Guha | Ayodhya-Kanda-Sarga-050 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கங்கைக்கரையில் சிருங்கிபேரபுரத்தை அடைந்த ராமன்; வரவேற்பளித்த நிஷாதர்கள்...
மதிமிக்கவனான அந்த லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணன் ராமன்}, ரம்மியமானதும், விசாலமானதுமான கோசலத்தைக் கடக்கும்போது, அயோத்தியை நோக்கிய முகத்துடன் கைகளைக் கூப்பி நின்று, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(1) "காகுத்ஸ்தர்களால் பரிபாலிக்கப்படும் புரீசிரேஷ்டமே {சிறந்த நகரமே, அயோத்தியே}, உன்னிடமும், உன் எல்லைகளில் வசித்து, உன்னைப் பாதுகாத்து வரும் தைவதங்களிடமும் {தேவர்களிடமும்} நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.(2) வனவாசத்திலிருந்தும், ஜகத்பதிக்குப் பட்டிருக்கும் கடனிலிருந்தும் விடுபட்டதும், மாதா பிதா சகிதனாக {தாய் தந்தையுடன் சேர்ந்து} நான் மீண்டும் உன்னைக் காண்பேன்" {என்றான் ராமன்}.(3)
அழகிய சிவந்த கண்களைக் கொண்ட அவன் {ராமன்}, தன் வலது புஜத்தை உயர்த்தி, கண்ணீர் நிறைந்த முகத்துடன், தீனமாக, ஜானபத ஜனங்களிடம் {கிராம மக்களிடம் பின்வருமாறு} பேசினான்:(4) "தகுந்த தயையையும் {இரக்கமும்}, கருணையையும் நீங்கள் என்னிடம் காட்டினீர்கள். நெடுங்காலத் துன்பம் பாபீயமாகும் {அவலமானதாகும்}. {இனி நீங்கள்} விரும்பும் நோக்கங்களை நிறைவேற்றச் செல்வீராக" {என்றான் ராமன்}.(5)
அந்த நரர்கள் {மனிதர்கள்}, அந்த மஹாத்மாவை {ராமனை} மதிப்புடன் வணங்கி, பிரதக்ஷிணம் செய்து {அவனை வலம் வந்து}, அங்கேயும், இங்கேயும் நின்று கோரமாக அழுது கொண்டிருந்தனர்.(6) இவ்வாறு இடையறாமல் அவர்கள் புலம்பிக் கொண்டிருந்தபோது ராகவனும் பொழுதுசாய்கையில் அர்க்கன் {சூரியன்} மறைவதைப் போலே அவர்களின் பார்வைக்கு அப்பால் கடந்து சென்றான்.(7) தானியங்களிலும், தனங்களிலும் வளமானதும், தானசீலர்களான ஜனங்கள் வசிப்பதும், மங்கலமானதும், ஆபத்துகள் அனைத்தில் இருந்தும் விடுபட்டதும், ரம்மியமானதும், வேள்வி யூபங்களாலும், கோவில்களாலும் நிறைந்ததும்,{8} உத்யான வனங்களினாலும் {பூஞ்சோலைகளாலும்}, மாந்தோப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், நீர் நிறைந்த குளங்களைக் கொண்டதும், நல்ல புஷ்டியான ஜனங்கள் வசிப்பதும், பசுக்கூட்டங்கள் நிறைந்ததும்,{9} நரேந்திரர்கள் {மனிதர்களின் தலைவர்கள்} காண்பதற்குத் தகுந்ததும், பிரம்ம கோஷ நாதங்களை {ஒலிகளை} எதிரொலிப்பதுமான கோசலத்தை அப்போது அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்} தன் ரதத்தில் கடந்து கொண்டிருந்தான்.{10}(8-10) திடமானவர்களில் சிறந்தவனான அவன் {ராமன்}, வளமானதும், அழகிய தோட்டங்கள் நிறைந்ததும், நரேந்திரர்களின் போகத்திற்குத் தகுந்ததுமான அந்த மகிழ்ச்சியான ராஜ்ஜியத்தின் மத்தியில் சென்று கொண்டிருந்தான்.(11)
அங்கே அந்த ராகவன் {ரகு குல ராமன்}, திரிபாதைகளில் செல்பவளும் {ஆகாயம், நிலம், பாதாளம் ஆகிய மூவழிகளில் பாய்பவளும்}, ரம்மியமானவளும், பாசிகளற்ற மங்கல நீரைக் கொண்டவளும், ரிஷிகளால் சேவிக்கப்படுபவளுமான புண்ணிய கங்கையைக் கண்டான்.(12) ஒன்றுக்கொன்று நெருக்கமான அழகிய ஆசிரமங்களால் அலங்கரிக்கப்பட்ட அவளது {கங்கையின்} நீர் நிறைந்த மடுக்களில் அப்சரஸ்கள் தகுந்த காலங்களில் நீராடி மகிழ்ந்தனர்.(13) தேவ, தானவ, கந்தர்வர்களாலும், கின்னரர்களாலும் அழகூட்டப்பட்டவளான அவள் {கங்கை}, சதா {எப்போதும்} நாக கந்தர்வ பத்தினிகளால் சேவிக்கப்பட்டாள்.(14) தேவர்களின் விளையாட்டுக்களமான நூற்றுக்கணக்கான மலைகளும், நூற்றுக்கணக்கான தெய்வீகத் தோட்டங்களும் நிரம்பிய ஆகாச வழியில் தேவர்களின் நன்மைக்காகச் செல்பவளானதால் அவள் {அந்த ஆகாய கங்கை} தேவபத்மினி என்ற பெயரில் புகழடைந்தாள்.(15) பாறைகளின் மீது மோதி அட்டகாசம் செய்வதைப் போன்ற அலையோசையை எழுப்புபவளும், வெண்ணுரையைப் போன்ற புன்னகையைக் கொண்டவளுமான அவள், சில இடங்களில் {பெண்களின் கூந்தல் அலங்காரமான} பின்னலைப் போன்ற ஜலப்பெருக்குடையவளாகவும், சில இடங்களில் நீர்ச்சுழல்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும் இருந்தாள்.(16) சில இடங்களில் கம்பீரமானவளாகவும், சில இடங்களில் வேகமான ஜலக்கூட்டங்களைக் கொண்டவளாகவும், சில இடங்களில் கம்பீர கோஷங்களை வெளிப்படுத்துபவளாகவும், சில இடங்களில் பயங்கரமான பேரொலியை உண்டாக்குபவளாகவும் பாய்ந்தாள்.(17)
தேவர்களின் கூட்டங்கள், வெண்தாமரைகளால் அலங்கரிக்கப்பட்ட அவளது ஜலத்தில் மூழ்கி எழுந்தன. சில இடங்களில் அகன்ற சில தீவுகள் இருந்தன. கரைகளின் சில இடங்களில் வெண்மணற்குன்றுகள் பரவியிருந்தன.(18) ஹம்சங்கள், சாரஸங்கள, சக்கரவாகங்களின் கொக்கரிப்புகள் ஆங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. எப்போதும் மதங்கொண்ட பறவைகள் அதன் மத்தியில் திரிந்து கொண்டிருந்தன.(19) மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவை போலவே சில இடங்கள், தீரங்களில் வளரும் விருக்ஷங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. சில இடங்கள், மடல் திறந்த நெருக்கமான தாமரைகளால் மறைக்கப்பட்டு பத்மவனங்களை {நீரே தெரியாதவாறு வெளிப்படும் தாமரைக் காடுகளைப்} போலத் தெரிந்தன.(20) சில இடங்கள், குமுதங்களின் {ஆம்பல்} மொட்டுகளால் நிறைந்திருந்தன. சில இடங்கள், நானாவித புஷ்பங்களால் நிறைந்து, ஆசையால் தூண்டப்பட்டவை போல சிவந்திருந்தன.(21)
அவள் களங்கம் களைந்தவளாக, மணி நிர்மல தரிசனத்துடன் {மணி போன்ற தெளிந்த தோற்றத்துடன்} இருந்தாள். திசைகஜங்களாலும் {திசைகளுக்குரிய யானைகளாலும்}, மத்தவனகஜங்களாலும் {மதங்கொண்ட காட்டு யானைகளாலும்}, தேவர்களும் பயணிக்கப் பயன்படுத்தும் சிறந்த வாரணங்களாலும் {சிறந்த யானைகளாலும், அவளது கரைகளில் இருந்த} வனாந்தரங்கள் ஒலிமிக்கவையாக திகழ்ந்தன.(22) பழங்கள், புஷ்பங்கள், இளந்தளிர்கள், புதர்கள், துவிஜங்கள் {பறவைகள்} ஆகியவற்றால் சூழப்பட்ட அவள், உத்தம பூஷணங்களால் {சிறந்த ஆபரணங்களால்} கவனமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு பிரமதையை {இளம்பெண்ணைப்} போலத் தெரிந்தாள். மேலும், நீர் யானைகளும், முதலைகளும், பாம்புகளும் கூட அங்கே நிறைந்திருந்தன.(23,24)
விஷ்ணுவின் பாதத்தில் வெளிப்படும் திவ்யமானவளும், பாபமற்றவளும், பாபநாசினியும் {பாபங்களை அழிப்பவளும்}, சாகரனின் {சகரனின் வழித்தோன்றலான பகீரதனின்} தேஜஸ்ஸால் சங்கரனின் ஜடாமுடியில் இருந்து பாய்பவளும்,(25) சமுத்திர மஹிஷியுமான {பெருங்கடலின் மனைவியுமான} அந்த கங்கையின் கரையில் சாரஸங்களும் {நாரைகளும்}, கிரௌஞ்சங்களும் {அன்றில் பறவைகளும்} ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் சிருங்கிபேரபுரத்தை அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ராமன்} அடைந்தான்.(26)
அந்த மஹாரதன் {பெரும் போர்வீரனான ராமன்}, அலைகளால் மறைக்கப்பட்ட சுழல்களைக் கொண்ட அவளை {கங்கையைக்} கண்டு, சூதனான சுமந்திரனிடம் இதைச் சொன்னான், "இன்று நாம் இங்கேயே தங்கலாம்.(27) சாரதியே, இந்த நதிக்கு அருகில், புஷ்பங்களும், தளிர்களும் நிறைந்த மிகப்பெரிய இங்குண விருக்ஷம் {அத்தி மரம்} ஒன்று இருக்கிறது. நாம் இங்கேயே வசிக்கலாம்.(28) தேவ, தானவ, கந்தர்வ, மிருக {விலங்கு}, மானுஷ {மனித}, பக்ஷிகளின் {பறவைக்கூட்டங்களின்} நீர்க் கொள்ளிடமாகத் திகழும் இந்தச் சிறந்த ஆற்றை நான் {இங்கிருந்து} காண்பேன்" {என்றான் ராமன்}.(29)
இலக்ஷ்மணனும், சுமந்திரனும், "அவ்வாறே ஆகட்டும்" என்று ராகவனிடம் சொல்லிவிட்டு, ஹயங்களின் {குதிரைகளின்} மூலம் அந்த இங்குண விருக்ஷத்தை {அத்தி மரத்தை} நோக்கிச் சென்றனர்.(30) இக்ஷ்வாகு நந்தனனான {இக்ஷ்வாகு குலத்தின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான} ராமன், ரம்மியமான அந்த விருக்ஷத்தை நெருங்கியதும், தன் பாரியையுடனும் {தன் மனைவியான சீதையுடனும்}, லக்ஷ்மணனுடனும் அந்த ரதத்தில் இருந்து இறங்கினான்.(31) சுமந்திரனும் அதிலிருந்து {அந்தத் தேரில் இருந்து} இறங்கி, உத்தம ஹயங்களை {அதில் பூட்டப்பட்டிருந்த சிறந்த குதிரைகளை} விடுவித்துவிட்டு, கூப்பிய கரங்களுடன் சென்று விருக்ஷத்தின் அடியில் ராமனுடன் அமர்ந்தான்.(32)
அங்கே குஹன் என்ற பெயரைக் கொண்டவனும், ராமனின் ஆத்மாவுக்கு சமமான சகாவுமான {உயிருக்குயிரான நண்பனுமான}[1] ஒரு ராஜா இருந்தான். பிறப்பால் நிஷாதனும், பலவானுமான அவன் நல்ல ஸ்தபதியாக {ஆட்சியாளனாக}[2] நன்கறியப்பட்டிருந்தான்.(33) புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} ராமன், தன்னுடைய இடத்திற்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்ட அவன் {குகன்}, விருத்தர்கள், அமாத்தியர்கள், ஞாதிகள் {பெரியோர், அமைச்சர்கள், உறவினர்கள் உள்ளிட்ட} பரிவாரத்துடன் அங்கே வந்தான்.(34) அந்த நிஷாதாதிபதி {வேடர்களின் தலைவன் குகன்} தூரத்தில் வருவதைக் கண்ட ராமன், சௌமித்ரி சகிதனாக {லக்ஷ்மணனுடன் கூடியவனாக} குஹனை எதிர்கொண்டழைக்கச் சென்றான்.(35)
[1] ராமன், நாடுகடத்தப்பட்ட பிறகு நேரும் குகனின் இந்தச் சந்திப்பிற்கு முன்பே இவ்விருவருக்குள்ளும் நட்பு இருந்தது என்று இங்கே தெரிகிறது.
[2] பிபேக் திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதன் நேரடி மொழிபெயர்ப்பு கட்டுமானக் கலைஞன், அல்லது சிற்பி என்பதாகும். ஆனால் இங்கே மன்னன் என்றும் மொழிபெயர்க்கப்படும் சாத்தியமிருக்கிறது" என்றிருக்கிறது. பல மொழிபெயர்ப்புகளில் மன்னன் என்ற பொருளிலேயே மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் இங்கே அடைப்புக்குறிக்கள் ஆட்சியாளன் என்று குறிக்கப்படுகிறது.
குஹன், துன்பத்துடனே ராகவனை இறுகத் தழுவியவாறு[3] இதைச் சொன்னான், "உனக்கு அயோத்தி எப்படியோ அப்படியே இதுவும் {இந்த இடமும்}. மஹாபாஹுவே, பிரியத்திற்குரிய இத்தகையை அதிதியை {விருந்தினரை} எவன் அடைவான்?" {என்றான் குகன்}.(36,37அ) மேலும் அவன் {குகன்}, குணமான அன்னத்தையும் {தரமான உணவையும்}, பலவித ஆகாரங்களையும் கொண்டு வந்து, அர்க்கியத்தையும் {கைகளைக் கழுவுவதற்கான நீரையும்} சீக்கிரமாகக் கொடுத்து, இந்த வாக்கியத்தையும் சொன்னான்:(37ஆ,இ) "உனக்கு ஸ்வாகதம் {நல்வரவு}. மஹாபாஹுவே, இந்த நிலம் முழுவதும் உனதே. நாங்கள் உன் பரிசாரகர்கள் {பணியாட்கள்}. நீயே எங்கள் பர்த்தா {தலைவன்}. எங்கள் ராஜ்ஜியத்தை நல்ல முறையில் ஆள்வாயாக.(38) பக்ஷிய போஜனங்களும் {பல்வேறு வகை உணவுகளும்}, பேயங்களும் {பானங்களும்}, லேஹ்யங்களும் {கூழ், பாகு முதலியவையும்}[4], முக்கிய சயனங்களும் {சிறந்த படுக்கைகளும் / மஞ்சங்களும்}, உன் வாஜிகளுக்கான காதனங்களும் {குதிரைகளுக்கு உணவான புற்களும்} இதோ இருக்கின்றன" {என்றான் குகன்}.(39)
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இராமன் நாடுகடத்தப்பட்டதால் இந்தத் துன்பம்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதனால் ராமனுக்கு வேட்டை முதலிய வ்யாபாரங்களின் மூலமாகக் குஹனோடு ஸ்னேஹம் முன்பே உண்டாயிருந்ததென்று தெரியவருகின்றது" என்றிருக்கிறது.
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "(சர்வியம் எனும்) மெல்லப்படுபவை, (சோஷ்யம் எனும்) உறிஞ்சப்படுபவை, (லேஹ்யம் எனும்) நக்கப்படுபவை, (பேயம் எனும்) பருகப்படுபவையே நால்வகை உணவுப்பொருட்களாகும். இவற்றில் பக்ஷியமும், சர்வியமும் ஒன்றே {அதாவது மெல்லப்படுபவையே}, சோஷ்யமும், போஜ்யமும் ஒன்றே {அதாவது உறிஞ்சப்படுபவை}" என்றிருக்கிறது.
இவ்வாறு பேசிக் கொண்டிருந்த குஹனிடம் ராகவன் இவ்வாறு பதிலளித்தான், "நாங்கள் அனைத்து வகையிலும் உன்னால் அர்ச்சிக்கப்பட்டோம் {வணங்கப்பட்டோம்}. {நீ} நடந்து வந்து, சினேகத்தைக் காட்டியது {எனக்கு} மகிழ்ச்சியளிக்கிறது" {என்றான் ராமன்}.(40,41)
{ராமன், தன்} பருத்த புஜங்களால் மென்மையாக {குகனை} அணைத்தவாறே இந்த வாக்கியத்தையும் பேசினான், "குஹனே, இது நற்பேறே. {அதிர்ஷ்டவசமாக} உன்னை ஆரோக்கியத்துடனும், பந்துக்களுடனும் {உறவினர்களுடனும்} காண்கிறேன். உன்னுடைய ராஷ்டிரத்தில் மித்ரர்களும் {நண்பர்களும்}, தனங்களும் {செல்வங்களைப் போன்ற கூட்டாளிகளும்} நலமா?(42,43அ) இவை யாவற்றையும் {எனக்காகச்} சிறப்பாக ஏற்பாடு செய்ய வைத்த உன் பிரீதியை நான் அறிவேன். {ஆனால்} இவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நான் இல்லை.(43ஆ,இ) மரவுரியும், மான்தோலும் தரித்து தர்மத்துடன் விரதமிருக்கும் தபஸ்வியாக என்னை அறிவாயாக. பழங்களும், கிழங்குகளும் உண்டு வனத்தில் திரியவே நான் தீர்மானித்திருக்கிறேன்.(44) அச்வங்களுக்கான காதனங்களை {குதிரைகளுக்கான உணவை} நான் விரும்புகிறேனேயன்றி வேறெதையும் அல்ல. இது மட்டுமே போதும். நான் இப்போது உன்னால் பூஜிக்கப்பட்டவன் ஆவேன்.(45) என் பிதாவான ராஜா தசரதருக்கு இவை பிடித்தமானவை. இந்த அச்வங்களுக்கு {குதிரைகளுக்கு} முறையாக உணவளிக்கப்பட்டால், நான் அர்ச்சிக்கப்பட்டவனாவேன் {வணங்கப்பட்டவனாவேன்}" {என்றான் ராமன்}.(46)
குஹன் அந்த இடத்தில் இருந்த புருஷர்களுக்கு {மனிதர்களுக்குப் பின்வருமாறு} ஆணையிட்டான், "இந்த அச்வங்கள் பருகுவதற்கான நீரையும், காதனத்தையும் {மேய்வதற்கான தீனியையும்} அவற்றுக்குத் துரிதமாகக் கொடுப்பீராக" {என்றான் குஹன்}.(47)
கந்தலான மேலாடையுடன் கூடிய அவன் {ராமன்}, மேற்கில் தோன்றும் சந்தியை {செவ்வந்தியை} வழிபட்டதும், லக்ஷ்மணன் ஸ்வயமாகக் கொண்டுவந்த ஜலத்தை மட்டுமே போஜனமாக {நீரை மட்டுமே உணவாகக்} கொண்டான்.(48)
பாரியையுடன் {மனைவியான சீதையுடன்} பூமியில் சயனித்துக் கொண்டிருந்த அவனது {ராமனின்} பாதங்களைக் கழுவிவிட்டு ஒரு விருக்ஷத்தின் {மரத்தின்} மீது சாய்ந்து நின்றான் லக்ஷ்மணன்.(49) குஹனும், சூதனும் {சுமந்திரனும்}, சௌமித்ரியுடன் {லக்ஷ்மணனுடன்} உரையாடிக் கொண்டிருந்தனர். அதன் பிறகு அவன் தனுவை {லக்ஷ்மணன் வில்லை} ஏந்தி விழிப்புடன் ராமனைக் காத்து நின்றான்.(50)
புகழ்மிக்கவனும், மதிமிக்கவனும், துக்கத்தையே காணாதவனும், சுகத்திற்கே தகுந்தவனும், மஹாத்மாவுமான அந்த தாசரதி {தசரதனின் மகனான ராமன் இவ்வாறு} சயனித்துக் கொண்டிருந்தபோதே அந்த நீண்ட இரவும் கழிந்தது.(51)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 050ல் உள்ள சுலோகங்கள் : 51
Previous | | Sanskrit | | English | | Next |