Tuesday 17 May 2022

சுமந்திரன் நிந்தனை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 035 (37)

The reproach of Sumantra | Ayodhya-Kanda-Sarga-035 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியிடம் கெஞ்சிய பிறகு அவளை நிந்தித்த சுமந்திரன்...

Kaikeyi's father and mother

பிறகு, திடீரெனத் சிரத்தை {தலையை} அசைத்து, மீண்டும் மீண்டும் ஆழமான பெருமூச்சுவிட்டு, கைகளைப் பிசைந்து, பற்களைக் கடகடவென அரைத்து,{1} முன்பிருந்த நிறம் மாறி, கோபத்தால் கண்கள் சிவந்து, திடீரென கோபத்தில் மூழ்கி, அசுபமான சந்தாபத்தை {மங்கலமற்ற மனத்துன்பத்தை} அடைந்து,{2} தசரதனின் மனத்தை கவனமாக ஆராய்ந்து, கூரிய கணைகளால் கைகேயியின் ஹிருதயத்தைத் துளைப்பது போல அந்த சூதன் சுமந்திரன், கொடியவையும், நிகரற்றவையுமான வாக்கிய வஜ்ரங்களால் {வஜ்ரம் போன்ற சொற்களால்} விரைவாக கைகேயியின் மர்மங்கள் அனைத்தையும் {முக்கிய அங்கங்களைத்} துளைத்தான்.{3,4}(1-4)

{சுமந்திரன்}, "தேவி, அசைவனவும், அசையாதனவும் அடங்கிய சர்வஜகத்தையும் ஆதரிப்பவரும், உன் பதியுமான {கணவருமான} ராஜா தசரதர் உன்னால் கைவிடப்பட்டதைப் போன்ற அகாரியம் வேறேதும் உண்மையில் இங்கே {உலகில்} இல்லை.(5,6அ) வெல்லப்பட முடியாத மஹேந்திரனைப் போலவும், அசைக்கப்பட முடியாத அசலத்தை {மலையைப்} போலவும், கலங்கடிக்கப்பட முடியாத பெருங்கடலைப் போலவும் இருந்தவருக்கு உன் கர்மங்களால் துன்பத்தை விளைவித்த காரணத்தால் உன்னை பதிக்னி {கணவரின் உயிரை அழிப்பவள்} எனவும், குலக்னி {குலத்தை வேரோடு அழிப்பவள்} எனவும் நான் கருதுகிறேன்.(6ஆ,7) 

நாரீகளுக்கு பர்த்தாவின் {பெண்களுக்குக் கணவரின்} விருப்பமே கோடி புத்திரர்களை {கோடி புத்திரர்களின் விருப்பத்தை} விட மேலானது என்பதால் உன்னை ஆதரிப்பவரும், வரமளிப்பவரும், பதியுமான தசரதரை இகழாதே.(8) ஒரு நிருபரின் வீழ்ச்சியில் {அரசரின் மரணத்திற்குப் பிறகு}, வயதின் அடிப்படையிலேயே {இளவரசர்களால்} ராஜ்ஜியங்கள் அடையப்படுகின்றன. இக்ஷ்வாகுகுலநாதனிடம் {ராமனிடம்} இருந்து அதை நீ அபகரிக்க விரும்புகிறாய்.(9) உன் புத்திரன் பரதனே ராஜாவாகி மேதினியை ஆளட்டும். இராமன் எங்கே செல்கிறானோ, அங்கேயே நாங்கள் அனைவரும் செல்வோம்.(10) வரம்பு கடந்த கர்மத்தை {செயலைச்} செய்ய நினைக்கும் உன் நாட்டில் இனி எந்தப் பிராமணரும் வசிப்பது தகாது.(11) 

நிச்சயம் இராமன் செல்லும் மார்க்கத்திலேயே நாங்கள் அனைவரும் செல்வோம். தேவி, பந்துக்களாலும், பிராமணர்கள் அனைவராலும், சாதுக்களாலும் கைவிடப்படும் நீ, இந்த ராஜ்ஜிய லாபத்தின் மூலம் என்ன மகிழ்ச்சியை அடையப் போகிறாய்? அத்தகைய வரம்பு கடந்த கர்மத்தையே நீ செய்ய விரும்புகிறாய்.(12,13) நீ இவ்வாறு செயல்பட்டு வருகையில் இன்னும் இந்த மேதினி பிளக்காதிருப்பதைக் கண்டு நான் ஆச்சரியமடைகிறேன்.(14) பிரம்மரிஷிகளால் சொல்லப்படுபவையும், காணப் பயங்கரமாக எரிந்து கொண்டிருப்பவையுமான திக்வாக்தண்டங்கள் {நிந்தனைச் சொற்களெனும் தண்டங்கள்} இராமனை நாடு கடத்தத் தீர்மானித்திருக்கும் உன்னை ஏன் ஹிம்சிக்காமல் {துன்புறுத்தாமல்} இருக்கின்றன?(15) எவன் கோடரியால் மாமரத்தை வெட்டிவிட்டு, வேப்ப மரத்தை பாலூற்றி வளர்ப்பானோ அவனுக்கு அஃது இனிப்பைத் தராது?[1](16) நிச்சயம் வேப்பமரத்தில் தேன் பெருகாது என்ற உலகப் பழமொழி உன் பிறவி இயல்புக்கே சரியாகப் பொருந்துவதாக நான் நினைக்கிறேன்[2].(17)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதனால், ராமனைக் காட்டுக்கு அனுப்பிக் கைகேயியின் அபிமதத்தை நிறைவேற்றுவதால் தசரதனுக்குக் கஷ்டமேயன்றி அந்தக் கைகேயியால் எள்ளளவும் ஸுகம் நேராதென்று தசரதனை ஸுமந்திரன் மறைத்து நிந்திக்கை தோற்றுகிறது" என்றிருக்கிறது.

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தேவரீரிடத்திலும் தாயாரிடத்தில் எந்தத் தன்மையிருந்ததோ, அதே பிரத்யக்ஷத்தில் விளங்குகிறது என்றே அடியேன் எண்ணுகிறேன். ஒரு வேப்பமரத்தினின்று தேன் ஒழுகாது என்பதுதான் உலகில் பழமொழியாய் விளங்கும் சொல்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பெரியவம்சத்திற் பிறந்தும் உன் தாயின் ஸ்வபாவமெப்படிப்பட்டதோ, அப்படிப்பட்டதே உன் ஸ்வபாவமுமென்று எனக்குத் தெரியும். வேப்பஞ்செடியினின்றும் தேன் பெருகாதென்னும் வார்த்தை உலகத்தில் எங்கும் வெளிச்சமன்றோ" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "உன்னுடைய தன்மையை உன் மாதாவின் தன்மையைப் போன்றதென்றே யான் நம்புகிறேன், வேம்பினின்றுந் தேன் ஒழுகுமோ? தாயின் குணமே மகளுக்கும் வருமென்றும் தாயைப் பார்த்து மகளைக் கொள்ளென்றும் பழமொழி யுள்ளனவன்றோ" என்றிருக்கிறது.

பூர்வத்தில் உன் மாதாவின் தீய இயல்பை {பிடிவாதத்தை} நாங்கள் கேட்டிருக்கிறோம். வரம் தரவல்ல யாரோ ஒருவர், உன் பிதாவுக்கு {கேகயராஜனுக்கு} ஒரு வரத்தை தத்தம் செய்தார். அதன் மூலம் அந்த வசுதாதிபனால் சர்வபூதங்களின் குரலை {உயிரினங்கள் அனைத்தின் மொழிகளைப்} புரிந்து கொள்ள முடியும். அதனால் {ஈ, எறும்பு முதலிய} தாழ்ந்த உயிரினங்களின் சொற்களை அவனால் அறிந்து கொள்ள முடிந்தது.(18,19) 

உன் பிதா, தன் சயனத்தருகே {படுக்கையின் அருகே} ஜிரும்பம் என்றழைக்கப்பட்ட ஓர் எறும்பின் சொல்லைக் கேட்டு, மீண்டும் மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தான்.(20) உன் ஜனனீ {அன்னை, இவன் தன்னைக் கண்டு பரிகசிக்கிறான் என்று நினைத்தாள்} இதனால் கோபமடைந்து, அவனுக்கு மிருத்யுபாசத்தை {காரணத்தைச் சொல்லாவிட்டால் அவனுக்கு மரணக்கயிற்றையும்} விரும்பும் வகையில் இதை சொன்னாள், "நிருபதியே, சௌம்யரே {மென்மையானவரே}, உம்முடைய சிரிப்பிற்கான காரணத்தை நான் அறிய விரும்புகிறேன்" {என்று கேட்டாள்}.(21)

அந்த நிருபன் தன் தேவியிடம் {பின்வருமாறு} சொன்னான், "தேவி, அதை நான் உனக்குச் சொன்னால், உடனே எனக்கு மரணம் நேரும். இதில் ஐயமேதும் இல்லை" {என்றான்}.(22)

தேவி, அப்போது உன் மாதா, உன் பிதாவான கேகயனிடம் {இவ்வாறு} சொன்னாள், "நீர் ஜீவித்தாலும், இல்லாவிட்டாலும் எனக்குச் சொல்வீராக. என்னை ஏளனஞ் செய்யாதீர்" {என்றாள்}.(23)

பிருத்வீபதியான அந்தக் கேகயன், தன் பிரியத்திற்குரியவள் இவ்வாறு சொன்னதும், தனக்கு வரமளித்தவரிடம் இந்தக் காரியத்தை உள்ளபடியே சொன்னான்.(24) வரமளித்தவரான அந்த சாது, அப்போது அந்த ராஜனிடம் இந்த மறுமொழியைக் கூறினார், "மஹீபதியே,  அவள் இறக்கட்டும், அல்லது தன்னையே அழித்துக் கொள்ளட்டும். நீ வெளிப்படுத்தாதே" {என்றார்}.(25)

தூய மனம் கொண்ட அந்த நிருபன், அவரது சொற்களைக் கேட்டு உன் மாதாவை விலக்கிவிட்டு குபேரனைப் போல மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தான்.(26) 

பாபதர்ஷினியே {எங்கும் பாபத்தையே காண்பவளே}, துர்ஜனங்கள் நடக்கும் பாதையில் செல்லும் நீயும் மோஹத்தால் {அறியாமை மயக்கத்தால்} இந்தத் தீய தீர்மானத்தை எடுத்திருக்கிறாய்.(27) நரர்கள் பிதாவுக்கும், அங்கனைகள் மாதாக்களுக்கும் {ஆண்கள் தந்தையைப் போலவும், பெண்கள் தாயைப் போலவும்} பிறக்கிறார்கள் என்ற லௌகிக பிரவாதம் {உலக வகைச் சொல்} இப்போது எனக்கு சத்தியமெனத் தோன்றுகிறது.(28) அவ்வாறு நீ ஆகாதே {உன் தாயைப் போலாகாதே}. வசுதாதிபர் {பூமியின் தலைவர்} சொன்னதை கிரஹித்து {புரிந்து} கொண்டு, உன் பர்த்தாவின் விருப்பத்தைப் பின்பற்றி இங்கேயுள்ள இந்த ஜனங்களின் கதியாவாயாக {இவர்களின் புகலிடமாகத் திகழ்வாயாக}.(29) 

பாபிகளால் தூண்டப்பட்டவளான நீ, உலகத்தைப் பாதுகாப்பவரும், தேவராஜாவுக்கு {இந்திரனுக்கு} இணையான காந்தியைக் கொண்டவருமான உன் பர்த்தாவை தர்மமற்ற வழியில் ஏவாதே.(30) தேவி, குற்றமற்றவரும், ஸ்ரீமானும், தாமரைக் கண்களைக் கொண்டவருமான தசரத ராஜா, உனக்குக் கொடுத்த பிரதிஜ்ஞையை பொய்யாக்க மாட்டார்.(31) 

ஜேஷ்டனும் {மூத்தவனும்}, தாராளனும், திறன்மிக்கவனும், ஜீவலோகத்தின் {உலக உயிரினங்களின்} ஸ்வதர்மத்தைப் பாதுகாப்பவனும், பலவானுமான ராமன் அபிஷேகிக்கப்படட்டும்.(32) தேவி, ராமன் தன் பிதாவான நிருபரை {தசரத மன்னரை} விட்டு வனத்திற்குச் சென்றுவிட்டால், உன்னைக் குறித்த மஹாபரிவாதமே {பெரும் பழிச்சொல்லே} நிச்சயம் இவ்வுலகில் உலவும்.(33) இராமன் ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கட்டும். இந்தத் துன்ப நோயில் இருந்து நீ விடுபடுவாயாக. இராமனை விட சமர்த்தன் வேறு எவனும் உன்னுடைய இந்த நகரத்தில் {அயோத்தியில்} இல்லை.(34) இராமன் யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டால், பெரும் வில்லாளியான தசரத ராஜா பூர்வ விருத்தத்தை {பழைய நடைமுறைகளை} நினைவில் கொண்டு நிச்சயம் வனம் செல்வார்" {என்றான் சுமந்திரன்}.(35)

இவ்வாறே சுமந்திரன், அந்த ராஜ சபையில் தன் கைகளைக் கூப்பியபடியே சாந்தமானவையும், கசப்பானவையும், கலங்கச் செய்பவையுமான இந்தச் சொற்களைக் கைகேயியிடம் சொன்னான்.(36) அந்த தேவியோ {கைகேயியோ} கலக்கமடையவும் இல்லை, இதயத்தில் வருத்தமடையவும் இல்லை. அப்போது அவளது முகத்தின் வண்ணத்தில் கூட மாற்றமேற்படவில்லை.(37)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 035ல் உள்ள சுலோகங்கள் : 37

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை