Return and rule | Ayodhya-Kanda-Sarga-106 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அரியணை ஏற்க வேண்டியதற்கான பல்வேறு காரணங்களைச் சொல்லி ராமனிடம் மன்றாடிய பரதன்; தந்தையின் சொல்லை மதிக்கத் தீர்மானித்த ராமன்...
இவ்வாறு அர்த்தம் பொதிந்த சொற்களைப் பேசிவிட்டு அந்த மந்தாகினி தீரத்தில் ராமன் அமர்ந்திருந்த போது, தார்மிகனான பரதன், தார்மிகனும், இயற்கையை நேசிப்பவனுமான ராமனிடம் அற்புதமானவையும், தார்மிகமானவையுமான {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(1,2அ) "அரிந்தமரே {பகைவரை வெல்பவரே}, உம்மை துக்கம் வருத்துவதுமில்லை; பிரீதி மகிழ்விப்பதுமில்லை. இத்தகையவரான உம்மைப் போல உலகத்தில் வேறு யார் இருக்க முடியும்? பெரியோரால் பெரிதும் மதிக்கப்படுகிறீர், அவர்களிடம் ஐயங்களையும் கேட்டுக் கொள்கிறீர்.(2ஆ,3) மரித்தவன், ஜீவித்திருப்பவன், இல்லாமை {வறுமை}, இருப்பு {செழிப்பு} ஆகியவற்றை சமமாக நோக்கும் புத்திலாபத்தை அடைந்தவனுக்கு எதைக் குறித்த துக்கம் ஏற்படும்?[1](4) மனுஜாதிபரே, காலத்தை முழுமையாக அறிந்த உம்மைப் போன்றவர்கள் துன்பத்தை அனுபவித்தாலும் விரக்தியடைய மாட்டார்கள்.(5)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "இறந்தவன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே பிழைத்திருப்பவன் என்றதும், இல்லாதிருக்கையில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே இருக்கையிலுமென்றதுமான இந்த நிர்ணயமடைந்திருப்பது எவனுக்கு ஏற்பட்டுள்ளதோ அவன் எதனால் துயருறுவான்?" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "செத்தவனிடத்தில் எப்படி த்வேஷம் உண்டாகாதோ, அப்படியே பிழைத்திருப்பவனிடத்திலும் த்வேஷமில்லாதிருத்தல், இல்லாத வஸ்துவினிடத்தில் ப்ரீதி வையாதிருப்பது போலவே உள்ள வஸ்துவினிடத்திலும் ப்ரீதி வையாதிருத்தல் ஆகிய இப்புத்தி எவனுக்குண்டாகுமோ, அவன் எதைப் பற்றிப் பரிதபிப்பான்?" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "பிறப்பிலும், உய்விலும், இறப்பிலும், பொருளுடைமையிலும், பொருளின்மையிலும், எவன் புத்தி மாறுபாடுறுகின்றிலதோ? அவன் எதனால் வருத்தமுறுவான்?" என்றிருக்கிறது.
மஹாத்மாவே, ராகவரே, அமரர்களுக்கு ஒப்பான பலம் கொண்டவராகவும், சத்தியசங்கரராகவும், அனைத்தையும் அறிந்தவராகவும், அனைத்தையும் நோக்கும் ஞானமுள்ளவராகவும் நீர் இருக்கிறீர்.(6) இத்தகைய குணங்களைக் கொண்டவரும், அனைத்தின் ஆதி அந்தங்களை அறிந்தவருமான உம்மை, மிகவும் பொறுத்துக் கொள்ள முடியாத துன்பத்தாலும் வருத்தமுறச் செய்ய முடியாது.(7) நான் இல்லாத போது, என் காரணமாக இழிந்த மனம் கொண்ட என் மாதாவால் {கைகேயியால்} இழைக்கப்பட்ட பாபம் எனக்கு விருப்பமானதல்ல. என்னை மன்னிப்பீராக.(8) தர்ம பந்தத்தால் {அறக்கயிற்றால்} நான் கட்டப்பட்டிருப்பதனாலேயே, பாபகாரிணியும், தண்டனைக்குத் தகுந்தவளும், என் மாதாவுமான இவளுக்குக் கடுமையான தண்டனையை அளித்துக் கொல்லாதிருக்கிறேன்.(9) சுத்தமான பிறவியையும், செயல்களையும் கொண்டவனும், தர்மாதர்மங்களை அறிந்தவனுமான தசரதாத்மஜனால் {தசரதரின் மகனால்}, உலக நிந்தனைக்குரிய அதர்ம கர்மத்தை {கொடுஞ்செயலை} எவ்வாறு செய்ய இயலும்?(10)
குருவும், வேள்விகளைச் செய்தவரும், முதிர்ந்தவரும், தேவர்களுக்கு இணையானவரும், என் பிதாவுமான ராஜா {தசரதர்} பிரேதமாகிவிட்டார். இதனாலேயே சபையில் அவரை நிந்திக்காமல் இருக்கிறேன்.(11) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, தர்மத்தை அறிந்தவனான எவன்தான், ஒரு ஸ்திரீயின் பிரியத்திற்காக, தர்மத்திற்கும், அர்த்தத்திற்கும் விலக்கமான இத்தகைய முறையற்ற கர்மத்தை செய்வான்?(12) பூதங்கள் தங்கள் அந்திமகாலத்தில் மதியிழக்கும் என்பது பழமொழி. இராஜா இவ்வாறு செயல்பட்டதன் மூலம் அந்தப் பழமொழியை உலகில் {உலகத்தின் பார்வையில்} மெய்யாக்கியிருக்கிறார்.(13) குரோதத்தாலோ, மோஹத்தாலோ, {முன் பின் அறியாத} சாகசத்தாலோ நம் தாதை அத்துமீறிவிட்டார். நல்ல நோக்கை கருத்தில் கொண்டு அதை நேராக்குவீராக.(14) பிதாவின் அத்துமீறல்களை நேராக்கும் புத்திரன் மட்டுமே உலகில் மகனாகக் கருதப்படுகிறான். இதற்கு மாறாக நடப்பவன் விபரீதத்தையே உண்டாக்குகிறான் {அவன் மகனாகக் கருதப்பட மாட்டான்}.(15) உண்மை மகனான நீர், உலகின் தீரர்களால் கண்டிக்கப்படுவதும், நம் பிதாவால் செய்யப்பட்டதுமான தீச்செயலை அங்கீகரிக்காதீர்.(16)
கைகேயியையும், என்னையும், நம் தாதையையும் {தசரதரையும்}, நம் நண்பர்களையும், பந்துக்களையும், நகர ஜானபத வாசிகள் அனைவரையும், இது {இந்த ராஜ்ஜியம்} முழுவதையும் காப்பீராக.(17) அரண்யம் எங்கே? க்ஷாத்ரம் {க்ஷத்திரியக் கடமை} எங்கே? ஜடைகள் {ஜடாமுடி} எங்கே? பாலனம் {ஆட்சி} எங்கே? {வெறுத்தொதுக்க வேண்டிய} இத்தகைய முரண்பாடான செயலைச் செய்வது உமக்குத் தகாது.(18) மஹாபிராஜ்ஞரே {பெரும் மேதாவியே}, பிரஜைகளைப் பரிபாலிக்கவல்ல அபிஷேகத்தைச் செய்து கொள்வதே க்ஷத்திரியனின் பிரதம தர்மமாகும் {முதற்கடமையாகும்}.(19) வெளிப்படையான தர்மத்திலிருந்து விலகி, ஐயத்திற்குரியதும், மகிழ்ச்சியை உறுதி செய்யாததும், நிச்சயமற்றதுமான ஒன்றை எந்த க்ஷத்திரியன் பயில்வான்?(20) அல்லது, கிலேசத்தில் {துன்பத்தில்} பிறக்கும் தர்மத்தையே நீர் பின்பற்ற விரும்பினாலும், தர்மத்தின்படி நான்கு வர்ணங்களையும் பரிபாலிக்கும் கிலேசத்தை {துன்பத்தை} ஏற்றுக் கொள்வீராக.(21)
தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான்கு ஆசிரமங்களில் கார்ஹஸ்தியமே {வாழ்வின் நான்கு நிலைகளில் இல்லறமே}[2] சிறந்ததென தர்மஜ்ஞர்கள் சொல்கிறார்கள். அதை எவ்வாறு நீர் கைவிடுவீர்?(22) கல்வியிலும், பிறவி நிலையிலும், நான் உமக்கு பாலன் {உம்மை விட இளையவன்}. அத்தகையவனான நான் நீர் இருக்கையில் எவ்வாறு பூமியைப் பரிபாலிப்பேன்?(23) தாழ்ந்த நிலையில் இருப்பவனும் {இளையவனும்}, புத்தியும், குணமும் இல்லாத பாலனுமான என்னால் நீரில்லாமல் வாழ முடியாது.(24) தர்மஜ்ஞரே, பிதாவின் வழியில் வந்த இந்த ராஜ்ஜியம் முழுவதையும், எந்தக் குழப்பமும், இடையூறும் இல்லாமல், பந்துக்களுடன் சேர்ந்து உமக்கான ஸ்வதர்மத்தின்படி {உமது கடமையின் படி} ஆள்வீராக.(25)
[2] கேஎம்கே மூர்த்தி ஆங்கிலப் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரம்மசரியம், கார்ஹஸ்தியம் {கிருஹஸ்தம் / இல்லறம்}, வானப்ரஸ்தம், சந்நியாசம் {துறவறம்} என்பன வாழ்வின் நான்கு நிலைகளாலும் {சதுராசிரமங்களாகும்}" என்றிருக்கிறது.
வசிஷ்டருடன் கூடிய அமைச்சர்களும், மந்திரகோவிதர்களான {மந்திரங்களை உச்சரிப்பதில் வல்லவர்களான} ரித்விஜர்களும், உமக்கு மந்திரங்களுடன் கூடிய அபிஷேகத்தை இங்கேயே செய்வாராக.(26) அபிஷேகஞ் செய்து கொண்ட நீர், வலிமையால் உலகங்களை வென்று, மருத்துகளுடன் {ஸ்வர்க்கத்திற்குச்} சென்ற வாசவனை {இந்திரனைப்} போல எங்களுடன் அயோத்திக்கு வந்து ஆட்சி செய்வீராக.(27) அங்கே ருணங்கள் மூன்றையும் {தேவ, ரிஷி, பித்ருக்களுக்கான முக்கடன்களையுந்} தீர்த்து, பகைவரை அடக்கி, நண்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றி நீரே எனக்கு ஆணையிடுவீராக.(28) ஆரியரே, இன்று உமது அபிஷேகத்தால், நண்பர்கள் மகிழ்ச்சியடையட்டும்; உமது பகைவர்கள் பீதியடைந்து இன்றே பத்து திசைகளிலும் ஓடட்டும்.(29) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, என் மாதாவின் மேலுள்ள ஆக்ரோஷத்தை இன்றே துடைப்பீராக {அவளது இகழ்வினைத் தீர்ப்பீராக}. மதிப்புமிக்க நம் தந்தையை பாவத்தில் இருந்து பாதுகாப்பீராக[3].(30) 'பூதங்களிடம் கருணை காட்டும் மஹேசுவரனைப் போல என்னிடமும், நம் பந்துக்கள் அனைவரிடமும் நீர் நடக்க வேண்டும்' என்று என் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்.(31) அல்லது, இதை மறுத்து இங்கிருந்து வனத்திற்கே நீர் சென்றாலும், நானும் உம்முடன் வருவேன்" {என்றான் பரதன்}.(32)
[3] உந்தை தீமையும் உலகு உறாத நோய்தந்த தீவினைத் தாய் செய் தீமையும்எந்தை நீங்க மீண்டு அரசு செய்க எனாசிந்தை யாவதும் தெரியக் கூறினான்.- கம்பராமாயணம் 2477ம் பாடல்பொருள்: எந்தையே {என் தலைவா}, உன் தந்தை {தசரதரும்} செய்த தீமையும், உலகத்துக்கு இதுவரை வராத துன்பநோயைத் தந்த பாப வடிவமான என் தாய் {கைகேயி} செய்த தீமையும் நீங்குவதற்கு, மீண்டு வந்து அரசு செலுத்துவாயாக என்று தன் சிந்தையில் உள்ளவை யாதும் தெரியக் கூறினான்.
இப்படி பரதன் தன் சிரம் தாழ்த்தி தணித்தாலும், சத்தியவானும், மஹீபதியுமான ராமன், திரும்பும் மனம் இல்லாமல், தன் பிதாவின் சொற்களுக்கே கட்டுப்பட்டிருந்தான்.(33) ஜனங்கள், ராகவனின் அற்புத உறுதியைக் கண்டு துக்கமடைந்தாலும், ஒரு வகையில் மகிழ்ச்சியுமடைந்தனர். அயோத்திக்கு அவன் திரும்பாததால் துக்கத்தையும், அவனது திடமான உறுதியைக் கண்டு மகிழ்ச்சியையும் அடைந்தனர்.(34) கலக்கமடைந்து, கண்ணீர் சிந்தியபடியே இருந்த ரித்விஜர்களும், குடிமக்களும், அக்கூட்டத்தில் இருந்த முதியோரும், மாதாக்களும், ராமனிடம் பணிந்து இவ்வாறு பேசிக் கொண்டிருந்த பரதனைப் போற்றிவிட்டுத் தங்கள் வேண்டுதல்களையும் முன்வைத்தனர்.(35)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 106ல் உள்ள சுலோகங்கள்: 35
Previous | | Sanskrit | | English | | Next |