Viradha liberated | Aranya-Kanda-Sarga-04 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் கதையைச் சொன்ன விராதன்; ராமலக்ஷ்மணர்கள் விராதனைக் கொன்றது; அவன் சொர்க்கத்திற்கு உயர்ந்தது...
மஹாபாஹுக்களும், ரகோத்தமர்களுமான அந்தக் காகுத்ஸ்தர்கள் {பெருந்தோள்களைக் கொண்டவர்களும், ரகு குலத்தைச் சேர்ந்த உத்தமர்களும், காகுத்ஸ்தனின் வழித்தோன்றல்களுமான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட சீதை, உச்ச சுவரத்தில் {பின்வருமாறு} கதறினாள்[1]:(1) "சத்தியவானும், ஒழுக்கசீலரும், தூய்மையானவரும், லக்ஷ்மணன் சகிதருமான அந்த தாசரதி {ராமன்}, ரௌத்திர ரூபம் கொண்ட அந்த ராக்ஷசனால் கொண்டு செல்லப்படுகிறார்.(2) செந்நாய்களும், புலிகளும், சிறுத்தைகளும் என்னை பக்ஷிக்கப் போகின்றன. ராக்ஷசோத்தம {ராட்சசர்களில் உத்தமனே}, உன்னை வணங்குகிறேன். காகுத்ஸ்தர்களை விட்டுவிட்டு, என்னைக் கொண்டு செல்வாயாக" {என்றாள் சீதை}.(3)
[1] வேறு பல பதிப்புகளில், "மஹாபாஹுக்களான ராமலக்ஷ்மணர்கள் இருவரும் தூக்கிச் செல்லப்படுவதைக் கண்ட வைதேஹி, உச்ச சுவரத்தில் கதறினாள்" என்றிருக்கிறது. அதாவது இந்த சுலோகத்தின் முதல் பாதி ஒரே பொருளில் வேறு வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அழகிய கைகளையுடைய வைதேஹி தேவியார், அந்த ஸ்ரீராமலக்ஷ்மணர்கள் தூக்கிக் கொண்டு போகப்படுவதைப் பார்த்ததும், இரு கரங்களையும் உயரத்தூக்கிக் கொண்டு உயர்ந்த குரலிட்டு புலம்பிக் கதறினாள்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இவ்வண்ணம் விராதன் ஸ்ரீராமலக்ஷ்மணர்களைத் தோளிலெடுத்துக் கொண்டு செல்லுகையில், பிராட்டியார் கண்டு கைகளை உயரவெடுத்துக் கொண்டு கூவினாள்" என்றிருக்கிறது.
வைதேஹியின் சொற்களைக் கேட்ட அந்த வீரர்கள் {ராமலக்ஷ்மணர்கள்}, அந்த துராத்மாவை {விராதனை} வதம் செய்வதில் வேகமாக முனைந்தனர்.(4) சௌமித்ரி {லக்ஷ்மணன்}, அந்த ரௌத்திரனின் இடது கையை முறித்தான், ராமனும் அந்த ராக்ஷசனின் வலது கையை வேகமாக முறித்தான்.(5) மேகத்தின் நிறம் கொண்டவன் {விராதன்}, சிதைந்த தோள்களுடன் உள்ளம் நொந்து, வஜ்ரத்தால் வீழ்ந்த அசலத்தை {மலையைப்} போல விரைவாக தரணியில் விழுந்தான்.(6) அவர்கள் தங்கள் முஷ்டிகளாலும், கைகளாலும், பாதங்களாலும் அந்த ராக்ஷசனைத் தாக்கியும், மீண்டும் மீண்டும் தூக்கிப் வீசிப் புடைத்தும், முழுமையாகத் தரையிலிட்டு நசுக்கினார்கள்.(7) பாணங்கள் பலவற்றால் துளைக்கப்பட்டாலும், வாள்கள் இரண்டால் காயமடைந்தாலும், தரையிலிட்டுப் பலவகைகளில் புடைக்கப்பட்டாலும் அந்த ராக்ஷசன் இறக்கவில்லை.(8)
பயத்திற்கு அபயமளிப்பவனான ஸ்ரீமான் ராமன், அசலத்திற்கு ஒப்பாக அசைக்கப்பட முடியாதவனை {மலை போன்ற விராதனை} வதம் செய்வது எளிதல்ல என்பதைக் கண்டு {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(9) "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, இந்த ராக்ஷசன், தன் தபத்தால் யுத்தத்தில் சஸ்திரங்களால் {ஆயுதங்களால்} வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான். எனவே இந்த ராக்ஷசனைப் புதைப்போம்[2].(10) லக்ஷ்மணா, ரௌத்திரக் கர்மங்களைச் செய்யும் ரௌத்திரனான இந்த ராக்ஷசனுக்கு, குஞ்சரத்திற்கு {யானைக்குத்} தோண்டுவதை போன்ற ஆழமான குழியை இங்கே வெட்டுவாயாக" {என்றான்}.(11) அந்த வீரியவான் {ராமன்}, லக்ஷ்மணனிடம் "குழி தோண்டுவாயாக" என்று சொல்லிவிட்டு, விராதனின் தொண்டையில் தன் பாதத்தை வைத்துக் கொண்டு அங்கேயே உறுதியுடன் நின்றான்[3].(12)
[2] புண்ணிடைப் பொழி உயிர்ப்புனல் பொலிந்து வரவும்விண்ணிடைப் படர்தல் விட்டு எழு விகற்பம் நினையாஎண்ணுடைக் குரிசில் எண்ணி இளையோய் இவனை இம்மண்ணிடைக் கடிது பொத்துதல் வழங்கு எனலும்- கம்பராமாயணம் 2559ம் பாடல், விராதன் வதைப்படலம்பொருள்: புண்ணில் இருந்து பொழிந்த இரத்த வெள்ளம் பொலிந்து பாயவும், விண்ணில் செல்வதைத் தவிர்த்து அவன் எழுந்து செல்லும் மாறுபாட்டை நினைத்து உணர்ந்த எண்ணத்தில் சிறந்தவன் {இராமன்}, "இளையவனே, இவனை இம்மண்ணில் புதைப்பதே வழக்கு" என்றான்.
[3] 11,12ம் சுலோகங்களில் வரும் இதே செய்திகள், 25, 26ஆம் சுலோகங்களிலும் மீண்டும் சொல்லப்படுகின்றன.
ராகவன் சொன்னதைக் கேட்ட ராக்ஷசன் விராதன், புருஷரிஷபனான அந்தக் காகுத்ஸ்தனிடம் இந்தப் பணிவான சொற்களைச் சொன்னான்:(13) "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, சக்ரனுக்கு இணையான பலம்வாய்ந்தவனே, நான் அழிந்தேன். புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, என் மோஹத்தால் முன்பே நான் உன்னை அறிந்தகொண்டேனில்லை.(14) ஐயா, நீ கௌசல்யாசுப்ரஜன் {கௌசல்யையின் நன்மகன்} என்பதையும், மஹாபாக்யவதியான வைதேஹியையும், பெரும் புகழ்மிக்க லக்ஷ்மணனையும் நான் அறிந்து கொண்டேன்.(15)
தும்புரு என்ற பெயர் கொண்ட கந்தர்வனான நான், வைஷ்ரவணனால் {குபேரனால்} சபிக்கப்பட்டேன். அந்த சாபத்தின் மூலமே ராக்ஷச உடலில் பிரவேசித்தேன்.(16) பெரும்புகழ்பெற்றவனான அவனை {குபேரனை} நான் வேண்டிக் கேட்டுக் கொண்ட போது, "தாசரதி ராமன் உன்னைப் போரில் கொல்லும்போது, இயல்பு நிலை மீண்டு நீ ஸ்வர்க்கத்தை அடைவாய்" என்றான்.(17,18அ) அந்த வைஷ்ரவண ராஜாவை நான் கவனிக்காததால் {குபேரனுக்குத் தொண்டு செய்வதில் நான் கவனமில்லாதிருந்ததால்}, ரம்பையிடம் பற்றுதலுடன் இருந்த என்னிடம் கோபமடைந்து அவ்வாறு சொன்னான் {சபித்தான்}. எனினும், இதையும் {அந்த சாபத்திற்கான விமோசனத்தையும்} அவனே சொன்னான்.(18ஆ,19அ)
உன் அருளால் இந்த பயங்கர சாபத்தில் இருந்து விடுபட்டு, ஸ்வர்க்கத்தை அடைய நான் விரும்புகிறேன். பரந்தபா {சத்ருக்களை தபிக்கச் செய்பவனே}, உனக்கு அனைத்தும் நன்மையாக நடக்கட்டும்.(19ஆ,20அ) ஐயா, இங்கிருந்து ஒன்றரை யோஜனை[4] தொலைவில் தர்மாத்மாவும், பிரதாபவானும், சூரியனைப் போன்று ஒளிமிக்கவருமான சரபங்க மஹரிஷி வசிக்கிறார். நீ அவரிடம் சீக்கிரம் செல்வாயாக. அவர் உனக்கான நல்லதை அருள்வார்.(20ஆ,21) இராமா, என்னைக் குழியில் புதைத்துவிட்டு குசலமாக {நலமாகச்} செல்வாயாக. இதுவே இறந்து போகும் ராக்ஷசர்களுக்கான சனாதன தர்மமாகும் {நிலைத்த நெறியாகும் / தொல்லறமாகும்}. {எங்களில்} எவரெவர் குழியில் புதைக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு சனாதன உலகங்கள் கிட்டுகின்றன" {என்றான் விராதன்}.(22,23அ)
[4] கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் உள்ள அளவுகோல்களின்படி ஒரு யோஜனை என்பது 9.09 மைல்கள் ஆகும். ஒன்றரை யோஜனை என்பது 13.635 மைல் தொலைவாகும், அதாவது 22.94 கி.மீ. தொலைவாகும்.
சரங்களால் பீடிக்கப்பட்ட அந்த மஹாபலவான், இவ்வாறு அந்தக் காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} பேசிவிட்டு, தன் தேகத்தைக் கைவிட்டு ஸ்வர்க்கத்திற்குத் தகுந்தவனானான்.(23ஆ,24அ) அவனது வாக்கியத்தைக் கேட்ட ராகவன், லக்ஷ்மணனிடம், "இலக்ஷ்மணா, ரௌத்திரக் கர்மங்களைச் செய்யும் ரௌத்திரனான இந்த ராக்ஷசனுக்கு, குஞ்சரத்திற்கு {யானைக்குத்} தோண்டுவதை போன்ற ஆழமான குழியை இங்கே தோண்டுவாயாக" என்று ஆணையிட்டான். அந்த வீரியவான் {ராமன்}, லக்ஷ்மணனிடம் "குழி தோண்டுவாயாக" என்று சொல்லிவிட்டு, விராதனின் தொண்டையில் தன் பாதத்தை வைத்துக் கொண்டு அங்கேயே உறுதியுடன் நின்றான்.(24ஆ,25,26)
உடனே லக்ஷ்மணன் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு, மஹாத்மாவான[5] அந்த விராதனுக்கு அருகிலேயே ஒரு பெரிய குழியை வெட்டினான்.(27) பெருங்குரல் படைத்தவனும், கூம்பு போன்ற காதுகளைக் கொண்டவனுமான விராதனின் தொண்டையை விடுவித்து, பயங்கர ஓலமிடும் அவனை அந்தக் குழிக்குள் தள்ளப் புரட்டினர்.(28) விக்கிரமர்களும், போரில் ஸ்திரமானவர்களுமான அந்த ராமலக்ஷ்மணர்கள் இருவரும், பயங்கரமாகக் கூச்சலிடுபவனும், போரில் வெல்லப்பட்டவனுமான அந்த ராக்ஷசனை வலுவுடன் தூக்கி {குழிக்குள்} வீசினர்.(29)
[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாத்மா என்றால் உயரான்மா {உயர்ந்தவன் / மேன்மையானவன்} என்ற பொருள் வரும். விராதன் உண்மையிலேயே கந்தர்வன் என்ற நோக்கில் இந்தப் பொருள் கொண்ட அடைமொழியை ஆதிகவி {வால்மீகி} பயன்படுத்தியிருக்கக்கூடும். எனினும் நான், விராதன் ராக்ஷசன் என்ற தன்மைக்கு இணக்கமான மற்றொரு பொருளில் "பேருடல் படைத்த" விராதன் என்று பயன்படுத்தியிருக்கிறேன்" என்றிருக்கிறது.
மேலான நுட்பங்களில் திறம்பெற்றவர்களான அந்த நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகளான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், மஹா அசுரனான அந்த விராதன், கூரிய சஸ்திரங்கள் எதனாலும் கொல்லப்படமுடியாதவன் என்பதைக் கண்டு, குழியில் இட்டு அவனை வதம் செய்தனர்.(30) காட்டில் திரிபவனான விராதனும், ராமனால் கொல்லப்பட்டு நேரும் மரணத்தையே சுயமாக விரும்பியதால், "எந்த ஆயுதத்தாலும் என்னைக் கொல்ல முடியாது" என்று தற்புகழ்ச்சி செய்து {தன்னைக் குறித்து} தானே தகவலைத் தெரிவித்தான்.(31) அவன் சொன்னதைக் கேட்டே ராமன் அவனைக் குழிக்குள் தள்ள மனத்தில் தீர்மானித்தான். அதிபலவானான அந்த ராக்ஷசனைக் குழிக்குள் தள்ளிய போது, அவனது கதறல் அந்த வனம் முழுவது எதிரொலித்தது.(32) விராதனைப் பூமியின் பள்ளத்தில் தள்ளிக் கொன்றதில் ராமலக்ஷ்மணர்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்தனர். பயமற்றவர்களான அவர்கள், மஹாவனத்தில் அந்த ராக்ஷசனைக் கற்களைக் கொண்டு புதைத்தனர்[6].(33) பின்னர், காஞ்சனத்தால் {பொன்னால்} பிரகாசிக்கும் விற்களைக் கொண்ட அவ்விருவரும் அந்த ராக்ஷசனைக் கொன்று, மைதிலியை மீட்டு, வானத்தில் இருக்கும் சந்திர திவாகரர்களைப் போல அந்த மஹாவனத்தில் மகிழ்ச்சியாகத் திரிந்தனர்[7].(34)
[6] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "எங்கேனும் தன் முன்னிலையில் எவர் இறந்தாலும், அது ராக்ஷசனாகவோ, கழுகாகவோ, குரங்காகவோ இருந்தாலும் ராமன் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்கிறான். இங்கேயும், விராதனின் கல்லறை, கற்காலக் கல்வெட்டைப் போலக் கற்களாலும், பாறைகளாலும் மறைக்கப்படுகிறது" என்றிருக்கிறது.
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்து தொன்மவியலில் இந்த விராதன் கதை முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது. விராதன், சீதையை அபகரிக்கிறான், பின்பு விடுகிறான், அதன்பிறகு, ராமலக்ஷ்மணர்களை சீதைக்குத் தொலைவாகக் கொண்டு செல்கிறான். அங்கேயே ராமலக்ஷ்மணர்கள் விராதனைக் கொல்கின்றனர். பிரம்மாண்ட புராணம் 61ம் அத்தியாயத்தில் வரும் அத்யாத்ம ராமாயணத்தில் ராமன், விராதனுடன் நேருக்கு நேர் மோதி அவனைத் தானே நேரடியாகக் கொல்கிறான். ஆனால் வால்மீகி ராமாயணத்திலோ, விராதன் முதலில் சீதையைக் கவர்ந்து செல்கிறான், பிறகு ராமலக்ஷ்மணர்களையும் கவர்ந்து செல்கிறான். அவ்வாறு ஏன் செய்தான் என்ற கேள்வி இங்கே எழுகிறது. ராமன், சீதையின் முன்னிலையில் எந்த ராக்ஷசனையோ, பாபியையோ கொல்வதில்லை. சீதை, லக்ஷ்மி தேவியின் அவதாரமாகையால் பாபிகளுக்கும் அருள்பவள்; பக்தியுடன் பாதம் பணிந்தால் மன்னிப்பவள். ஸ்கந்த புராணத்தில் விராதனின் கதை விரிவாகச் சொல்லப்படுகிறது.ஸோ'பி தாம் ஜாநகீங் த்³ருʼஷ்ட்வா ஷீ²க்⁴ரங் ஸஞ்ஜாத விக்ரம꞉ .இயங் பரா மஹா ஷ²க்தி꞉ ஸேயங் ஸ்வர்க³ஸ்ய காரணங் அஸ்யா விபோ³தோ⁴ மோக்ஷேபி காரணங் ப³ந்த⁴நேபி ச .தஸ்மாத் இமாங் ப⁴ஜிஷ்யமி தி³ஷ்ட்யா ப்ராப்தங் ஹி த³ர்ஷ²நம் .இதி த³ர்ஷ²ந மாத்ரேண விமுக்தாம் ஔக⁴ பஞ்ஜர꞉ .ப⁴க்தி யுக்தோ ஜரஹார ஏணங் ஸீதாங் சைதந்ய ரூபிணீங் . {என்பது மூலம்}ஜானகியைக் கண்ட விராதன், "{இராக்ஷச உடல் மீது கொண்ட} பற்றில் இருந்து விடுபடவும், சொர்க்கத்தை அடையவும், மோக்ஷம் பெறவும் அருள் தரும் பரம மஹாசக்தி இவளே. இவளைப் பார்த்த மாத்திரத்தில் இந்த உடற்கூட்டில் இருந்து விடுதலையடையும் முனைப்பு ஏற்படுவதால், முழு பக்தியுடன் நான் இவளை அபகரிக்கப் போகிறேன்" என்று நினைத்தான். இராமலக்ஷ்மணர்களால் விரட்டப்பட்டுக் காயமடைந்தபோது அந்த ராக்ஷசன் சீதையை விட்டு, சகோதரர்கள் இருவரையும் அபகரித்துச் செல்கிறான். சீதையிடம் இருந்து ராமலக்ஷ்மணர்களைத் தொலைவாக இட்டுச் சென்றதற்கு, ராக்ஷசர்கள் உண்மையான பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் சீதை அருள்கூர்ந்து மன்னித்து விடுவாள் என்பதால், அவளது முன்னிலையில் ராமன் எந்த ராக்ஷசனையும் கொல்லமாட்டான் என்று சொல்லப்படுகிறது.மேலும் ஸ்கந்த புராணத்தின் விராதன் கதை முடிவில் பலச்ருதி பின்வருமாறு சொல்லப்படுகிறது.யோ விராத⁴ வத⁴ங் நித்யங் ஷ்²ருʼணோதி ஷ்²ராவயேதி வா .தஸ்ய பாபாநி ஸர்வாணி விநஷ்டாநி ந ஸங்ஷ²ய꞉ .. {என்பது மூலம்}விராத வதங்குறித்த இந்தக் கதையை எப்போதும் கேட்பவர்களும், கேட்கச் செய்பவர்களும் நிச்சயம் தங்கள் பாபங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவார்கள் என்பது அதன் பொருளாகும்" என்றிருக்கிறது.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 04ல் உள்ள சுலோகங்கள்: 34
Previous | | Sanskrit | | English | | Next |