Tuesday 14 June 2022

ஸ்திரீஜனங்களின் துயரம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 048 (37)

The despair of the womenfolk | Ayodhya-Kanda-Sarga-048 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அயோத்தியில் பெண்கள் அழுது புலம்பியது...

Rama and Sita

இவ்வாறு ராமனைப் பின்தொடர்ந்து சென்று, உயிரற்றவர்களைப் போல உற்சாகமின்றி திரும்பிய அந்த நகரவாசிகள், துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டு, கண்கள் நிறைந்த கண்ணீருடன் மரணத்தை விரும்புமளவுக்கு துக்கமடைந்தனர்.(1,2) அவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் நிலையங்களை {வீடுகளை} அடைந்து, கண்ணீரால் மறைக்கப்பட்ட முகங்களுடன் கூடிய புத்திரர்கள் மற்றும் தாரங்களால் சூழப்பட்டவர்களாகக் கண்ணீர் வடித்தனர்.(3) அவர்கள் மகிழ்வற்றவர்களாகவும், உவகை குன்றியவர்களாகவும் இருந்தனர். வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களை விரிக்கவில்லை; வணிகமும் நடைபெறவில்லை. கிருஹங்களில் {வீடுகளில்} சமையலும் நடைபெறவில்லை.(4) அவர்களில் எவரும், விட்டுச் சென்ற நற்பேற்றையோ, பெரும் தனத்தையோ மீண்டும் அடைந்ததில் மகிழ்ச்சியடையவில்லை. முதன்முதலாகப் புத்திரன் பிறந்தும் எந்த ஜனனீயும் {தாயும்} ஆனந்தமடையவில்லை.(5) 

ஒவ்வொரு கிருஹத்திலும் துக்கத்தால் அழுது புலம்பிக் கொண்டிருந்த வனிதையர் {பெண்கள்}, யானைகளை அங்குசத்தால் குத்துவதைப் போல, கிருஹத்திற்கு {வீட்டிற்கு} வந்த தங்கள் பர்த்தாக்களை {பின்வருமாறு} நிந்தித்தனர்:(6) "இராகவனைக் காண முடியாதவர்களின் கிருஹங்களினாலும், தாரங்களினாலும், தனங்களினாலும், புத்திரர்களினாலும், சுகங்களினாலும் {வீடுகளினாலும், மனைவிகளினாலும், செல்வங்களினாலும், பிள்ளைகளினாலும்} என்ன பயன்?(7) காகுத்ஸ்தனான ராமனைப் பின்பற்றி, சீதையுடன் சேர்ந்து தொண்டு செய்ய வனத்திற்குச் சென்ற லக்ஷ்மணன் ஒருவனே உலகத்தில் சத்புருஷன் {நல்ல மனிதன்}.(8) 

அந்தக் காகுத்ஸ்தன் மூழ்கக்கூடிய {ராமன் நீராடக் கூடிய} தூய நீரைக் கொண்ட ஆபகங்களும் {ஆறுகளும்}, பத்மினியங்களும் {தாமரைத் தடாகங்களும்}, சரஸ்களும் {பொய்கைகளும்} புண்ணியம் செய்தவை.(9) இரம்மியமான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட கானகங்களும், நீர் நிறைந்த நிலங்களும், ஆபகங்களும் {ஆறுகளும்}, சிகரங்களுடன் கூடிய பர்வதங்களும் அந்தக் காகுத்ஸ்தனை ஒளிரச் செய்யப் போகின்றன.(10) இராமன் செல்லும் எந்த சைலமும் {மலையும்}, கானகமும் பிரியத்துடன் வந்திருக்கும் அதிதியை {விருந்தினரை} மதிப்பதைப் போல அவனை வரவேற்கப் போகின்றன.(11) விசித்திர வண்ணங்களிலான மலர்களைத் தங்கள் மணிமகுடங்களாகக் கொண்டவையும், ஏராளமாகப் பூத்துக்குலுங்கும் கிளைகளைக் கொண்டவையும், வண்டுகள் நிறைந்தவையுமான மரங்கள் தங்களை ராகவனிடம் வெளிப்படுத்திக் கொள்ளப் போகின்றன.(12) கிரிகள் அங்கே செல்லும் ராமனுக்கு அகாலத்திலும் கருணையுடன் முக்கிய புஷ்பங்களையும், பழங்களையும் காட்டப் போகின்றன.(13) மஹீதரங்கள் {மலைகள்}, தூய நீரையே  தொடர்ந்து பாயச் செய்யும் அற்புதமான அருவிகள் பலவற்றையும் காட்டப் போகின்றன.(14) பர்வதங்களின் உச்சிகளில் உள்ள மரங்கள் ராகவனை மகிழ்விக்கப் போகின்றன. 

எங்கே ராமன் இருக்கின்றானோ அங்கே பயமோ, தோல்வியோ கிடையாது.(15) சூரனும், மஹாபாஹுவும், தசரதனின் புத்திரனுமான அவன், நம்மிடம் இருந்து தூரமாகச் செல்லப் போகிறான். {எனவே, வாருங்கள்} இராகவனைப் பின்தொடர்ந்து செல்வோம்.(16) மஹாத்மாவான அந்த பர்த்தாவின் {தலைவனின்} பாதத்தை தஞ்சமடைவதே சுகமானது. அவனே இந்த ஜனங்களின் நாதனும், கதியும், பரம ஆதாரமும் ஆவான்.(17) நீங்கள் ராகவனுக்குத் தொண்டாற்றுகையில், நாங்கள் சீதைக்குத் தொண்டாற்றுவோம்" என்று துக்கத்தால் பீடிக்கப்பட்ட நகர ஸ்திரீகள் இவ்வாறும், பின்வருமாறும் தங்கள் பர்த்தாக்களிடம் சொன்னார்கள்.(18) {மேலும் அந்தப் பெண்கள்}, "இராகவன் உங்களுக்கான யோகக்ஷேமத்தை {வேண்டிய பொருட்களையும், பாதுகாப்பையும்} அளிப்பான். சீதை நாரீஜனங்களாக {பெண்களாக} இருக்கும் எங்களுக்கான யோகக்ஷேமத்தை அளிப்பாள்.(19) மகிழ்வற்றதும், குழம்பிய மனங்களால் சோகம் நிறைந்த ஜனங்களுடன் கூடியதும், இனிமையற்றதுமான இந்த வசிப்பிடத்தை எவர் விரும்புவார்?(20) 

இது கைகேயியின் ராஜ்ஜியமாகிவிட்டால், அதர்மம் நிறைந்து, நாதனற்றதாகும் {அனாதையாகும். எனில்} நமக்குப் புத்திரர்களாலோ, தனங்களாலோ, இந்த ஜீவிதத்தினாலோ என்ன பயன்?(21)  ஐஷ்வர்ய காரணத்திற்காக {அதிகாரத்திற்காகவும், செல்வத்திற்காகவும்} புத்திரனையும், பர்த்தாவையும் {மகனையும், கணவனையும்} கைவிட்டவளும், குலத்திற்கே பாபம் செய்தவளுமான அந்தக் கைகேயி இன்னும் யாரைத்தான் கைவிடமாட்டாள்?(22) கைகேயி ஜீவித்திருக்கும் வரையிலும் நாங்கள் ஜீவித்திருந்தாலும், இந்த ராஜ்ஜியத்தில் பணியாட்களாக ஒருபோதும் வசிக்கமாட்டோம் என எங்கள் புத்திரர்களின் பேரில் சபதமேற்கிறோம்.(23) அதர்மம் செய்பவளும், துஷ்டசாரிணியும் {தீய நடத்தை கொண்டவளும்}, பார்த்திபேந்திரனின் புத்திரனையே இரக்கமில்லாமல் விரட்டியவளுமான ஒருத்தியை அடைந்து, எவரால்தான் சுகமாக ஜீவிக்க முடியும்?(24) உபத்ரவங்களுடன் கூடியதும், நம்பகத்தன்மை அற்றதும், நாயகனற்றதுமான {இந்த நாடு} இது முழுவதும் கைகேயியின் செயலால் அழிவடையப் போகிறது.(25)

இராமன் நாடு கடத்தப்பட்டதும் மஹீபதி {இந்த நிலத்தின் தலைவரான தசரதர்} ஜீவித்திருக்கமாட்டார். தசரதர் மரணம் அடைந்த பிறகு அழுகையும், ஓலமுமே ஒரே ஒலியாக இருக்கும். இது வெளிப்படையானது.(26) உங்கள் புண்ணியம் நசிந்து விட்டதாலும், நீங்கள் துர்க்கதியை அடைந்துவிட்டதாலும், விஷத்தையாவது நன்றாகக் கலக்கிப் பருகுங்கள், அல்லது ராமனைப் பின்தொடர்ந்து செல்லுங்கள், அல்லது இவை யாவும் {கைகேயியின் பெயர், செயல் ஆகியவை} கேட்காத இடத்தை அடையுங்கள்.(27) இராமனும், சீதையும், லக்ஷ்மணனும், வஞ்சகமாக நாடு கடத்தப்பட்டனர். சௌனிகனிடம் விடப்பட்ட பசவங்களை / பசுக்களை {கசாப்புக்காரனிடம் கொடுக்கப்பட்ட விலங்குகளைப்} போல நாமும் பரதனிடம் தள்ளப்பட்டிருக்கிறோம்.(28)

பூர்ணச் சந்திர வதனனும் {முழு நிலவின் முகம் கொண்டவனும்}, சியாமள வண்ணனும் {கரிய நிறம் கொண்டவனும்}, புலப்படாத காறையெலும்பைக் கொண்டவனும், அரிந்தமனும் {பகைவரை வெல்பவனும்}, ஆஜானுபாஹுவும் {முழங்கால்வரை கைகள் நீண்டவனும்}, பத்மாக்ஷனும் {தாமரைக்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும்}, லக்ஷ்மணனின் அண்ணனும், பேச்சைத் தொடங்குபவனும், சத்தியவாதியும், மதுரமானவனும், மஹாபலனும், சர்வலோகத்திற்கும் சௌம்யனும் {மென்மையானவனும்}, சந்திரனைப் போன்ற பிரிய தரிசனம் கொண்டவனும், புருஷசார்தூலனும் {மனிதர்களில் புலியும்}, மத்தமாதங்கவிக்கிரமனும், {மதங்கொண்ட யானையின் வலிமையைக் கொண்டவனும்}, மஹாரதனுமான ராமன், நிச்சயம் அரண்யங்களில் திரியும்போது அவற்றை அலங்கரிப்பான்" {என்றனர் அயோத்தி நகரத்துப் பெண்கள்}.(29-31)

நகரத்தின் நாகரஸ்திரீகள் {அயோத்தியில் வசிப்போரின் மனைவியர்}, மிருத்யுவிடம் {மரணத்திடம்} பயம் ஏற்பட்டவர்களைப் போல இவ்வாறு அழுது புலம்பினர்.(32) இராகவனைக் குறித்து வேஷ்மஸ்திரீகள் {வீட்டுப் பெண்கள்} இவ்வாறு அழுது புலம்பிக் கொண்டிருந்தபோது, தினகரன் அஸ்தத்தில் மூழ்கி {சூரியன் அஸ்தமனம் அடைந்து} இரவும் தோன்றியது.(33) நெருப்பு மூட்டப்படாமலும்,  நல்ல சாத்திரங்களும், சத்கதைகளும் உரைக்கப்படாமல் நிறுத்தப்பட்டதுமான அந்த நகரம் அப்போது இருளால் பூசப்பட்டதைப் போலத் தெரிந்தது.(34) அந்த அயோத்தியா நகரம், தாரகைகளை இழந்த அம்பரத்தைப் போல {நட்சத்திரங்கள் இல்லாத வானத்தைப் போல} வணிகர்களின் தொழில் முடங்கி, மகிழ்ச்சியைத் தொலைத்து, ஆதரவற்ற நிலையில் இருந்தது.(35) சுதனோ, சகோதரனோ {மகனோ, உடன்பிறந்தவனோ} வெளியேற்றப்பட்டதைப் போலக் கவலைப்பட்ட அந்த ஸ்திரீகள், ராமனின் நிமித்தமாக தீனமாக அழது, புலம்பிக் கதறினர். அவன் {ராமன்} அவர்களுக்கு சுதன்களைவிட {மகன்களைவிட} அதிக முக்கியத்துவம் வாய்ந்தவனானான்.(36) மகிழ்ச்சியும், கீதங்களும், வாத்தியங்களும் முடங்கியதும், மகிழ்ச்சியைத் தொலைத்ததும்,  கடைகள் மூடப்பட்டதுமான அது {அயோத்தியா நகரம்}, நீர் வற்றிய மஹார்ணவத்தை {பெருங்கடலைப்} போலிருந்தது.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 048ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை