Kamadhenu | Ayodhya-Kanda-Sarga-074 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த பரதன்; அயோத்தியின் மகிமையை மீட்கத் தீர்மானித்தது; இராமனை மன்னனாக்குவதாக உறுதி ஏற்றது...
அப்போது அவளை இவ்வாறு கண்டித்த பரதன், பெருங்கோபத்தில் ஆழ்ந்தவனாக மீண்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "கைகேயி, கொடூரியே, துஷ்டசாரிணியே, இந்த ராஜ்ஜியத்தில் இருந்து தொலைந்து போவாயாக. தர்மத்தைக் கைவிட்டவளான நீ, என்னை மரணமடைந்தவனாக நினைத்து அழுது கொண்டிருப்பாயாக.(2) உன்னால் யாருக்கு உடனடியாக மரணமும், நாடு கடத்தலும் விளைந்ததோ, அந்த இராஜாவோ {தசரதரோ}, பெருந்தார்மிகரான இராமரோ உனக்கு என்ன கெடுதலைச் செய்தார்கள்?(3)
கைகேயி, இந்தக் குலத்திற்கு அழிவை ஏற்படுத்தியதால், கருவைக் கொன்ற பாபத்தை நீ செய்திருக்கிறாய். கைகேயி, நீ நரகத்திற்குச் செல்வாயாக. பர்த்தாவின் லோகத்தை {உன் கணவர் அடைந்த உலகத்தை நீ} அடையாமல் இருப்பாயாக.(4) கோர கர்மத்தைச் செய்து இத்தகைய பாபத்தை இழைத்துவிட்டாய். சர்வலோகப்ரியர்களை {அனைவராலும் விரும்பப்பட்டவர்களைக்} கைவிட்டு என்னிலும் பயத்தை விளைவித்துவிட்டாய்.(5) என் பிதா இறந்ததும், ராமர் அரண்யத்தில் வசிப்பதும், இந்த ஜீவலோகத்தில் நான் புகழை இழக்கப்போவதும் உன்னால்தான்.(6) அமித்ரையே {நட்பில்லாத எதிரியே}, தாயின் வடிவில் வந்த கொடூரியே, இராஜ்ஜியகாமுகியே {நாட்டை ஆளும் பேராசை கொண்டவளே}, துர்விருத்தம் கொண்ட பதிமாதினியே {தீய நடத்தை கொண்டவளே, கணவரைக் கொன்றவளே}, நான் உன்னிடம் பேச மாட்டேன்.(7)
கௌசல்யையும், சுமித்ரையும், என்னுடைய மற்ற மாதாக்களும், குலதூஷிணியான {குலத்தைக் கெடுக்க வந்தவளான} உன்னை அடைந்து மஹத்தான துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.(8) நீ, தர்மராஜரும், மதிமிக்கவருமான அசுவபதியின் கன்னியல்ல {பெண்ணல்ல / மகளல்ல}; என் பிதாவின் குல வம்சத்தை அழிக்க அங்கே ராக்ஷசியாகப் பிறந்தவள்.(9) {எனவேதான்}, தார்மிகரும், நித்தியம் சத்தியத்தையே நிலைநிறுத்துபவருமான ராமரை வனத்திற்கு அனுப்பினாய்; அந்த துக்கத்துடன் என் பிதாவை திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} அனுப்பிவைத்தாய்.(10) நீ எதைப் பிரதானமாகச் செய்தாயோ அந்தப் பாபத்தால் நான் பிதாவற்றவனானேன். உடன் பிறந்தவர்களால் கைவிடப்பட்டேன். சர்வலோகத்திற்கும் பிரியமற்றவனானேன்.(11)
நரகத்திற்குச் செல்லும் பாபநிச்சயம் கொண்டவளே, தர்மசம்யுக்தையான {தர்மமே நிறைந்தவளான} கௌசலையை மகனற்றவளாக்கினாய். இனி, நீ எந்த உலகத்தை அடையப் போகிறாய்?(12) குரூரியே, கௌசல்யையின் ஆத்மசம்பவரான {மகனான} ராமர், தன்னடக்கமும், பந்துக்களிடம் அர்ப்பணிப்பும் மிக்கவர் என்பதையும், பிதாவுக்கு சமமானவர் என்பதையும் நீ அறிய மாட்டாயா?(13) அங்கங்கள், பிரத்யங்கங்கள் {உறுப்புகள், துணை உறுப்புகள்} ஆகியவற்றில் இருந்து உண்டாகும் புத்திரன், ஹிருதயத்திலிருந்தும் பிறக்கிறான். இதன் காரணமாகவே மாதாவுக்கு மிகப் பிரியமானவன் ஆகிறான். பிரியத்தால் மட்டுமே அவன் பந்து {அன்பால் மட்டுமே அவன் உறவினன்} ஆவதில்லை.(14)
ஒரு காலத்தில், தர்மத்தை அறிந்தவளும், ஸுரர்களால் {தேவர்களால்} வழிபடப்பட்டவளுமான சுரபி {காமதேனு}, பூமியில் தன் புத்திரர்கள் இருவர் {காளைகள் இரண்டு}, சுமையைச் சுமந்தவாறே மயக்கமடைவதைக் கண்டாள்.(15) மஹீதலத்தில் அர்த்த திவசம் {பூமியில் அரை நாள் / நடுப்பகல் வரை} உழைத்துக் களைத்த தன் புத்திரர்களைக் கண்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் புத்திர சோகத்தால் அழுது கொண்டிருந்தாள்.(16)
நறுமணமிக்க அவளது சிறு கண்ணீர் துளிகள், கீழே சென்று கொண்டிருந்த மஹாத்மாவான ஸுரராஜனின் {இந்திரனின்} அங்கங்களில் விழுந்தன.(17) ஸுரேஷ்வரனான இந்திரன், புண்ணிய மணங்கமழும் அந்த கண்ணீர்த்துளிகள் தன் அங்கங்களில் விழுவதைக் கண்டு, அவளே மகிமைமிக்க சுரபி {காமதேனு} என நினைத்தான்.(18) ஆகாயத்தை நோக்கிய சக்ரன் {இந்திரன்}, அந்த சுரபி, பெருந்துக்கத்துடனும், வேதனையுடனும் தீனமாக அழுதவாறே நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.(19)
வஜ்ரபாணியும், ஸுரராஜனுமான இந்திரன், சோக சந்தாபத்துடன் கூடியவளும், புகழ்மிக்கவளுமான அவளைக் கண்டு, நடுக்கத்துடன் கைகளைக் கூப்பியவாறே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(20) "சர்வஹிதைஷிணியே {அனைத்தின் நலத்தை விரும்புகிறவளே}, எங்கிருந்தாவது நமக்கு மஹத்தான பயம் உண்டாகிறதா? உன் சோகத்திற்கான காரணம் யாது?" {என்று கேட்டான்}(21)
மதிமிக்கவனான ஸுரராஜன் இவ்வாறு சொன்ன போது, தீரமிக்கவளும், வாக்கிய விசாரதையுமான {சொற்களை பயன்படுத்துவதில் திறன்மிக்கவளுமான} சுரபி, இந்த வாக்கியங்களை மறுமொழியாகச் சொன்னாள்:(22) "அமராதிபா, பாபம் சாந்தமடையட்டும் {பாபம் செய்ததால் உண்டான பயமேதும் இருப்பினும் அஃது ஒழியக்கடவது}. எங்கிருந்தும் உங்களுக்கு ஏதுமில்லை {எந்த ஆபத்துமில்லை}. துன்புற்றுக் கொண்டிருக்கும் என் புத்திரர்களான இவர்கள் இருவருக்காகவே நான் வருந்தித் தவிக்கிறேன்.(23) ஸுராதிபா, சூரியக் கதிர்களால் எரிக்கப்படுகிறவர்களாகவும், உழைப்பின் களைப்பால் இளைத்துப் போகிறவர்களாகவும், உழுபவரால் துன்புறுபவர்களாகவும் {என் புத்திரர்களான} இந்தக் காளைகளைக் காண்கிறேன்.(24) என் காயத்தில் {உடலில்} இருந்து பிறந்தவர்களான இவர்கள், பாரத்தால் பீடிக்கப்படுவதைக் கண்டு துக்கம் அடைகிறேன். புத்திரர்களுக்கு சமமான பிரியத்திற்குரியவர்கள் வேறெவருமில்லை" {என்றாள் சுரபி}.(25)
இந்த ஜகம் முழுவதும் நிறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்திரர்களைக் கொண்டவள் இவ்வாறு அழுவதைக் கண்ட சக்ரன் {இந்திரன், ஒரு தாய்க்கு} மகனைவிட அருமையான வேறேதுமில்லை என்று நினைத்தான்.(26) எப்பொழுதும் ஒப்பில்லாத ஒழுக்கம் கொண்டவளும், இயங்கும் சுபாவத்தால் புனிதமானவளும், உத்தம குணங்களில் நித்தியம் பற்றுடையவளும், உலகைத் தாங்க விரும்புகிறவளும்,(27) ஆயிரமாயிரம் புத்திரர்களைக் கொண்டவளுமான அத்தகைய காமதேனுவே {விரும்பியவற்றைத் தரவல்ல சுரபியே} துக்கமடைந்தாள் எனும்போது, ராமரை விட்டுப் பிரிந்த கௌசல்யை இனி எவ்வாறு உயிர் பிழைத்திருப்பாள்?(28)
ஏக புத்திரனை {ஒரே மகனைக்} கொண்டவளும், சாத்வியுமான {புனிதவதியுமான} அவள், உன்னால் பிள்ளையற்றவள் ஆனாள். எனவே, நீ இங்கும், பிரேதமான பிறகும் {இம்மையிலும், மறுமையிலும்} சதா துக்கத்தையே அனுபவிப்பாய்.(29) நானோ, என் பிதாவையும், என்னுடன் பிறந்தவரையும் சம்பூர்ணமாகப் பூஜித்து, அவர்களின் பெருங்கீர்த்தியை வளரச் செய்வேன். இதில் ஐயமேதும் வேண்டாம்.(30) மஹாபலம் பொருந்திய கௌசல்யா தனயரை {கௌசல்யையின் மகனான ராமரை} அழைத்து வருவதற்காக, முனிவர்களால் சேவிக்கப்படும் வனத்திற்குள் நானே பிரவேசிப்பேன்.(31) பாபியே, பாப சங்கல்பம் கொண்டவளே, நகரவாசிகள் கண்ணீரால் அடைக்கப்படும் கண்டங்களைக் கொண்டவர்களாக {துக்கத்தால் தொண்டை அடைக்கப்பட்டவர்களாகத்} தென்படுகிறார்கள். நீ செய்த பாபத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.(32) நீ அக்னிக்குள் பிரவேசிப்பாயாக, அல்லது தனியே தண்டகாரண்யத்திற்குள் நுழைவாயாக. அல்லது கண்டத்தில் {தொண்டையில்} கயிற்றை இறுக்கிக் கொள்வாயாக. உனக்கு வேறு கதியேதும் இல்லை.(33) சத்திய பராக்கிரமரான ராமர் அவனியை அடைந்ததும், என் பாபங்கள் கழுவப்பட்டு, நினைத்தன நிறைவேறியவனாவேன்" {என்றான் பரதன்}.(34)
இவ்வாறு, அரண்யத்தில் தோமரத்தாலும் {ஈட்டியாலும்}, அங்குசத்தாலும் {மாவெட்டியாலும்} குத்தப்பட்ட நாகத்தைப் {யானையைப்} போலக் கோபமடைந்தவன், பன்னகம் {பாம்பைப்} போல் சீறியபடியே புவியில் விழுந்தான்.(35) பரந்தபனான அந்த நிருபாத்மஜன் {பகைவரை அழிப்பவனான அந்த அரசகுமாரன் பரதன்}, கோபத்தால் கண்கள் சிவக்கவும், ஆடை தளரவும், ஆபரணங்கள் சிதறவும், உத்சவத்தின் முடிவில் விழும் சசிபதியின் கொடியை {இந்திரத்வஜத்தைப்} போலவும் பூமியில் விழுந்து கிடந்தான்.(36)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 074ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |