Seetha's warning | Aranya-Kanda-Sarga-09 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தைத் துறந்த பிறகு, எந்தத் தூண்டுதலும் இல்லாமல் ஆயுதங்களின் மீது பற்று வைப்பதன் தீமை குறித்து ராமனுக்கு முன்னெச்சரிக்கை செய்த சீதை...
சுதீக்ஷ்ணர் அனுமதித்ததும் புறப்பட்டவனும், ரகுநந்தனனுமான தன் பர்த்தாவிடம் {ரகு குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான தன் கணவனிடம்}, இதயப் பூர்வமான சினேகத்துடன் வைதேஹி {சீதை} இந்தச் சொற்களைச் சொன்னாள்:(1) "ஆசையினால் தூண்டப்படும் விசனம் {வேட்கை}, மஹா அதர்மத்தையே விளைவிக்கும். {அத்தூண்டலில் இருந்து விடுபடச் செய்யும்} சூக்ஷ்ம விதிப்படியே இஹத்தில் அதைக் கடக்க முடியும்[1].(2) இங்கே ஆசையால் தூண்டப்படும் மூன்று விசனங்களே {வேட்கைகளே / போதைகளே} உண்மையில் உள்ளன. அவற்றில் பொய்ம்மை மொழிதல் பெரிது, அதைவிட பிறன் தாரங்களிடம் கொள்ளும் அபிமானம், வைரமில்லாமல் {பகையில்லாமல்} கொள்ளும் வீண் ரௌத்திரம் {சினம்} ஆகிய இரண்டும் கனமானவை {மிகப் பெரியவை}.(3,4அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கோரக்பூர் பதிப்பில் "அதர்மம்" என்று வரும் முதல் சொல் "யஸ்து தர்மம்" என்றும், "அயம் தர்மம்" என்றும் வெவ்வேறு பதிப்புகளில் இருக்கின்றன. செம்பதிப்புகளிலும், தர்மாகூடத்திலும் அதர்மம் என்பதற்குப் பதில் "அயம் தர்மம்" என்றிருக்கிறது. அது சற்றே எதிர்மறை நிலையை நேர்மறையாக மாற்றுகிறது. இங்கே இருக்கும் "அதர்மம்" என்ற சொல்லை "அயம் தர்மம்" என்று கொண்டால், "நீர் பின்பற்றும் இந்த மஹா தர்மம், ஆசையினால் உண்டாகும் தூண்டுதலில் இருந்து விடுபடச் செய்யும் சூக்ஷ்ம விதிப்படியே இஹத்தில் சாத்தியமாகும்" என்று மாறும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது ராக்ஷசர்களைக் கொல்லும் க்ஷத்திரியர்களின் தர்மமாகும். எனினும், தகுந்த காரணம் ஏதும் இல்லாமல் ராக்ஷசர்கள் கொல்லப்படுகின்றனர். இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோருக்கு அவர்கள் எத்தீங்கையும் இழைக்கவில்லை" என்றிருக்கிறது. பாலகாண்டத்தில் தாடகை, சுபாஹு, இப்போது ஆரண்ய காண்டத்தில் விராதன் ஆகியோர் தகுந்த காரணங்களுடனேயே கொல்லப்பட்டனர். இதற்குப் பின் நேரப்போகும் அசுரப்படுகொலைக்கும் சூர்ப்பணகை முக்கிய காரணமாகிறாள்.
இராகவரே, நீர் ஒருபோதும் பொய் பேசியவரல்ல; இனியும் பேசமாட்டீர். பிறர் ஸ்திரீகளிடம் ஆசை கொள்வதால் உண்டாகும் தர்மநாசம் {உமக்கு} எவ்வாறு நேரும்?(4ஆ,5அ) மனுஷ்யேந்திரரே {மனிதர்களின் இந்திரரே}, அஃது முன்பும் உம்மிடம் இல்லை; இப்போதும் இல்லை; எக்காலத்திலும் உமது மனத்திலும் அஃது இருக்காது. நிருபாத்மஜரே {இராஜகுமாரனே}, நித்தியம் உமது தாரத்திடமே பற்றுடன் இருக்கிறீர்.(5ஆ,6) தர்மிஷ்டரும், சத்தியசந்தரும், பிதாவின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிபவருமான உம்மில் தர்மமும், சத்தியமும், இன்னும் அனைத்தும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன {நிறுவப்பட்டிருக்கின்றன}.(7) மஹாபாஹுவே, ஜிதேந்திரியரான {புலன்களை வென்றவரான} ஒருவரிடமே இவை அனைத்தும் இருப்பது சாத்தியம். சுபதரிசனரே {காண்பதற்கு இனியவரே}, நீர் புலன்களை வசப்படுத்தியவர் என்பதை அறிவேன்[2].(8)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாபா³ஹோஷ²க்யம் என்ற கூட்டுச் சொல்லை, மஹா பாஹோ அசக்யம் என்று பிரிக்கலாம். அவ்வாறெனில், "புலன்களை வென்றவர்களுக்கும் சாத்தியப்படாத உமது குணங்களை நான் அறிந்திருக்கிறேன்" என்ற பொருள் வரும்" என்றிருக்கிறது.
வைரமில்லாமல் உண்டாகும் ரௌத்திரத்தால் {பகையில்லாமல் உண்டாகும் சினத்தால்} பிறர் பிராணனை ஹிம்சிக்கும் அந்த மூன்றாவது விசனம் {வேட்கை} மோஹத்தால் வாய்த்திருக்கிறது.(9) வீரரே, தண்டகாரண்யவாசிகளான ரிஷிகளை ரக்ஷிக்கும் நோக்கில், போரில் ராக்ஷசர்களை வதம் செய்வதாக நீர் பிரதிஜ்ஞை செய்திருக்கிறீர்.(10) அந்நிமித்தமாகவே, வில்லும், சரங்களும் தரித்து உம்முடன் பிறந்தானோடு தண்டகம் {தண்டகை} என்று நன்கறியப்பட்ட இந்த வனத்தில் பிரவேசித்திருக்கிறீர்.(11) எனவே, தற்போது உம்மைக் காணும் என் மனம் கலங்குகிறது. உமது நிலையை சிந்தித்தால், அதில் சிறந்த நன்மையேதும் இருப்பதாகத் தெரியவில்லை.(12) வீரரே, தண்டகத்தில் பயணிப்பதில் எனக்கு விருப்பமில்லை. அதன் காரணத்தைச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பீராக.(13) பாண தனுசு பாணியாக {கணைகளும், வில்லும் தரித்தவராக}, உடன்பிறந்தானுடன் வனத்திற்குச் செல்லும் நீர், உண்மையில் காணும் சர்வ வனசரர்கள் {வனத்தில் திரிவோர் எவர்} மீதும் சரங்களை ஏவப் போகிறீர்.(14) அக்னிக்கு விறகும், க்ஷத்திரியர்களுக்கு தனுவும் அருகில் இருந்தால், தேஜஸ்ஸும், பலமும் அதிகரிக்கும்.(15)
மஹாபாஹுவே, பூர்வத்தில் மிருகங்களும், பறவைகளும் திரியும் ஒரு புண்ணிய வனத்தில், சத்தியவாக்குடையவரும், தூய்மையானவருமான ஒரு தபஸ்வி வாழ்ந்து வந்தார்.(16) அப்போது சசீபதி {சசியின் கணவனான இந்திரன்}, அவரது தபத்துக்கு விக்னம் விளைவிக்க {இடையூறு விளைவிப்பதற்காக}[3] போர்வீரனின் ரூபந்தரித்துக் கைகளில் வாளுடன் அவ்வாசிரமத்திற்கு வந்தான்.(17) அவன் {இந்திரன்}, அந்த ஆசிரமபதத்தில், புண்ணிய தபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரிடம், நியாச விதிப்படி {பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி} கூர்மையான உத்தம வாளைக் கொடுத்தான்.(18) அந்த சஸ்திரத்தை பெற்றுக் கொண்டவர், தம் மீதான நம்பிக்கையைக் காப்பதற்காக, எப்போதும் கவனமாக அந்த அடைக்கலப் பொருளுடனேயே வனத்தில் திரிந்தார்.(19) அடைக்கலப் பொருளைக் காப்பதில் அர்ப்பணிப்புடன் கூடியவர், கிழங்குகளையும், பழங்களையும் கொணரச் செல்லும்போதும், அந்த வாள் இல்லாமல் செல்வதில்லை.(20) நித்தியம் சஸ்திரத்தைச் சுமந்த அந்த தபோதனர், மெதுவாகத் தம் புத்தி ரௌத்திரமடைந்தவராக தபத்தில் ஊக்கத்தை இழந்தார்.(21) பிறகு, சஸ்திர சம்யோகத்தால் ரௌத்திரத்தில் திளைத்த {அந்த ஆயுதத்துடன் கூடிய தொடர் தொடர்பால் கொடுமை பூண்டு பல உயிர்களைக் கொன்ற} அந்த முனிவர், {தபத்தில்} கவனமற்றவராகி அதர்மத்தால் பீடிக்கப்பட்டு நரகத்தை அடைந்தார்.(22)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தபங்கள் சக்திகளுக்கு வழிவகுக்கும். தபஸ்விகள் சக்திகளை அடைந்து, {இந்திர பதவியில் இருந்து} தன்னை அப்புறப்படுத்துவார்கள் என்ற கவலை எப்போதும் இந்திரனுக்கு உண்டு. எனவே அவன் இடையூறுகளை விளைவிக்கிறான்" என்றிருக்கிறது.
பூர்வத்தில் சஸ்திர சம்யோக காரணத்தால் {ஆயுதத்துடன் கூடிய தொடர் தொடர்பின் நிமித்தம்} இவ்வாறு விளைந்தது. அக்னியுடன் கூடிய தொடர்பால் ஏற்படும் விளைவைப் போன்றே சஸ்திர சம்யோகமும் விளைவிக்கும் என்று சொல்லப்படுகிறது.(23) சினேகத்தால் நினைவூட்டுகிறேனே அன்றி பஹுமானத்தால் {கௌரவத்தால்} உமக்குக் கற்பிக்கவில்லை. தண்டகத்தில் திரியும் ராக்ஷசர்களை வைரமில்லாமலேயே {பகையேதும் இல்லாமலேயே} கொல்லும் புத்தியுடன் உமது வில்லை ஏந்துவது எவ்வகையிலும் செய்யத்தக்க காரியமல்ல. வீரரே, உலகத்தில் அபராதம் செய்யாத {தாக்குதல் தொடுக்காத} எவரையும் கொல்வது விரும்பத்தக்கதல்ல.(24,25) வனங்களில் உற்சாகமாகத் திரியும் வீரமிக்க க்ஷத்திரியர்களுடைய தனுசின் காரியம், துன்புறுவோரைப் பாதுகாப்பதே ஆகும்[4].(26)
[4] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "செம்பதிப்பிலும், வேறு பதிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்த சுலோகத்தில் சிற்சிறு மாற்றங்கள் இருக்கின்றன. அவற்றின் படி பொருள் கொண்டால், "வனங்களில் தற்கட்டுப்பாட்டைப் பயின்று துன்புறுவோரைப் பாதுகாப்பதே வீரமிக்க க்ஷத்திரியர்களுடைய தனுசின் காரியமாகும்" என்பதாகும். அதாவது, "க்ஷத்திரியர்கள், காடுகளில் கூடத் தங்கள் குலதர்மத்தையே பின்பற்ற வேண்டும்" என்பது கருத்து. காடுகளில், க்ஷத்திரியர்களின் போர் குணத்தைக் கடைப்பிடிக்காமல் முனிவர்களைப்போல அவர்கள் வாழ வேண்டும் என்பதே சீதையின் எண்ணமாகும். இந்த சுலோகத்தின் இரண்டாவது வரியில், 'துன்புறுவோரைப் பாதுகாப்பது மட்டுமே வில்லிற்கான பயன்' என்று சொல்கிறாள்" என்றிருக்கிறது.
சஸ்திரம் {ஆயுதங்கள்} எங்கே? வனம் எங்கே? க்ஷாத்ரம் {க்ஷத்திரியக் கோட்பாடுகள்} எங்கே? தபம் எங்கே? இவை யாவும் ஒன்றுக்கொன்று முரண்பட்டன. நாம் தேச தர்மத்தை மட்டும் பூஜிப்போம்.(27) சஸ்திரத்தை சேவிப்பவர்களின் புத்தி, பேராசையால் இழிவடைகிறது. மீண்டும் அயோத்திக்குச் சென்ற பின்னர், நீர் க்ஷத்ர தர்மத்தைப் பின்பற்றுவீராக.(28) இராஜ்ஜியத்தைக் கைவிட்டு நீர் நிரந்தரமாக பக்திமிக்க முனிவரானால் அஃது என் மாமனார், மாமியாருக்கு {தசரதருக்கும், கைகேயிக்கும்} அழிவில்லா நிறைவைத் தரும்.(29)
தர்மத்தில் இருந்தே அர்த்தம் {அறத்திலிருந்தே பொருள்} வெளிப்படும், தர்மத்திலிருந்தே சுகம் {இன்பம்} தோன்றும், தர்மத்தாலேயே அனைத்தும் அடையப்படும். இந்த ஜகம் தர்மத்தையே தன் சாரமாகக் கொண்டிருக்கிறது.(30) நிபுணர்கள் அந்தந்த நியமங்களால் தங்களை வருத்தும் பிரயத்தனங்களைச் செய்து, அந்த தர்மத்தை உணர்கிறார்கள். சுகத்தால் சுகம் {இன்பத்தால் மோக்ஷம்} கிட்டாது.(31) சௌம்யரே {மென்மையானவரே}, நித்யம் தூய்மையான மதியுடனும், தபோவனங்களில் {அதனதனுக்குரிய} தர்மத்துடனும் நடப்பீராக. மூவுலகங்களில் உள்ள அனைத்தின் தத்துவங்களையும் நீர் அறிவீர்.(32) ஸ்திரீயின் நிலையற்ற இயல்பால் இவை யாவற்றையும் நான் சொன்னேன். தர்மம் குறித்து உம்மிடம் பேச எவர் சமர்த்தர்? தம்பி சகிதராக நன்கு ஆலோசனை செய்து, எது தகுந்ததோ அதைத் தாமதமில்லாமல் செய்வீராக" {என்றாள் சீதை}.(33)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 09ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |