Entreaty of the twice-born | Ayodhya-Kanda-Sarga-045 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குடிமக்களை அயோத்திக்குத் திரும்பிச் செல்லுமாறு வேண்டிய ராமன்; இராமனை அயோத்திக்குத் திரும்புமாறு வேண்டிய குடிமக்கள். தமஸை நதிக்கரையை அடைந்த ராமன்...
மஹாத்மாவும், சத்தியபராக்கிரமனும், வனவாசம் செல்பவனுமான இராமனை அர்ப்பணிப்புடன் மானவர்கள் {மனிதர்கள்} பின்தொடர்ந்து சென்றனர்.(1) மன்னன் {தசரதன்} பலவந்தமாகத் திரும்பும் நிலை ஏற்பட்ட போதும், ராமனின் ரதத்தைப் பின்தொடர்ந்து சென்ற நண்பர்களின் கூட்டம் திரும்பவில்லை.(2) பெரும்புகழ் கொண்டவனும், நற்குணங்கள் நிறைந்தவனும், பூர்ணசந்திரனுக்கு ஒப்பானவனுமான அவன், அயோத்தியில் வாழும் மனிதர்களுக்கு {அந்த அளவுக்குப்} பிரியமிக்கவனாக இருந்தான்.(3) அந்தக் காகுத்ஸ்தன் {ராமன்}, தன் பிரஜைகளால் பிரார்த்திக்கப்பட்டாலும் {வேண்டிக் கொள்ளப்பட்டாலும்}, தன் பிதாவை {தன் தந்தையின் ஆணையை} மெய்ப்பிக்கும் சத்தியவானாக வனத்திற்குச் சென்றான்.(4)
கண்களால் பருகிவிடுபவனைப் போல அந்தப் பிரஜைகளை {குடிமக்களை} அன்புடன் பார்த்துக் கொண்டிருந்த ராமன், தன் பிரஜைகளிடம் {குழந்தைகளிடம்} பேசுவதைப் போல அவர்களிடம் அன்புடன் {இவ்வாறு} பேசினான்:(5) "அயோத்தியாவாசிகளே, நீங்கள் என்னிடம் காட்டிய பிரீதியையும், பஹுமானத்தையும் {அன்பையும், மதிப்பையும்} விட என் பிரியத்திற்குரிய பரதனிடமும் விசேஷமாக அன்புகாட்ட வேண்டும்.(6) கைகேயியின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனும், மிகச்சிறந்த நடத்தையைக் கொண்டவனுமான அவன் {பரதன்}, உங்கள் பிரியத்திற்குரிய இதமான காரியங்களை முறையாகச் செய்வான்.(7) பாலவயதுடையவனும், ஞானத்தில் விருத்தனும் {முதிர்ந்தவனும்}, மிருதுவானவனும், வீரியத்தையும், குணத்தையும் கொண்டவனுமான அவன் உங்கள் பயங்களை விலக்கவல்ல பர்த்தாவாக {தலைவனாகத்} திகழ்வான்.(8) இராஜகுணங்களைக் கொண்ட அவன் {பரதன்} யுவராஜனாக மதிக்கப்பட வேண்டும். மேலும், பர்த்தாவின் சாசனம் {ஆணை} என்னாலும், எஞ்சிய உங்களாலும் செயல்படுத்தப்பட வேண்டும்.(9) நான் வனவாசத்திற்குச் சென்ற பிறகு, மஹாராஜா {தசரதர்} துன்புறாத வகையில் {நீங்கள்} நடந்து கொள்வதே என்னை நிறைவடையச் செய்யும் காரியமாகும்" {என்றான் ராமன்}.(10)
தாசரதி {தசரதனின் மகனான ராமன்} எந்த அளவுக்கு தர்மத்திலேயே நிலைபெற்றிருந்தானோ, அந்த அளவுக்கு குடிமக்களும் ராமனைத் {தங்கள்} தலைவனாக விரும்பினர்.(11) சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணன்} சகிதனான ராமன், குணங்களால் கட்டப்பட்டு தீனமாகக் கண்ணீர் சிந்தும் ஜனங்களை ஈர்த்தவாறே சென்றான்.(12)
ஞானம், வயது, காந்தி ஆகிய மூன்று வழிகளிலும் விருத்தர்களான துவிஜர்கள் {முதிர்ந்தவர்களான இருபிறப்பாளர்கள்}, அனுபவ முதிர்ச்சியால் தங்கள் தலைகளை அசைத்தவாறே, தூரத்தில் இருந்து இந்தச் சொற்களைச் சொன்னார்கள்:(13) "வேகமாகச் செல்லும் உன்னத ஜாதியைச் சேர்ந்த குதிரைகளே, ராமனைச் சுமந்து செல்பவர்களே, உங்கள் பர்த்தாவுக்கு இதம் {உங்கள் தலைவனுக்கு நன்மை} செய்யும் வகையில் நிற்பீராக. உடனே திரும்புவீராக.(14) காதுகளையுடைய பூதங்களில் {உயிரினங்களில்} விசேஷமான குதிரைகளே, எங்கள் வேண்டுகோளை ஏற்று, அதன்படியே திரும்புவீராக.(15) சுத்த ஆத்மாவும், தர்மாத்மாவும், சுப திட விரதனும், வீரனுமான அந்த பர்த்தாவை {தலைவனை} நகரத்தில் இருந்து வனத்திற்கு அழைத்துச் செல்லாதீர்" என்றனர்.(16)
விருத்தர்களான அந்த துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} வேதனையுடன் இவ்வாறு புலம்புவதைக் கண்ட ராமன், ரதத்தில் இருந்து உடனே இறங்கினான்.(17) அதன்பிறகு, ராமனும், சீதையும், லக்ஷ்மணனும், மெதுமெதுவாக அடியெடுத்து வைத்து, வனத்தை நோக்கி கால்நடையாகச் சென்றனர்.(18) மனத்தில் அன்பையும், கண்களில் கருணையையும் கொண்ட ராமனால், ரதத்தின் பின்னால் பாதநடையாக வரும் அந்த துவிஜர்களைக் கைவிட முடியவில்லை.(19)
இன்னும் ராமன் {வனத்தை நோக்கிச்} செல்வதைக் கண்ட அந்த துவிஜர்கள், மனத்தில் குழப்பத்தையும், பெரும் துயரையும் அடைந்தவர்களாக இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(20) "பிரஹ்மண்யனான {பிராமணர்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட} உன்னை, சர்வ பிராஹ்மண்யர்களும் {பிராமணர்களும்} பின்தொடர்கிறார்கள். அந்த துவிஜர்கள், தங்கள் தோள்களில் அக்னியை சுமந்தவாறே உன்னைப் பின்தொடர்வதைப் பார்ப்பாயாக.(21) வாஜபேயத்தில் கிட்டிய இந்தக் குடைகள்,[1] மழைக்கால முடிவில் தோன்றும் மேகங்களைப் போல எங்களைப் பின்தொடர்ந்து வருவதைப் பார்ப்பாயாக.(22) குடையில்லாதவனும், {சூரியக்} கதிர்களால் வேதனை அடைபவனுமான உனக்கு, வாஜபேயத்தில் கிட்டிய எங்கள் குடைகளின் மூலம் நிழலைத் தருவோம்.(23) வத்ஸா {குழந்தாய்}, வேத மந்திரங்களில் ஈடுபடும் எங்கள் புத்தியானது, உனக்காக வனவாசத்தை அனுசரிக்கும்படி எங்களைத் தூண்டுகிறது.(24) எங்கள் பரம தர்மமான {உயர்ந்த செல்வமான} வேதங்களை ஹிருதயத்திலே இருக்கச் செய்வோம், நடத்தையால் பாதுகாக்கப்படும் எங்கள் தாரங்களையும் {மனைவியரையும்} கிருஹத்திலேயே வசிக்கச் செய்வோம்.(25) எங்கள் தீர்மானத்தை மாற்றிக் கொள்ள மாட்டோம். உன்னுடன் செல்வதிலேயே எங்கள் மதி நிலைத்திருக்கிறது. நீயே தர்மத்தைப் புறக்கணித்தால் யார்தான் தர்மத்தின் பாதையில் நிலைத்திருப்பார்கள்?(26)
[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "வாஜபேய வேள்வி செய்பவனுக்கு வெண்குடை வழங்க வேண்டும் என்று வேதங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது" என்றிருக்கிறது.
மாறாத ஆசாரம் {நன்னடத்தை} கொண்டவனே, அன்னப்பறவைகளைப் போன்ற வெண்மயிரைக் கொண்டவையும், தரையைத் தீண்டிய விளைவால் புழுதியால் கனத்திருப்பவையுமான எங்கள் சிரங்களால் வணங்கி உன்னை வேண்டுகிறோம். திரும்புவாயாக.(27) இங்கே வந்திருக்கும் துவிஜர்கள் பலரால் யஜ்ஞங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன. வத்ஸா {குழந்தாய்}, நீ திரும்பினால்தான் அவற்றை நிறைவடையச் செய்ய முடியும்.(28) இராமா, அசைவன, அசையாதன உள்ளிட்ட பூதங்களும் {உயிரினங்களும்} உன்னிடம் பக்தியுடனிருக்கின்றன. உன்னைத் திரும்புமாறு வேண்டும் அந்த பக்தர்களிடம் உன் பக்தியைக் காட்டுவாயாக.(29) வேர்களின் மூலம் வேகமாக வளர்ந்த மரங்கள், உன்னைப் பின்தொடர்ந்து வர இயலாததால், வாயு வேகத்தில் வளைந்து அலறுபவை போலத் தெரிகின்றன.(30) உணவைத் தேடிச் செல்ல இயலாமல், விருக்ஷங்களில் {மரங்களில்} அசைவற்று அமர்ந்திருக்கும் பக்ஷிகளும் {பறவைகளும்}, சர்வ பூதங்களிடமும் கருணை கொண்டவனான நீ திரும்ப வேண்டுமென்றே மன்றாடுகின்றன" {என்றனர் துவிஜர்கள்}.(31)
திரும்ப வேண்டுமென அந்த துவிஜர்கள் இவ்வாறு அழுது கொண்டிருந்தபோது, இராகவனைத் தடுப்பதைப் போல தமஸையும் {தமஸை ஆறும்} அங்கே தோன்றியது.(32) பிறகு சுமந்திரனும், களைத்திருந்த ஹயங்களை {குதிரைகளை} ரதத்தில் இருந்து சீக்கிரமாக விடுவித்து, தரையில் புரளவும், நீரைப் பருகவும், உடலை நனைக்கவும் செய்து, தமஸையின் அருகிலேயே மேய்ந்திருக்க அவற்றை அனுமதித்தான்.(33)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 045ல் உள்ள சுலோகங்கள் : 33
Previous | | Sanskrit | | English | | Next |