Lamentation of Satrughna | Ayodhya-Kanda-Sarga-077 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தந்தையின் எலும்புகளைச் சேகரிக்கும் போது துயருற்று விழுந்த பரதன்; வசிஷ்டரும், சுமந்திரனும், பரதனையும், சத்ருக்னனையும் தேற்றியது...
இவ்வாறு பத்தாம் நாள் கழிந்த பின்னர் தூய்மைச் சடங்குகளைச் செய்து கொண்ட அந்த நிருபாத்மஜன் {பரதன்}, துவாதசி அஹனி {பனிரெண்டாம் நாள்} வந்ததும் சிராத்த கர்மங்களைச் செய்தான்[1].(1) அவன், ரத்தினங்களையும், தனங்களையும், ஏராளமான அன்னத்தையும், விலையுயர்ந்த வஸ்திரங்களையும், பல்வேறு வகைகளிலான பொருள்களையும் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(2) அந்த ராஜபுத்திரன் {பரதன்}, பல வெள்ளாடுகளையும், நூற்றுக்கணக்கான பசுக்களையும், தாசிகளையும் {பணிப்பெண்களையும்}, தாசர்களையும் {பணியாட்களையும்}, யானங்களையும் {வாகனங்களையும்}, பெரிய வீடுகளையும் பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(3,4அ)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சிராத்த சடங்குகள், இறந்து போன உறவினர்களைக் கௌரவிக்கும், அவர்களின் நன்மைக்காகவும் குறிப்பிட்ட பல்வேறு காலக்கட்டங்களில் மகிழ்ச்சி மிக்க தருணங்களிலும், துக்கம் அனுசரிக்கும் காலங்களிலும் உறவினர்களால் கண்டிப்பு நிறைந்த நடைமுறையில் கடைப்பிடிக்கப்படுகின்றன. இவை தினமும் நீர்க்காணிக்கை வழங்கியும், குறிப்பிட்ட நாட்களில் தந்தைவழி சார்ந்த தந்தை, பாட்டன், பூட்டன் ஆகிய மூவருக்கும் பிண்டங்கள் அளித்தும் செய்யப்படுகின்றன. இறந்தவரை கௌரவிக்கும் வகையில் மகனாலோ, உறவினராலோ இவை செய்யப்படுகின்றன" என்றிருக்கிறது.
பிறகு திரையோதசி திவசம் {பதிமூன்றாம் நாள்} விடியும் சமயத்தில் மஹாபாஹுவான பரதன் சோதனார்த்தம் செய்ய {தகனம் செய்யப்பட்ட இடத்தில் அஸ்தியைச் சேகரிக்க} வந்தான்[2]. சிதையிடம் வந்ததும் பெரும் துக்கமடைந்தவன், அழுது, சோகத்தால் மூர்ச்சித்து, பின்னர் கண்ணீரால் அடைக்கப்பட்ட கண்டத்துடன் {தொண்டையுடன்} கூடியவனாக இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(4ஆ-6அ) "தாதையே, எந்த ராகவரிடம் என்னை நீர் ஒப்படைக்க வேண்டுமோ அவர் {ராமர்} வனம் சென்று விட்டார். உம்மால் கைவிடப்பட்ட நானோ சூன்யனாகிவிட்டேன் {திக்கற்றவனாகிவிட்டேன்}.(6ஆ,7அ) நிருபரே, தாதையே, அம்பா கௌசலையை விட்டுவிட்டு, அவளை ஆதரிக்கும் புத்திரரையும், வனத்திற்கு அனுப்பிவிட்டு நீர் எங்கே சென்றுவிட்டீர்?" {என்று கதறி அழுதான் பரதன்}.(7ஆ,8அ)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "க்ஷத்ரியனுக்குப் பதினாறாவது நாள் வரையிலும் தீட்டுண்டாயிருக்கையில், இங்கு பத்துத் தினங்களில் தீட்டுக் கழிந்தமை யெப்படி யென்னில் - தனக்கு ஏற்பட்ட கர்மங்களைத் தவறாமல் நடத்திப் பரிசுத்தனாயிருக்கும் க்ஷத்ரியன் பத்துத் தினங்களில் தீட்டுக் கழியப் பெறுவான் - என்னும் விசேஷ சாஸ்த்ரத்தைப் பற்றிப் பத்துத் தினங்களில் தீட்டுக் கழிந்தமை உசிதமென்று கண்டு கொள்க" என்றிருக்கிறது.
தகனம் செய்யப்பட்டு எலும்புகளுடன் கூடிய சாம்பலால் செம்பழுப்பு வண்ணமடைந்த அந்த ஸ்தான மண்டலத்தையும் {தகனம் செய்யப்பட்ட இடத்தையும்}, தன் பிதாவின் சரீரம் நிர்வாணமடைந்ததையும் {இல்லாமல் போனதையும்} கண்டவன், மனமுடைந்தவனாக உரக்கக் கதறினான்.(8ஆ,9அ) இவற்றைக் கண்டு தீனமடைந்தவன், சக்ரனுக்காக உயர்த்தப்பட்ட யந்திரத்வஜம் {கொடிக்கம்பம்} விழுவதைப் போல அழுதுகொண்டே தரணீதலத்தில் விழுந்தான்.(9ஆ,10அ)
அப்போது அவனது அமாத்யர்கள் {அமைச்சர்கள்} அனைவரும், முடிவுக் காலத்தில் விழுந்த யயாதியிடம் சென்ற ரிஷிகளைப் போல அந்த நல்விரதம் கொண்டவனை விரைவாக அணுகினர்.(10ஆ,11அ) பரதனைக் கண்ட சத்ருக்னனும், அந்த பூமிபாலனை {தசரதனை} நினைத்தவாறே சோகத்தில் மூழ்கி, நனவற்றவனாகப் பூமியில் விழுந்தான்.(11ஆ,12அ) பல்வேறு காலங்களில் தன் பிதாவின் நற்குணங்களால் விளைந்த நற்செயல்கள் பலவற்றை நினைத்தவன், துக்கத்தால் மதியிழந்த உன்மத்தனை {பித்தனைப்} போல {பின்வருமாறு} அழுது புலம்பினான்:(12ஆ,13அ) "மந்தரையிடம் உண்டானதும், கைகேயியை முதலையாகவும், வரதானத்தை நீரோட்டமாகவும் கொண்ட, ஆழமான இந்தத் தீவிர சோகசாகரத்தில் {நாங்கள்} மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.(13ஆ,14அ) தாதையே, சதா உம்மால் லாலிதம் செய்யப்பட்ட {எப்போதும் செல்லமாகத் தொட்டு வருடப்பட்ட} உமது பாலர் பரதன் இப்போது அழுது புலம்புகிறார். அவரை விட்டு நீர் எங்கே சென்றுவிட்டீர்?(14ஆ,15அ) போஜனங்களிலும், பானங்களிலும், வஸ்திரங்களிலும், ஆபரணங்களிலும் எங்கள் அனைவரின் விருப்பங்களையும் நீர் நிறைவேற்றினீர். இனி எங்களுக்கு இவற்றை யார் செய்வார்?(15ஆ,16அ) தர்மத்தை அறிந்தவரும், மகாத்மாவும், ராஜருமான உம்மை இழந்த பிருத்வி {பூமி} பிளக்குங்காலம் நேரிட்ட போதும் பிளவுறாமல் இருக்கிறாள்.(16ஆ,17அ) பிதா ஸ்வர்க்கத்தை அடைந்துவிட்டார். இராமரும் அரண்யம் சென்றுவிட்டார். எனக்கு இந்த ஜீவிதத்தால் என்ன பயன்? நான் ஹுதாசனத்திற்குள் {நெருப்புக்குள்} பிரவேசிக்கப் போகிறேன்.(17ஆ,18அ) இக்ஷ்வாகுக்களால் பரிபாலிக்கப்பட்டதும், உடன் பிறந்தாரும், பிதாவும் இல்லாமல் சூன்யமாக இருப்பதுமான அயோத்திக்குள் என்னால் பிரவேசிக்க முடியாது. நான், தபோவனத்திற்குள் பிரவேசிக்கப் போகிறேன்" {என்றான் சத்ருக்னன்}.(18ஆ,19அ)
அவர்கள் இருவரும் அழுவதைக் கேட்டும், அவர்களின் விசனத்தைக் கண்டும் உடன் வந்தவர்கள் அனைவரும் மீண்டும் மிகுந்த வேதனையடைந்தனர்.(19ஆ,20அ) அதன்பிறகு பரதசத்ருக்னர்கள் இருவரும் அந்த விசனத்தால் களைப்படைந்து, கொம்புகள் உடைந்த ரிஷபங்கள் {காளைகள்} இரண்டைப் போல தரணியில் விழுந்து புரண்டனர்.(20ஆ,21அ) அப்போது உயர்ந்த இயல்பைக் கொண்டவரும், வைத்தியரும் {வித்தைகளை அறிந்தவரும்}, அவர்களுடைய பிதாவின் புரோஹிதருமான வசிஷ்டர், பரதனைத் தூக்கிவிட்டு {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார்:(21ஆ,22அ) "விபுவே, உங்கள் பிதா இறந்து இந்த திரையோதசி திவசத்தில் {பதிமூன்றாம் நாளில்}, அஸ்தியைச் சேகரிக்காமல் ஏன் இங்கே தாமதித்துக் கொண்டிருக்கிறாய்[3].(22ஆ,23அ) மூவகையிலான துவந்தங்கள் {முரண்பட்ட இரட்டைகள் / இருமைகள்}[4], எவ்வித வேறுபாடுமின்றி பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்திற்கும் நேரிடும். தவிர்க்கப்பட முடியாதவையான அவற்றுக்காக நீ இவ்வாறு நடந்து கொள்வது தகாது" {என்றார் வசிஷ்டர்}.(23ஆ,24அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசாஹமத்தியில் செய்யும்படி சாஸ்த்ரங்களில் ஏற்படுத்தப்பட்ட ப்ரதானஸ்தி ஸஞ்சயனஞ் செய்து பதின்மூன்றாவது நாள் தேசாசாரத்தின்படி செய்ய வேண்டிய ஸ்தலசோதனமாத்ரஞ் செய்யப்பட்டதாகையால் பதின்மூன்றாவது நாள் அஸ்ஸஞ்சயனஞ் செய்ய வேண்டுமென்றும் ஸ்ம்ருதிக்கு விரோதமில்லையென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.
[4] கேஎம்கே மூர்த்தி பதிப்பில் அடைப்புக்குறிக்குள் இவை, "பசி, தாகம், இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு" என்று சொல்லப்படுகிறது.
தத்துவங்களை அறிந்தவனான சுமந்திரனும், சத்ருக்னனைத் தூக்கிவிட்டு, சர்வபூதங்களின் {உயிரினங்கள் அனைத்தின்} தோற்றம், மறைவு ஆகியவற்றைச் சொல்லி அவனைத் தேற்றினான்.(24ஆ,25அ) நரவியாகரர்களான அந்தச் சிறப்புமிக்கவர்கள் இருவரும் எழுந்ததும், மழையாலும் சூரியனாலும் புழுதியடைந்த இந்திரத்வஜங்கள் இரண்டைப் போலத் தெரிந்தனர்.(25ஆ,26அ) சிவந்த கண்களில் உள்ள கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தவர்களும், தீனமாகப் பேசிக் கொண்டிருந்தவர்களுமான அவர்களை, வேறு சடங்குகளைச் செய்யுமாறு அமாத்யர்கள் {அமைச்சர்கள்} துரிதப்படுத்தினர்.(26ஆ,இ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 077ல் உள்ள சுலோகங்கள்: 26
Previous | | Sanskrit | | English | | Next |