He wasn't able to abandon her | Ayodhya-Kanda-Sarga-030 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சீதையைத் தன்னுடன் காட்டிற்கு அழைத்துச் செல்ல சம்மதித்த ராமன்; புறப்படுவதற்கு முன் உடைமைகளை தானமளிக்கக் கேட்டுக் கொண்டது...
ஜனகனின் மகளான மைதிலி, வனவாச நிமித்தம் ராமனால் தணிக்கப்பட்ட போது, தன் பர்த்தாவிடம் {கணவனிடம்} இதைச் சொன்னாள்.(1) பற்றினாலும், அபிமானத்தினாலும் பெருங்கலக்கமடைந்த சீதை, விசால மார்புடைய ராகவனை {இவ்வாறு} நிந்தித்தாள்.(2) "இராமரே, விதேஹத்தின் மிதிலாதிபரான என் பிதா {ஜனகர்}, புருஷனின் வடிவில் ஸ்திரீயாக இருக்கும் உம்மை மருமகனாக அடைந்தது குறித்து என்ன நினைப்பார்?(3) சுடர்மிகும் திவாகரனின் {சூரியனின்} பரம தேஜஸ் ராமனிடம் இல்லை என அஞ்ஞானத்தினால் இந்த உலகம் பொய்யுரைத்தால் பரிதாபமில்லையா?(4) நீர் எதற்காக விசனப்படுகிறீர் {துன்புறுகிறீர்}? வேறு வழியே இல்லாத என்னைக் கைவிட விரும்பும் அளவுக்கு உமக்கு பயம் எங்கிருந்து வந்தது?(5)
வீரரே, தியுமத்சேனரின் மகனான சத்யவந்தனை {சத்யவானை} அனுசரிக்கும் விரதம் கொண்ட சாவித்ரியைப் போல, உம்மை அனுசரித்திருப்பவளாக என்னை அறிவீராக.(6) இராகவரே, குற்றமற்றவரே, குலத்தைக் கெடுக்கும் அந்நிய பெண் {காண்பதைப்} போல மனத்தாலும் உம்மைத் தவிர அந்நியரை {வேறு எவரையும்} நான் காணமாட்டேன். உம்முடன் நானும் வருவேன்.(7) இராமரே, சதியாகவும் {கற்புடைய பெண்ணாகவும்}, பாரியையாகவும் {மனைவியாகவும்} நீண்ட காலம் வாழ்ந்த கௌமாரி {இளம்பெண்} நான். ஒரு கூத்தாடியைப் போல நீராகவே என்னைப் பிறருக்கு தத்தம் செய்ய விரும்புகிறீர்.(8)
இராமரே, பாவமற்றவரே, எவருக்காக என்னைத் தொண்டு செய்ய சொல்கிறீரோ, எவரின் நன்மைக்காக நீர் பேசுகிறீரோ அவருக்கு எப்போதும் கடமையுணர்வுடன் கீழ்ப்படிந்தவராக நீர் இருப்பீராக.(9) அத்தகையவரான நீர் என்னை அழைக்காமல் வனத்திற்குச் செல்வது முறையாகாது. எனக்கு தபமோ, அரண்யமோ, சுவர்க்கமோ உம்முடன் மட்டுமே நேரும்.(10) எந்தப் பாதையில் சென்றாலும், உம்மைப் பின்தொடர்ந்து வரும் எனக்கு, சயனிக்கும் இடத்தில் இருப்பதைப் போல எந்த சிரமமும் ஏற்படாது.(11) மார்க்கத்தில் {பாதையில்} உள்ள தர்ப்பை, நாணல், முட்புதர்களும், முள் மரங்களும் உம்முடன் இருக்கும்போது பஞ்சுக்குவியலைப் போலவோ, மென்மையான மான்தோலைப் போலவோ என்னைத் தீண்டும்.(12)
இரமணரே {அன்புக்குரியவரே}, பெருங்காற்றால் மேலெழுந்து என்னை மறைக்கும் புழுதியை மேலான சந்தனப் பூச்சாகவே நான் கருதுவேன்.(13) வனத்தில் திரிகையில் வனத்தின் மத்தியில் உள்ள பச்சைப் புல்லில் கிடப்பதைவிட சித்திரக் கம்பளங்களும், துப்பட்டிகளும் விரிக்கப்பட்ட மஞ்சங்கள் அதிக சுகத்தைத் தருமா?(14) இலைகள், கிழங்குகள், பழங்கள் ஆகியவற்றை சிறிதளவோ, ஏராளமாகவோ நீர் கொண்டு தந்தால் அஃது எனக்கு அமுதத்திற்கு ஒப்பானதாக இருக்கும்.(15) பல்வேறு பருவகாலங்களுக்குரிய புஷ்பங்களிலும், பழங்களிலும் இன்புற்றிருக்கும்போது, மாதாவையோ, பிதாவையோ, வீட்டையோ நான் நினைக்க மாட்டேன் {நினைத்துத் துன்புற மாட்டேன்}.(16) அங்கே பிரியமற்ற எதையும் நீர் காண மாட்டீர். என்னால் உமக்கு சோகமேதும் உண்டாகாது. நான் உமக்கு பாரமாக இருக்க மாட்டேன்.(17)
உம்முடன் இருக்கும் இடமே எனக்கு சுவர்க்கம், நீரில்லாவிட்டால் அது நரகமாகிவிடும். இராமரே, இதை அறிந்து கொண்டு என்னிடம் பரமபிரீதியை அடைவீராக.(18) மாறாக, வனத்தில் அச்சங்கொள்ளாத என்னை, உம்முடன் அழைத்துச் செல்லாவிட்டால் இப்போதே விஷத்தைப் பருகுவேன். பகைவருக்கு அடிபணிய மாட்டேன்.(19) நாதரே, நீர் என்னைக் கைவிட்ட பிறகு துக்கத்துடன் கூடிய எனக்கு ஜீவிதம் இராது. அதைவிட {நீர் கைவிட்டுச் சென்ற பின் துக்கத்துடன் இறப்பதைவிட} நீர் துறக்கும்போதே {இப்போதே} மரணிப்பது சிறந்தது.(20) இந்த சோகத்தை ஒரு முஹூர்த்தமும் சகிக்க மாட்டேன் எனும்போது, தச த்ரீணி ஏக வருஷங்கள் {பத்தும், மூன்றும், ஒன்றுமான பதினான்கு ஆண்டுகள்} ஏன் துக்கிக்க வேண்டும்?" {என்றாள் சீதை}.(21)
ஆயாசத்துடன் {அலுப்புடன்} மிகப் பரிதாபமாகப் புலம்பி, சோகத்தில் எரிந்த அவள் {சீதை}, தன் பதியை {கணவனான ராமனை} ஆலிங்கணம் செய்தபடியே உரக்க அழுதாள்.(22) நச்சுக்கணைகளால் துளைக்கப்பட்ட பெண் யானையைப் போல, பல வாக்கியங்களால் துளைக்கப்பட்ட அவள், அரணிக் கட்டையில் அக்னியைப் போல வெகு நேரம் அடக்கிவைக்கப்பட்ட கண்ணீரை உதிர்த்தாள்.(23) பங்கஜங்கள் {தாமரைகள்} இரண்டில் {இருந்து கசியும்} நீரைப் போல மனத்துன்பத்தை அடைந்த அவளது கண்களில் இருந்து ஸ்படிகம் போன்ற நீர் கசிந்தது.(24) நீள்விழிகளைக் கொண்டதும், சந்திரனைப் போல ஒளிர்வதுமான அவளது முகமும் கூட, ஜலத்தில் கொய்யப்பட்ட அம்புஜத்தை {தாமரையைப்} போல வாடிவதங்கியது.(25)
அப்போது ராமன், துக்கத்தில் மயங்கிய அவளைத் தன் கைகளால் அணைத்துக் கொண்டு முழுமையாக உறுதியளிக்கும் வசனத்தைச் சொன்னான்:(26) "தேவி, உனக்கு துக்கமென்றால் சுவர்க்கத்தையும் நான் விரும்பமாட்டேன். சுயம்புவை {பிரம்மனின் தேவனான விஷ்ணுவைப்} போலவே, எனக்கு பயம் ஏதும் கிடையாது.(27) மங்கல முகம் கொண்டவளே, ரக்ஷிக்கும் சக்தி கொண்டவனாக இருந்தாலும், உன் சர்வ அபிப்ராயத்தையும் {முழு எண்ணத்தையும்} அறியாததால், அரண்ய வாசத்தை நான் விரும்பவில்லை.(28) மைதிலி, என்னுடன் வனவாசம் செய்ய நீ சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். ஆத்மவானால் {கைவிடப்பட முடியாத} கீர்த்தியைப் போல என்னால் உன்னைக் கைவிட முடியாது[1].(29)
[1] அண்ணல் அன்ன சொல் கேட்டனன் அன்றியும்உள் நிவந்த கருத்தும் உணர்ந்தனன்கண்ணின் நீர்க் கடல் கைவிட நேர்கிலன்எண்ணுகின்றனன் என் செயற்பாற்று எனா- கம்பராமாயணம் 1828ம் பாடல்பொருள்: அண்ணல் அவள் சொன்னவற்றைக் கேட்ட பிறகு அவளது மனத்தில் எழும் கருத்தையும் உணர்ந்தனன். கண்ணின் நீரைக் கடலில் கைவிட முடியாமல் {தன் கண்ணில் உள்ள நீரைப் போன்ற சீதையை அயோத்தி எனும் கடலில் கைவிட முடியாமல்}, இனி என் செயலாவது ஏது என்று எண்ணுகின்றனன்.
கஜத்தின் துதிக்கையைப் போன்ற தொடைகளைக் கொண்டவளே, பூர்வத்தில் நல்லோரால் தர்மம் ஆசரிக்கப்பட்டது {மனைவியை வானப்ரஸ்தம் அழைத்துச் செல்லும் தர்மம் பயிலப்பட்டது}. இப்போது சூரியனை {பின்தொடரும், சூரியனின் மனைவியான} சுவர்ச்சலையைப் போல நான் அவர்களையே {நல்லோரை} அனுசரிப்பேன்[2].(30) ஜனகநந்தினி {ஜனகனின் மகளான சீதையே}, வனம் செல்வதிலிருந்து நான் விலக முடியாது. சத்தியத்தில் உறுதியான பிதாவின் சொல்லே என்னை அழைத்துச் செல்கிறது.(31) அழகிய பெண்ணே, பிதாவுக்கும், மாதாவுக்கும் கீழ்ப்படிந்து நடப்பதே தர்மமாகும். எனவே அதை {அந்த தர்மத்தை} மீறி ஜீவிப்பதில் எனக்கு உற்சாகமில்லை.(32)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "யானைத்துதிக்கைகளை ஒத்த துடைகளையுடையாய்! சூர்யபகவானின் மனையாட்டியாகிய சுவர்ச்சலாதேவி, சூர்யபகவானின் பக்கலில் இருத்தலாகிறது, பூர்வத்திய பெரியோர்களால் இது போன்றதாகிய வானப்ரஸ்தாசிரமமானது அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. நான் அதையே இப்பொழுது ஏற்றுக் கொள்ளுகிறேன்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "யானையின் துதிக்கை போன்ற துடைகளுடையவளே! வானப்ரஸ்த தர்மத்தை முன்பு ராஜரிஷிகள் பத்னிகளோடு கூடியே ஆதரித்தனர். ஆகையால் நானும் பூர்வர்களது தர்மத்தையே அனுஸரித்து உன்னை வனத்திற்கு அழைத்துக் கொண்டு போகின்றனன். ஸுவர்ச்சலை ஸூர்யனைப் பின்செல்வது போல, நீயும் என்னைப் பின்றொடர்ந்து வருவாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "பத்தினியுடன் வனஞ்செல்வது இன்பமடியாக வந்ததுமன்று, முன்னோர்களாகிய ராஜரிஷிகளும் வானப்பிரஸ்தாச்சிரமத்துக்குரியதென்று தாம் அநுஷ்டித்திருக்கின்றமையால், தருமமடியாக வந்ததே ஆதலின், சுவர்ச்சலாதேவி சூரியனைப் பிரியாது உடன் செல்வது போல என்னையும் நீ தொடர்ந்து வரக்கடவை" என்றிருக்கிறது.
நமக்குரிய மாதா, பிதா, குரு ஆகியோரைப் புறக்கணித்து விட்டு, நமக்கு உரிமையற்ற தைவத்தை எவ்வாறு பல்வேறு முறைகளில் வழிபட முடியும்?(33) அழகிய கண்களைக் கொண்டவளே, இந்த மூவரே மூவுலகம். அவர்களுக்கு இணையாக இவ்வுலகில் எவருமில்லை. எனவே, இவர்கள் வழிபடத்தகுந்தவர்கள்.(34) சீதா, பிதாவுக்கான சேவை எவ்வாறு கருதப்படுகிறதோ அவ்வாறு பலமானதாக சத்தியமும், தக்ஷிணைகளுடன் கூடிய யஜ்ஞமும் கூடக் கருதப்படுவதில்லை.(35)
குருவின் {பெரியோரின்} விருப்பத்திற்கு இணங்குவதன் மூலம் சுவர்க்கத்தையும், தனத்தையும், தானியத்தையும், வித்யையும், சுகங்களையும் அடையலாம் எனும்போது எதுவும் துர்லபமில்லை {எதையும் அடைவது கடினமல்ல}.(36) மாதாவிடமும், பிதாவிடமும் முழு அர்ப்பணிப்பு கொண்ட மஹாத்மாக்கள், தேவ, கந்தர்வ, கோலோகங்களையும்[3], பிரம்மலோகத்தையும், பிறலோகங்களையும் அடைகிறார்கள்.(37) என் பிதா எனக்கு எவ்வாறு ஆணையிட்டாரோ, அவ்வாறே அதற்குக் கீழ்ப்படிந்து சத்திய தர்ம பாதையில் செல்ல விரும்புகிறேன். அதுவே சநாதன தர்மமாகும்.(38)
சீதா, உன்னை தண்டக வனம் அழைத்துச் செல்ல என் மனம் வருந்தியது. நீயோ வனத்திற்கு என்னைப் பின்தொடர்ந்து வருவேனெனத் தீர்மானமாகச் சொல்கிறாய்.(39) மதிமயங்கச் செய்யும் கண்களையும், குற்றமற்ற அங்கங்களையும் கொண்டவளே, மருட்சியுடையவளே, என்னைத் தொடர்ந்து வனத்திற்கு வர அனுமதிக்கப்பட்ட நீ சகதர்மசாரியாவாயாக.(40) சீதா, காந்தையே {ஈர்ப்பவளே}, என் குலத்திற்கும், உன் குலத்திற்கும் அனைத்து வகையிலும் தகுந்த அதிமங்கலமான தீர்மானத்தையே நீ எடுத்திருக்கிறாய்.(41)
நல்லிடை கொண்டவளே, வனவாசத்திற்குரிய கடமைகளை இப்போதே தொடங்குவாயாக. சீதா, நீ இல்லாத சுவர்க்கத்தையும் நான் விரும்பமாட்டேன்.(42) பிராமணர்களுக்கு ரத்தினங்களையும், பிக்ஷுக்களுக்கு {பிச்சை கேட்பவர்களுக்கு} போஜனத்தையும் விரைவாக அளிப்பாயாக. தாமதம் செய்யாதே.(43) விலையுயர்ந்த அணிகலன்களையும், சிறந்த வஸ்திரங்களையும், சந்தோஷத்தை விளைவிக்கும் விளையாட்டுக்குரிய உபகரணங்களையும், என்னுடைய மஞ்சங்களையும், வாகனங்களையும், பிராமணர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சிய பிற பொருட்களையும் பணிவிடை செய்யும் பல்வேறு வகையினருக்கும் கொடுப்பாயாக" {என்றான் ராமன்}.(44,45)
அந்த தேவி {சீதை}, தானும் செல்வதில் தன் பர்த்தா {கணவன்} அனுகூலமாக இருப்பதை அறிந்து ஊக்கமடைந்து சீக்கிரமாக தத்தம் செய்ய ஆயத்தமானாள்.(46) சிறப்புமிக்கவளும், தூய மனம் கொண்டவளுமான அந்த அங்கனை {பெண்}, பர்த்தாவின் பாஷிதத்தை {பேச்சைக்} கேட்டு மகிழ்ச்சியடைந்து, பிரதிபூர்ணமனத்துடன் தனங்களையும், ரத்தினங்களையும் தர்மவான்களுக்கு தத்தம் செய்யத் தொடங்கினாள்.(47)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 030ல் உள்ள சுலோகங்கள் : 47
Previous | | Sanskrit | | English | | Next |