Sunday 26 February 2023

ஆசிரமபதங்கள் தரிசனம் | ஆரண்ய காண்டம் சர்க்கம் - 08 (20)

Visit to hermitages | Aranya-Kanda-Sarga-08 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தண்டகாரண்ய ஆசிரமங்களைக் காண்பதற்காக சுதீக்ஷ்ண முனிவரிடம் விடைபெற்றுச் சென்ற ராமன்...

Sages following Rama

சௌமித்ரி {லட்சுமணன்} சகிதனான ராமன், சுதீக்ஷ்ணரைப் பூஜித்து அங்கேயே இரவைக் கழித்து, அதிகாலையில் எழுந்தான்.(1) உரிய காலத்தில் எழுந்த ராகவன், சீதை சகிதனாக கருநெய்தல் மலரின் மணம் நிறைந்த குளிர்ந்த ஜலத்தில் நீராடினான்.(2) பிறகு, வைதேஹியும், ராமலக்ஷ்மணர்களும், காலத்திற்குத் தகுந்தவாறு அக்னியையும், வனத்தில் தபஸ்விகளுக்குத் தஞ்சமளிக்கும் ஸுரர்களையும் {தேவர்களையும்} விதிப்படி வழிபட்டனர். 

உதிக்கும் தினகரனைக் கண்டு, பாபம் அழிந்த சுதீக்ஷ்ணரிடம் சென்று, இந்த நற்சொற்களைச் சொன்னார்கள்:(3,4) "பகவானே, பூஜன்யரான {பூஜிக்கத் தகுந்தவரான} உம்மால் தகுந்த முறையில் பூஜிக்கப்பட்டு, {இரவில்} சுகமாக வசித்த நாங்கள் விடைபெற்றுக் கொள்கிறோம். முனிவர்கள் அவசரப்படுத்துகிறார்கள்.(5) தண்டகாரண்ய வாசிகளும், புண்ணிய சீலர்களுமான ரிஷிகளின் ஆசிரம மண்டலங்கள் அனைத்தையும் துரிதமாக நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.(6) தர்மநித்தியர்களும் {எப்போதும் தர்மத்தையே செய்பவர்களும்}, தபோதனர்களும் {தபத்தையே செல்வமாகக் கொண்டவர்களும்}, பாவகனின் நாக்குகளை {அக்னியின் தழல்களைப்} போன்றவர்களுமான இந்த முனிபுங்கவர்களுடன் செல்ல எங்களை {நாங்கள் விடைபெற்றுச் செல்ல} அனுமதிக்க விரும்புகிறோம்.(7) தீய வழிகளில் செல்வமீட்டிய கெட்ட குலத்தவன் {ஆணவமடைவதைப்} போல, தாங்க முடியாத வெப்பத்தை சூரியன் அடைவதற்குள்,{8} நாங்கள் புறப்பட விரும்புகிறோம்" {என்றான் ராமன்}. 

சீதை, லக்ஷ்மணன் சகிதனாக ராமன், இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த முனிவரின் சரணங்களை {பாதங்களை} வழிபட்டான்.(8,9) அவர்கள் இருவரும் தமது சரணங்களை ஸ்பரிசித்த போது, அந்த முனிபுங்கவர், அவர்களை எழுப்பி, சினேகத்துடன் ஆலிங்கனம் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னார்:(10) "இராமா, நிழலைப்போலப் பின்தொடர்பவளுடனும் {சீதையுடனும்}, சௌமித்ரியுடனும் {லக்ஷ்மணனுடனும்} கூடியவனாகப் பாதையில் சுகமாகச் செல்வாயாக.(11) வீரா, தண்டகாரண்யவாசிகளான இந்த தபஸ்விகள், தம்மை உணர்ந்தவர்களாவர். அவர்களுடைய ரம்மியமான ஆசிரமபதங்களைப் பார்.(12) நன்கு விளைந்த பழங்கள், கிழங்குகள், முற்றும் மலர்ந்த புஷ்பங்கள், சிறந்த விலங்குக் கூட்டங்கள், சாந்தமான பக்ஷிக் கூட்டங்களுடன் கூடிய வனப்பகுதிகள், தூய நீர் நிறைந்தவையும், முற்றும் மலர்ந்த தாமரைகளால் பிரகாசிப்பவையும், நீர்க்கோழிகள், மயில்கள் ஆகியவற்றால் எதிரொலிப்பவையுமான ரம்மியமான தடாகங்கள், சரஸ்கள் {ஏரிகள்}, மலை அருவிகள் ஆகியவற்றுடன் கூடிய ரமணீயமான அரண்யத்தை நீங்கள் காண்பீர்கள்.(13-15) வத்ஸா {குழந்தாய்}, நீ செல்வாயாக. சௌமித்ரியே நீயும் செல்வாயாக. அவற்றைக் கண்டபிறகு, என் ஆசிரமத்திற்கே மீண்டும் திரும்பி வருவீராக" {என்றார் சுதீக்ஷ்ணர்}.(16) 

இவ்வாறு சொல்லப்பட்டதும், லக்ஷ்மணன் சகிதனான அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, அந்த {சுதீக்ஷ்ண} முனிவரைப் பிரதக்ஷிணஞ் செய்து, புறப்பட்டுச் சென்றான்.(17) அப்போது, நீள்விழியாளான சீதை, உடன்பிறந்தோரான அவ்விருவருக்கும் {ராமலக்ஷ்மணர்களுக்கு} சுபமான தூணிகளையும், தனுக்களையும், பளபளக்கும் வாள்கள் இரண்டையும் கொடுத்தாள்.(18) இராமலக்ஷ்மணர்கள் இருவரும், சுபமான தூணிகளைக் கட்டிக் கொண்டு, வில்லில் நாணொலி எழுப்பியபடி அந்த ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.(19) ரூபசம்பன்னர்களும் {வடிவில் அழகர்களும்}, ஸ்ரீமான்களும், தேஜஸ்ஸில் பிரகாசிப்பவர்களுமான அந்த ராகவர்கள் இருவரும், தனுசுகளைத் தரித்துக் கொண்டு, சீதை சகிதர்களாக சீக்கிரம் புறப்பட்டுச் சென்றனர்.(20)

ஆரண்ய காண்டம் சர்க்கம் – 08ல் உள்ள சுலோகங்கள்: 20

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை