The cremation of Dasaratha | Ayodhya-Kanda-Sarga-076 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதனை அறிவுறுத்திய வசிஷ்டர்; சரயு நதியின் கரையில் தசரதனின் ஈமச் சடங்குகளைச் செய்த பரதன்...
வாக்கிலும், வாதம் செய்வதிலும் சிறந்த வசிஷ்ட ரிஷி, இவ்வாறு சோக சந்தாபத்துடன் கூடிய கைகேயி சுதனான பரதனிடம் {பின்வருமாறு} பேசினார்:(1) "இராஜபுத்திரா, பெரும்புகழ்பெற்றவனே, உனக்கு மங்கலம் உண்டாகட்டும். நீ சோகமடைந்தது போதும். நரபதியின் {தசரதனின்} பிராப்த காலத்திற்கான வழிமுறையை {ஈமச்சடங்குகளைச்} சிறப்பாகச் செய்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(2)
தர்மத்தை அறிந்தவனான பரதன், வசிஷ்டரின் சொற்களைக் கேட்டு, தரணியில் இருந்து எழுந்து, பிரேத காரியங்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்யத் தொடங்கினான்.(3) தைலத் தொட்டியிலிருந்து தூக்கி பூமியில் கிடத்தப்பட்ட பூமிபதியான தசரதன், பொன்னிற வதனத்துடன் உறங்குபவனைப் போலத் தோற்றமளித்தான்.(4)
அவனது புத்திரன் {பரதன்}, நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான சயனத்தில் அவனைக் கிடத்திவிட்டு, பெருந்துக்கத்துடன் {பின்வருமாறு} புலம்பியழுதான்:(5) "இராஜரே, நான் இங்கிருந்து சென்று திரும்பி வருவதற்குள் என்ன முடிவு செய்துவிட்டீர்? தர்மத்தை அறிந்த ராமரையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும் விரட்டிவிட்டீர்.(6) துக்கத்திலிருக்கும் இந்த ஜனங்களையும் விட்டு, களைப்பில்லா செயல்புரியும் புருஷசிம்மரான ராமரும் இல்லாமல் எங்கே சென்றுவிட்டீர்?(7) தாதையே, ராஜரே, நீரோ சொர்க்கம் சென்றுவிட்டீர். இராமரும் வனத்தில் தஞ்சம் புகுந்துவிட்டார். இந்நகரின் யோகக்ஷேமத்தை விசாரிப்பது {நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது} யார்?(8) இராஜரே, நீர் இல்லாமல் விதவையாகியிருக்கும் பிருத்வி பொலிவிழந்திருக்கிறாள். இந்நகரும் சந்திரனில்லாத இரவைப் போலத்தெரிகிறது" {என்றான் பரதன்}.(9)
தீன மனத்துடன் {மனம் நொந்து} இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்த பரதனிடம், மஹாமுனியான வசிஷ்டர் மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னார்:(10) "மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, தயக்கமில்லாமலும், ஏக்கமடையாமலும் இந்த விசாம்பதிக்கு {மன்னனுக்குச்} செய்ய வேண்டிய பிரேத காரியங்களைச் செய்வாயாக" {என்றார் வசிஷ்டர்}.(11)
வசிஷ்டரின் வாக்கியத்திற்குக் கீழ்ப்படிந்த பரதன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, ரித்விக்குகளையும், புரோஹிதர்களையும், ஆசாரியர்களையும் துரிதமாக அழைத்தான்.(12) நரேந்திரனின் {மனிதர்களின் மன்னனான தசரதனுக்குரிய} அக்னிகள், அக்னியகாரத்திற்கு {நெருப்பறைக்கு} வெளியே ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த ரித்விக்குகளாலும், யாஜகர்களாலும் {வேள்விப் பணியாளர்களாலும்} விதிப்படி மூட்டப்பட்டன.(13) கண்ணீரால் தொண்டை அடைக்கப்பட்ட பரிசாரகர்கள் {பணியாட்கள்}, உயிரிழந்த ராஜனை ஒரு சிவிகையில் ஏற்றி மனமின்றி வெளியே கொண்டு சென்றனர்.(14)
ஜனங்கள், ஹிரண்யங்களையும் {பொன் நாணயங்களையும்}, சுவர்ணத்தையும் {தங்கத்தையும்}, விதவிதமான வஸ்திரங்களையும் மார்க்கத்தில் {வழியில்} இறைத்தபடியே அந்த நிருபதிக்கு {மன்னனுக்கு} முன் சென்றனர்.(15) அதே போலவே சிலர் சந்தனம், அகில், குங்கில்யம் ஆகியவற்றையும், சரளம், பத்மகம், தேவதாரு ஆகிய கட்டைகளையும், இன்னும் பல சுகந்த பொருள்களையும் கொண்டு சென்று செய்த சிதையின் மத்தியில் ரித்விக்குகள் அந்த பூமிபதியை கிடத்தினர்.(16,17)
பிறகு அந்த ரித்விக்குகள், அவனது நன்மைக்கென ஹுதாசனத்தில் {நெருப்பில்} ஆகுதிகளையிட்டு ஜபித்தனர். சாமகர்கள் {சாம வேதமறிந்த புரோகிதர்கள்} சாஸ்திரப்படி சாமங்களை {சாம வேத மந்திரங்களை} ஓதினர்.(18) அப்போது அவனது யோசிதைகள் {தசரதனின் மனைவியர்}, முதியவர்களால் சூழப்பட்டவர்களாகத் தங்களுக்குத் தகுந்த சிவிகைகளிலும், யானங்களிலும் நகரத்திலிருந்து அவ்விடத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.(19) பிறகு ரித்விக்குகளும், சோகசந்தாபத்துடன் கூடிய கௌசல்யை முதலிய ஸ்திரீகளும் அக்னி சிதையில் புதைந்த அந்த நிருபனை அப்ரதக்ஷிணஞ் செய்தனர் {மன்னனை தங்கள் இடப்புறம் வைத்து அவனைச் சுற்றி வந்தனர்}.(20)
அந்நேரத்தில் துயருற்று பரிதாபகரமாக அழுது கொண்டிருந்த ஆயிரக்கணக்கான நாரீகளின் கதறல், கிரௌஞ்சங்களுடைய ஒலியைப் போலக் கேட்டது.(21) புலம்பியபடியே மன உறுதியை இழந்த வராங்கனைகள் {உத்தமப் பெண்கள்} மீண்டும் மீண்டும் அழுதபடியே தங்கள் யானங்களிலிருந்து சரயுவின் தீரத்தில் இறங்கினர்.(22) பரதனுடன் சேர்ந்து அந்த நிருபாங்கனைகளும் {தசரதனின் மனைவியரும்}, மந்திரிகளும், புரோஹிதர்களும் நீர்க்காணிக்கை அளித்துவிட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் நகருக்குள் பிரவேசித்தனர்; துக்கத்துடன் பத்து நாட்களைப் பூமியில் {வெறுந்தரையில்} கிடந்து கடத்தினர்.(23)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 076ல் உள்ள சுலோகங்கள்: 23
Previous | | Sanskrit | | English | | Next |