல்லாமல் ஒரு முஹூர்த்தமும் ஜீவித்திருக்க மாட்டேனோ, எவள் ஸுரமகளுக்கு ஒப்பானவளோ, என் பிராணனுக்கு சஹாயம் செய்பவளோ அந்த சீதை எங்கே?(4)
[1] தண்டகாரண்யத்திற்குப் புறப்பட்ட என்னைப் பின்தொடர்ந்து வந்தவளான வைதேஹியை நீ எங்கே விட்டு வந்தாய்?
இலக்ஷ்மணா, புடம்போட்ட தங்கம் போன்ற அந்த ஜனகாத்மஜை இல்லாமல் அமரர்களின் பதித்வத்தையோ {தலைமைத்துவத்தையோ} பிருத்வியினுடையதையோ நான் இச்சிக்க மாட்டேன்[2].(5) வீரா, என் பிராணனைவிடப் பிரியத்திற்குரிய வைதேஹி, எவ்வாறேனும் ஜீவனுடன் இருப்பாளா? நான் நாடுகடத்தப்பட்டது எவ்வாறேனும் வீண் போகாதிருக்குமா?(6) சௌமித்ரியே, சீதையின் நிமித்தம் நான் மரித்து, நீ {அயோத்திக்குத்} திரும்பிச் சென்றாலாவது, அந்தக் கைகேயி ஆசை நிறைவேறி எவ்வாறேனும் சுகமாக இருப்பாளா? (7) சௌம்யா, புத்திரன் மரித்த தபஸ்வினியான கௌசல்யை, புத்திரனுடனும், ராஜ்ஜியத்துடனும் சித்தம் நிறைவேறிய கைகேயியின் அருகில் எவ்வாறேனும்[3] இருப்பாளா?(8)
[2] சீதை இல்லாமல் தேவலோக ஆட்சியையோ, பூலோக ஆட்சியையோ நான் விரும்ப மாட்டேன்.
[3] கௌசலையால் எவ்வாறேனும் கைகேயியுடன் சேர்ந்து இருக்க முடியுமா?
இலக்ஷ்மணா, வைதேஹி ஜீவித்திருந்தால் மீண்டும் ஆசிரமத்திற்குச் செல்ல விரும்புவேன். நல்விருத்தம் {நன்னடத்தை} கொண்ட அவள் சென்றுவிட்டால் {இறந்துவிட்டால்} பிராணனைக் கைவிடுவேன்.(9) இலக்ஷ்மணா, நான் ஆசிரமத்திற்குப் போகும்போது, வைதேஹியான சீதை நல்ல புன்னகையுடன் மீண்டும் பேசாமல் போனால்[4] நான் அழிந்து விடுவேன்.(10) இலக்ஷ்மணா, வைதேஹி ஜீவித்திருக்கிறாளா? இல்லையா? உன்னுடைய கவனக்குறைவால், அந்த தபஸ்வினி ஒருவேளை ராக்ஷசர்களால் பக்ஷிக்கப்பட்டிருப்பாளா {உண்ணப்பட்டிருப்பாளா}?(11) சுகுமாரியும், சிறுமியும், துக்கத்தை நித்தியம் {ஒருபோதும்} பார்க்காதவளுமான அந்த வைதேஹி, என்னைப் பிரிந்த சோகத்தால் மனமுடைந்திருப்பாள் என்பது வெளிப்படை.(12)
[4] என்னிடம் அவ்வாறு புன்னகைத்துப் பேசுவதற்கு அவள் அங்கே இல்லாமல் போனால்
கொடியவனும், துர் ஆத்மாவுமான அந்த ராக்ஷசன் {மாரீசன்}, "இலக்ஷ்மணா" என்று கதறியதுபோது, எல்லாவகையிலும் உன்னிடமும் பயம் ஜனித்திருக்கும்.(13) வைதேஹியும், எனக்கு ஒப்பான அந்த சுவரத்தைக் கேட்டிருப்பாள் என்றே நினைக்கிறேன். அச்சமடைந்து அவள் உன்னை அவசரப்படுத்தியதால், என்னைக் காண சீக்கிரமாக வந்திருக்கிறாய்.(14) சீதையை வனத்தில் {தனியாக} விட்டதன் மூலம், அனைத்து வகையிலும் கஷ்டத்தை விளைவித்துவிட்டாய். எதிர்வினையாற்றும் வாய்ப்பை, கொடிய ராக்ஷசர்களுக்குக் கொடுத்துவிட்டாய்.(15) பிசிதாசனர்களும் {பச்சை மாமிசம் உண்பவர்களும்}, கரன் கொல்லப்பட்ட துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களும், கோரர்களுமான ராக்ஷசர்களால் சீதை கொல்லப்பட்டிருப்பாள். இதில் சந்தேகமில்லை.(16) ரிபு நாசனா {பகைவரை அழிப்பவனே}, எல்லாவகையிலும் விசனத்தில் மூழ்கியிருக்கும் என்னால் இப்போது என்ன செய்ய முடியும்? இத்தகையதே பிராப்தம் என்று கருதுகிறேன். அஹோ" {என்றான் ராமன்}.(17)
மெல்லிடை கொண்ட சீதையைக் குறித்து இவ்வாறு சிந்தித்த ராகவன் {ராமன்}, லக்ஷ்மணனுடன் சேர்ந்து, ஜனஸ்தானத்திலிருந்து துரிதமாக {பஞ்சவடிக்கு} வந்து சேர்ந்தான்.(18) வேதனையின் ரூபமாக அனுஜனிடம் {வேதனையின் வடிவமாகத் தம்பியிடம்} கடிந்தவனும், பசியினாலும், சிரமத்தாலும், தாகத்தாலும் பெருமூச்சுவிட்ட அந்த வீரன் {ராமன்}, அகன்ற முகப்புடன் {வாயிலுடன்}, சன்னமில்லாதிருக்கும் {ஆளரவமற்றிருக்கும்} ஆசிரமத்தை அடைந்து, அது சூனியமாக {வெறுமையாக} இருப்பதைக் கண்டு, அதற்குள் சென்று, மீண்டு, முன்பு திளைத்திருந்த இடங்களுக்குச் சென்று, தாங்கள் வசித்திருந்த பூமிகளைக் கண்டு, "இஃது அப்படியே ஆயிற்றே" என்று குறிப்பிட்டு, மயிர்ச்சிலிர்ப்புடன் கூடிய பெருந்துன்பத்தை அடைந்தான்[5].(19,20)
[5] ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்தோடு இவர்ந்த பூஞ்சுரி குழுலாள் தனைக் காணான்கூடு தன்னுடையது பிரிந்து ஆருயிர் குறியாநேடி வந்து அது கண்டிலது ஆம் என நின்றான்.- கம்பராமாயணம் 3473ம் பாடல், சடாயு உயிர் நீத்த படலம்பொருள்: விரைவாக ஓடி வந்த ராமன், சோலையில் உதவும் இதழ்கள் நெருங்கிய மலர்களை அணிந்த கூந்தலைக் கொண்ட சீதையைக் காணாதவனாக அருமையான உயிர் தன்னுடைய உடலைப் பிரிந்து சென்று குறியாகத் தேடி வந்து அவ்வுடம்பைக் காணாமல் நின்றதுப் போல் நின்றான்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 58ல் உள்ள சுலோகங்கள்: 20
Previous | | Sanskrit | | English | | Next |