Suteekshna | Aranya-Kanda-Sarga-07 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை அடைந்தது...
பரந்தபனான {பகைவரை எரிப்பவனான} ராமன், தன்னுடன் பிறந்தானுடனும் {லக்ஷ்மணனுடனும்}, சீதையுடனும், அந்த துவிஜர்களுடனும் சேர்ந்து சுதீக்ஷ்ணரின் ஆசிரம பதத்தை நோக்கிச் சென்றான்.(1) நீர் நிறைந்த நதித் தீர்த்தத்தைக் கடந்து, நீண்ட தொலைவு சென்றபிறகு, மஹாமேருவுக்கு ஒப்பானதும், தூய்மையானதுமான ஒரு பெரிய சைலத்தை {மலையை} அவன் கண்டான்.(2) இக்ஷ்வாகுக்களில் சிறந்தவர்களான ராகவர்கள் இருவரும் {ராமலக்ஷ்மணர்கள் இருவரும்}, சீதை சகிதராக விதவிதமான மரங்களால் எங்கும் நிறைந்திருந்த கானகத்திற்குள் சென்றனர்.(3) அந்த கோரமான வனத்திற்குள் அவர்கள் பிரவேசித்ததும், பல்வேறு வகை மலர்களையும், பழங்களையும் தாங்கிய மரங்களால் அடர்ந்திருப்பதும், மரவுரிகள் தொங்கிக் கொண்டிருப்பதும், ஏகாந்தமானதுமான {தனிமையானதுமான} ஓர் ஆசிரமத்தைக் கண்டனர்.(4)
அங்கே, புழுதி படிந்த ஜடாதாரியாக தபத்தில் முதிர்ந்து அமர்ந்திருக்கும் தபஸ்வியான சுதீக்ஷ்ணரைக் கண்ட ராமன், விதிப்படி {முறைப்படி, இவ்வாறு} பேசினான்:(5) "பகவானே, நான் ராமன். தர்மஜ்ஞரும் {தர்மத்தை அறிந்தவரும்}, சத்தியவிக்ரமருமான {சத்தியத்தையே துணிவாகக் கொண்டவருமான} உம்மைக் காணவே வந்தேன். எனவே மஹரிஷியே, என்னிடம் பேசுவீராக" {என்றான்}.(6)
அப்போது, தீரனும், தர்மத்தை நிலைநாட்டுபவர்களில் சிறந்தவனுமான ராமனை ஆழமாக நோக்கிய அவர் {சுதீக்ஷ்ணர்}, தன்னிரு கைகளாலும் அவனை ஆரத்தழுவிக் கொண்டு, இந்தச் சொற்களைச் சொன்னார்:(7) "இரகுசிரேஷ்டா {ரகு குலத்தவரில் சிறந்தவனே}, சத்தியத்தை நிலைநாட்டுபவர்களில் சிறந்தவனே, ராமா, உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு / உன்னை வரவேற்கிறேன்}. நீ வந்ததால் இந்த ஆசிரமம் இப்போது நாதனுடையதாகிறது.(8) பெரும்புகழ்மிக்க வீரா, தேகத்தைக் கைவிட்டு இங்கிருந்து தேவலோகம்[1] செல்லாமல் மஹீதலத்தில் {பூமியில்} உனக்காகவே நான் காத்திருக்கிறேன்.{9} நீ ராஜ்ஜியத்தைக் கைவிட்டு சித்திரகூடம் வந்ததாக நான் கேள்விப்பட்டேன்.(9,10அ) காகுத்ஸ்தா, தேவராஜாவான சதக்ரது {இந்திரன்} இங்கே வந்தான்.{10} மஹாதேவனான அந்த ஸுரேஷ்வர தேவன் என்னை அணுகி, என் புண்ணிய கர்மங்களால் சர்வலோகங்களும் வெல்லப்பட்டனவெனச் சொன்னான்.(10ஆ,11) என் தபத்தால் வெல்லப்பட்டவையும், தேவரிஷிகளால் சேவிக்கப்படுபவையுமான அவற்றை {அவ்வுலகங்களை} உன் பாரியையுடனும், லக்ஷ்மணனுடனும் என் அருளால் நீ அனுபவிப்பாயாக[2]" {என்றார் சுதீக்ஷ்ணர்}.(12)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "'தேவலோகம் என்றழைக்கப்படும் இந்த சொர்க்கம் முக்தியை இல்லாததாக்கும். முக்தியானது உனது முப்பாதங்களான திரிதிவத்தில் கிட்டும். எனவே, புண்ணியம் தீர்ந்ததும் மறுபிறப்பை ஏற்படுத்தும் சொர்க்கத்திற்கு நான் செல்லவில்லை. முக்தி எனும் மோக்ஷத்தை அடைய உன் வரவுக்காக நான் காத்திருக்கிறேன்' என்பது இங்கே பொருள்" என்றும், இன்னும் சில உரைகளின் மேற்கோள்களும் இருக்கின்றன.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுதீக்ஷ்ண முனிவரும் தன் தபத்தால் அடைந்த புண்ணியங்கள் அனைத்தையும் விஷ்ணுவின் பாதங்களில் அர்ப்பணிக்கிறார். இந்த காண்டத்தில், 3.5.31ல், இவ்வாறான அர்ப்பணிப்பையே சரபங்க முனிவரும் செய்தார். மனித முயற்சியாலும், சக்தியாலும் அடையப்பட்ட எதையும் தெய்வத்தின் பாதங்களில் அர்ப்பணித்தால், அஃது இரு மடங்கு புண்ணியமாகி, அந்த பக்தனின் தன்னலமின்மையை நிறுவும். "யே தத் ப²லம் பரமேஷ்²வர அர்பணமஸ்து", அதாவது, "இதன் பலன் எதுவாக இருந்தாலும் அதை பரமேசுவரனுக்கு அர்ப்பணம் செய்கிறேன்" என்றே தினந்தோறும் செய்யப்படும் வழிபாடுகள் முடியும்" என்றிருக்கிறது.
ஆத்மவானான ராமன், உக்ர தபத்தால் ஒளிர்ந்து கொண்டிருந்தவரும், சத்தியவாதியுமான அந்த மஹரிஷியிடம், இந்திரன்[3] பிரம்மாவிடம் {பேசுவது} போல {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(13) "மஹாமுனிவரே, நானே அந்த உலகங்கள் அனைத்தையும் அடைவேன்[4]. இருப்பினும், இகத்தில் இந்தக் கானகத்தில் ஒரு வசிப்பிடத்தை நீர் சொல்வதையே விரும்புகிறேன்.(14) நீர் அனைத்திலும் சமர்த்தர் என்றும், சர்வபூதங்களின் ஹிதத்தில் {அனைத்து உயிர்களுக்குமான நன்மையில்} ஈடுபடுகிறீர் என்றும் கௌதமரும் {கௌதம குலத்தவரும்}, மஹாத்மாவுமான சரபங்கர் சொன்னார்[5]" {என்றான் ராமன்}.(15)
[3] வேறு பதிப்புகளில் "கசியபர் பிரம்மனிடம் பேசியதைப் போல" என்றிருக்கிறது.
[4] ஆரண்ய காண்டம் 5ம் சர்க்கத்தில் 33ம் சுலோகத்திற்கென வழங்கப்பட்ட [2]ம் அடிக்குறிப்பே இங்கும் பொருந்தும்
[5] வைகும் வைகலின் மாதவன் மைந்தன்பால்செய்கை யாவையும் செய்து இவண் செல்வ நீஎய்த யான் செய்தது எத்தவம் என்றனன்ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான்சொன்ன நான்முகன்தன் வழித் தோன்றினர்முன்னையோருள் உயர் தவம் முற்றினார்உன்னின் யார் உளர் உன் அருள் எய்தியஎன்னின் யார் உளர் இற்பிறந்தார் என்றான்- கம்பராமாயணம் 2659, 2660ம் பாடல்கள்பொருள்: அங்கே தங்கியிருந்தபோது, மாதவர் {மாதவம் செய்த சுதீக்ஷ்ணர்} ராமனுக்குச் செய்ய வேண்டிய உபசாரங்கள் யாவையும் செய்து, "செல்வமுடையவனே, இங்கு நீ வர நான் என்ன தவம் செய்தேன்?" என்று கேட்டார். இராமனும் அம்முனிவருக்கு அன்புடையவனாக {பின்வருமாறு} கூறினான்:(2659) "பிரம்மனின் வம்சத்தில் தோன்றிய முந்தைய முனிவர்களுள் உயர்ந்த தவத்தை முற்றச் செய்தவர் உம்மைப் போல வேறு யார் இருக்கிறார்கள்? உமதருளை அடைந்த இல்லறத்தான் என்னைப் போல வேறு யார் உள்ளனர்?" என்றான்.(2660)
இராமன் இவ்வாறு சொன்னதும், உலகப்புகழ்பெற்ற அந்த மஹரிஷி, பெரும் மகிழ்ச்சியில் மூழ்கி, மதுரமான இந்த வாக்கியங்களைச் சொன்னார்:(16) "இராமா, ரிஷி சங்கம் அனுசரித்திருப்பதும் {ரிஷிகள் கூட்டத்தினர் வந்து போவதும்}, எப்போதும் கிழங்குகளுடனும், பழங்களுடனும் கூடியதுமான இந்த ஆசிரமமே குணமானது {நல்லது}. இங்கேயே இன்புற்றிருப்பாயாக.(17) பெரும் மிருக சங்கம் {பெரும் விலங்குக் கூட்டங்கள்} இந்த ஆசிரமத்திற்கு வந்து எங்களை அச்சுறுத்திவிட்டு, எவரையும் கொல்லாமல் பயமில்லாமல் திரும்பிச் செல்லும்[6]. இங்கே மிருக பயம் தவிர வேறு தோஷமில்லை என்று அறிவாயாக" {என்றார் சுதீக்ஷ்ணர்}.(18,19அ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சுலோகத்தில் ஏதோ இருக்கிறது. சில மொழிபெயர்ப்புகளில் "மிருகம்" என்பது, "மான்கள்" என்றும், வேறு சிலவற்றில் "விலங்குகள்" என்றும் இருக்கிறது. அவை மான்களாக இருந்தால், "எங்களைக் கொல்லாமல்" என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்காது. மான்கள் ஊனுண்ணும் விலங்குகளல்ல" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "மான்கூட்டங்கள் எதற்கும் பயப்படாதவைகளாய் இந்த ஆச்ரமத்திற்குள் நுழைந்து, திரிந்து, குலைத்துவிட்டு, திரும்பிப் போய்விடுகின்றன. மான்களைத் தவிர வேறிடத்திலிருந்து வேறு தீங்கு இவ்விடத்தில் உண்டாகாதென்று நீ அறிவாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஆனால் சிங்கம் புலி முதலிய கொடிய விலங்குகள் அடிக்கடி இங்கெய்தித் திரிகின்றன; இவ்விடத்தில் அந்த மிருகங்களினால் மாத்திரமே பயமன்றி, வேறொருவராலும் பயம் நேர்ந்திலது" என்றிருக்கிறது.
தீரனான அந்த லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, மஹரிஷியின் சொற்களைக் கேட்டதும், சரத்தையும், தனுவையும் எடுத்துக் கொண்டு இந்தச் சொற்களைச் சொன்னான்:(19ஆ,20அ) "மஹாபாக்யவானே, ஒன்று திரண்டு இங்கே வரும் அந்த மிருக சங்கத்தை மிகக் கூரியவையும், வளைந்த முனைகளைக் கொண்டவையுமான {இடியைப் போலப் பிரகாசிப்பவையுமான} சரங்களால் நான் கொல்வேன்.(20ஆ,21அ) அப்போது உமக்கது தொல்லையாக அமைவதைவிட வேறு என்ன துன்பம் வேண்டும்? நான் நீண்ட காலம் இந்த ஆசிரமத்தில் வசிக்க முடியாதவனாக இருக்கிறேன்" {என்றான் ராமன்}.(21ஆ,22அ)
இராமன் அவரிடம் இவ்வாறு சொல்லி நிறுத்திக் கொண்டபோது, சந்தியா வேளையும் நெருங்கியது. மேற்கு சந்தியை வழிபட்ட பிறகு, சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் சுதீக்ஷ்ணரின் ரம்மியமான ஆசிரமத்தில் வசிப்பதற்கான ஏற்பாடுகளை {ராமன்} செய்தான்.(22ஆ,23) மஹாத்மாவான சுதீக்ஷ்ணர், சந்தி வழிபாட்டை முடித்துக் கொண்டு, இரவை முன்னிட்டு திரும்பிய புருஷரிஷபர்களான அவ்விருவருக்கும் {ராமலக்ஷ்மணர்களுக்கு} சுபமான தாபஸ அன்னத்தை {தபஸ்விகள் புசிக்கத்தக்க நல்ல உணவை} அளித்து உபசரித்தார்[7].(24)
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தக் காவியத்தின் மற்றொரு மரபார்ந்த {தெலுகு} பதிப்பான ஆச்சரிய ராமாயணத்தில், ராமன் சுதீக்ஷ்ணரின் ஆசிரமத்தை அடைந்து, மிருகங்களின் தொந்தரவு குறித்துக் கேள்விப்பட்டு, அன்றைய இரவே ஆசிரமத்தைவிட்டு வெளியே வந்து, அந்த விலங்குகள் அனைத்தையும் கொல்கிறான். மேலே குறிப்பிட்டிருப்பதைப் போல மான்களையல்ல; பெரும் முழக்கமிடும் காட்டு விலங்குகளைக் கொல்கிறான். அவனது கணைகளின் விசை அந்த விலங்குகளின் சடலங்களைக் கபந்தன் என்ற ராக்ஷசன் முன் விழச்செய்கின்றன. சபிக்கப்பட்ட ஒரு தேவனான கபந்தன், பின்னர் ராமனால் சாபத்தில் இருந்து விடுவிக்கப்படுவான். இந்தக் கபந்தனுக்கு மார்புக்குக் கீழே உடற்பாகங்கள் ஏதும் கிடையாது. தன் வலிமையான கைகளுக்கு மத்தியில் அகப்படும் இரையைக் கைப்பற்றுவதற்கான நீண்ட கைகளை மட்டுமே கொண்டவன் அவன். இவ்வாறே ராமன் அந்தக் கபந்தனுக்கு உணவளிக்கிறான். அவனுக்கான காலம் வரும் வரை, அவன் ஜீவித்திருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. இவை அனைத்தையும் ஆசிரமவாசிகள் யாரும் அறிந்திலர், ஏன் சீதையுங் கூட அறியமாட்டாள். அடுத்த நாள் காலையில், ராமன் சீதையிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, முந்தைய இரவில் தான் செய்த காரியத்தை எடுத்துரைத்துப் பாராட்டைப் பெறுகிறான்" என்றிருக்கிறது.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 07ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |