The contempt the glorious one | Aranya-Kanda-Sarga-03 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராக்ஷசன் விராதனுடன் விவாதித்த ராமனும், லக்ஷ்மணனும் அவன் மீது கணைமாரியைப் பொழிந்தது. ராமனையும், லக்ஷ்மணனையும் கவர்ந்து சென்ற ராக்ஷசன் விராதன்...
இவ்வாறு சொன்ன ஸ்ரீமான் லக்ஷ்மணன், விராதனைப் பார்த்துப் புன்னகைத்து, "வனத்திற்கு வந்து விரும்பியபடி திரியும் நீ யார்?" என்று கேட்டான்[1].{1} அப்போது விராதன் அந்த வனத்தையே {தன் குரலின் எதிரொலியால்} நிறைக்கும் வகையில் மீண்டும் இந்த வாக்கியத்தைச் சொன்னான், "நான் கேட்பதற்கு நீ பதில் சொல். நீங்கள் இருவரும் யார்? உண்மையில் நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?" என்று கேட்டான்.(1)
[1] மற்ற பதிப்புகளில் இல்லாத இந்த சுலோகம் வி.வி.சுப்பாராவ், பி.கீர்வாணி பதிப்பில் அதிகமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "வடமேற்கு மாகாணங்களின் {இராமாயணப்} பதிப்பில் இந்த ஒரு சுலோகம் அதிகமாக இருக்கிறது" என்றிருக்கிறது.
அப்போது அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, ஜ்வலிக்கும் முகத்துடன் கூடியவனும், கேள்வி கேட்பவனுமான அந்த ராக்ஷசனிடம் தன்னுடைய இக்ஷ்வாகு குலம் குறித்து {பின்வருமாறு} சொன்னான்:(2) "உன்னத நடத்தை கொண்ட க்ஷத்திரியர்களாகவும், வனத்தில் திரிபவர்களாகவும் எங்கள் இருவரையும் அறிவாயாக. தண்டகத்தில் திரியும் நீ யார் என்பதையும், உன்னைக் குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம்" {என்று கேட்டான் ராமன்}.(3)
சத்திய பராக்கிரமனான ராமனிடம் விராதன் {பின்வருமாறு} சொன்னான், "சரி ராஜாவே, நான் உனக்குச் சொல்கிறேன். இராகவா {ரகு குலத்தவனே}, என்னைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(4) நான் ஜயனின் புத்திரன், என் மாதா சதஹ்ரதை. இந்தப் பிருத்வியிலுள்ள சர்வ ராக்ஷசர்களும் என்னை விராதன் என்று அழைப்பார்கள்.(5) உலகில் எந்த சஸ்திரத்தாலும் {ஆயுதத்தாலும்} வதம் செய்யப்படவோ, வெட்டப்படவோ, பிளக்கப்படவோ முடியாத நிலையை தவத்தாலும், பிரம்மனின் அருளாலும் நான் அடைந்தேன்.(6) இந்தப் பெண்ணை எதிர்பார்க்காமல் விட்டுவிட்டு, வந்தவழியே நீங்கள் விரைந்து ஓடினால், உங்கள் இருவரின் உயிரையும் நான் பறிக்காமல் விடுவேன்" {என்றான் விராதன்}.(7)
கோபத்தால் நிறைந்து, கண்கள் சிவந்த ராமன், பேருடல் படைத்தவனும், பாப நோக்கம் கொண்டவனுமான ராக்ஷசன் விராதனிடம் இவ்வாறு மறுமொழி கூறினான்:(8) "சீ, இழிந்தவனே, உனக்கு ஐயோ. கீழ்த்தரமானவனே, நிச்சயம் நீ மரணத்தை நாடுகிறாய். போரிட்டால் அதை நீ அடைவாய். நிற்பாயாக. நான் ஜீவித்திருக்கையில் உன்னை விடமாட்டேன்" {என்றான்}.(9)
பிறகு தன் தனுவில் நாண்பூட்டிய ராமன், மிகக்கூரிய சரங்களை வெகுசீக்கிரத்தில் ஏவி உண்மையில் அந்த ராக்ஷசனைத் துளைத்தான்.(10) நாணேற்றப்பட்ட வில்லில், தங்கப் புங்கங்களையும், சுபர்ணனுக்கும் {கருடனுக்கும்}, அநிலனுக்கும் {வாயுவுக்கும்} நிகரான அதிவேகத்தையுங் கொண்ட ஏழு பாணங்களை {விராதன் மீது} ஏவினான்.(11) பாவகனுக்கு {நெருப்புக்கு} ஒப்பானவையும், மயிலிறகுகள் கட்டப்பட்டவையுமான அவை, விராதனின் சரீரத்தைத் துளைத்து, {வெளிப்பட்டு} ரத்தத்தில் தோய்ந்தவையாக தரணியில் விழுந்தன.(12)
இவ்வாறு காயமுற்ற அந்த ராக்ஷசன், வைதேஹியை விட்டுவிட்டு, தன் சூலத்தை ஓங்கியவாறு பெருங்குரோதத்துடன் ராமலக்ஷ்மணர்களை நோக்கி விரைந்தான்.(13) அப்போது சக்ர த்வஜத்திற்கு {இந்திரனின் கொடிக்கம்பத்திற்கு} ஒப்பான அந்த சூலத்தை எடுத்துக் கொண்டு உரக்க கர்ஜித்தவன், திறந்த வாயுடன் கூடிய அந்தகனைப் போல ஒளிர்ந்தான்.(14) உடன்பிறந்தோரான அவ்விருவரும், காலாந்தகனைப் போலிருக்கும் அந்த ராக்ஷசன் விராதன் மீது, ஒளிரும் சரங்களை மழையாகப் பொழிந்தனர்.(15) மஹா ரௌத்ரனான அந்த ராக்ஷசன், சிரித்தபடியே அங்கே நின்று கொட்டாவி விட்டான். அவன் கொட்டாவி விடுகையில் வேகமாகப் பாயும் பாணங்கள் அவனது காயத்திலிருந்து {உடலிலிருந்து தளர்ந்து} விழுந்தன.(16)
ராக்ஷசன் விராதன், வரதானத்தின் ஸ்பரிசத்தால் பிராணனை தக்க வைத்துக் கொண்டு {தான் பெற்ற வரத்தின் தீண்டலால் உயிரைத் தக்க வைத்துக் கொண்டு}, தன் சூலத்தை உயர்த்தியபடியே அந்த ராகவர்கள் இருவரையும் நோக்கி விரைந்து சென்றான்.(17) சஸ்திரம் {ஆயுதந்} தரித்தவர்களில் சிறந்தவனான ராமன், வஜ்ரத்தைப் போல ஜ்வலிக்கும் அந்த சூலத்தை இரண்டு சரங்களால் ககனத்திலேயே {வானத்திலேயே} துண்டு துண்டாக்கினான்.(18) இராமனின் சுடர்மிகு கணைகளால் வெட்டப்பட்ட அந்த சூலம், அசனியால் {வஜ்ரத்தால்} சிதறடிக்கப்பட்ட மேருவில் இருந்து விழும் பாறையைப் போலத் தரையில் விழுந்தது.(19)
அவர்கள், கரிய சர்ப்பங்களைப் போன்ற தங்கள் வாள்களை சீக்கிரம் எடுத்துச் சுழற்றியபடியே துரிதமாக அவன் மீது பாய்ந்து, அவனை பலமாகத் தாக்கினர்.(20) இவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்ட அந்த ரௌத்திரன் {விராதன்}, அசைக்கமுடியாத நரவியாகரர்களான {மனிதர்களில் புலிகளான} அவர்கள் இருவரையும் தன் கைகளில் பிடித்து, {அங்கிருந்து} ஒடிச் செல்ல விரும்பினான்.(21) அவனது எண்ணத்தை அறிந்த ராமன், லக்ஷ்மணனிடம் {இவ்வாறு} சொன்னான், "இந்த ராக்ஷசன் தன் வழியில் எங்கேனும் எளிதாக நம்மை சுமந்து செல்லட்டும்.(22) இந்த ராக்ஷசன் எங்கே விரும்புகிறானோ அங்கே சுமந்து செல்லட்டும். இந்த நிசாசரன் {இரவுலாவி} எவ்வழியில் செல்கிறானோ, அதுவே நமது பாதையாகும்[2]" {என்றான் ராமன்}.(23)
[2] ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி இனிதின்போகல் நன்று என நினைத்தனென் இவன் பொரு இலோய்சாகல் இன்று பொருள் அன்று என நகும் தகைமையோன்வேக வெங்கழலின் உந்தலும் விராதன் விழவே- கம்பராமாயணம் 2557ம் பாடல், விராதன் வதைப்படலம்பொருள்: ஒப்பிலாதவனே, செல்ல வேண்டிய வழியின் எல்லையை {இவன் மீது} ஏறி இனிதாகச் செல்வது நல்லது என்று நினைத்தேன். இவன் இறப்பது இன்று அரிய செயல் இல்லை என நகைத்த தகைமையாளன் {ராமன்}, விராதன் கீழே விழவும் வேகமாகத் தன் வீரக்கழலால் {காலணியால்} உதைத்தான்.
அதிபலமிக்கவனும், ஆணவம் கொண்டவனுமான அந்த நிசாசரன் {இரவுலாவி}, தன் பலத்தின் வீரியத்தால் {வலிமையால்}, பாலர்களை {சிறு குழந்தைகளைப்} போல அவர்களைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டு சென்றான்.(24) பிறகு அந்த ரஜனிசரன் {இரவுலாவியான விராதன்}, ராகவர்கள் இருவரையும் தன் தோளில் ஏற்றிக் கொண்டு, கோரமாக கர்ஜித்தபடியே வனத்தை நோக்கிச் சென்றான்.(25) மஹாமேகம் போன்றதும், விதவிதமான பெரும்மரங்களால் சூழப்பட்டதும், நானாவித பக்ஷி குலங்கள் {பறவைக் கூட்டங்களால்} நிறைந்ததும், நரிகளும், கொடிய மிருகங்களும் விரவிக்கிடப்பதுமான விசித்திர வனத்திற்குள் அவன் {விராதன்} பிரவேசித்தான்.(26)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 03ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |