The despair of the people | Ayodhya-Kanda-Sarga-047 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் சென்றுவிட்டதை அறிந்த குடிமக்கள்; ரதத்தின் தடங்களை ஆய்வு செய்த பிறகு கவலையுடன் அயோத்திக்குத் திரும்பியது...
இரவு விடியத் தொடங்கிய போது ராமன் விட்டுச் சென்ற நகரவாசிகள், சோகத்தால் மனம் பீடிக்கப்பட்டு அசைவற்று நிலைகுலைந்தனர்.(1) இராமனின் ஒளியைக் கூட காணமுடியாமல் சோகத்தில் பிறந்த கண்ணீருடனும், துக்கத்துடனும் அவ்விடத்தையே அவர்கள் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(2)
மதிமிக்கவனான ராமன் இல்லாததால், சோகமான வதனங்களுடன் {முகங்களுடன்} பரிதாபத்திற்குரியவர்களாகத் தெரிந்த அவர்கள், கருணையுடன் இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(3) "மஹாபுஜங்களையும், அகன்ற மார்பையும் கொண்ட ராமனை இன்று காண முடியாதவாறு நனவிழக்கச் செய்த அந்த நித்திரையை சபிக்க வேண்டும்.(4) வீணாகாத செயல்களைச் செய்பவனும், மஹாபாஹுவுமான அந்த ராகவன், தன்னிடம் பக்தி கொண்ட ஜனங்களைக் கைவிட்டு எவ்வாறு நாடு கடந்து சென்றான்?(5)
இரகுசிரேஷ்டனும் {ரகு குலத்தில் சிறந்தவனும்}, பிதாவானவன் தன் மடியில் பிறந்த புத்திரர்களைப் பாதுகாப்பதைப் போல எப்போதும் நம்மை பாதுகாத்தவனுமான அவன் எவ்வாறு நம்மை விட்டுவிட்டு வனத்திற்குச் சென்றான்?(6) நாம் இங்கேயே மரணத்தை அழைப்போம். அல்லது {சாகும் வரை வடக்கு நோக்கி செல்லும்} மஹாப்ரஸ்தானம் செல்வோம். இராமனைப் பிரிந்த நமக்கு ஜீவிதத்தால் என்ன பயன்?(7) இதோ இங்கே உலர்ந்த பெரிய மரங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றைக் கொண்டு சிதையை மூட்டி அந்தப் பாவகனுக்குள் {நெருப்புக்குள்} நாம் அனைவரும் பிரவேசிப்போம்.(8)
நாம் என்ன சொல்லப் போகிறோம்? மஹாபாஹுவும், பொறாமையற்றவனும், பிரியமாகப் பேசுபவனுமான அந்த ராகவனை நாங்கள் அனைவரும் சேர்ந்து அனுப்பிவிட்டோம் என்று எவ்வாறு நாம் சொல்லப் போகிறோம்?(9) இராமன் இல்லாத நம்மைக் காணும் நகரத்து ஸ்திரீகளும், பாலர்களும், வயோதிகர்களும் தீனமடைந்து ஆனந்தமற்றவர்களாகப் போகிறார்கள்.(10) எப்போதும் ஜிதாத்மாவான {தன்னை வென்றவனான} அந்த வீரனுடன் சேர்ந்து நகரத்தை விட்டுச் சென்ற நாம், அவனில்லாத அந்த நகரை மீண்டும் எவ்வாறு பார்க்கப் போகிறோம்?" {என்று சொல்லி புலம்பினர்}(11)
கன்றுகளை இழந்த பசுக்களைப் போல துக்கத்தால் பீடிக்கப்பட்ட அந்த ஜனங்கள், தங்கள் கைகளை உயர்த்திய படியே இது போன்ற சொற்களைப் பல்வேறு வகையாகச் சொல்லி அழுதனர்.(12) பிறகு மார்க்கத்தை அனுசரித்து {ரதத்தின் தடங்களைப் பின்பற்றி} சிறிது தொலைவு சென்றதும், தடங்கள் அழிந்திருப்பதைக் கண்டு மகத்தான விசனத்தில் மூழ்கினர்.(13) நல்லியல்பைக் கொண்டவர்களான அவர்கள், ரதத்தின் தடங்கள் மறைந்ததால், "இஃது எவ்வாறு?" என்றும், "இனி நாம் என்ன செய்வது?" என்றும் சொல்லி விதியை நொந்து கொண்டு திரும்பிச் சென்றனர்.(14)
அதன் பிறகு, மனம் துன்புற்ற அவர்கள் அனைவரும், தாங்கள் வந்த மார்க்கத்திலேயே {வழியிலேயே} சென்று, துயரில் மூழ்கிய ஜனங்களுடன் கூடிய அயோத்தியாபுரியை அடைந்தனர்.(15) அவர்கள் அந்த நகரத்தைக் கண்டு, மனத்தின் உற்சாகத்தை இழந்து சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகக் கண்ணீர் வடித்தனர்.(16) கருடனால் பன்னகங்களற்றவையாகச் செய்யப்பட்ட மடுக்களைக் கொண்ட ஆற்றைப் போல இராமன் இல்லாத அந்த நகரமும் சிறிதும் பொலிவில்லாமல் இருந்தது.(17)
குழப்பத்தில் இருந்த அவர்கள், சந்திரனில்லாத ஆகாயத்தைப் போலவும், நீரில்லாத ஆர்ணவத்தை {கடலைப்} போலவும் ஆனந்தமற்றதாக அந்த நகரத்தைக் கண்டனர்.(18) மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களான அவர்கள், மஹாதனங்களைக் கொண்ட தங்கள் வேஷ்மங்களில் {பெருஞ்செல்வத்தைக் கொண்ட தங்கள் வீடுகளில்} துக்கத்துடன் நுழைந்து, தங்கள் ஜனங்களுக்கும், வேறு ஜனங்களுக்குமான வேறுபாட்டைப் பார்த்தும் அறியாதவர்களாக துக்கத்தில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(19)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 047ல் உள்ள சுலோகங்கள் : 19
Previous | | Sanskrit | | English | | Next |