Offer libation | Ayodhya-Kanda-Sarga-102 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தை ஏற்குமாறும், தந்தைக்கு நீர்க்கடன் செலுத்துமாறும் இராமனிடம் வேண்டிய பரதன்...
இராமனின் சொற்களைக் கேட்ட பரதன் {பின்வருமாறு} மறுமொழி கூறினான், "தர்மத்தை இழந்தவனான எனக்கு ராஜதர்மத்தினால் ஆகப் போவதென்ன?(1) நரரிஷபரே, ராஜரே, மூத்த புத்திரன் இருக்க, இளையவன் நிருபனாக {மன்னனாக} முடியாது என்பது நம்மில் என்றென்றும் நிலைத்திருக்கும் {சாசுவத} தர்மமாகும்.(2)
இராகவரே, நீர் என்னுடன் வளமிக்க அயோத்திக்கு வந்து, நம் குல நலத்திற்காக உமக்கு அபிஷேகஞ் செய்து கொள்வீராக.(3) தர்மத்திற்கும், அர்த்தத்திற்கும் இணக்கமானதென்றும், அமானுஷ்யமானதென்றும் {மனிதனால் ஆகாததென்றும்} சொல்லப்படும் ஒழுக்கத்தைக் கொண்ட ராஜனையும் மானிடன் என்றே சொல்கிறார்கள், நானோ அவனை தேவத்வம் {தெய்வத்தன்மை} கொண்டவனாகவே ஏற்கிறேன்.(4)
நான் கேகயத்திலும், நீர் அரண்யத்திலும் இருந்தபோது யாகசீலரென்றும், ஆரியரென்றும் நல்லோரால் மதிக்கப்பட்ட ராஜா திவத்தை {சொர்க்கத்தை} அடைந்தார்.(5) சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் நீர் புறப்பட்ட மாத்திரத்திலேயே {தசரத} ராஜா துக்கத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்டவராக திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} உயர்ந்தார்.(6)
புருஷவியாகரரே {மனிதர்களில் புலியே}, எழுவீராக. பிதாவுக்கு நீர்க்காணிக்கை செலுத்துவீராக. நானும், இந்த சத்ருக்னனும் ஏற்கனவே ஜலதர்ப்பணம் செலுத்திவிட்டோம்.(7) இராகவரே, பிரியத்திற்குரியவர் தத்தம் செய்வதே உண்மையில் பித்ரு லோகத்தில் அளவற்றதாகப் பெருகும் என்று சொல்லப்படுகிறது. நீரே பிதாவின் பிரியத்திற்குரியவர்.(8) உம்மால் கைவிடப்பட்ட உமது பிதா, உமக்காகப் புலம்பி, உம்மைப் பார்க்கும் விருப்பத்துடனும், உம்மிடத்தில் மட்டுமே பதிந்த புத்தியைத் திருப்பிக் கொள்ள முடியாமலும், உம்மைக் குறித்த சோகத்திலேயே மூழ்கி உம்மை நினைத்துக் கொண்டே அஸ்தமித்தார் {மறைந்தார்}" {என்றான் பரதன்}.(9)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 102ல் உள்ள சுலோகங்கள்: 9
Previous | | Sanskrit | | English | | Next |