The advice of Siddhartha | Ayodhya-Kanda-Sarga-036 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: படையையும், செல்வத்தையும் ராமனுடன் அனுப்ப ஆணையிட்ட தசரதன்; தடை கூறிய கைகேயி; அவளைத் தணிக்க முற்பட்ட சித்தார்த்தர்; ராமனுடன் வனம் செல்ல விரும்பிய தசரதன்...
அப்போது ஐக்ஷ்வாகன் {இக்ஷ்வாகு குலக் கொழுந்தான தசரதன்} அந்தப் பிரதிஜ்ஞையில் கட்டுண்டு, பெருமூச்சுவிட்டபடியே கண்ணீருடன் மீண்டும் மீண்டும் சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(1) "சூதரே, இராகவனைப் பின்தொடர்ந்து செல்ல, இரத்ன சம்பூர்ணமான சதுர்வித பலங்களுடன் {ரத்தினங்கள் நிறைந்த நால்வகை படையுடன்} கூடிய ஒரு சம்முவை[1] சீக்கிரம் ஏற்பாடு செய்வீராக.(2) நாநயமிக்க அழகிய பெண்களும், வியாபரத்திற்குரிய மஹாதனம் கொண்ட வணிகர்களும் குமாரனின் வாஹினியை[2] {என் மகனின் படையை} அலங்கரிக்கட்டும்.(3) இவனுடைய உபஜீவிகளுக்கும் {பணியாட்களுக்கும்}, இவனுடன் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் பலவித தனங்களைக் கொடுத்து அவர்களையும் {அந்தப் படையில்} நியமிப்பீராக.(4)
[1] இங்கே படையைக் குறிக்க சம்மு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. முழுமஹாபாரதம் 2ம் அத்தியாயத்தின் 22ம் சுலோகத்தில் ஒரு சம்முவின் அளவு மூன்று பிருதனைகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு சம்மு என்பது 729 யானைகள், 729 தேர்கள், 2187 குதிரைகள், 3645 காலாட்படையினர் என மொத்தம் 7290 போர்வீரர்களையும், 2916 விலங்குகளையும் கொண்டதாகும்.
[2] இங்கே படையைக் குறிக்க வாஹினி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வாஹினியின் அளவு என்பது 81 யானைகள், 81 தேர்கள், 243 குதிரைகள், 405 காலாட்படையினர் என மொத்தம் 810 போர் வீரர்களையும், 324 விலங்குகளையும் கொண்டது.
முக்கிய ஆயுதங்களையும், நகரவாசிகள், சகடங்கள் {வாகனங்கள்}, ஆரண்யத்தை அறிந்த வியாதர்கள் {வேடர்கள்} ஆகியோரையும் காகுத்சனுடன் {ராமனுடன்} அனுப்புவீராக.(5) மிருகங்களையும் {மான்களையும்}, குஞ்சரங்களையும் {யானைகளையும்} கொன்றும், அரண்யகத்தின் மதுவை {காட்டுத்தேனைப்} பருகியும், விதவிதமான நதிகளைக் காணும் இவனுக்கு இந்த ராஜ்ஜியம் நினைவுக்கு வராது.(6) ஜனங்களற்ற வனத்தில் வசிக்கப்போகும் ராமனுடன் என்னுடைய தானியகோசமும், தனகோசமும் {தானிய, தனக் களஞ்சியங்களும்} பின்தொடர்ந்து செல்லட்டும்.(7) இவன் புண்ணிய தேசங்களில் யஜ்ஞம் செய்து கொண்டும், ஏராளமான தக்ஷிணைகளை அளித்துக் கொண்டும் வனத்தில் ரிஷிகளுடன் சுகமாக வாழட்டும்.(8) மஹாபாஹுவான {பெருந்தோள்களைக் கொண்ட} பரதன் அயோத்தியை பரிபாலிக்கட்டும். ஸ்ரீமானான ராமன், விரும்பிய பொருட்கள் அனைத்துடன் அனுப்பப்படட்டும்" {என்றான் தசரதன்}.(9)
அந்த காகுத்ஸன் {தசரதன்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, கைகேயிக்கு பயம் உண்டானது. அவளது முகமும் வாடியது, குரலும் தடைபட்டது.(10) விசனமடைந்து {மனந்தளந்து}, அச்சத்தில் வாட்டமடைந்த தன் முகத்தை அவனை {தசரதனை} நோக்கித் திருப்பிய கைகேயி இந்த வாக்கியத்தைச் சொன்னாள்:(11) "சாதுவே {உன்னத ஆன்மாவே}, சாரமில்லாமல் மண்டிய சுராபானத்தைப் போன்று அனுபவிக்க முடியாத ஜனங்களற்ற சூன்ய ராஜ்ஜியத்தை பரதன் ஏற்கமாட்டான்" {என்றாள்}.(12)
கைகேயி, இலஜ்ஜையை {வெட்கத்தைக்} கைவிட்டு இந்த அதிபயங்கர சொற்களைச் சொன்னபோது, அந்த நீள்விழியாளிடம் தசரதன் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(13) "அஹிதையே {இதமற்றவளே}, என் மீது நீ சுமத்திய சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் என்னை ஏன் துளைக்கிறாய்? அநாரியையே, பூர்வத்தில் {அபிஷேகம் குறித்த} இந்தச் செயல் தொடங்கும்போதே நீ ஏன் தடுக்கவில்லை?" {என்று கேட்டான்}.(14)
வாராங்கனையான {அழகிய பெண்ணான} கைகேயி, அவன் சொன்னதைக் கேட்டு இரு மடங்கு கோபமடைந்து, அந்த ராஜனிடம் இதைச் சொன்னாள்:(15) "உமது வம்சத்தைச் சேர்ந்த சகரன், அசமஞ்சன் என்றழைக்கப்பட்ட தன் ஜேஷ்ட புத்திரனை {மூத்த மகனைக்} கைவிட்டதைப் போலவே நீரும் இவனை அனுப்புவீராக" {என்றாள் கைகேயி}.(16) இவ்வாறு சொல்லப்பட்ட ராஜா தசரதன், "சீ, சீ" என்றான். சர்வஜனங்களும் வெட்கமடைந்தனர். அவள் அதை உணரவேயில்லை.(17)
விருத்தரும் {முதிர்ந்தவரும்}, நேர்மையாளரும், ராஜனால் பெரிதும் மதிக்கப்பட்டவரும், சித்தார்த்தர் என்ற பெயரைக் கொண்டவருமான மஹாமந்திரி, கைகேயியிடம் இதைச் சொன்னார்:(18) "துர்மதி கொண்ட அசமஞ்சன், பாதையில் விளையாடும் பாலகர்களை சரயுவின் நீரில் வீசி எறிவதன் மூலம் மகிழ்ச்சியடைந்தான்.(19) அவனைக் கண்ட நகரவாசிகள் அனைவரும் கோபமடைந்து {சகர} ராஜனிடம் {இவ்வாறு} சொன்னார்கள், "இராஷ்டிரவர்தனா {மாநிலத்தை வளப்படுத்துபவனே}, அசமஞ்சனா? நாங்களா? எனத் தீர்மானிப்பாயாக" {என்றனர்}.(20)
அப்போது அந்த ராஜா {சகரன்}, அவர்களிடம், "இந்த பயத்திற்கான காரணம் என்ன?" என்று கேட்டான். ராஜனால் இவ்வாறு கேட்கப்பட்ட அந்த மக்கள், இந்த வாக்கியத்தைச் சொன்னார்கள்:(21) "விளையாடிக் கொண்டிருக்கும் எங்கள் பாலர்களைக் குழம்பிய புத்தியுடனும், மூர்க்கத்துடனும் கூடிய அவன் சரயுவில் வீசியெறிந்து ஒப்பற்ற மகிழ்ச்சியை அடைகிறான்" {என்றனர்}.(22)
அந்த மக்களின் சொற்களைக் கேட்ட நராதிபன் {சகரன்}, ஒவ்வாதவனான தன் புத்திரனை அவர்களின் நன்மைக்காகக் கைவிட்டான்.(23) அந்தப் பிதா, அவனையும், அவனது பாரியையையும் {மனைவியையும்}, அவர்களது உடைமைகளையும் சீக்கிரமாக யானங்களில் {பல்லக்குகளில்} ஏற்றி, தன் பணியாட்களிடம், "இவன் ஜீவிதம் முழுமைக்கும் நாடுகடத்தப்படுகிறான்" என்று ஆணையிட்டான்.(24) பாப கர்மங்களைச் செய்தவன் {அசமஞ்சன்}, ஒரு மண்வெட்டியையும், கூடையையும் எடுத்துக் கொண்டு மலைப் பாதைகளைச் சூறையாடியவாறே {கொத்தியவாறே} திசைகள் அனைத்திலும் திரிந்து கொண்டிருந்தான்[3].(25) உயர்ந்த தார்மீகனான சகரராஜா இவ்வாறே அவனை {அந்த அசமஞ்சனை} வெளியேற்றினான். அவ்வாறே தடுக்கப்பட {பட்டமேற்க முடியாமல் நாடுகடத்தப்பட} இராமன் செய்த பாபம் என்ன?(26)
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "இப்படியாய் பாபத் தொழில் செய்த அவன் களைவெட்டியோடு கூடிய ஓர் கூடையை எடுத்துக் கொண்டு எல்லா திக்குகளிலும் சென்று மலைகளிலும், காடுகளிலும் திரிந்தனன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவனும் மண்வெட்டி புட்டிற்கூடை ஆகிய இவைகளைக் கொண்டு பாபிஷ்டன் போல எல்லாத் திசைகளிலும் திரிந்து மலைகளிலும் அரண்யங்களிலும் காய்களைப் பறித்தும், கிழங்கு முதலியவற்றை வெட்டியும் பிழைத்துக் கொண்டிருந்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அதனால் அவன் காட்டில் காய் கிழங்குகளைத் தின்று திரிந்தனன்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் ஆங்கிலப் பதிப்பில், "அசமஞ்சன் தன் கைகளில் கோடரியுடனும், கூடையுடனும் காட்டில் திரிந்து தன் தீச்செயல்களுக்கான கனிகளை அறுவடை செய்தான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் ஆங்கிலப்பதிப்பில், "அதன்பின் அந்தக் கொடுமைக்காரன் காட்டிற்குச் சென்று மலைக்காடுகளில் திரிந்து கொண்டிருந்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் ஆங்கிலப் பதிப்பில் இந்தத் தகவல் இல்லை. முழுமஹாபாரதம் வனபர்வம் பகுதி 107ல் அசமஞ்சன் குறித்த கதை சொல்லப்பட்டிருக்கிறது.
இராகவனிடம் எந்தக் குற்றத்தையும் நம்மால் காண முடியவில்லை. {பௌர்ணமி} நிலவைப் போலவே அவனிடம் எந்தக் களங்கத்தையும் காண்பது துர்லபம் {அரிது}.(27) அல்லது ராகவனிடம் நீ தோஷமேதும் கண்டால், தேவி, அதை நீ இப்போது சரியாகச் சொல்வாயாக {நிரூபிப்பாயாக}. அதன்பிறகு ராமன் நாடுகடத்தப்படுவான்.(28) துஷ்டனல்லாதவனும், சத்பாதையில் {சன்மார்க்கத்தில் / நல்வழியில்} அர்ப்பணிப்புடன் செல்பவனுமான ஒருவனைக் கைவிடுவது தர்ம விரோதம் {தர்மத்தைத் துறப்பது}. அது சக்ரனின் {இந்திரனின்} பிரகாசத்தையும் எரித்துவிடும்.(29) எனவே தேவி, ராமனின் {ராஜ்ஜிய} செழிப்பை நீ தடுத்தது போதும். அழகிய முகம் கொண்டவளே, உலக நிந்தனையில் இருந்து உன்னைக் காத்துக் கொள்வாயாக" {என்றார் முதலமைச்சர் சித்தார்த்தர்}.(30)
சித்தார்த்தரின் சொற்களைக் கேட்ட ராஜா {தசரதன்}, மிகக் களைப்பான தொனியுடனும், சோகத்தால் தடைபட்டக் குரலுடனும் கைகேயியிடம் {பின்வருமாறு} பேசினான்:(31) "பாபவிருத்தம் {பாபநடை} கொண்டவளே, {சித்தார்த்தரின்} இந்தச் சொற்களையும் நீ ஏற்கவில்லையா? தீய நடத்தை கொண்ட நீ, இரங்கத்தக்க மார்க்கத்தில் செல்வதன் மூலம் உனக்கு இதமானதையோ, எனக்கு இதமானதையோ அறியாதிருக்கிறாய். சாதுக்களின் பாதையில் இருந்து உன் செயல் விலகியிருக்கிறது.(32) நான் இப்போது ராஜ்ஜியத்தையும், சுகத்தையும், தனத்தையும் கைவிட்டு ராமனைப் பின்தொடர்ந்து செல்வேன். நீ ராஜா பரதன் சகிதம் சுகமாக நெடுங்காலம் ராஜ்ஜியத்தை அனுபவிப்பாயாக" {என்றான் தசரதன்}.(33)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 036ல் உள்ள சுலோகங்கள் : 33
Previous | | Sanskrit | | English | | Next |