Ill omens | Aranya-Kanda-Sarga-57 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாரீசனைக் கொன்று திரும்பிய ராமன்; வழியில் லக்ஷ்மணனைக் கண்டு, சீதையைத் தனியாக விட்டு வந்ததற்காகக் கண்டித்தது; தீய சகுனங்களை மீண்டும் கண்டது...
இராமன், மிருக ரூபத்தில் {மான் வடிவில்} திரிந்தவனும், காமரூபியுமான {விரும்பிய வடிவை எடுக்கவல்லவனுமான} ராக்ஷசன் மாரீசனைக் கொன்றுவிட்டுத் தன் பாதையில் துரிதமாகத் திரும்பிக் கொண்டிருந்தான்.(1) மைதிலியைக் காணும் அவசரத்துடன் அவன் சென்று கொண்டிருந்தபோது, அவனுக்குப் பின்னால் குரூர சுவரமுடைய நரி ஊளையிட்டுக் கொண்டிருந்தது.(2)
அவன், பயங்கர ரோமஹர்ஷணத்தை {மயிர்ச்சிலிர்ப்பை} ஏற்படுத்தும் அந்த நரியின் சுவரத்தை {ஊளையை} கவனித்து, அந்த சுவரத்தால் பெரிதும் சந்தேகமடைந்து {பின்வருமாறு} சிந்திக்கத் தொடங்கினான்:(3) "ஐயோ, நரி இவ்வாறு ஊளையிடுவதை நான் அசுபமாகக் கருதுகிறேன். இராக்ஷசர்களால் பக்ஷிக்கப்படாமல் வைதேஹி நலமாக இருப்பாளாக.(4) மிருக ரூபத்தில் {மான் வடிவில்} இருந்த மாரீசன், என் சுவரத்தை அறிந்து, அதே போன்ற பாவத்தில் அழைத்ததை லக்ஷ்மணன் கேட்டிருப்பானோ?(5) அந்த சௌமித்ரி, அந்த சுவரத்தைக் கேட்டு, அவளைத் தனியாக விட்டிருப்பானோ? அல்லது மைதிலியால் இங்கே அனுப்பப்பட்டவனாக, சீக்கிரமே எனக்காக இங்கே வந்து கொண்டிருப்பானோ?(6) எந்த மாரீசன், காஞ்சன மிருகமாகி, என்னை ஆசிரமத்தில் இருந்து அப்புறப்படுத்தி, தூரமாக அழைத்துச் சென்றானோ, அவன் சரத்தால் தாக்கப்பட்டு ராக்ஷசனாகி, "ஹா லக்ஷ்மணா, நான் மாண்டேன்" {என்ற} இவ்வாறான வாக்கியத்தை உரக்க கதறியதும், ராக்ஷசர்கள் ஒன்றுசேர்ந்து சீதையைக் கொல்லவே நிச்சயம் நினைத்திருப்பார்கள்.(7,8) வனத்தில் நானில்லாமல் அவர்கள் இருவரும் நலமாக இருப்பார்களா? ஜனஸ்தானத்தின் நிமித்தம் ராக்ஷசர்கள் என்னிடம் வைரம் கொண்டிருந்தனர். இப்போது கோரமான பல நிமித்தங்களும் தென்படுகின்றன" {என்று நினைத்தான் ராமன்}.(9,10அ)
ஆத்மவானான ராமன், திரும்பிவரும்போது நரியின் ஊளையைக் கேட்டது, மிருக ரூபத்தில்வந்த ராக்ஷசனால் தான் அப்புறப்படுத்தப்பட்டது ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்தவாறே ஆசிரமத்தை நோக்கித் துரிதமாகச் சென்றான்.(10ஆ,11) பெரிதும் சந்தேகமடைந்த ராகவன், ஜனஸ்தானத்தை அடைந்ததும்[1], தீனமடைந்த மிருக பக்ஷிகள், தீன மனத்துடன் கூடிய அவனை நெருங்கின.(12) அந்த மஹாத்மாவின் இடதுபுறம் திரும்பி {அபிரதக்ஷிணமாகத் திரிந்து}[2] கோர சுவரத்துடன் விலகின. இராகவன் மஹாகோரமான அந்த நிமித்தங்களைக் கண்ட பிறகே துரிதமாகத் தன் ஆசிரமத்தை நோக்கி {பஞ்சவடிக்கு} விரைந்து சென்றான்.(13)
[1] இராமனின் ஆசிரமம் பஞ்சவடியில் இருந்தது. 3:18:24,25ல் பஞ்சவடியில் காதுகளும், மூக்கும் அறுபட்ட சூர்ப்பணகை மஹாவனத்திற்குள் பிரவேசித்து, ராக்ஷசக் கூட்டத்தால் சூழப்பட்ட ஜனஸ்தானத்தை அடைந்தாள் என்பதையும், அதன்பிறகு கரன் ஜனஸ்தானத்தில் இருந்து படையெடுத்து பஞ்சவடிக்கு வந்தான் என்பதையும் கண்டிருக்கிறோம். எனில், மாரீசனைக் கொல்ல ராமன் பஞ்சவடியில் இருந்து ஜனஸ்தானத்தைக் கடந்து சென்றிருக்கிறான் என்றாகிறது. இப்போது மாரீசனைக் கொன்ற இடத்தில் இருந்து திரும்பி ஜனஸ்தானத்தை அடைந்திருக்கிறான். இன்னும் பஞ்சவடிக்கு அவன் செல்ல வேண்டும்.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "விலங்குகளோ, பறவைகளோ ஒருவரின் இடப்புறத்தில் இருந்து வலப்பக்கமாகச் செல்வது தீய நிமித்தமாகக் கொள்ளப்படுகிறது. "அநேந ம்ருʼக³ பக்ஷிணாம் அப்ரத³க்ஷிண க³மநம் அஷு²ப⁴கரம் இதி உக்த்யா ப்ரத³க்ஷிண க³மநம் ஷு²ப⁴கரம் இதி ஸூசிதம் - ம்ருʼகா³ விஹந்கா³꞉ ச க³தா꞉ ப்ரத³க்ஷிணம் மஹீப்⁴ருʼதாம் காந்க்ஷித கார்ய ஸித்³த⁴யே" என்று ரத்னமாலா சொல்கிறது" என்றிருக்கிறது. அந்த அடிக்குறிப்பில் உள்ள சுலோகத்தின் பொருள், "மிருக பக்ஷிகள் அபிரதக்ஷிணமாகச் செல்வது அசுபமாகும். அவையே பிரதக்ஷிணமாகச் செல்வது சுபமாகும். மிருகங்களும் பறவைகளும் காரிய சித்திக்காக பூமியை பிரதக்ஷிணம் செய்கின்றன. பிரதக்ஷிணம் என்றால் வலமாகச் சுற்றுவது, அபிரதக்ஷிணம் என்றால் இடமாகச் சுற்றுவது. அவ்வாறெனில் தேசிராஜு ஹனுமந்தராவ் அடிக்குறிப்பில் உள்ள விளக்கம் முரணாகத் தெரிகிறது. மன்மதநாததத்தர் பதிப்பில், "பறவைகளும், விலங்குகளும் துன்பத்திலிருந்த அந்த மஹாத்மாவை, சோர்வுடன் அணுகின; அவை அவனது இடப்புறத்தில் இருந்து பயங்கரமாகக் கதறின" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி பதிப்பில், "பயத்தால் நிறைந்த இதயத்துடன் கூடிய அவன் பறவைகளும், விலங்குகளும் தன் இடப்பக்கத்திற்குக் கடந்து சென்று பயங்கரமாகக் கதறுவதைக் கண்டான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "சோர்வுடன் இருந்த விலங்குகளும், பறவைகளும், பயங்கரக் குரல்களில் கதறியவாறே அந்த மஹாத்மாவின் இடப்புறத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன" என்றிருக்கிறது. தர்மாலயப் பதிப்பில், "வேதனைப்படும் மிருகங்களும் பக்ஷிகளும் மனவேதனையுற்ற அந்த மகாத்மாவைக் கிட்டின. இடதுபுறமாய் வந்து அபசகுனங்களை சூசிப்பிக்கும் கூச்சல்களை இட்டன" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "பற்பல அபசகுனங்களும் காணப்படுகின்றன" என்றிருக்கிறது.
அப்போது அவன் {ராமன்}, பிரகாசம் மறைந்தவனாக லக்ஷ்மணன் தன்னை நோக்கி வருவதைக் கண்டான். பிறகு விசனத்துடனும், துக்கத்துடனும் வந்த லக்ஷ்மணன், விசனத்துடனும், துக்கத்துடனும் கூடிய அந்த ராமனின் சமீபத்தை அடைந்தான்.(14,15அ) அப்போது அவனுடன் பிறந்தவன் {ராமன்}, ராக்ஷசர்களால் சேவிக்கப்படும் ஜனங்களற்ற வனத்தில் சீதையை விட்டு வந்த லக்ஷ்மணனைக் கண்டித்தான்.(15ஆ,16அ)
கவலையில் இருந்த அந்த ரகுநந்தனன், {லக்ஷ்மணனின்} இடது கரத்தைப் பற்றிக் கொண்டு மதுரமாகவும், வேதனையுடனும், கடுமையாகவும் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(16ஆ,17அ) "நீ, அங்கே சீதையை விட்டுவிட்டு இங்கே வந்து நிந்திக்கத்தக்கதையே செய்திருக்கிறாய். சௌம்யா, லக்ஷ்மணா, இப்போது {சீதை} அங்கே நலமாக இருப்பாளா? அஹோ.(17ஆ,18அ) வீரா, என் முன் பல அசுபங்கள் வெளிப்படுகின்றன. ஜனகாத்மஜைக்கு எவ்வகையிலேனும் நாசம் ஏற்பட்டிருக்கும். அல்லது வனசாரி ராக்ஷசர்களால் பக்ஷிக்கப்பட்டிருப்பாள். எனக்கு சந்தேகம் இல்லை.(18ஆ,19) புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, லக்ஷ்மணா, முழு நலத்துடன் ஜீவித்திருக்கும் ஜனகரின் மகளான சீதையை நாம் காணப்பெறுவோமா?(20) மஹாபலவானே, மிருகசங்கமும் {மான்கூட்டமும்}, நரியும்[3], பறவைகளும், பிரகாசமாக ஒளிரும் திசை[4] நோக்கி பயங்கரமாக அலறுகின்றன. ராஜபுத்திரியான அவள் நலமாக இருப்பாளா?(21)
[3] தர்மாலயப் பதிப்பில், அடைப்புக்குறிக்குள், "பல நரிகள் கத்தினால் அபசகுனமல்ல, ஓர் நரி கத்தினால் அபசகுனம்" என்றிருக்கிறது.
[4] மன்மதநாததத்தரின் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிழக்கு திசை" என்றிருக்கிறது.
மிருகம் {மான்} போன்ற தோற்றத்தைக் கொண்ட இந்த ராக்ஷசன், பின்தொடர்ந்து சென்ற என்னை வெகுதூரம் கவர்ந்திழுத்துச் சென்றான். மஹத்தான சிரமத்தின் பின் எவ்வாறோ கொல்லப்பட்டான். அவன் இறந்த போது ராக்ஷசனாக மாறினான்.(22) இப்போது தீனமடைந்த மனத்துடன் கூடிய நான் உண்மையில் மகிழ்ச்சியடையவில்லை. என் இடது கண் துடித்துக் கொண்டே இருக்கிறது[5]. இலக்ஷ்மணா, சீதை அங்கே இருக்கமாட்டாள் என்பதில் ஐயமில்லை. மாண்டிருப்பாள், அல்லது அபகரிக்கப்பட்டிருப்பாள், {தெரியாத} பாதையில் திரிந்து கொண்டிருப்பாள்" {என்றான் ராமன்}.(23)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆண்களின் இடது கண்கள் துடிப்பது தீய சகுனமாகும். "ஒரு புருஷனின் இடது கண்கள் துடிப்பது மனத்தில் சந்தோஷமின்மையின் அசுப அறிகுறியாகும், வலது கண் துடிப்பது மனத்திற்கு சந்தோஷம் தரும் சுப அறிகுறியாகும்" என்று காளிதாசனின் ரகுவம்ச உரையில் இருக்கிறது" என்றிருக்கிறது. (1) 3:57:2 - நரி ஊளையிட்டது; (2) 3:57:13 - விலங்குகளும், பறவைகளும் அபிரதக்ஷிணமாக திரிந்தன; (3) 3:57:21 - பறவைகளும், விலங்குகளும் சூரியன் ஒளிரும் திசையை நோக்கி பயங்கரமாக அலறின; (4) 3:57:23 - ராமனின் இடது கண் துடித்தது என்றிப்படி நான்கு தீய நிமித்தங்கள் இந்த சர்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளன. இந்த நிமித்தங்கள் ஒவ்வொன்றையும் இராவணன் சீதையை சந்தித்ததில் இருந்து நடந்த ஒவ்வொரு நிகழ்வுடன் பொருத்திப் பார்த்து இன்னின்ன நிமித்தங்களுக்கு இப்படி இப்படி நடந்தன என்றும் சிலர் சொல்கிறார்கள்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 57ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |