Gifts in charity | Ayodhya-Kanda-Sarga-032 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சுயஜ்ஞருக்கு மதிப்புமிக்க கொடைகளை அளித்து கௌரவித்த ராமன்; தன் செல்வங்களை பணியாட்களுக்கும், பிராமணர்களுக்கும், திரிஜட முனிவருக்கும் பகிர்ந்தளித்தது; வேதபாரகர்களின் ஆசிகளைப் பெற்றது...
பிறகு, தமையனின் பிரியத்திற்குரியதும், மங்கலமானதுமான சாசனத்திற்குக் கீழ்ப்படிந்தவன் {லக்ஷ்மணன்} விரைந்து சென்று {வசிஷ்ட புத்திரரான} ஸுயஜ்ஞரின் நிவேசனத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(1) இலக்ஷ்மணன், அக்னி ஹோத்ர கிருஹத்தில் இருந்த அந்த விப்ரரை வணங்கிவிட்டு {பின்வருமாறு} பேசினான், "சகாவே {தோழரே}, செய்வதற்கரிய காரியத்தைச் செய்பவரின் வேஷ்மத்திற்கு {ராமரின் வீட்டிற்கு} வந்து நீர் கண்டு கொள்வீராக" {என்றான்}.(2)
அவர் {சுயஜ்ஞர்}, சந்தியா வந்தனம் {சந்திப்பொழுதில் செய்யும் வழிபாட்டைச்} செய்துவிட்டு, சௌமித்ரி சகிதராக உடனே சென்று, லக்ஷ்மியே வசிக்கும் ரம்மியமான ராமநிவேசனத்திற்குள் {ராமனின் வீட்டிற்குள்} பிரவேசித்தார்.(3) சீதை சகிதனான ராமன், கைக்கூப்பியபடியே அக்னியை {வலம் வருவதைப்} போலவே மதிப்புக்குரியவரும், வேதவித்துமான சுயஜ்ஞரை வலம்வந்தான்.(4) அந்தக் காகுத்ஸன் {ராமன்}, முக்கிய அங்கதங்களையும் {தோள்வளைகளையும்}, குண்டலங்களையும் {காதணிகளையும்}, ஹேமசூத்திரங்களில் கோர்க்கப்பட்ட ஜாதரூபமயமான {பொற்சரடில் கோர்க்கப்பட்ட பொன்மயமான} அழகிய மணிகளையும், கேயூரங்களையும், கைவளைகளையும், இன்னும் பல அற்புதமான ரத்தினங்களையும் கொடுத்து சுயஜ்ஞரைப் பூஜித்தான்.
பிறகு சீதையின் தூண்டுதலின் பேரில் ராமன் {பின்வருமாறு} பேசினான்:(5,6) "சகாவே {தோழரே}, சௌம்யரே {மென்மையானவரே}, சீதை இப்போது உமது பாரியைக்கு முத்துஹாரத்தையும், ஹேமசூத்திரத்தையும் {பொற்சரடையும்}, மேகலையையும் கொடுக்க விரும்புகிறாள். பெற்றுக் கொள்வீராக.(7) சகாவே, வனத்திற்குப் போகிறவளான இவள் {சீதை}, சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட அங்கதங்களையும், அழகிய கேயூரங்களையும் உமது பாரியைக்கு கொடுக்கிறாள்.(8) இந்த வைதேஹி, சிறந்த துப்பட்டி விரிக்கப்பட்டதும், நானாவித ரத்தினங்களால் இழைக்கப்பட்டதுமான அந்த மஞ்சத்தையும் உமக்குக் கொடுக்க விரும்புகிறாள்.(9) துவிஜ புங்கவரே {இருபிறப்பாளர்களில் சிறந்தவரே}, என் மாதுலரால் {தாய்மாமனால்} எனக்கு தத்தம் செய்யப்பட்டதும், சத்ருஞ்ஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான இந்த நாகத்தையும் {யானையையும்}, இன்னும் ஆயிரம் கஜங்களையும் {யானைகளையும்} நான் உமக்கு தத்தம் செய்கிறேன்" {என்றான் ராமன்}.(10)
இராமன் இவ்வாறு சொன்னதும், அதை ஏற்றுக் கொண்டு, ராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோருக்கு அந்த சுயஜ்ஞர் சுபமான ஆசீர்வாதங்களைச் செய்தார்.(11) பிறகு பிரியவாதியான {அன்புடன் பேசுபவனான} ராமன், தேவேந்திரனிடம் பேசும் பிரம்மனைப் போலத் தன் பிரியத்திற்குரிய தம்பி சௌமித்ரியிடம் {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணனிடம்} மெல்லமாக இதைச் சொன்னான்:(12) "சௌமித்ரியே, பயிருக்கு {பாய்ச்சப்படும்} நீரைப் போல பிராமணோத்தமர்களான அகஸ்தியர், கௌசிகர் {விஷ்வாமித்ரர்} ஆகிய இருவருக்கும் மதிப்புமிக்க ரத்தினங்களைக் கொடுத்து அர்ச்சிப்பாயாக {வழிபடுவாயாக}.(13) கௌரவத்தை அளிப்பவனே, மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்டவனே}, ஆயிரக்கணக்கான பசுக்கள், சுவர்ணங்கள், வெள்ளி, மஹாதனங்களான மணிகள் ஆகியவற்றையுங் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்வாயாக.(14) சௌமித்ரியே, தைத்திரீய சாகை ஓதுபவர்களுக்கு[1] ஐயம் தெளிவிக்கும் ஆசார்யரும், வேதவித்துமான ஒருவர், கௌசல்யைக்கு பக்தியுடன் தொண்டாற்றி வருகிறார். அந்த துவிஜர் {இருபிறப்பாளர்} நிறைவடையும் வகையில், யானங்களையும் {பல்லக்குகளையும்,} தாசிகளையும் {பணிப்பெண்களையும்}, வெண்பட்டு வஸ்திரங்களையும் அவருக்கு நீ கொடுப்பாயாக.(15,16)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "முதலில் இந்த தைத்திரீயத்தை யாஜ்ஞவல்கியர் உள்ளிட்ட தமது இருபத்தேழு சீடர்களுக்குக் கற்பித்தவர் வைசம்பாயனராவார். பிற்காலத்தில் யாஜ்ஞவல்கியர் மீது கோபமடைந்த வைசம்பாயனர், தெளிவான வடிவில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த வேதத்தைக் கக்க {துறக்கச்} செய்தார். வைசம்பாயனர் தமது மூத்த சீடர்களிடம் அதை எடுத்துக் கொள்ள ஆணையிட்ட போது, அவர்கள் கௌதாரிகளின் {தித்திரிகளின்} வடிவை ஏற்று, {உமிழப்பட்டிருந்த} அந்த அழுக்கடைந்த உரைகளை விழுங்கினார்கள். எனவே அது கரியது எனவும், கிருஷ்ண யஜுர்வேதம் என்றும் அழைக்கப்பட்டது. தைத்திரீயம் என்பது கௌதாரிகளுக்கான {தித்திரி என்ற} பெயரை குறிக்கும். பிறகு யாஜ்ஞவல்கியர் சூரியனிடம் இருந்து யஜுர் வேதத்தின் {சுக்ல யஜுர் வேதம் என்றழைக்கப்பட்ட} புதிய அல்லது வெண்மையான பதிப்பை அடைந்தார்" என்றிருக்கிறது. வைசம்பாயனர், வியாசரின் சீடராவார். வியாசர் துவாபர யுகத்தில் வாழ்ந்த சத்தியவதியின் மகனாவார். இராமாயணம் நடப்பது திரேதா யுகத்தில். இந்த அடிக்குறிப்பு குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. ஒன்று தைத்திரீயம் வைசம்பாயனர் மூலம் முதலில் வெளிப்பட்டதாக இருக்காது, அல்லது இந்த சர்க்கம் ராமாயணத்தில் புகுத்தப்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சர்க்கத்தின் இறுதியில் 29ம் சுலோகம் முதல் 42ம் சுலோகம் வரையுள்ள கதையில் ராமன் திரிஜடரைப் பரிகசிப்பது, மரியாதா புருஷோத்தமனான அவனுக்குரிய இயல்பாகத் தெரியவில்லை. எனவே இந்த சர்க்கம் இடைச்செருகலாகவும் இருக்கலாம்.
ஆரியரின் தோழரும் {தசரதரின் நண்பரும்}, நீண்ட காலமாக இங்கே இருப்பவரும், சூதருமான சித்ரரதருக்கு ரத்தினங்களையும், விலைமதிப்புமிக்க வஸ்திரங்களையும், தனங்களையும், {ஆடு முதலிய} சிறு விலங்குகள் அனைத்தையும், ஆயிரம் பசுக்களையும் கொடுத்து நிறைவடையச் செய்வாயாக.(17) கடகலாபங்களைச் சேர்ந்தவர்களும் {யஜுர் வேதத்தின் கடசாகைகளையும், கலாப சாகைகளையும் ஓதுபவர்களும்}, நித்தியம் சாத்திரங்களைக் கற்பவர்களும், தண்டம் தரித்தவர்களுமான மாணவர்கள் பலர் இருக்கின்றனர். சௌமித்ரியே, வேறு எதையும் செய்யாதவர்களும், இன்பண்டங்களை விரும்புபவர்களும், உன்னதர்களாலும் உயர்வாக மதிக்கப்படுபவர்களுமான அவர்களுக்கு, ரத்னப்பூர்ணமான {ரத்தினங்கள் நிறைந்த} எண்பது வண்டிகளையும், நெல் மூட்டைகள் சுமத்தப்பட்ட ஆயிரம் எருதுகளையும், இருநூறு பொதிமாடுகளையும், ஊட்டத்திற்காக {பால், தயிர், நெய் முதலியவற்றைக் கொடுக்கும்} ஆயிரம் பசுக்களையும் கொடுப்பாயாக.(18-20) சௌமித்ரியே, அரைஞாண் கட்டியவர்களின் {பிரம்மசாரிகளின்} பெருங்கூட்டம் கௌசலையை அண்டியிருக்கிறது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்கள் கொடுக்கப்பட வேண்டும்.(21) இலக்ஷ்மணா, என் அம்ப {அம்மா} கௌசல்யை மகிழ்ச்சியடையும் வகையில் அந்த துவிஜர்கள் {இருபிறப்பாளர்கள்} அனைவரையும் என் தக்ஷிணையால் அர்ச்சிப்பாயாக {பூஜிப்பாயாக}" {என்றான் ராமன்}.(22)
அப்போது புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} லக்ஷ்மணன், தனதனை {குபேரனைப்} போல அந்த தனத்தை சொன்னபடியே பிராமணேந்திரர்களுக்கு நேரடியாகக் கொடுத்தான்.(23) கண்ணீரால் தடைபட்டக் குரலுடன் நிற்பவர்களும் உபஜீவினம் செய்பவர்களுமான ஒவ்வொருவருக்கும் {பணியாட்கள் ஒவ்வொருவருக்கும்} ஏராளமான திரவியத்தைக் கொடுத்த பிறகு {மீண்டும் ராமன் இவ்வாறு} பேசினான்:(24) "நான் திரும்பிவரும் வரையில் லக்ஷ்மணனின் வீட்டையும், என்னுடைய இந்த கிருஹத்தையும் சூன்யமாகிவிடாமல் {வெறுமையாகப் பாழடைந்துவிடாமல்} நீங்கள் ஒவ்வொருவரும் பார்த்துக் கொள்ள வேண்டும்" {என்றான் ராமன்}.(25)
துக்கத்துடன் இருப்பவர்களும், உபஜீவினம் செய்பவர்களுமான அந்த ஜனங்கள் அனைவரிடமும் இவ்வாறு சொல்லிவிட்டு, "தனம் கொண்டுவரப்படட்டும்" என்று தனாதிகாரியிடம் சொன்னான்.(26) அதன்பிறகு உபஜீவினம் செய்வோர் அவனது தனமனைத்தையும் கொண்டு வந்தனர். மிகப் பெரிதான அந்த செல்வக்குவியல் அங்கே பார்ப்பதற்கு மிக அழகாகத் தெரிந்தது.(27) பிறகு, புருஷவியாகரனான அவன் {மனிதர்களில் புலியான ராமன்}, லக்ஷ்மணனுடன் சேர்ந்து கிருபைக்குத் தகுந்த துவிஜர்களுக்கும், பாலர்களுக்கும், விருத்தர்களுக்கும் அதை {இருபிறப்பாளர்கள், சிறுவர்கள், வயோதிகர்கள் ஆகியோருக்கும் அந்த செல்வக்குவியலைக்} கொடுத்தான்.(28)
அப்போது அங்கே கார்க்கேயரும் {கர்க்க குலத்தில் பிறந்தவரும்}, பிங்கள {செம்பழுப்பு} வண்ணம் கொண்டவரும், கோடரி, மண்வெட்டி, கலப்பை ஆகியவற்றைக் கொண்டு வனத்தில் எப்போதும் பூமியைக் கொத்திப் பிழைப்பவருமான திரிஜடர் என்ற பெயரைக் கொண்ட ஒரு துவிஜர் இருந்தார்.(29) தரித்திரத்தால் பீடிக்கப்பட்ட அவரது இளம் பாரியை, பாலர்களான தன் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, விருத்தரான அந்த பிராமணரிடம் {இவ்வாறு} பேசினாள்:(30) "உமது கோடரியையும், மண்வெட்டியையும் வீசியெறிவீராக. நான் சொல்வதைச் செய்வீராக. தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} ராமனை தரிசித்து, ஏதும் கிட்டுமாவென பார்ப்பீராக" {என்றாள்}.(31)
அவர் தன் பாரியையின் வசனத்தைக் கேட்டு, கந்தலான மேலாடையை அணிந்து கொண்டு ராமநிவேசனம் {ராமனின் வீடு} இருக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்.(32) காந்தியில் பிருகுவுக்கும், அங்கிரசுக்கும் சமமான அந்த திரிஜடரை, ஐந்தாவது கட்டு {வாயில்} வரை ஜனசமூகத்தில் ஒருவராலும் தடுக்க முடியவில்லை[2].(33) அந்த திரிஜடர் ராஜபுத்திரனை {இளவரசனான ராமனை} அணுகி {இந்த} வாக்கியத்தைச் சொன்னார், "புகழ்மிக்க ராஜபுத்திரா, தனமற்றவனும், பல புத்திரர்களைக் கொண்டவனுமான நான் நித்யம் வனத்தில் பூமியைக் கொத்திப் பிழைத்து வருகிறேன். இவ்வாறு இருக்கும் என்னை கவனிப்பாயாக" {என்றார்}.(34)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அரசர்களைச் சந்திக்கச் செல்லும்போது வாயில்காவலர்களுடன் கூடிய அடுத்தடுத்த வாயில்களை ஒருவர் கடந்து செல்ல வேண்டும். பொதுவாக மூன்றாவது வாயிலே பிரத்யேகமான பெரும்பாதுகாப்புடன் இருக்கும். இங்கே குறிப்பிடப்படுவது அந்த மூன்றாவது வாயிலைவிட மிகப் பிரத்யேகமானது" என்றிருக்கிறது.
அப்போது ராமன் அவரிடம் பரிகாசமாக மறுமொழி கூறும் வகையில், "இன்னும் நான் ஓராயிரம் பசுக்கள்கூடக் கொடுக்கவில்லை[3]. உமது தண்டத்தை எவ்வளவு தூரம் வீசுவீரோ அவ்வளவை {அவ்வளவு பசுக்களை} நீர் அடைவீர்" {என்றான்}.(35)
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அடியேனால், பசுக்களின் அநேகம் தானம் கொடுக்கப்பட்டது. அப்படியிருந்தும், இதுவரைக்கும் ஒன்றுகூட பெறாத தேவரீர் கையிலிருக்கும் கோல் கொண்டு எவ்வளவு தூரம் வீசியெறிவீரோ அதுவரையிலுமுள்ள எல்லாவற்றையும் ஸ்வீகரிப்பீராக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பசுக்கள் பல ஆயிரங்கள் இருக்கின்றன; அவைகளில் உமக்கு நான் ஓராயிரம் பசுக்களையாவது கொடுக்கவில்லை; ஆகையால் இந்தப் பசுமந்தையில் நீர் தடியை வீசிப் போடுவீராயின், அந்தத் தடி எவ்வளவு தூரம் போகுமோ, அவ்வளவு தூரத்தில் அடங்கிய பசுக்களை முழுவதும் நீர் பெறுவீர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சக்கரவர்த்தித் திருமகனார் அதுகேட்டாராய்ந்து, வெளியிலுள்ள அநேகமாயிரம் பசுக்களில், ஓராயிரமும், ஒருவருக்கும் அளிக்கவில்லை, அதைக் கொடுக்கலாமென்று மனத்தில் உத்தேசித்து, இவர் மூப்பினராயினும், மிகவுந்தேஹபலமுள்ளவராகத் தோற்றுகின்றதென்று, அவர் திருமேனியைக் கண்டறிந்து, ஆகிலும் அதைக் கடாக்ஷிக்க வேண்டுமென்று குதூஹலத்தால், அம்மஹாத்துமாவை நோக்கி ஸ்வாமி அடியேன் குதூஹலத்தால் ஒரு விண்ணப்பஞ் செய்கின்றேன்; சீற்றங்கொள்ளற்கவென்று அவரிடத்தில் நியமனம் பெற்றுக் கொண்டு, மஹாயோகியே நீர் இந்த கோலைச் சுழற்றிக் கோட்டைக்கு வெளியிலுள்ள என் பசுக்கூட்டத்தை நோக்கி எறிந்தருளக்கடவீர்" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப்பதிப்பில், "இன்னும் என்னிடம் எவருக்கும் கொடுக்கப்படாத பல்லாயிரம் பசுக்கள் இருக்கின்றன. இவ்விடத்தில் இருந்து உமது கைத்தடியை வீசியெறிவீராக. உமக்கும் அந்தக் கைத்தடி விழுந்த இடத்திற்கும் இடையில் உள்ள பசுக்கள் அத்தனையையும் நான் உமக்கு அளிக்கிறேன்" என்றிருக்கிறது. ஒப்பிடப்படும் அத்தனை பதிப்புகளையும் இங்கே பட்டியலிட்டால் அசல் சர்க்கத்தைவிட நீளம் அதிகமாகும் என்ற அச்சத்தால் அதிக வேறுபாடு தென்படும் பதிப்புகளின் செய்தி மட்டுமே இங்கே குறிப்பிடப்படுகின்றன.
பரபரப்படைந்த அவர், துரிதமாகக் கச்சையை இடையில் சுற்றிக் கட்டிக்கொண்டு, பலம் முழுவதையும் பயன்படுத்தி தண்டத்தை வேகமாகச் சுழற்றி வீசியெறிந்தார்.(36) அவரது கரத்தில் இருந்து பறந்து சென்ற அந்த தண்டம், சரயுவின் கரையைத் தாண்டி பல்லாயிரக்கணக்கில் இருந்த பசுமந்தையில் ஒரு காளையின் அருகில் விழுந்தது.(37) அவரைத் தழுவிக் கொண்ட அந்த தர்மாத்மா {ராமன்}, சரயுவரை இருந்தவற்றை {பசுக்களை} கோபாலர்களின் மூலம் திரிஜடரின் ஆசிரமத்தில் சேர்ப்பித்தான்.(38)
பிறகு ராமன் தணிக்கும் வகையில் அந்த கார்க்கேயரிடம் {கர்க்கரின் மகனான திரிஜடரிடம், பின்வருமாறு} பேசினான்: "என் பரிகசிப்பைக் கண்டு கோபமடைவது உமக்குத் தகாது.(39) அறிவதற்கரிய உம்முடைய இந்த தேஜஸை {பலத்தை} நான் அறிய விரும்பினேன். இந்த காரியத்திற்காகவே நீர் பரிசோதிக்கப்பட்டீர். நீர் வேறெதையும் விரும்பினால் அதையும் கேட்பீராக.(40) நான் சத்தியத்தையே சொல்கிறேன். நீர் கேட்பதற்கு அளவேதும் இல்லை. எனக்குரிய தனங்கள் அனைத்தும் உண்மையில் விப்ரர்களின் காரணத்திற்காகவே இருக்கிறது. என்னால் ஈட்டப்பட்டவற்றை உமக்கு ஏராளமாகக் கொடுத்தால் அவை எனக்கு மகிழ்ச்சியையும், புகழையும் தரும்" {என்றான் ராமன்}.(41)
மஹாமுனியான அந்த திரிஜடர், தன் பாரியையுடன் சேர்ந்து அந்த பசுமந்தையை ஏற்று மகிழ்ச்சியடைந்த பிறகு, புகழ், பலம், சுகம், மகிழ்ச்சி ஆகியவற்றை அடையுமாறு அந்த மஹாத்மாவை {ராமனை} ஆசீர்வதித்தார்.(42) அந்த ராமனும், மதிப்புக்குரிய அந்த சொற்களைக் கேட்டு மனம்நிறைந்த உடனேயே தர்மபலத்தால் ஈட்டப்பட்ட மஹாதனத்தை {பெருஞ்செல்வத்தை} நட்பு ஜனங்களுக்கு {நண்பர்களுக்குப்} பகிர்ந்தளித்தான்.(43) அந்நேரத்தில், தகுந்த மதிப்பு, கொடை, கௌரவம் ஆகியவற்றால் நிறைவடையாத பிராமணரோ, உறவினரோ, பணியாளோ, தரித்திரரோ, பிக்ஷுவோ ஒருவரும் அங்கே {அயோத்தியில்} இல்லை.(44)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 032ல் உள்ள சுலோகங்கள் : 44
Previous | | Sanskrit | | English | | Next |