People disturbed | Ayodhya-Kanda-Sarga-033 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் தந்தையின் வசிப்பிடம் சென்ற ராமன்; அவன் நாடு கடத்தப்படுவதால் உண்டான சோகத்தை வெளிப்படுத்திய மக்கள்...
இராகவர்கள் {ராமனும் லக்ஷ்மணனும்} வைதேஹியுடன் சேர்ந்து, பிராமணர்களுக்கு ஏராளமான தனத்தை தத்தம் செய்துவிட்டு, அந்த சீதையுடன் சேர்ந்து பிதாவை {தசரதனைக்} காணச் சென்றனர்.(1) மாலைகள் கட்டி சீதையால் அலங்கரிக்கப்பட்டவையும், காண்பதற்கரியவையுமான பிரகாசமிக்க ஆயுதங்களை அவர்கள் தரித்திருந்தனர்.(2) அப்போது செல்வந்த ஜனங்கள், உயர்ந்த மாளிகைகளில் ஏறி விமானங்களிலும், சிகரங்களிலும் இருந்து உற்சாகமின்றி அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(3) துன்பத்துடன் கூடிய அவர்கள், ஜனக்கூட்டம் நிறைந்திருந்த வீதிகளில் நடப்பதற்கான சக்தி இல்லாத காரணத்தால் உயர்ந்த மாளிகைகளில் ஏறி ராகவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.(4)
அப்போது குடையில்லாத பாதசாரியாக ராமனைக் கண்ட ஜனங்கள், சோகத்தால் இதயம் பீடிக்கப்பட்டவர்களாக {பின்வரும்} பலவித சொற்களைப் பேசிக் கொண்டிருந்தனர்:(5) "எவன் செல்லும்போது சதுரங்க பலம் {யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என்ற நான்கு படைப்பிரிவுகள்} பின்தொடருமோ அத்தகையவன் {ராமன்} தனியாகச் செல்கிறான். சீதையும், லக்ஷ்மணனும் அவனைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.(6) ஐசுவரியத்தின் சுவையை {பிரபுத்துவத்தை} அறிந்திருந்தாலும், விரும்பியவர்களுக்கு விரும்பியதைக் கொடுத்திருந்தாலும், தர்மத்தில் கௌரவங்கொண்ட இவன், பிதாவின் வசனத்தைப் பொய்யாக்க விரும்பாதிருக்கிறான்.(7) பூர்வத்தில், ஆகாசத்தில் திரியும் பூதங்களாலும் {உயிரினங்களாலும் / பறவைகளாலும்} எவளைப் பார்க்க முடியாதோ அந்த சீதையை மார்க்கத்தில் {வீதி வழியில்} செல்லும் ஜனங்கள் இன்று பார்க்கின்றனர்.(8) தகுந்த நறுமணப் பொருட்களைப் பூசிக் கொள்பவளும், செஞ்சந்தனத்தை விரும்புகிறவளுமான இந்த சீதையை, மழை, உஷ்ணம், குளிர் ஆகியவை விரைவாக நிறம் மங்கச் செய்யப் போகின்றன.(9)
இப்போது தசரதன் நிச்சயம் பேயால் பீடிக்கப்பட்டவனைப் போலவே பேசிக் கொண்டிருக்கிறான். ஒரு ராஜா தன் பிரிய புத்திரனை நாடு கடத்துவானா?(10) குணமில்லாத புத்ரனைக் கூட {எவனாலும்} நாடு கடத்த முடியுமா? நடத்தையால் மட்டுமே இந்த உலகத்தை வென்றவனைக் குறித்து சொல்லவும் வேண்டுமோ?(11) அஹிம்சை, கருணை, கல்வி கேள்வி, சீலம் {ஒழுக்கம்}, தமம் {தற்கட்டுப்பாடு}, சமம் {நிலையமைதி / பிழை பொறுத்தல்} ஆகிய சத்குணங்கள் {ஆறு குணங்கள்} புருஷோத்தமனான ராகவனை {மனிதர்களில் உத்தமனான ராமனை} அலங்கரிக்கின்றன.(12) அவனுக்கு ஏற்பட்டிருக்கும் தீங்கைக் காணும் பிரஜைகள், நீர் வற்றும் கோடை கால நீர்வாழ் உயிரினங்களைப் போல அதிகமாகப் பீடிக்கப்பட்டிருக்கின்றனர்.(13)
ஜகத்பதியான இவனுடையப் பீடையைக் காணும் ஜகமனைத்தும், புஷ்பங்களும், பழங்களும் நிறைந்த விருக்ஷம் {மரம்} வேரறுந்தததைப் போல பீடிக்கப்பட்டிருக்கிறது.(14) தர்ம சாரம் கொண்டவனும், மஹாகாந்தியுடையவனுமான இவனே மனுஷர்களின் வேராவான். இதர ஜனங்கள் இவனது புஷ்பங்களும், பழங்களும், கிளைகளும் போன்றவராவர்.(15) நாம், பத்னிகள் {மனைவியர்}, பந்துக்கள் {உறவினர்} ஆகியோருடன் சேர்ந்து, உடன் புறப்பட்டுச் செல்லும் லக்ஷ்மணனைப் போலவே சீக்கிரமாக ராகவனைப் பின்தொடர்வோம்.(16) உத்யானங்கள் {தோட்டங்கள்}, க்ஷேத்திரங்கள் {இடங்கள் / நிலங்கள்}, கிருஹங்கள் {வீடுகள்} ஆகியவற்றைக் கைவிட்டு, {ராமனின்} துக்கசுகங்களைப் பகிர்ந்து தார்மீகனான ராமனைப் பின்தொடர்வோம்.(17)
புதையல்கள் எடுக்கப்பட்டவையும், முற்றம் முறிந்தவையும், தன தானியங்கள் இல்லாதவையும், சிறந்த பொருட்கள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டவையும்,{18} புழுதி படிந்தவையும், தைவதைகளால் {தேவர்களாலும்} கைவிடப்பட்டவையும், அங்கேயும் இங்கேயும் திரியும் மூஷிகங்களால் {எலிகளால்} துளைக்கப்பட்டவையும்,{19} நீர் தெளிக்கப்படாதவையும், {அகில்} தூப மணம் கமழாதவையும், கூட்டிப் பெருக்கப்படாதவையும், பலி கர்மம், யஜ்ஞம், மந்திரம், ஹோமம், ஜபம் ஆகியன இல்லாதவையும்,{20} துஷ்காலத்தில் நிர்மூலமடைந்ததைப் போல நொறுங்கிய பாத்திரங்களைக் கொண்டவையும், நம்மால் கைவிடப்பட்டவையுமான வேஷ்மங்களை {வீடுகளை} அந்தக் கைகேயியே அடையட்டும்{21}.(18-21)
ராகவன் எங்கே செல்கிறானோ அந்த வனமே நகரமாகட்டும். நம்மால் கைவிடப்படும் இந்தப்புரம் {இந்த நகரம்} வனமாகட்டும்.(22) நம்மீது கொண்ட பயத்தால் பீதியடையும் பாம்புகள் அனைத்தும் தங்கள் வளைகளையும், மிருகபக்ஷிகள் தாழ்வரைகளையும், கஜசிம்மங்கள் வனங்களையும் கைவிட்டு, நாம் வசிக்கப்புகும் பகுதியை விட்டு அகன்று நம்மால் கைவிடப்படும் இடங்களை அடையட்டும்.(23,24அ) புத்திரனுடனும், பந்துக்களுடனும் கூடிய கைகேயி, புல், மாமிசம், பழங்கள் ஆகியவற்றை உண்ணும் மிருகபக்ஷிகள் இருக்கும் தேசத்தையே உண்மையில் அடையட்டும்" {என்றனர் அந்த மக்கள்}.(24ஆ,25)
இராமன், நானாவித ஜனங்களால் பேசப்படும் இத்தகைய விதவிதமான சொற்களைக் கேட்டான். அவற்றைக் கேட்டபோதிலும் அவனது மனம் கலங்காதிருந்தது.(26) தர்மாத்மாவான அவன், தூரத்தில் கைலாச சிகரத்தைப் போலப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தன் பிதாவின் வேஷ்மத்தை {தசரதனின் வீட்டை} மத்தமாதங்க {மதங்கொண்ட யானையின்} நடையுடன் அணுகினான்.(27) ஒழுக்கமுள்ள வீர புருஷர்களைக் கொண்ட அந்த நிருபாலயத்தில் {மன்னனின் அரண்மனையில்} அவன் பிரவேசித்ததும், சற்றே தூரத்தில் தீனனாக நின்று கொண்டிருந்த சுமந்திரனைக் கண்டான்.(28)
ஜனங்கள் கலங்குவதைக் கண்டிருந்தாலும், புன்னகைத்தவாறே கலங்காதிருந்த ராமன், விதிக்கப்பட்டபடியே தன் பிதாவின் ஆணையை நிறைவேற்றும் நோக்கில், தன் பிதாவைக் காணச் சென்றான்.(29) ஐக்ஷ்வாகசுதனான {இக்ஷ்வாகுவின் மகனான / குலக்கொழுந்தான} மஹாத்மா ராமன், வனத்திற்குப் புறப்படும் முன்பே கலக்கமடைந்திருக்கும் சுமந்திரனைக் கண்டு, தன் {வரவை} பிதாவுக்கு அறிவிப்பதற்காகக் காத்திருந்தான்.(30) தர்மவத்ஸலனான அந்த ராகவன், தன் பிதாவின் ஆணைப்படி வனப்பிரவேசம் செய்ய புத்தியில் நிச்சயித்துக் கொண்டு, சுமந்திரனைக் கண்டு, "என் வரவை நிருபருக்கு {மன்னர் தரசரதருக்கு} அறிவிப்பீராக" {என்றான் ராமன்}.(31)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 033ல் உள்ள சுலோகங்கள் : 31
Previous | | Sanskrit | | English | | Next |