Truth and falsehood | Ayodhya-Kanda-Sarga-046 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனும், சீதையும், லக்ஷ்மணனும் தமஸை நதிக்கரையில் இரவைக் கழிப்பது. விடியலில் அயோத்தியின் குடிமக்களை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டது...
பிறகு தமஸை தீரத்தில் தஞ்சம்புகுந்த ராகவன் {ராமன்}, சீதையைப் பார்த்துக் கொண்டே, சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "சௌமித்ரியே, நாம் வனத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறோம். இன்றே வனவாஸத்தின் முதல் இரவு நேர்கிறது. நீ கவலைப்படாதே. பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக.(2) உறைவிடம் நாடி மிருகதுவிஜங்கள் தங்கள் தங்கள் நிலையங்களுக்கு {விலங்குகளும், பறவைகளும் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத்} திரும்புவதால் அனைத்துப் பக்கங்களிலும் சூன்யமாகி அழுது கொண்டிருக்கும் அரண்யத்தைப் பார்.(3) என் பிதாவின் ராஜதானியான {தலைநகரான} அயோத்தியா நகரத்தில் உள்ள ஸ்திரீகளும், புருஷர்களும், அங்கிருந்து வந்துவிட்ட நம்மை நினைத்து வருந்திக் கொண்டிருப்பார்கள். இதில் ஐயமில்லை.(4) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, மனுஜர்கள் {குடிமக்கள்}, ராஜரிடமும், உன்னிடமும், என்னிடமும், சத்ருக்னனிடமும், பரதனிடமும் நம் குணங்கள் பலவற்றிற்காக அன்பு கொண்டிருக்கிறார்கள்.(5)
நான் நம் பிதாவுக்காகவும் {தசரதருக்காகவும்}, புகழ்மிக்க என் மாதாவுக்காகவும் {கௌசல்யைக்காகவும்} வருந்துகிறேன். இடையறாமல் அழுதவாறே அவர்கள் குருடராகலாம்.(6) தர்மாத்மாவான பரதன், தர்மார்த்தகாமம் {அறம், பொருள், இன்பம்} பொருந்திய தன் சொற்களால் என் பிதாவையும், மாதாவையும் ஆசுவாசப்படுத்தலாம் {தேற்றலாம்}.(7) இலக்ஷ்மணா, பரதனின் கொடுமையற்ற தன்மையை மீண்டும் மீண்டும் சிந்திப்பதாலேயே பிதாவுக்காகவோ, மாதாவுக்காகவோ நான் வருந்தாமல் இருக்கிறேன்.(8) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, என்னைப் பின்தொடர்ந்து வந்து நல்ல காரியத்தையே செய்திருக்கிறாய். {இல்லையெனில்} வைதேஹியின் பாதுகாப்புக்கான சகாயத்தை {உதவியை} நாடும் நிலை {எனக்கு} ஏற்பட்டிருக்கும்.(9) சௌமித்ரியே, இங்கே விதவிதமான வன்யாஹாரங்கள் {வனப் பொருள்களான கனிகளும், கிழங்குகளும்} இருந்தாலும், நீரை மட்டுமே பருகி இவ்விரவை நான் கழிக்க விரும்புகிறேன்" {என்றான் ராமன்}.(10) சௌமித்ரியிடம் இவ்வாறு சொன்ன ராகவன், அடுத்து சுமந்திரனிடம், "சௌம்யரே, அச்வங்களை {அசுவம்/குதிரைகளைக்} கவனித்துக் கொள்வீராக" என்றான்.(11)
சூரியன் மறைந்ததும் அந்த சுமந்திரனும் அச்வங்களைக் கட்டிவிட்டு, ஏராளமான புற்களையும் அவற்றுக்கு வைத்துவிட்டு, அவனருகில் {ராமனிடம்} சென்றான்.(12) அந்த சூதன் {சுமந்திரன்}, இராத்திரி நெருங்குவதைக் கண்டு, மங்கலமான சந்திப்பொழுதை வழிபட்டுவிட்டு {சந்தியாவந்தனம் செய்துவிட்டு}, சௌமித்ரியுடன் சேர்ந்து ராமனுக்கான சயனத்தை {படுக்கையை} அமைத்தான்.(13) சௌமித்ரியின் உதவியுடன் தமஸை தீரத்தில் விருக்ஷ இலைகளால் அமைக்கப்பட்ட அந்த சயனத்தைக் கண்ட ராமன், தன் பாரியையுடன் அதில் படுத்தான்.(14) பாரியையுடன் உறங்கும் அண்ணனைக் கண்ட லக்ஷ்மணன், அவனது பல்வேறு குணங்களை அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்} சொன்னான்.(15) சௌமித்ரி, தமஸை தீரத்தில் அந்த ராத்திரியில் விழித்திருந்தபடி சுமந்திரனிடம் ராமனின் குணங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோதே ரவியும் {சூரியனும்} உதித்தான்.(16) அந்த ராத்திரியில், கோக்களின் {பசுக்களின்} கூட்டம் நிறைந்த தமஸை தீரத்தில் இருந்து சற்று தூரத்தில் ராமன் தன் குடிமக்களுடன் வசித்திருந்தான்.(17)
மஹாதேஜஸ்வியான அந்த ராமன் விழித்தெழுந்ததும் அந்தக் குடிமக்களைக் கண்டு, புண்ணிய லக்ஷணங்களைக் கொண்ட தன் தம்பி லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(18) "சௌமித்ரியே, லக்ஷ்மணா, நம்மிடம் கொண்ட அர்ப்பணிப்பால் தங்கள் கிருஹங்களையும் {வீடுகளையும்} புறக்கணித்துவிட்டு இப்போது விருக்ஷ வேரடியில் {மரத்தினடியில்} உறங்கும் இவர்களைப் பார்.(19) நம்மை திரும்ப அழைத்துச் செல்லும் நியமத்துடன் கூடிய இந்த நகரவாசிகள், தங்கள் பிராணனையும் விடுவார்களேயன்றி தங்கள் தீர்மானத்தைக் கைவிடமாட்டார்கள்.(20) இவர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையிலேயே நாம் விரைவாக ரதத்தில் ஏறி, பயமேதும் இல்லாத பாதையை அடைவோம்.(21) என்னிடம் அர்ப்பணிப்புள்ள இந்த இக்ஷ்வாகுபுரவாசிகள் {அயோத்தியாவாசிகள்} இப்போது போலவே மீண்டும் மீண்டும் விருக்ஷ வேரடியில் உறங்க வேண்டாம்.(22) நிருபாத்மஜர்களால் {தங்கள் இளரவசர்களால்} உண்டான துக்கத்தில் இருந்து இந்த நகரவாசிகள் விடுபட வேண்டும். நம்மால் உண்டான துக்கத்தை நகரவாசிகள் சுமக்கக்கூடாது" {என்றான் ராமன்}.(23)
லக்ஷ்மணன், சாக்ஷாத் தர்மத்தைப் போலவே உறுதியாக நின்ற ராமனிடம், "பிராஜ்ஞரே {அனைத்தையும் அறிந்தவரே}, இஃது எனக்கு ஏற்புடையதே. சீக்கிரம் {ரதத்தில்} ஏறுவோம்" என்று சொன்னான்.(24)
அப்போது ஸ்ரீமானான ராமன், சுமந்திரனிடம், "பிரபுவே, ரதத்தை ஆயத்தம் செய்வீராக. இங்கிருந்து அரண்யத்திற்குச் செல்ல வேண்டும். சீக்கிரம் செல்வீராக" என்றான்.(25)
பிறகு அந்த சூதன் {சுமந்திரன்} துரிதமாக சியந்தனத்தில் {ரதத்தில்} உத்தம ஹயங்களை {குதிரைகளைப்} பூட்டி, கூப்பிய கைகளுடன் ராமனிடம்,(26) "மஹாபாஹுவே, இதோ உன் ரதம் ஆயத்தமாக இருக்கிறது. தேர்வீரர்களில் சிறந்தவனே, சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் ஏறுவாயாக. பத்ரமாக {மங்கலமாக} இருப்பாயாக" என்று சொன்னான்.(27)
இராகவன், பரிகரங்களுடன் {பயணத்திற்குத் தேவையான ஆயுதங்களுடனும், உடன் வந்தவர்களான சீதை மற்றும் லக்ஷ்மணனுடனும்} அந்த சியந்தனத்தில் {ரதத்தில்} ஏறி, அடர்ந்த சுழல்களுடன் வேகமாகப் பாயும் தமஸை நதியைக் கடந்து சென்றான்.(28) ஸ்ரீமானும், மஹாபாஹுவுமான அவன், நதியைக் கடந்து, தடங்கலற்றதும், பயந்தவர்களுக்கும் பயமில்லாததுமான மஹா மார்க்கத்தை {நெடுஞ்சாலையை} அடைந்தான்.(29)
இராமன், நகரவாசிகளை மோஹமடையச் செய்வதற்காக {ஏமாற்றுவதற்காக}, சுமந்திரனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "சாரதியே, ரதத்தில் ஏறி வடக்கு நோக்கிச் செல்வீராக. ஒரு முஹூர்த்த காலம் துரிதமாகச் சென்று, மீண்டும் ரதத்தைத் திருப்பிக் கொண்டு வருவீராக. நகரவாசிகள் என்னை அறிந்து கொள்ள முடியாதபடி இதைக் கவனமாகச் செய்வீராக" {என்றான் ராமன்}[1].(30,31)
[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "வீடுகளைப் புறக்கணித்து அளவற்ற அன்புடன் தன்னுடன் வந்திருக்கும் குடிமக்களைக் கைவிட்டு ராமன் எவ்வாறு செல்லலாம்? என்று கேட்கப்படலாம். சுயநலமில்லாத அன்பே உண்மையில் அன்பாகும். பொய்ம்மை போல் தெரிவது பொய்யாகாது. தீங்கு போல் தெரிவது தீங்காகாது. வஞ்சனை போல் தெரிவதும் வஞ்சனையாகாது. அன்பை அறிந்த ராமன், சரியானதை சரியாகச் செய்வான். அவன் செய்தது யாவும் நேர்மையானதே" என்றிருக்கிறது. "பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" குறள் எண்.292
இராமன் சொன்னதைக் கேட்ட அந்த சாரதியும், தன்னிடம் சொல்லப்பட்டவாறே வலம் வந்து மீண்டு சியந்தனம் {ரதம்} வந்ததை ராமனிடம் சொன்னான்.(32) அப்போது ரகுவம்ச வர்த்தனர்களும் {ராமனும், லக்ஷ்மணனும்}, சீதையும், நன்கு ஆயத்தம் செய்யப்பட்டிருந்த அந்த ரதத்தில் ஏறினார்கள். பிறகு அந்த சாரதி {சுமந்திரன்}, தபோவனத்தை அடையும் பாதையில் குதிரைகளைச் செலுத்தினான்.(33) அவன், பிரயாணத்திற்கான மங்கல நிமித்தம் தென்பட்ட வடக்கை நோக்கி ரதத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். மஹாரதனான அந்த தாசரதியும் {ராமனும்}, சாரதியுடன் ரதத்தில் ஏறி வனத்தை நோக்கிச் சென்றான்.(34)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 046ல் உள்ள சுலோகங்கள் : 34
Previous | | Sanskrit | | English | | Next |