Rama took leave | Ayodhya-Kanda-Sarga-034 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் மனைவியர் அனைவரையும் அழைத்து வர ஆணையிட்ட தசரதன்; இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் தசரதனிடம் விடைபெற்றுக் கொண்டது; மயக்கமடைந்த தசரதன்...
கமலக்கண்ணனும், சியாமள வண்ணனும், ஒப்பற்ற மஹானுமான ராமன், அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்} இதைச் சொன்னான், "பிதாவிடம் என்னைக் குறித்துச் சொல்வீராக" {என்றான்}.(1)
துன்பத்தால் கலங்கிய இந்திரியங்களைக் கொண்ட அந்த சூதன் {சுமந்திரன்}, ராமனால் ஏவப்பட்டதும், சீக்கிரம் உள்ளே பிரவேசித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிருபதியை {மன்னன் தசரதனைக்} கண்டான்.(2) உபரக்த ஆதித்யனுக்கு {கிரஹண கால சூரியனுக்கு} ஒப்பான அந்த ஜகத்பதி {மன்னன்} பஸ்மத்தால் மறைக்கப்பட்ட அனலனை {நீறுபூத்த நெருப்பைப்} போலவும், நீர் வறண்ட தடாகத்தைப் போலவும் இருப்பதைக் கண்டான்.(3) மஹாஞானியான அந்த சூதன், பெரிதும் மனங்கலங்கி வருந்திக் கொண்டிருப்பவனைக் கண்டு கூப்பிய கரங்களுடன் அவனை அணுகினான்.(4)
அந்த சூதன் முதலில் {ஜயவிஜயீபவ என்ற} வெற்றிக்கான ஆசிகளை அந்த ராஜனிடம் கூறி, பயத்தால் பீடிக்கப்பட்ட சொற்களை {இவ்வாறு} மந்தமாகப் பேசினான்:(5) "புருஷவியாகரனான உமது சுதன் {மனிதர்களில் புலியான உமது மகன்}, பிராமணர்களுக்கும், உபஜீவிகளுக்கும் {பணியாட்களுக்கும்} தன் தனம் அனைத்தையும் தத்தம் செய்து விட்டு, துவாரத்தில் {வாயிலில்} காத்துக் கொண்டிருக்கிறான்.(6) சத்தியபராக்கிரமனான அந்த ராமன் உம்மைக் கண்டு பத்ரமாக {மங்கலமாக} இருக்கட்டும். நண்பர்கள் அனைவரிடமும் விடைபெற்று வந்திருப்பவன் இப்போது உம்மைக் காண விரும்புகிறான்.(7) ஜகத்பதியே, மஹா அரண்யத்திற்கு அவன் புறப்படுகிறான். கதிர்களுடன் கூடிய ஆதித்யனைப் போல ராஜகுணத்தை வெளிப்படுத்தும் அவனை நீர் காண்பீராக" {என்றான் சுமந்திரன்}[1].(8)
[1] இராமனைக் காட்டிற்கு அனுப்பிவிடாதீரென மறைமுகமாகச் சொல்வது சுமந்திரனின் பேச்சில் இலை மறை காயாகப் புலப்படுகிறது.
சத்தியவாதியும், தர்மாத்மாவும், கம்பீரத்தில் சமுத்திரத்திற்கு ஒப்பானவனும், ஆகாசத்தைப் போலக் களங்கமற்றவனுமான அந்த நரேந்திரன் அவனுக்கு {பின்வருமாறு} மறுமொழி கூறினான்:(9) "சுமந்திரரே, என் தாரங்களை {மனைவியரை} இங்கே அழைத்துவருவீராக. தாரங்கள் அனைவரும் சூழ நான் அந்தத் தார்மீகனை {தர்மவானான ராமனைக்} காண விரும்புகிறேன்" {என்றான்}.(10)
அவன் {சுமந்திரன்} அந்தப்புரத்திற்குள் சென்று அந்த ஸ்திரீகளிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான், "ஆரியைகளே {மதிப்புமிக்கப் பெண்மணிகளே}, தாமதமில்லாமல் அங்கே வரும்படி {தசரத} ராஜர் உங்களை அழைக்கிறார்" என்றான்.(11)
நிருபாஜ்ஞைப்படி {மன்னனின் ஆணைப்படி} சுமந்திரனால் இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த ஸ்திரீகள் அனைவரும், தங்கள் பர்த்தாவின் சாசனத்தை {கணவரின் ஆணையை} அறிந்ததும் அவனது பவனத்திற்கு {வீட்டிற்குச்} சென்றனர்.(12) திடவிரதம் கொண்டவர்களும், தாமிரக் கண்களைக் கொண்டவர்களும், எண்ணிக்கையில் அர்தசப்தசதமான அந்தப் பிரமதைகள் அனைவரும் {அரையேழு நூறான / முன்னூற்றைம்பது பெண்களும்}கௌசலையைச் சூழ்ந்தவாறே மெதுவாகச் சென்றனர்.(13)
தாரங்கள் வந்ததும் தசரத மஹீபதி அந்த சூதனை {சுமந்திரனைப்} பார்த்து {இவ்வாறு} சொன்னான், "சுமந்திரரே, என் சுதனை அழைத்து வருவீராக" {என்றான்}.(14)
அப்போது அந்த சூதன், ராமனையும், லக்ஷ்மணனையும், சீதையையும் அழைத்துக் கொண்டு துரிதமாக அந்த ஜகத்பதியின் {தசரதனின்} முன்னிலையில் வந்தான்.(15) ஸ்திரீ ஜனங்களால் சூழப்பட்டிருந்த அந்த ராஜா, தூரத்தில் தன் புத்திரன் கைக்கூப்பியபடியே வருவதைக் கண்டு வேதனையடைந்து ஆசனத்தில் இருந்து துரிதமாக எழுந்தான்.(16) விஷாம்பதியான அவன் {மக்களின் ஆட்சியாளனான தசரதன்}, ராமனைக் கண்டதும் அவனிடம் வேகமாக ஓடிச் சென்றாலும், அவனை அடைவதற்கு முன்பே துக்கத்தில் பீடிக்கப்பட்டவனாக புவியில் மூர்ச்சித்து விழுந்தான்.(17) மஹாரதர்களான ராமனும், லக்ஷ்மணனும் சோகத்திலும், துக்கத்திலும் உணர்விழந்தவனான {மயங்கி விழுந்தவனான} அந்த நிருபதியை சீக்கிரத்தில் அடைந்தனர்.(18) அந்த ராஜவேஷ்மத்தில் {அரச மாளிகையில்}, ஆபரணங்களின் கிங்கிணி ஒலியுடன் கலந்து திடீரென, "ஆ, ஆ, ராமா" என்ற ஆயிரக்கணக்கான ஸ்திரீகளின் கதறல் எழுந்தது.(19) சீதையுடன் கூடிய இராமலக்ஷ்மணர்கள் இருவரும், அவனைத் தங்கள் கரங்களில் அள்ளியெடுத்து அழுதபடியே மஞ்சத்தில் கிடத்தினர்.(20)
பின்னர் ஒரு முஹூர்த்தத்தில் சுயநினைவை அடைந்தவனும், சோகக் கடலில் மூழ்கியவனுமான அந்த மஹீபதியிடம் கைக்கூப்பியபடியே ராமன் {பின்வருமாறு} பேசினான்:(21) "மஹாராஜா, எங்கள் அனைவருக்கும் ஈச்வரரான {தலைவரான} உமது அனுமதியை நாடுகிறேன். தண்டகாரண்யத்திற்குப் புறப்படும் என்னை குசலத்துடன் {மங்கலமாகக்} காண்பீராக.(22) வனத்திற்கு என்னுடன் வர லக்ஷ்மணனையும், சீதையையும் அனுமதிப்பீராக. உண்மையான காரணங்கள் பலவற்றைச் சொல்லித் தடுத்தாலும் இவர்கள் இருவரும் உடன்படவில்லை.(23) கௌரவத்தை அளிப்பவரே, சோகத்தைக் கைவிட்டு, பிரஜைகளுக்கு {அனுமதி கொடுத்த} பிரஜாபதியை {பிரம்மனைப்} போல, லக்ஷ்மணன், நான், சீதை உள்ளிட்ட எங்கள் அனைவருக்கும் விடைகொடுப்பீராக[2]" {என்றான் ராமன்}.(24)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "எங்களது ஸௌபாக்யத்திற்கெல்லாம் காரண பூதராகுபவரே, ஆதலால் சோகத்தை விட்டுவிட்டு நானாகிய லக்ஷ்மணனாகிய ஸீதையாகிய எங்கள் எல்லோருக்கும், பிரம்மதேவன் பிரஜைகளுக்கு எவ்வண்ணமோ அவ்வண்ணமே உத்தரவு கொடுத்தருள்வீராக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நீர் உலகத்திலுள்ளவர் அனைவருக்கும் ஸம்மானஞ் செய்பவராகையால் சோகத்தை விட்டு லக்ஷ்மணனுக்கும், எனக்கும், ஸீதைக்கும் ஸந்தோஷத்துடன் அனுமதி கொடுப்பீராக. ப்ரஹ்மதேவன் ப்ரஜைகளிடம் அருள்புரிவது போல எங்களிடம் அருள்புரிந்து அனுமதி கொடுத்தனுப்புவீராக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "எங்களெல்லோர்க்குந் தேவரே இறையவரல்லீரோ? ஆதலின் துன்பத்தை விட்டு விட்டு மகிழ்வுகொண்டு, எங்களை யனுப்பி யருளக் கடவீர். எல்லா வுயிர்களும், பிரஹ்மாவின் கட்டளையை எதிர்நோக்கியிருப்பது போல ஸீதாலக்ஷ்மணர்கள் அடியேன் மூவரும் தேவருடைய கட்டளையே எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம்" என்றிருக்கிறது.
வனவாசம் செல்ல ஜகத்பதியின் அனுமதியை எதிர்பார்த்து நிற்கும் ராகவனைக் கண்ட அந்த ராஜா {தசரதன், பின்வருமாறு} பேசினான்:(25) "இராகவா, நான் கைகேயிக்குக் கொடுத்த வரதானத்தால் மோஹமடைந்திருக்கிறேன் {கலக்கம் அடைந்திருக்கிறேன்}. இப்போதே என்னைச் சிறையிலடைத்து நீயே அயோத்தியின் ராஜா ஆவாயாக" {என்றான்}.(26)
அந்த நிருபதி இவ்வாறு சொன்னதும், தர்மத்தை ஆதரிப்பவர்களில் சிறந்தவனும், வாக்கியங்களில் நிபுணனுமான ராமன், கைகளைக் கூப்பியபடியே {இவ்வாறு} தன் பிதாவுக்கு மறுமொழி கூறினான்:(27) "நிருபதியே, நீரே சஹஸ்ரவருஷங்கள் பிருத்வியின் பதியாக {ஆயிரம் ஆண்டுகள் பூமியின் தலைவராக} இருப்பீராக. நானோ அரண்யத்தில் வசித்திருப்பேன். எனக்காக நீர் பொய்யராகலாகாது.(28) நராதிபரே {மனிதர்களின் தலைவரே}, நவபஞ்ச வருஷங்கள் {பதினான்காண்டுகள்} வனவாசம் செய்து, பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட்டு, மீண்டும் உமது பாதங்களை நான் தழுவுவேன்" {என்றான்}.(29)
கைகேயியால் தனிப்பட்ட முறையில் தூண்டப்பட்டவனும், துன்பத்துடன் சத்திய பாசத்தில் {அறக்கயிற்றில்} கட்டுண்டவனுமான அந்த ராஜா, அழுது கொண்டே தன் பிரிய புத்திரனிடம்,(30) "ஐயா, நன்மைக்காகவும், விருத்திக்காகவும் {முன்னேற்றத்திற்காகவும்} சென்று வருவாயாக. பயமில்லாத மங்கலப் பாதையில் தடையேதுமின்றி நீ செல்வாயாக.(31) ஐயா, ரகுநந்தனா, சத்தியாத்மனும், தர்மாபிமானம் கொண்டவனுமான உன் புத்தியை {தீர்மானத்தை} மாற்ற இயலாது.(32)
புத்திரா, எவ்வகையிலும் இன்றைய இந்த இரவு நேரத்தில் நீ போக வேண்டாம். ஒரேயொரு நாள் {உன்னை} பார்த்துக் கொண்டிருந்தாலும் நான் நிறைவடைவேன்.(33) இன்றைய இந்த இரவில் மாதாவையும் என்னையும் பார்த்துக் கொண்டு இங்கேயே வசித்திருப்பாயாக. விரும்பிய அனைத்தும் நிறைவடைந்ததும் {நீ விரும்பிய அனைத்தையும் நாங்கள் கொடுத்து நீ நிறைவடைந்ததும்} நாளை காலையில் நீ புறப்படுவாயாக.(34)
புத்திரா, ராகவா, என் பிரியத்துக்காகப் பிரியமானவற்றைக் கைவிட்டு தனிமையான வனத்திற்குச் செல்வதால் அனைத்து வகையிலும் செய்வதற்கரிய காரியத்தை நீ செய்கிறாய்.(35) புத்திரா, ராகவா, இஃது எனக்குப் பிரியமானதல்ல. சத்தியத்தின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நீறு பூத்த நெருப்புக்கு ஒப்பான ரகசிய எண்ணங்களைக் கொண்ட ஸ்திரீயால் {கைகேயியால்} நான் வஞ்சிக்கப்பட்டேன்.(36) குலமுறையை {சம்பிரதாயங்களைக்} கெடுக்கும் இந்தக் கைகேயியின் தூண்டுதலின் மூலம் வஞ்சிக்கப்பட்ட என்னை நீ மீட்க விரும்புகிறாய்.(37) புத்திரா, என் ஜேஷ்ட சுதனான {மூத்த மகனான} நீ, பிதாவை பொய்யனாக்க வேண்டாமென விரும்புவதில் பேராச்சரியம் ஏதுமில்லை" {என்றான் தசரதன்}.(38)
இராமன், தன் சகோதரனான லக்ஷ்மணன் சகிதனாக, இவ்வாறு வருந்தும் பிதாவின் சொற்களைக் கேட்டு தீனமடைந்து இந்தச் சொற்களைச் சொன்னான்:(39) "எந்தெந்த குணங்களை {இன்பங்களை} இன்று என்னால் அடைய முடியுமோ அவற்றை நாளை எனக்கு எவர் கொடுப்பார்?{40) என்னால் துறக்கப்படுவதும், பல்வேறு ராஷ்டிரங்களாலும் {மாநிலங்களாலும்}, ஜனங்களாலும், தன, தானியங்களாலும் நிறைந்த இந்த வசுதையை {பூமியைப்} பரதனுக்குக் கொடுப்பீராக.(41) இப்போது வனவாசம் செய்யும் என் புத்தியில் {தீர்மானத்தில் இருந்து} விலக முடியாது. பார்த்திபரே, வரங்களை அளிப்பவரே, நிறைவுடன் உம்மால் கைகேயிக்கு தத்தம் செய்யப்பட்ட வரத்தை முழுமையாகக் கொடுப்பீராக.(42,43அ)
நான் உறுதியளித்தவாறே வனத்தில் திரிபவர்களுடன் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு வருடங்கள்} வனவாசம் செய்து உமது ஆணையை நிறைவேற்றுவேன்.(43ஆ,44அ) தயங்காதீர், பரதனுக்கு வசுமதியை {பூமியைக்} கொடுப்பீராக. ரகுநந்தனரே, எனக்கு ராஜ்ஜியத்திலோ, சுகத்திலோ இயல்பாகவே விருப்பமில்லை. உமது ஆணையின்படி செயல்படுவதே எனக்குப் பிரியமானது.(44ஆ,45) இந்த துக்கம் விலகட்டும். கண்ணீர் பெருக்கி வருந்தாதீர். எதிர்க்கப்பட இயலாத சரிதம்பதியான சமுத்திரம் {ஆறுகளின் தலைவனான கடல்} ஒருபோதும் கலங்குவதில்லை.(46) எனக்கு ராஜ்ஜியமோ, சுகமோ, மைதிலியோ வேண்டாம். ஆசைப்படத்தக்க இவை எதையுமோ, ஜீவிதத்தையோ, சொர்க்கத்தையோ {இம்மையையோ, மறுமையையோ} நான் விரும்பவில்லை.(47)
புருஷரிஷபரே {மனிதர்களில் காளையே}, நீர் பொய்யரல்லாத சத்தியவானாக இருப்பதையே நான் விரும்புகிறேன். இதை உம்மெதிரில் சத்தியத்தின் மீதும் புண்ணியத்தின் மீதும் ஆணையாகச் சொல்கிறேன்.(48) ஐயா, என்னால் ஒரு க்ஷணமும் இருக்க இயலாது. பிரபுவே, இந்த சோகத்தை நீர் அடக்குவீராக. என் உறுதியில் மாற்றமேதுமில்லை.(49) இராகவரே, நான் வனம் செல்ல வேண்டுமெனக் கைகேயி என்னைக் கேட்டுக் கொண்டாள். நானும் அந்த சத்தியத்தைக் காத்துச் செல்வேனென்று மறுமொழி கூறினேன்.(50)
தேவா, நீர் வருந்தாதீர். அமைதியான மான்கள் நிறைந்ததும், பல்வேறு வகையான பறவைகளின் ஒலியுடன் கூடியதுமான வனத்தில் நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம்.(51) ஐயா, தேவர்களுக்கும் பிதாவே தெய்வமெனச் சொல்லப்படுகிறது. எனவே, {உம்மை} தெய்வமாகக் கருதி பிதாவின் சொற்படியே நான் செயல்படுவேன்.(52) நரசத்தமரே {மனிதர்களிற்சிறந்தவரே}, சதுர்தச வருஷங்கள் கடந்ததும் திரும்பி வரும் என்னை நீர் காண்பீர். இந்தத் துயரம் நீங்கட்டும்.(53) புருஷசார்தூலரே {மனிதர்களில் புலியே}, கண்ணீரில் நனைந்த இந்த ஜனங்கள் அனைவரையும் நீரே தேற்ற வேண்டும். அத்தகைய நீர் ஏன் கலங்குகிறீர்?(54)
என்னால் கைவிடப்படும் இந்த நகரத்தையும், ராஷ்டிரத்தையும், மொத்த மஹீயையும் {பூமியையும்} பரதனுக்குக் கொடுப்பீராக. உமது ஆணையைப் பின்பற்றும் நான் நெடுங்காலம் வனத்தில் வசித்திருக்கப் புறப்படுகிறேன்.(55) நிருபதியே, சைலங்கள் {மலைகள்}, நகரங்கள், கானகங்கள் பலவற்றைக் கொண்டதும், நன்கு வரையறை செய்யப்பட்டதும், நான் துறப்பதுமான இந்த மஹீயை நீர் சொன்னவாறு பரதனே ஆளட்டும்.(56) பார்த்திபரே, குற்றமற்றவரே, ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்ட உமது ஆணையின்படி என் மனம் எவ்வாறு உறுதியாக இருக்கிறதோ அவ்வாறு மகத்தான ஆசைகளிலும், இன்பங்களிலும் {உறுதியாக} இராது. எனக்காக துக்கத்தைக் கைவிடுவீராக.(57) அனகரே {பாவமற்றவரே}, எனவே இப்போது உம்மைப் பொய்ம்மையுடன் தொடர்புப்படுத்திவிட்டு ராஜ்ஜியத்தையோ, பல்வேறு இன்பங்களையோ, சுகத்தையோ, மைதிலியையோ, ஜீவிதத்தையோ என்னால் விரும்ப முடியாது. இவ்வாறே உமது விரதம் சத்தியமாகட்டும்.(58) விசித்திர விருக்ஷங்களால் {மரங்களால்} நிறைந்த வனத்தில் பிரவேசித்துப் பழங்களையும், கிழங்குகளையும் உண்பேன். வனத்தில் உள்ள மலைகள், ஆறுகள், தடாகங்கள் ஆகியவற்றைக் காண்பேன். நீர் நிறைவடைவீராக" {என்றான் ராமன்}.(59)
அந்த ராஜா, கொடும் நாட்களில் விழப்போகும் தன் புத்திரனை ஆலிங்கம் செய்து {கட்டியணைத்து}, சோகத்திலும், துக்கத்திலும் பரிதபித்து, சுயநினைவில்லா மோஹமடைந்து, சற்றும் அசைவற்றுக் கிடந்தான்.(60) அப்போது அந்த நரதேவபத்னியை {கைகேயியைத்} தவிர அங்கே கூடியிருந்த தேவியர் அனைவரும் அழத் தொடங்கினர். சுமந்திரனும் அழுது கொண்டே மூர்ச்சித்தான். அங்கே இருந்த அனைவரும் {"ஆ, ஆ" என} உரக்கக் கதறினர்.(61)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 034ல் உள்ள சுலோகங்கள் : 61
Previous | | Sanskrit | | English | | Next |