Friday 30 September 2022

பரத சபத வியாஜம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 075 (65)

The pretext of Bharata's vows | Ayodhya-Kanda-Sarga-075 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கௌசல்யையின் அரண்மனைக்குச் சென்ற பரதன்; கடுஞ்சொற்கள் பேசிய கௌசல்யை; சபதம் என்ற சாக்கில் தீயோரை சபித்த பரதன்; நம்பிக்கையடைந்த கௌசல்யை...

Bharata Satrugna and Kausalya

வீரியவானான பரதன், நீண்ட காலத்திற்குப் பிறகு சுயநனவை அடைந்து, எழுந்ததும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் நிற்கும் தன் மாதாவைக் கண்டான்.(1) தன்னைப் பெற்றவளான அவளை அமாத்யர்களுக்கு {அமைச்சர்களுக்கு} மத்தியில் வைத்து நிந்திக்கும் வகையில், அவன், "நான் ஒருபோதும் ராஜ்ஜியத்தை விரும்பியதில்லை. என் மாதாவிடமும் {அது குறித்து} ஆலோசித்ததில்லை.(2) இராஜர் கருத்தில் கொண்டிருந்த அபிஷேகம் {பட்டாபிஷேகம்} குறித்தும் எனக்குத் தெரியாது. நான் சத்ருக்னன் சகிதனாகத் தொலைதூர தேசத்தில் வசித்திருந்தேன்.(3) மஹாத்மாவான ராமரின் வனவாசத்தையோ, சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, சீதையும் நாடுகடத்தப்பட்டதையோ நான் அறியமாட்டேன்" {என்றான் பரதன்}.(4)

இவ்வாறு அழுது கொண்டிருக்கும் மஹாத்மாவான பரதனின் சப்தத்தை அறிந்த கௌசல்யை, சுமித்ரையிடம் இதைச் சொன்னாள்:(5) "குரூரக் காரியங்களைச் செய்பவளான கைகேயியின் மகன் பரதன் வந்திருக்கிறான். தீர்க்கதரிசனம் கொண்டவனான {தொலைநோக்குப் பார்வை கொண்டவனான / வருவன அறிந்தவனான}[1] அந்த பரதனை நான் காண விரும்புகிறேன்" {என்றாள்}.(6)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு "தீர்கதர்ஷிநம்" என்று மூலம். இதனால் பரதனுக்கு ராமனைத் துரத்தினது ஸம்மதமன்றென்று {சம்மதம் இல்லையென்று} கௌசஸல்யைக்குத் தெரியுமென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

வர்ணமிழந்தும், அழுக்கடைந்தும், மெலிந்தும் இருந்தவள் {கௌசல்யை}, இவ்வாறு சுமித்திரையிடம் சொல்லி நடுக்கமுற்று, நனவிழந்தவளாக பரதன் இருக்குமிடத்திற்குப் புறப்பட்டாள்.(7) அதேவேளையில், ராமானுஜனான {ராமனின் தம்பியான} பரதனும், சத்ருக்னன் சகிதனாக கௌசல்யையின் இருப்பிடத்திற்குப் புறப்பட்டான்.(8) துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், {வழியில்} நனவிழந்து விழுந்தவளும், உன்னத மனங்கொண்ட ஆரியையுமான கௌசல்யை அழுது கொண்டிருப்பதைக் கண்டு, துக்கமடைந்த சத்ருக்னனும், பரதனும், அந்த துக்கத்துடனே சென்று அவளைத் தழுவிக் கொண்டனர்.(9,10அ)

பெரிதும் துக்கமடைந்திருந்த கௌசல்யை, பரதனிடம் இதைச் சொன்னாள்:(10ஆ) "இராஜ்ஜியத்தில் ஆசை கொண்ட உனக்கு, இதோ அகண்டகமான {முட்களற்ற / பகைவரற்ற} ராஜ்ஜியம் கிடைத்தது. ஐயோ, கைகேயி செய்த குரூர கர்மத்தினால் அதை சீக்கிரமே அடைந்தாய்.(11) குரூரதர்சினியான கைகேயி, என் புத்திரனை மரவுரி அணியச் செய்து, வனத்தில் வசிக்க விரட்டினாள். இதன் மூலம் என்ன குணத்தை அவள் காண்கிறாள் {என்ன பயன் அடைந்தாள்}?(12) பெரும்புகழ்பெற்ற ஹிரண்யநாபனான  என் மகன் {பொன்மயமான உந்தியைக் கொண்ட ராமன்} எங்கே இருக்கிறானோ அங்கேயே என்னையும் சீக்கிரமாக அனுப்புவாள் அந்தக் கைகேயி.(13) அல்லது, நானே சுயமாக சுமித்ரையுடன் சேர்ந்து, அக்னிஹோத்ரத்தை {இருபிறப்பாளர் சுமக்கும் புனித நெருப்பை} முன்னிட்டுக் கொண்டு[2], ராகவன் எங்கே இருக்கிறானோ அங்கே சுகமாகப் புறப்பட்டுச் செல்வேன்.(14) அல்லது, நீ விரும்பினால் புருஷவியாகரனான என் புத்திரன் {மனிதர்களிற்புலியான என் மகன் ராமன்} எங்கே தபம் செய்து கொண்டிருக்கிறானோ அங்கே நீயே என்னை அழைத்துச் செல்வாயாக.(15) சம்பூர்ணமான ஹஸ்தங்கள் {யானைகள்}, அச்வங்கள் {குதிரைகள்}, ரதங்கள் {தேர்கள்} ஆகியவற்றையும், குவியல் குவியலான தன, தானியங்களையும் கொண்ட இந்த ராஜ்ஜியத்தை அவள் {கைகேயி} உனக்குப் பெற்றுத் தந்து விட்டாள்" {என்றாள் கௌசல்யை}.(16)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் ஸுமித்ரையைக் கூடவே அழைத்துக் கொண்டு ஸுகமாகத் தசரதனது அக்னியையும் அவரது சரீரத்தையும் எடுத்துக் கொண்டு ராமனிருக்குமிடத்திற்குப் போகின்றனன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "அக்னி ஜ்யேஷ்ட பார்யைக்கு அதீனமாகையாலும், தசரதன் பரதன் ஸம்ஸ்காரஞ் செய்ய வேண்டாமென்று நிஷேதித்தமையாலும் அவ்வக்னியைத் தான் எடுத்துக் கொண்டு போவதாகக் கௌஸல்யை சொல்லினள். இதனால் - கௌஸல்யை பரதனுக்குக் கைகேயி செய்த பாப ஸம்பந்தத்தினால் ராஜஸம்ஸ்காரத்திற்கு அதிகாரமில்லையென்று ஸூசிப்பித்தாளென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

பாபமற்றவனான பரதன், ரணத்தில் {புண்ணில்} ஊசியால் குத்துவது போன்ற இவையாலும், இன்னும் பிற எண்ணற்ற குரூர வாக்கியங்களாலும் கடிந்து கொள்ளப்பட்டுப் பெரிதும் துன்புற்றான்.(17) இதனால் மனங்கலங்கியவன், பலவாறு புலம்பியபடியே சுயநனவிழந்தவனாக அவளது சரணங்களில் {பாதங்களில்} விழுந்து, மீண்டும் நனவுமீண்டு எழுந்து நின்றான்.(18)

பிறகு பரதன், இவ்வாறு சோகத்தில் மூழ்கி பல்வேறு வகைகளில் புலம்பிக் கொண்டிருந்த கௌசல்யையிடம், தன் கைகளைக் கூப்பியவாறே இந்த மறுமொழியைச் சொன்னான்:(19) "ஆரியையே, அறியாதவனும், அப்பாவியுமான என்னை ஏன் நிந்திக்கிறாய்? இராகவரிடம் {ராமரிடம்} நான் கொண்ட பரந்த, ஸ்திரமான பிரீதியை {அன்பை} நீ அறிவாய்[3].(20)

[3] 21ம் சுலோகம் முதல் 58ம் சுலோகம் வரை வரப்போகும் பகுதி "பரதசபதவ்யாஜம்" என்றழைக்கப்படுகிறது. "இதன் மூலம் வால்மீகி தர்ம விசேஷங்களைத் தெரிவிக்கிறார்" என்று நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில் இருக்கிறது.

சத்தியசந்தரும், நல்லோர்களில் சிறந்தவருமான ஆரியரை {என் அண்ணன் ராமரை, வனத்திற்குப் புறப்பட்டுச்} செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனுடைய புத்தி, சாஸ்திரங்களைப் பின்பற்றும் உறுதியை ஒருபோதும் அடையாதிருக்கட்டும்.(21) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பாபிகளிடம் பணிபுரிவானாக; சூரியனுக்கு எதிராக மலஜலம் கழிப்பானாக; அவன் உறங்கும் பசுவை பாதத்தால் உதைப்பானாக {மேற்கண்ட தீச்செயல்களைச் செய்வோரின் பாபத்தை அடைவானாக}.(22) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன் பணியாளுக்குக் கூலி கொடுக்காமல் கடும் வேலையை விதிக்கும் பர்த்தாவின் {தலைவனின்} பாபத்தை அடையட்டும்.(23) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் புத்திரர்களைப் போல மக்களைப் பாதுகாக்கும் ராஜனுக்குத் தீங்கிழைத்தவனின் பாபத்தை அடையட்டும்.(24) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனுக்கு, பிரஜைகளிடம் ஆறிலொரு பங்கை எடுத்துக் கொண்டு அவர்களை ரக்ஷிக்கத் தவறும் நிருபனின் {மன்னனின்} அதர்மம் நேரட்டும்.(25) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சத்ரத்தில் தபஸ்விகளுக்கு {வேள்வியில் புரோஹிதர்களுக்கு} உறுதியளித்த யஜ்ஞ தக்ஷிணையைக் கொடுக்காதவனின் பாபத்தை அடையட்டும்.(26) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், ஹஸ்த {யானைகள்}, அச்வ {குதிரைகள்}, ரதங்கள் நிறைந்ததும், ஜனம் {மக்கள்} சூழ்ந்ததுமான நல்ல யுத்தத்தில் தர்மத்தைப் பின்பற்றாதவனாகட்டும்.(27) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, மதிமிக்கவர்களால் கவனமாக உபதேசிக்கப்பட்ட சாஸ்திரங்களின் சூக்ஷ்ம அர்த்தங்களை மறந்து போகட்டும்.(28) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், நீண்ட கரங்களையும், அகன்ற தோள்களையும் கொண்ட ராமர், சந்திரனையும், அர்க்கனையும் {சூரியனையும்} போன்ற ஒளியுடன் ராஜ்ஜியஸ்தத்தில் {நாட்டின் அரியணையில்} அமர்வதைக் காணாதிருக்கட்டும்.(29) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்தக் கருணையற்றவன், பெரியோரை மதியாமல் பாயஸத்தையும், கிருசரத்தையும் {எள்ளும், வெல்லமும் கலந்த உணவையும்}, ஆட்டு மாமிசத்தையும் வீணாக உண்பவனாகட்டும் {பெரியோருக்குக் கொடுக்காமல் அப்படி வீணாக உண்பவனின் பாபத்தை அடையட்டும்}.(30) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பசுக்களை உதைப்பவனாகட்டும்; பெரியோரை அவமதிப்பவனாகட்டும்; மித்ரனை {நண்பனை} வஞ்சிப்பவனாகட்டும் {இவர்கள் அடையும் பாபத்தை அடையட்டும்}.(31) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, அவ்வப்போது ரகசியமாக விசுவாசத்தில் {நம்பிக்கையில்} சொல்லப்படும் சிறு பரிவாதங்களையும் {பழிச்சொற்களையும்} வெளிப்படுத்தட்டும் {அப்படி வெளிப்படுத்துபவனின் பாபத்தை அடையட்டும்}.(32) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், அகர்த்தனாகவும் {எத்தொழிலுமற்றவனாகவும்}, நன்றியற்றவனாகவும், கைவிடப்பட்டவனாகவும், வெட்கமற்றவனாகவும், வெறுக்கத்தக்கவனாகவும் ஆகட்டும்.(33) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் கிருஹத்தில் {வீட்டில்} புத்திரர்கள், தாரங்கள், பணியாள்கள் சூழ்ந்திருந்தாலும் சுவைமிக்க உணவை தனியாக உண்பவனாகட்டும்.(34) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தனக்குரிய தர்ம காரியங்களை நிறைவேற்றாமல், தனக்குத் தகுந்த தாரங்களை அடையாமல், பிள்ளையற்றவனாக சாகட்டும்.(35) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தீர்க்காயுள் இல்லாதவனாகவும், தாரத்தின் மூலம் தன் பிள்ளையைக் காணாதவனாகவும் ஆகட்டும்.(36) அவன் ராஜனையோ, ஸ்திரீயையோ, பாலரையோ, விருத்தரையோ கொன்ற பாபத்தை அடையட்டும். அடியவர்களை {தன்னைச் சார்ந்தவர்களைக்} கைவிட்டவனின் பாபத்தை அவன் அடையட்டும்.(37) 

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், அரக்கு, மது, மாமிசம், இரும்பு, விஷம் ஆகியவற்றை விற்பதன் மூலம் தன் அடியவர்களுக்கு {தன்னைச் சார்ந்தவர்களுக்கு} உணவளிப்பவனாகட்டும்.(38) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சத்ரு தரப்பில் பயம் உண்டாகி தப்பி ஓடும் நிலையில் கொல்லப்படட்டும்.(39) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், கந்தையாடையுடுத்தியும், கையில் கபாலத்துடன் பிச்சையெடுத்தும், பிருத்வியில் உன்மத்தனாக {பித்தனாகத்} திரியட்டும்.(40) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், குடியிலும், ஸ்திரீகளிடமும், சூதாட்டங்களிலும் எப்போதும் ஈடுபடும் காம, குரோதனாகட்டும்.(41) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவனது மனம் தர்மத்தில் திளைக்காதிருக்கட்டும். அவன் அதர்மத்தில் ஈடுபட்டு, தகாதவர்களுக்குக் கொடையளிப்பவனாகட்டும்.(42)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், ஆயிரமாயிரமாகத் திரட்டிய விதவிதமான செல்வங்களை தஸ்யுக்கள் {திருடர்கள்} கொள்ளையடிக்கட்டும்.(43) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், சந்திப்பொழுதுகள் இரண்டிலும் {அதிகாலையிலும், மாலையிலும்} உறங்குபவனுக்கு எந்தப் பாபம் நேருமோ அந்த பாபத்தை அடைவானாக.(44) அக்னிதாயகனுக்கு {தீ வைப்பவனுக்கு} எந்தப் பாபம் நேருமோ, குருதல்பகனுக்கு {குருவின் படுக்கைக்குக் களங்கமேற்படுத்தியவனுக்கு} எந்தப் பாபம் நேருமோ, மித்ரதுரோஹத்திற்கு {நண்பனை வஞ்சித்ததற்கு} எந்தப் பாபம் நேருமோ அதே பாபத்தை அவன் அடைவானாக.(45) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தேவதைகளுக்கும், பித்ருக்களுக்கும், அதே போல மாதா, பிதாவுக்கும் தொண்டாற்றாதவனாகட்டும்.(46)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், நல்லொழுக்கமுள்ளவர்களின் உலகத்தில் இருந்தும், நல்லொழுக்கமுள்ளவர்களின் புகழில் இருந்தும், நேர்மையான செயல்பாடுகளிலிருந்தும் சீக்கிரமாக நழுவுவானாக.(47) நீண்ட கைகளையும், அகன்ற மார்பையும் கொண்ட அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தன் மாதாவுக்குத் தொண்டாற்றாத அனர்த்தத்தில் உழல்வானாக.(48) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், தரித்திரனாக இருக்கும் நிலையில் தன்னைச் சார்ந்திருப்பவர்கள் பலரைக் கொண்டவனாகவும், எப்போதும் ஜுவரம் கொண்டவனாகவும் இருப்பானாக.(49) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பொருளற்றவர்களாகவும், தீனமாகவும், கண்களை உயர்த்தி யாசிப்பவர்களின் நம்பிக்கையை வீணடிப்பானாக.(50)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், வஞ்சகனாகவும், கொடூரனாகவும், கபடனாகவும், தூய்மையற்றவனாகவும், நேர்மையற்றவனாகவும் நித்தியம் ராஜன் மீதான பயத்தில் பீடிக்கப்பட்டிருப்பானாக.(51) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த துஷ்டாத்மா, ருதுஸ்நானம் செய்தவளும், ருதுகால தர்மத்தைப் பின்பற்றுபவளும், சதியுமான தன் பாரியாளை {உத்தமியுமான தன் மனைவியை} புறக்கணிப்பானாக.(52) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அந்த மூடன், தர்மத்தின் மீது கொண்ட தன் பற்றைவிட்டு, தர்ம தாரங்களைக் கைவிட்டு, பரதாரங்களுக்கு {சட்டப்படியான மனைவியரைக் கைவிட்டு, மாற்றான் மனைவியருக்குத்} தொண்டு செய்வானாக.(53) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பிரஜைகளற்ற {சந்ததியற்ற} பிராமணன் அடையும் பாபத்தை அடைவானாக.(54)

அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், குடிநீரை மாசடையச் செய்பவனும், விஷத்தை வைப்பவனும் ஈட்டும் பாபத்தை அடைவானாக.(55) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், இந்திரியங்கள் கெட்டு பிராமணருக்குச் செய்யும் வழிபாட்டைக் கெடுத்தவனாவானாக; அவன் இளங்கன்றுடைய பசுவிடம் பால் கறப்பவனாவானாக[4].(56) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், பருகும் நீர் இருந்தாலும், தாகவிடாய் கொண்டவனை வஞ்சிப்பவனின் பாபத்தை அடைவானாக.(57) அந்த ஆரியரைச் செல்ல அனுமதித்தவன் எவனோ, அவன், மார்க்கத்தில் வாதிடுவோருக்கிடையில் {பாதையில் இரு தரப்புக்கிடையில் நடக்கும் சச்சரவைத் தீர்க்க முயலாமல்} வேடிக்கை பார்த்து நிற்பவனின் பாபத்தை அடைவானாக" {என்றான் பரதன்}.(58)

[4] கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்
மன்றிடைப் பிறப் பொருள் மறைத்து வவ்வினோன்
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்
என்று இவர் உறு நரகு என்னது ஆகவே

- கம்பராமாயணம் 2206ம் பாடல்

பொருள்: கன்று உயிர் இல்லாமல் போகுமளவுக்கு பாலனைத்தையும் தானே கறந்து உண்டவனும், மன்றத்தில் பிறர் பொருளை மறைத்துக் கைப்பற்றிக் கொண்டவனும், நன்றியை மறந்து பழிக்கும் நாக்கை உடையவனும் எந்த நரகை அடைவார்களோ அது என்னதாகட்டும்.

அந்தப் பார்த்திவாத்மஜன் {மன்னன் தசரதனின் மகனான பரதன்}, பதியையும், புத்திரனையும் விட்டுப் பிரிந்த கௌசலையை இவ்வாறு ஆசுவாசப்படுத்தி {தேற்றிக்} கொண்டிருந்தபோதே துக்கம் தாங்காமல் கீழே விழுந்தான்.(59) சோக சந்தாபத்தில் மூழ்கி, நனவிழந்து, இவ்வாறான சபதங்களை உறுதியேற்றுக் கொண்டிருந்த பரதனிடம் கௌசல்யை இந்த வாக்கியங்களைச் சொன்னாள்:(60) "புத்திரா, என்னுடைய இந்த துக்கம் இன்னும் அதிகரிக்கிறது. இந்த சபதங்களைச் சொல்லி, நீ என் பிராணனை வாட்டுறாய்[5].(61) வத்ஸா {குழந்தாய்}, அதிர்ஷ்டவசமாக சத்யப்ரதிஜ்ஞையுடன் கூடிய உன் ஆத்மா தர்மத்தில் இருந்து விலகாமல் இருக்கிறது. இலக்ஷ்மணன் சகிதனாக நீயும் நல்லோரின் உலகங்களை அடைவாயாக" {என்றாள் கௌசல்யை}.(62)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "'ப்ராணாநபருணத்ஸிமே' என்று மூலம். ப்ராணன்களைத் தடுக்கிறாயென்று பொருள். ராமவியோகத்தினால் போகின்ற பிராணன்களைச் சபதங்களையிட்டுப் போகவொட்டாமல் நிறுத்துகிறா யென்று கருத்து. இங்ஙனம் அர்த்தாந்தரம்" என்றிருக்கிறது.

உடன் பிறந்தானிடம் பற்றுடன் இருந்த பரதனிடம் இவ்வாறு பேசியவள் {கௌசல்யை}, அந்த மஹாபாஹுவை தன் மடியில் ஏற்றித் தழுவிக் கொண்டு, பெருந்துக்கத்துடன் அழுதாள்.(63) துக்கத்தில் ஆழ்ந்து புலம்பிய அந்த மஹாத்மாவின் {பரதனின்} மனம், சோக சுமையால் நொறுங்கி, மயக்கத்தால் கலக்கமுற்றது.(64) இவ்வாறு அழுது, நனவிழந்து, புத்தியிழந்து, மீண்டும் மீண்டும் பூமியில் விழுந்து கொண்டிருந்த அவனுக்கு, நீண்ட பெருமூச்சுகளுடன் கூடிய சோகத்திலேயே அந்த ராத்திரி கழிந்தது.(65)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 075ல் உள்ள சுலோகங்கள்: 65

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை