Wednesday 18 May 2022

வசிஷ்டர் பழித்துரை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 037 (37)

The blame of Vasistha | Ayodhya-Kanda-Sarga-037 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மரவுரியை அணிந்து கொண்ட ராமனும், லக்ஷ்மணனும்; கைகேயியைப் பழித்த வசிஷ்டர். மரவுரியை உடுத்த சீதைக்கு ராமன் சொல்லிக் கொடுத்தது. அந்தப்புரப் பெண்டிரின் அழுகை...

Vasishta Kaikeyi Seetha

விநயம் {நன்னடையை} அறிந்த ராமன், அந்த மஹாமந்திரியின் {சித்தார்த்தரின்} சொற்களைக் கேட்ட பிறகு, அடக்கமாக தசரதனிடம் {இவ்வாறு} பேசினான்:(1) "இராஜரே, போகத்தைத் துறந்து, அனைத்திலும் பற்றைக் கைவிட்டு வனத்தில் கிடைப்பனவற்றை உண்டு ஜீவிக்கப் போகும் எனக்குப் பரிவாரத்தால் {பின்தொடர்ந்து வரும் படையாலும், பணியாட்களாலும்} என்ன பயன்?(2) துவிப சிரேஷ்டத்தை {யானைகளில் சிறந்த யானையை} தத்தம் செய்துவிட்டு, அதைச் சுற்றிக் கட்டியிருந்த கயிற்றில் எவன் தன் மனத்தைச் செலுத்துவான்? உத்தம குஞ்சரத்தையே {சிறந்த யானையையே} துறந்தவனுக்கு அந்தக் கயிற்றிடம்  சினேகம் கொள்வதால் என்ன பயன்?(3) நன்மக்களில் சிறந்தவரே, ஜகத்பதியே, அவ்வாறே கொடி படையால் எனக்குப் பயனென்ன? {அவை} அனைத்தையும் நான் {பரதனுக்குக்} கொடுத்துவிட்டேன். கந்தலாடையை {மரவுரியை} மட்டும் என்னிடம் கொண்டு வரச்செய்வீராக.(4) சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வன வாசம் செய்யப் போகும் எனக்கு மண்வெட்டி, கூடை ஆகிய இரண்டையும் கொண்டு வரச் செய்வீராக" {என்றான் ராமன்}.(5)

Jute cloths given by Kaikeyi
அப்போது கைகேயி, கூடியிருந்த ஜனங்களின் மத்தியில் வெட்கமில்லாமல் தானே மரவுரிகளைக் கொண்டு வந்து ராகவனிடம் {ராமனிடம்}, "உடுத்திக் கொள்வாயாக" என்று சொன்னாள்.(6)

புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} அவன், கைகேயியிடம் இருந்து மரவுரிகளைப் பெற்றுக் கொண்டு, நேர்த்தியான வஸ்திரங்களைக் களைந்து, முனிவஸ்திரங்களை உடுத்திக் கொண்டான்.(7) இலக்ஷ்மணனும் அழகிய உடையைக் களைந்து, பிதாவின் {தந்தையான தசரதனின்} முன்னிலையிலேயே தபசிகளின் உடையை உடுத்திக் கொண்டான்.(8) அப்போது பட்டாடை உடுத்தியிருந்த சீதை, தன்னால் உடுத்தப்பட வேண்டிய மரவுரிகளைக் கண்டு, வலையைக் கண்ட மானைப் போல அஞ்சினாள்.(9) சுபலக்ஷணங்களைக் கொண்டவளும், தர்மத்தை அறிந்தவளும், தர்மத்தை உணர்ந்தவளுமான அந்த ஜானகி {ஜனகனின் மகள் சீதை}, குசப்புல்லாலான மரவுரிகளை மனக்கலக்கத்துடன் பெற்றுக் கொண்டாள். 

வெட்கத்தால் கண்களில் நிறைந்த கண்ணீருடன் கூடியவள், கந்தர்வ ராஜனைப் போன்ற தன் பர்த்தாவிடம் {கணவன் ராமனிடம்} இதைச் சொன்னாள்:(10,11) "வனத்தில் வசிக்கும் முனிவர்கள் இந்த மரவுரிகளை எவ்வாறு உடுத்துவார்கள்?" {என்றாள்}. அனுபவமற்றவளான அந்த சீதை இவ்வாறே மீண்டும் மீண்டும் திகைத்து நின்றாள்.(12) அந்த ஜனகனின் மகள், அனுபவமில்லாததால் ஒரு மரவுரியைக் கழுத்தில் போட்டுக் கொண்டும், மற்றொன்றைக் கையில் வைத்துக் கொண்டும் வெட்கி நின்றாள்.(13) தர்மத்தை ஆதரிப்பவர்களில் முதன்மையான ராமன், சீக்கிரமாக தானே முன்வந்து சீதையுடைய பட்டாடையின் மேல் அந்த மரவுரிகளை உடுத்திவிட்டான்.(14) 

உத்தம ராமன், சீதைக்கு மரவுரியுடுத்துவதைக் கண்ட அந்தப்புரத்து நாரீகளின் {பெண்களின்} கண்களில் கண்ணீர் வழிந்தது.(15) மனம் வருந்திய அவர்கள், ஜ்வலிக்கும் தேஜஸ்ஸுடன் கூடிய ராமனிடம் {பின்வருமாறு} சொன்னார்கள், "வத்ஸா {குழந்தாய்}, மனஸ்வினியான {நற்குணங்களைக் கொண்ட} இவள் இவ்வாறு வனவாசம் செய்ய நியமிக்கப்படவில்லை.(16) பிரபுவே, உன் பிதாவின் வாக்கியத்தைப் பின்பற்றி ஜனங்களற்ற வனத்திற்கு நீ சென்று திரும்பிவரும் வரையில் இவளது தரிசனமாவது எங்களுக்கு நல்ல பலம் தருவதாக {வெகுமதியாக} அமையட்டும்.(17) இலக்ஷ்மணனை சஹாயனாகக் கொண்டு நீ வனத்திற்குச் செல்வாயாக. புத்திரகா, இந்தக் கல்யாணி {அழகிய பெண்}, ஒரு தபஸ்வினியைப் போல வனத்தில் வசிக்கத் தகாதவள்.(18) புத்திரா, எங்கள் யாசிப்பை {வேண்டுதலை} ஏற்பாயாக. நித்ய தர்மனான நீயோ இங்கிருக்க ஏற்க மாட்டாய். பாமினியான {அழகிய இளம்பெண்ணான} சீதை இங்கேயே இருக்கட்டும்" {என்றனர்}.(19)

இவ்விதமான அவர்களின் சொற்களைக் கேட்டவாறே அந்த தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்}, சீலம் {ஒழுக்கம்} பொருந்திய சீதைக்கு மரவுரிகளை உடுத்திக் கொண்டிருந்தான்.(20) நிருபதியின் {தசரத மன்னனின்} குருவும், ஆசானுமான வசிஷ்டர், அவள் {சீதை} மரவுரி ஏற்பதைக் கண்டு, அவளைத் தடுத்து, கைகேயியிடம் இதைச் சொன்னார்:(21) "கைகேயி, வரம்பைக் கடந்தவளே, துர்மதி கொண்டவளே, குலத்தைக் கெடுக்க வந்தவளே, ராஜனை வஞ்சித்தவளே, நீ பிரமாணத்தை நிறுவவில்லை {நியாயமாக நடந்து கொள்ளவில்லை}.(22) சீலவர்ஜிதையே {ஒழுக்கமற்றவளே}, சீதாதேவி வனத்திற்குச் செல்ல மாட்டாள். இராமனுக்குக் கொடுப்பதாயிருந்த ஆசனத்தில் இவள் {சீதை} வீற்றிருப்பாள்.(23) தாரத்தை காப்பவர்களான {இல்லறவாசிகள்} அனைவருக்கும் தாரமே ஆத்மாவாக இருக்கிறாள். ராமனின் ஆத்மாவாக இருப்பதால் இவள் மேதினியைப் பரிபாலிப்பாள்.(24) 

ராமனுடன் வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை} வனத்திற்குச் செல்வாளென்றால், நாங்களும் {அவளைப்} பின்தொடர்ந்து செல்வோம். இந்த நகரமும் அவ்வாறே செல்லும்.(25) ராமனும், அவனது தாரமும் எங்கே இருப்பார்களோ அங்கேயே அந்தபாலர்களும் {எல்லைப் பாதுகாவலர்களும்}, ராஷ்டிரத்தின் உபஜீவிகளும் {மாநிலத்தின் பணியாட்களும்}, தளவாடங்களுடனும், உடைமைகளுடனும் கூடிய நகரவாசிகளும் செல்வார்கள்.(26) பரதனும், சத்ருக்னனும் கூட மரவுரியுடுத்திக் கொண்டு, வனத்தில் வசிக்கும் தங்கள் அண்ணனான காகுத்ஸனை {ராமனைப்} பின்தொடர்ந்து வனத்தில் திரிவார்கள்.(27) அதன்பிறகு, பிரஜைகளுக்கு இதமற்றவளும், துர்விருத்தம் {தீய நடை} கொண்டவளுமான நீ, ஜனங்கள் விலகி, மரங்களே இருக்கும் சூன்யமான வசுதையை {வெற்று பூமியைத்} தனியாக ஆள்வாயாக.(28) 

எவ்விடத்தில் ராமன் பூபதியாக இல்லையோ அது {அவ்விடம்} ராஷ்டிரமாகாது. எந்த வனத்தில் ராமன் வாழ்ந்தாலும் அதுவே {அந்த வனமே} கூட ராஷ்டிரமாகும்.(29) பரதன் இந்த மஹீபதிக்கு {பூமியின் தலைவனான தசரதனுக்குப்} பிறந்திருந்தால், பிதாவால் தத்தம் செய்யப்படாத மஹீயை {பூமியை} ஆளவோ, உனக்குப் புத்திரனாக வாழவோ அவன் தகுந்தவனல்ல {அவன் சம்மதிக்க மாட்டான்}.(30) நீ தரையிலிருந்து வானத்திற்குக் குதித்துக் கொண்டிருந்தாலும், பிதாவின் வம்ச சரித்திரத்தை அறிந்தவன் {பரதன்}, மாறாகச் செயல்பட மாட்டான்.(31) புத்திரனிடம் அன்பு கொண்ட உன்னால், புத்திரனுக்குப் பிரியமில்லாத காரியமே செய்யப்பட்டிருக்கிறது. ராமனை பின்பற்றாதவன் எவனும் இவ்வுலகில் இல்லை.(32) 

கைகேயி, விலங்குகள், யானைகள், மான்கள், பறவைகள் ஆகியனவும் ராமனுடன் செல்வதை இப்போதே நீ காண்பாய். மரங்களும் முகம் திருப்பி அவனையே நோக்கும்.(33) இவளுக்கு {சீதைக்கு} மரவுரி விதிக்கப்படவில்லை. எனவே தேவி {கைகேயி}, மரவுரியை வீசிவிட்டு உன் மருமகளுக்கு {சீதைக்கு} சிறந்த ஆபரணங்களைக் கொடுப்பாயாக" {என்றார் வசிஷ்டர்}. இவ்வாறு வசிஷ்டர் அந்த வஸ்திரத்தை {மரவுரியைத்} தடுத்தார்.(34)

மேலும் அவர் {வசிஷ்டர்}, "கேகய ராஜபுத்ரியே {கேகய நாட்டு இளவரசியே}, ராமன் ஒருவனே வனத்தில் வசிக்க வேண்டுமென நீ வேண்டினாய். எனவே, இவள் {இந்த சீதை}, தினமும் ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாக அரண்யத்தில் ராகவனுடன் {ராமனுடன்} வாழட்டும்.(35) வரங்களைக் கேட்ட போது நீ இவளைக் குறித்துக் கேட்கவில்லை. இந்த ராஜபுத்ரி {சீதை}, முக்கிய யானங்களுடனும் {பல்லக்குகளுடனும்}, பரிசாரகர்களின் {பணியாட்களின்} துணையுடனும், சர்வ வஸ்திரங்களுடனும் {ஆடைகள் அனைத்துடனும்}, பயனுள்ள பொருட்களுடனும் செல்லட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(36)

நிருபனின் {தசரதராஜனின்} குருவும், செல்வாக்கு மிக்கவரும், விப்ரர்களில் முக்கியருமான அவர் {வசிஷ்டர்} இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதும், தன் பிரியத்திற்குரிய பர்த்தாவை {கணவனை} மதிக்க விரும்பிய சீதை, தன் தீர்மானத்தை மாற்ற மனங்கொண்டாளில்லை.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 037ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை