The hermitage of Bharadwaja | Ayodhya-Kanda-Sarga-054 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தண்டகவனத்திற்குப் புறப்பட்டது; பரத்வாஜரின் ஆசிரமத்தை அடைந்தது; சித்திரகூடத்தைப் பரிந்துரைத்த பரத்வாஜர்; இரவு தங்கி காலையில் புறப்பட்டது...
மங்கல இரவை அந்த மஹாவிருக்ஷத்தின் {பெரும் மரத்தின்} அடியில் கழித்த அவர்கள், சூரியன் தெளிவாக உதித்ததும் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டனர்.(1) மகத்தான வனத்திற்குள் நுழைந்த அந்தச் சிறப்புமிக்கவர்கள், இங்குமங்குமாக நேரும் விதவிதமான பூமி பாகங்களையும், பூர்வத்தில் காணாத மனோஹரமான இடங்களையும் கண்டு, பாகீரதியான கங்கையில் யமுனை கலக்கும் இடத்தை நோக்கிச் சென்றனர்.(2,3)
விதவிதமான மரங்களைக் கண்டு சுகமாக நடந்து உச்சி காலத்தைக் கடந்த போது ராமன் லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(4) "சௌமித்ரியே, அதோ பிரயாகைக்கு[1] {கங்கையும், யமுனையும் கலக்கும் இடத்திற்கு} அருகில் அக்னி பகவானின் உன்னதக் குறியீடான தூமம் {புகை} எழுவதைப் பார். {பரத்வாஜ} முனிவர் அங்கே இருக்கிறாரென நினைக்கிறேன்.(5) நிச்சயம் நாம் கங்காயமுனா சம்பேதத்தை {கங்கையும் யமுனையும் சங்கமிக்கும் இடத்தை} அடைந்துவிட்டோம். நீரோடு நீர் மோதும் சப்தம் இதோ கேட்கிறது.(6) வனஜைகளில் உபஜீவனம் செய்பவர்களால் வெட்டப்பட்ட தாருணிகளும் {வனத்தில் கிட்டும் காய், கிழங்கு, விறகு முதலியவற்றைக் கொண்டு பிழைப்பவர்களால் வெட்டப்பட்ட மரக்கட்டைகளும்}, விதவிதமான மரங்களும் பரத்வாஜ ஆசிரமத்தில் காணப்படுகின்றன" {என்றான் ராமன்}.(7)
[1] உத்திரப்ரதேசத்தில் இருக்கும் இவ்விடம் சிறிது காலத்திற்கு முன்பு வரை அலாஹாபாத் என்றழைக்கப்பட்டது. இப்போது பிரயாக்ராஜ் என்று அழைக்கப்படுகிறது.
திவாகரன் {சூரியன்} மேற்கில் சாயும்போது, தன்விகளான அவ்விருவரும் {விற்களைத் தரித்தவர்களான ராமனும், லக்ஷ்மணனும்} சுகமாக நடந்து சென்று, கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் இடத்தின் அருகில் இருந்த அந்த முனிநிலையத்தை {பரத்வாஜரின் வசிப்பிடத்தை} அடைந்தனர்.(8) ஆசிரமத்தை அடைந்ததும், {வில் தரித்த தங்கள் தோற்றத்தால்} மிருக பக்ஷிகளை அச்சுறுத்தியவாறே ஒரு முஹூர்த்த காலம் அத்வானத்தில் {அந்த இடைவெளியில்} நடந்து பரத்வாஜரை அடைந்தனர்.(9) முனிவரைக் காண விரும்பிய அந்த வீரர்கள் இருவரும் ஆசிரமத்தை அடைந்ததும், சீதையுடன் சேர்ந்து சற்று தூரத்தில் நின்றனர்.(10) சௌமித்ரியுடனும், சீதையுடனும் கூடிய ராமன், அங்கே பிரவேசித்ததும், கடும் விரதங்களைக் கொண்டவரும், சிதறாத கவனத்தை அடைந்தவரும், தபத்தால் கூர்மையடைந்த பார்வையைக் கொண்டவரும், சிஷ்யகணங்களால் {சீடர்களின் கூட்டத்தால்} சூழப்பட்டவரும், அக்னிஹோத்ரம் செய்பவரும், மஹாத்மாவுமான அந்த ரிஷியைக் கண்டு, கூப்பிய கரங்களுடன் அவரை வழிபட்டான்.(11,12)
அந்த லக்ஷ்மணப்பூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, அவரிடம் தன்னை {பின்வருமாறு} அறிமுகப் படுத்திக் கொண்டான், "பகவானே, ராமலக்ஷ்மணர்களாகிய நாங்கள் தசரத புத்திரர்களாவோம்.(13) கல்யாணியும் {மங்கலமானவளும்}, நிந்திக்கத்தகாதவளும், ஜனகனின் மகளும், என் பாரியையுமான இந்த வைதேஹி {சீதை}, ஜனங்களற்ற இந்த தபோவனத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறாள்.(14) திடவிரதனும், என் பிரியத்திற்குரிய தம்பியுமான இந்த சௌமித்ரி, பிதாவால் நான் நாடுகடத்தப்பட்ட போது, வனத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வந்துவிட்டான்.(15) பகவானே, நாங்கள் பிதாவின் ஆணையால் தபோவனத்திற்குள் பிரவேசித்து, கிழங்குகளையும், பழங்களையும் உண்டு, தர்மத்தை மட்டுமே கடைப்பிடிக்கப்போகிறோம்" {என்றான் ராமன்}.(16)
அந்த தர்மாத்மா {பரத்வாஜர்}, மதிமிக்கவனான ராஜபுத்திரனின் அந்த சொற்களைக் கேட்ட பிறகு, மதுபர்க்கத்தையும்[2], அர்க்கியத்திற்கான நீரையும் கொடுத்தார்.(17) தபம் பயிலும் தபஸ்வியான அவர், வனத்தின் கிழங்குகள், பழங்களால் உண்டான நானாவித அன்னரசங்களையும் கொடுத்து, அவர்கள் வசிப்பதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்தார்.(18)
[2] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மதுபர்க்கம் என்பது, தயிர், நெய், தேன், தேங்காய்ப்பால் ஆகியவை கலந்திருக்கும் மரபுசார்ந்த ஒரு வரவேற்பு பானமாகும்" என்றிருக்கிறது.
ஸ்வாகதம் {நல்வரவைச்} சொல்லி வரவேற்ற அந்த முனிவர், அனைத்துப் பக்கங்களிலும் மிருகங்களும், பக்ஷிகளும், முனிவர்களும் சூழ அமர்ந்து கொண்டு ராமனிடம் பேசினார்.(19) அந்த பரத்வாஜர், தன் விருந்தோம்பலை ஏற்று அமர்ந்திருக்கும் ராகவனிடம் தர்மம் பொருந்திய இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(20) "காகுத்ஸ்தா, நீண்டகாலத்திற்குப் பிறகு நீ இங்கே வருவதைப் பார்க்கிறேன். காரணமில்லாமல் நீ நாடு கடத்தப்பட்டதை நான் கேள்விப்பட்டேன்.(21) மஹாநதிகள் சங்கமிக்கும் இந்த இடம், ஏகாந்தமானது {தனிமையானது / ஒதுக்குப்புறமானது}; புண்ணியமானது; ரமணீயமானது. நீ இங்கே சுகமாக வசிக்கலாம்" {என்றார் பரத்வாஜர்}.(22)
பரத்வாஜர் இந்தச் சொற்களைச் சொன்னதும், அனைவரின் நலத்தில் விருப்பமுள்ள ராகவ ராமன் {இந்த} சுப வாக்கியங்களால் மறுமொழி கூறினான்:(23) "பகவானே, இவ்விடத்தின் அருகில் இருக்கும் நகர, ஜானபத {கிராம} ஜனங்கள், இங்கே என்னைப் பார்க்க முடியும் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.(24) வைதேஹியையும், என்னையும் காணவிரும்பும் ஜனங்கள், இந்த ஆசிரமத்திற்கு வருவார்கள். இந்தக் காரணத்தினாலேயே நான் இங்கே வசிக்க விரும்பவில்லை.(25) பகவானே, சுகத்திற்குத் தகுந்தவளும், ஜனகனின் மகளுமான வைதேஹிக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஏகாந்தமான உத்தம ஆசிரம ஸ்தானத்தைக் காண்பீராக {எங்களுக்குச் சொல்வீராக}" {என்று கேட்டான் ராமன்}.(26)
இராகவனின் இந்த சுப வாக்கியத்தைக் கேட்ட மஹாமுனிவர் பரத்வாஜர், அப்போது {இந்தப்} பொருள் பொதிந்த வாக்கியத்தைச் சொன்னார்:(27) "ஐயா, இங்கிருந்து தசகுரோசத்தில் {பத்து குரோச தூரத்தில்}[3], மஹாமுனிவர்களால் சேவிக்கப்படுவதும், புண்ணியமானதும், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் காண்பதற்கு சுகமானதுமான ஒரு கிரி {மலை} இருக்கிறது. அங்கே நீ வசிக்கலாம்.(28) கோலாங்கூலங்களும் {நீண்ட வால்களைக் கொண்ட குரங்குகளும்}, வானரங்களும், ரக்ஷணங்களும் {கரடிகளும்} நிறைந்ததும், கந்தமாதனத்திற்கு {கந்தமாதன மலைக்கு} ஒப்பானதுமான அது {அந்த மலை} சித்திரகூடம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.(29) ஒரு நரன் {மனிதன்}, சித்ரக்கூடத்தின் சிகரங்களைக் காணும்வரை அவன் நற்செயல்களையே செய்வான், அவனது மனம் பாபம் நோக்கித் திரும்பாது.(30) அங்கே பல ரிஷிகள், விளையாட்டு போல் நூறு கூதிர் காலங்கள் {நூறு வருடங்கள்} தபம் செய்து, கபாலசிரஸ்[4] சகிதராக திவத்திற்கு உயர்ந்தனர் {சொர்க்கத்திற்குச் சென்றனர்}.(31) அந்த வசிப்பிடமே உனக்கு ஏகாந்தமானது; சுகமானது என்று நினைக்கிறேன். ராமா, வனவாசத்தில் என்னுடன் இங்கேயே கூட நீ வசிக்கலாம்" {என்றார் பரத்வாஜர்}.(32)
[3] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமாயண சிரோமணி என்ற உரையாசிரியர், "தசம் என்பதை மூன்று தசமாகப் பிரித்து, முப்பது குரோசங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குரோசம் என்பது இரண்டும் மைல்கள் ஆகும். எனவே முப்பது குரோசங்கள் அறுபது மைல்களாகும்" என்று சொல்கிறார். சமீபத்திய அளவீடுகளின்படி அந்தக் குறிப்பிட்ட தொலைவு எண்பது மைல்கள் என்று அளவிடப்படுகிறது. இஃது உண்மைக்கு ஓரளவு நெருக்கமாக இருக்கிறது" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், பத்து குரோசம் என்பது "இருபது மைல்கள்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பத்து கூப்பிடு தூரம்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இரண்டு யோஜனை தூரம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சித்திரகூடம் மத்திய பிரதேசத்தில் இருக்கிறதா? உத்திர பிரதேசத்தில் இருக்கிறதா என்பதற்கு இந்த அளவீடு சாட்சி பகரும். ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்களாகும். பத்துக் குரோசங்கள் என்றால் பிரயாகையில் இருந்து இருபது மைல்கள் ஆகும். எனினும், குரோசம் என்பதற்கு தரப்படுத்தப்பட்ட அளவீடு ஏதுமில்லை" என்றிருக்கிறது.
[4] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "கபால சிரஸ் என்பது மகிழ்ச்சி, அல்லது இறுதி விடுதலை {முக்தி} என்ற பொருள் கொண்ட சிவனின் பெயராகும்" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவ்விடத்தில் அனேக ரிஷிகள் அனேக சரத்ருதுக்களில் வாஸம் செய்து சிவபெருமானோடும், அக்னி பகவானோடும் சுவர்க்கத்தில் எழுந்தருளியிருக்கின்றார்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்தச் சித்ரகூட பர்வதத்தில் பல ரிஷிகளும் பலநூறு ஸம்வத்ஸரங்கள் விளையாடுவது போல் ஸுகமாகத் தவஞ் செலுத்தி, அந்தத் தவத்தின் மஹிமையாலும், இடைவிடாமல் கபாலாஸனஞ் செய்வதனாலும் தலை மயிர்களும், சரீரத்தின் தோல்களும் விடப்பெற்றுக் கபால மாத்ரம் மிகுந்திருக்கப் பெற்று அந்தச் சரீரத்துடனே ஸ்வர்க்கம் போய்ச்சேர்ந்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அவ்விடத்தில் அநேகமகாயோகியர் நெடுங்காலந் தவஞ்செய்து நிர்யாணதசையில் பிரஹ்மநாடீ முகமாகப் புறப்பட்டு முத்தியடைந்திருக்கிறார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், கபாலசிரஸ் என்பதற்கு, "சிவன்" என்றே பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
தர்மவித்தான அந்த பரத்வாஜர், ராமன், அவனது பாரியை, அவனது தம்பி ஆகியோர் விரும்பிய அனைத்தையும் கொடுத்து, அவர்களை தன் பிரிய அதிதிகளாக {அன்புக்குரிய விருந்தினர்களாக} ஏற்றுக் கொண்டார் {உபசரித்தார்}.(33) பிரயாகையில் ராமன் அந்த மஹாமுனிவரை அணுகி பல்வேறு கதைகளைப் பேசிக் கொண்டிருந்தபோதே புண்ணிய இரவும் வந்தது.(34) சுகங்களுக்குப் பழக்கப்பட்ட சீதை உள்ளிட்ட மூவரில் ஒருவனும், சோர்வடைந்தவனுமான அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, ரம்மியமான பரத்வாஜ ஆசிரமத்தில் அந்த ராத்திரியை சுகமாகக் கழித்தான்.(35)
இரவு விடியலாகப் புலர்ந்தபோது, அந்த நரசார்தூலன் {மனிதர்களில் புலியான ராமன்}, ஜுவலிக்கும் தேஜஸ்ஸுடன் {சுடர்மிகுவொளியுடன்} கூடிய பரத்வாஜ முனிவரை அணுகி {இதைச்} சொன்னான்:(36) "பகவானே, உம்முடைய இவ்வாசிரமத்தில் இரவைக் கழித்தோம். சத்தியசீலரே, இனி எங்கள் {புதிய} வசிப்பிடத்திற்கு {சித்திரகூடத்திற்குச்} செல்ல அனுமதிப்பீராக" {என்றான் ராமன்}.(37)
அந்த ராத்திரி முடிவடைந்ததும், பரத்வாஜர் இந்தச் சொற்களைச் சொன்னார், "மது {தேன்}, மூலம் {கிழங்கு}, பழம் ஆகியவை நிறைந்த சித்திரகூடத்திற்குச் செல்வீராக.(38) மஹாபலம் கொண்ட ராமா, அங்கே வசிப்பதே உனக்குப் பொருத்தமானதென்று நினைக்கிறேன். கின்னரர்களாலும், உரகர்களாலும் {நாகங்களாலும்} சேவிக்கப்படுவதும், அனைத்து வகை விளக்கங்களுக்கும் பொருத்தமான மரக்கூட்டங்களால் அலங்கரிக்கப்பட்டதும்,(39) மயூரங்களின் நாதம் {மயில்களின் அகவல்கள்} ஒலிப்பதும், ராஜகஜங்கள் {பெரும் யானைகள்} நிறைந்ததுமான சித்திரகூட சைலத்திற்குச் செல்வாயாக.(40) அது புகழ்மிக்கது; புண்ணியமானது; ரமணீயமானது; கிழங்குகளையும், பழங்களையும் ஏராளமாகக் கொண்ட வனங்களைச் சுற்றிலும் யானைக் கூட்டங்களையும், மான் கூட்டங்களையும் கொண்டது.(41) இராமா, அவை அங்கே திரிந்து கொண்டிருப்பதையும், ஆறுகள், சுனைகள், மலைச்சிகரங்கள், குகைகள், பள்ளத்தாக்குகள், அருவிகள் ஆகியவற்றையும் நீ பார்க்கலாம்.(42) அங்கே சீதையுடன் திரியும்போது உன் மனம் மகிழ்ச்சியடையும். குருவிகளும், கோகிலங்களும் {குயில்களும்} கூவுவதை எதிரொலிப்பதும், பல மான்களையும், மதம் கொண்ட குஞ்சரங்களையும் {யானைகளையும்} கொண்டதும், ரம்மியமானதும், மங்கலமானதுமான அந்த வசுதாதரத்தை {சித்திரகூட மலையை} அடைந்ததும் ஓர் ஆசிரமத்தை {பர்ணசாலையை} அமைத்துக் கொள்வாயாக" {என்றார் பரத்வாஜர்}.(43)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 054ல் உள்ள சுலோகங்கள் : 43
Previous | | Sanskrit | | English | | Next |