We three shall go | Ayodhya-Kanda-Sarga-031 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனின் விருப்பம்; இராமன் தடுத்தாலும் முடியாதது. வசிஷ்டரிடம் இருந்து தெய்வீக ஆயுதங்களைப் பெற்ற லக்ஷ்மணன்...
முன்பே அங்கு வந்திருந்த லக்ஷ்மணன், அந்த சம்வாதத்தை {உரையாடலைக்} கேட்டு சோகத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் கண்ணீர் ததும்பிய கண்களுடன் இருந்தான்.(1) அந்த ரகுநந்தனன் {லக்ஷ்மணன்}, தன்னுடன் பிறந்தவனின் {ராமனின்} சரணங்களை {பாதங்களைப்} பற்றிக் கொண்டு, பெரும் மதிப்பிற்குரிய சீதையிடமும், மஹாவிரதம் மேற்கொள்ளும் ராகவனிடமும் {ராமனிடமும், பின்வருமாறு} பேசினான்:(2) "மான்களும், கஜங்களும் நிறைந்த வனத்திற்குச் செல்லும் புத்தி உண்டானால் {வனத்திற்குச் செல்வதாகத் தீர்மானிக்கப்பட்டால்}, முன்னே தனுதரனாக {வில்லேந்தியவனாக} நானும் உம்முடன் வனத்திற்கு வருவேன்.(3) பக்ஷிகள், மிருகக் கூட்டங்கள் ஆகியவை ஒலித்துக் கொண்டிருக்கும் அரண்யங்களில் பலவற்றில் என்னுடன் சேர்ந்து நீர் திரிவீராக.(4) நீரில்லாமல் நான் தேவலோகம் செல்லவும், அமரத்துவம் அடையவும் விரும்பவில்லை; உலகங்களின் ஐசுவரியத்தையும் {உலகை ஆளவும்} விரும்பவில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(5)
வனவாசம் செய்ய நிச்சயித்து இவ்வாறு பேசிய சௌமித்ரியிடம், ஆறுதலளிக்கும் பலவற்றைப் பேசி ராமன் தடுத்தபோது, அவன் {லக்ஷ்மணன்} மீண்டும் {இவ்வாறு} பேசினான்:(6) "உண்மையில் முன்பே நீர் என்னை அனுமதித்துவிட்டீர்[1]. இப்போது ஏன் இவ்வாறு தடுக்கிறீர்? (7) குற்றமற்றவரே, உடன்வர விரும்பும் என்னை இப்போது நீர் தடுக்க விரும்புவதற்கான காரணத்தை அறிய நான் விரும்புகிறேன். எனக்குள் ஐயம் எழுகிறது" {என்றான் லக்ஷ்மணன்}.(8)
[1] இவ்வாறு ராமன் முன்பே அனுமதித்ததாக வெளிப்படையாக எந்தத் தகவலும் இல்லை. மறைமுகமாக இருக்கும் தகவல்கள் நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில் பட்டியலிடப்படுகின்றன. அவை பின்வருமாறு, "{1} ஓரிடத்தில் - இப்பொழுது எனது அபிஷேகத்தின் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட கார்யம் ஏதேதுண்டோ அதையெல்லாம் விட்டுத் தொலைப்பாயாக. கெடுதியில்லாத கார்யத்தை நடத்துவாயாக என்று ஸம்மதியைக் காட்டினன். {2} மற்றோரிடத்தில் - ஆகையால் நீ பரிதாபத்தை விட்டு எனது அபிப்ராயத்தை அனுஸரித்திருப்பாயாக. எனது அபிஷேகத்தைப் பற்றிய கார்யங்களைச் சீக்ரத்தில் நிறுத்திவிடுவாயாக" என்று அனுமதியைத் தெரிவித்தனன். {3} இன்னுமோரிடத்தில், "எனக்கு ப்ராணன்களைக் காட்டிலும் மிகவும் ப்ரியர்களாகிய பரதசத்ருக்னர்களை நீ உடன்பிறந்தவர்களைப் போலவும், புதல்வர்களைப் போலவும் விசேஷித்துப் பார்க்க வேண்டும்" என்று பரசத்ருக்னர்களையே அனுஸரிக்கும்படி ஸீதைக்கு மொழிந்தனன்; லக்ஷ்மணனை அனுஸரித்திருக்கும்படிக்குச் சொல்லாமையால், லக்ஷ்மணன் அயோத்யையில் நில்லாமல் தன்னோடு கூடவே அரண்யத்திற்கு வருவானென்று தெரிவித்தனன். ஆனது பற்றியே லக்ஷ்மணன், "முன்பு அனுமதி செய்து இப்பொழுது வேண்டாமென்பானேன்?" என்று வினாவினானென்று தெரிய வருகின்றது" என்றிருக்கிறது. {1} இங்கே சுட்டப்படும் முதல் தகவல், அயோத்தியா காண்ட 22ம் சர்க்கத்தின் 3-5 சுலோகங்களில் இருக்கிறது. {2} இரண்டாம் தகவல் அதே சர்க்கத்தின் 26ம் சுலோகத்தில் வருகிறது. {3} மூன்றாம் தகவல் 26ம் சர்க்கத்தின் 33ம் சுலோகத்தில் வருகிறது.
அப்போது, மஹாதேஜஸ்வியான ராமன், தன் முன்னிலையில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை அணுகியவாறே, கூப்பிய கரங்களுடன் அந்த வீரனிடம் யாசிக்கும் வகையில்,(9) "சினேகிதனும், தர்மரதனும் {தர்மத்தில் விருப்பமுள்ளவனும்}, வீரனும், சத்பாதையில் ஸ்திரமாக {நல்வழியில் திடமாக} நிலைப்பவனும், பிரியனுமான நீ, என் பிராணனுக்கு சமமானவனாகவும், கீழ்ப்படியும் சகோதரனாகவும், சகாவாகவும் இருக்கிறாய்.(10) சௌமித்ரி {சுமித்ரையின் மகனே லக்ஷ்மணா}, இப்போது என்னுடன் நீ வனத்திற்கு வந்துவிட்டால், கௌசலையையும், சிறப்புமிக்கவளான சுமித்ரையையும் ஆதரிப்பவர் யார்?(11) மஹாதேஜஸ்வியான எந்த மஹீபதி {பூமியின் தலைவர்}, பிருத்வியில் {பொழியும்} பர்ஜன்யனை {மழை தேவனை / மேகத்தைப்} போல விரும்பியவற்றைப் பொழிவாரோ, அவர் {அந்த தசரதர்} காமபாசத்தில் கட்டுண்டு கிடக்கிறார்.(12)
நிருபர் அச்வபதியின் மகளானவள் {காந்தார மன்னர் அச்வபதியின் மகளான கைகேயி}, இந்த ராஜ்ஜியத்தை அடைந்ததும், துக்கத்தில் இருக்கும் தன் சக்களத்திகளை நல்ல முறையில் நடத்தமாட்டாள்.(13) இராஜ்ஜியத்தை அடையும் பரதன், கைகேயியிடம் அர்ப்பணிப்புடன் இருப்பானேயன்றி, பெருந்துக்கத்தில் இருக்கும் கௌசலையையும், சுமித்ரையையும் நினைத்துப் பார்க்க மாட்டான்.(14) சௌமித்ரி, இங்கேயே இருந்து நீயாகவோ, ராஜ அனுக்ரஹத்துடனோ ஆரியையான கௌசலையை ஆதரிப்பாயாக. சொன்னபடியே இதைச் செய்வாயாக.(15) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, இவ்வாறே நீ என்னிடம் கொண்ட பக்தியை நன்கு வெளிப்படுத்துவாயாக. குருபூஜையானது {பெரியோரை வழிபடுவது} ஒப்பற்ற மஹாதர்மமாகும்.(16) சௌமித்ரி, ரகுநந்தனா, எனக்காக இதைச் செய்வாயாக. நம்மால் கைவிடப்படும் நம் மாதாக்களுக்கு இங்கே சுகம் இருக்காது" {என்றான் ராமன்}.(17)
ராமனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், வாக்கியங்களை அறிந்தவனுமான லக்ஷ்மணன், அப்போது வாக்கியங்களில் நிபுணனான ராமனிடம் மெல்லிய குரலில் {இவ்வாறு} மறுமொழி கூறினான்:(18) "வீரரே, உமது தேஜஸ்ஸால் அருளப்பட்ட {உமது வீரத்தையும், குணத்தையும் அறிந்த} பரதன், கௌசலையையும், சுமித்ரையையும் பூஜிக்கவே செய்வான். இதில் ஐயமேதுமில்லை.(19) எவளால் ஆயிரம் கிராமங்கள் அடையப்பட்டு, உபஜீவனத்தை அடைகின்றனவோ, அந்த ஆரியையான கௌசல்யையால் என்னைப் போன்ற ஆயிரம் பேரை ஆதரிக்க இயலும்[2].(20) எனவே அந்த சிறப்புமிக்கவளால், தன்னை மட்டுமல்ல; என் மாதாவையும் {சுமித்ரையையும்}, என்னைப் போன்றோரையும் ஆதரிக்க இயலும்.(21)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசரதன் கைகேயியை மணந்தபோது, அவன் ஆயிரம் கிராமங்களின் வருமானத்தைக் கௌசலைக்கு வழங்கினான்" என்றிருக்கிறது.
என்னை உமது பணியாளாக்குவதில் தர்மவிரோதம் ஏதுமில்லை. நானும் என் காரியத்தை நிறைவேற்றிக் கொள்வேன், உமது காரியமும் நிறைவேறும்.(22) சரங்களுடன் கூடிய தனுவை {அம்புகளுடன் கூடிய வில்லை} எடுத்துக் கொண்டும், மண்வெட்டியையும், கூடையையும் சுமந்து கொண்டும் பாதையைக் காட்டியவாறே நான் உமக்கு முன்பு செல்வேன்.(23) கிழங்குகளையும், பழங்களையும், தபஸ்விகளுக்கான நல்ல வனப் பொருள்கள் பிறவற்றையும் நான் நித்யம் உமக்குக் கொணர்ந்து அளிப்பேன்.(24) நீர் விழித்திருக்கும்போதும், உறங்கிக் கொண்டிருக்கும் போதும் {இவை} அனைத்தையும் நான் செய்வேன். கிரிகளின் தாழ்வரைகளில் வைதேஹியுடன் {விதேஹ இளவரசியான சீதையுடன்} இன்புற்றிருப்பதே உமக்குத் தகும்" {என்றான் லக்ஷ்மணன்}.(25)
இந்த வாக்கியங்களால் பெரும் மகிழ்ச்சியடைந்த ராமன், அவனிடம் {பின்வருமாறு} மறுமொழி கூறினான், "சௌமித்ரி, செல்வாயாக. நட்பு ஜனங்கள் {நண்பர்கள்} அனைவரிடமும் விடைபெற்றுத் திரும்பி வருவாயாக.(26) இலக்ஷ்மணா, ஜனக ராஜனின் மஹாயஜ்ஞத்தில் {பெரும் வேள்வியில்}, மஹாத்மாவான வருணனாலேயே நேரடியாகக் கொடுக்கப்பட்டவையும், திவ்யமானவையும், காண்பதற்கு ரௌத்திரமானவையுமான தனுக்கள், துளைக்கப்பட முடியாத திவ்ய கவசங்கள், வற்றாத தூணிகள், பொன்னாலானவையும், ஆதித்யனின் பிரகாசத்தைக் கொண்டவையுமான இரு கட்கங்கள் {வாள்கள்} என இவை அனைத்தும் ஆசார்யரின் {வசிஷ்டரின்} வசிப்பிடத்தில் இருக்கின்றன[3]. அவருக்குரிய மதிப்பளித்துவிட்டு, அவ்வாயுதங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு சீக்கிரம் திரும்புவாயாக" {என்றான் ராமன்}.(27-29)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு வில்லு முதலியவற்றை இரண்டிரண்டாகச் சொல்வதனால் அண்ணன் தம்பிகளிருவருக்கும் ஒவ்வொன்றாயிருக்கும்படி கொடுக்கப்பட்டனவென்று தெரிய வருகின்றது. ஜனகனது யாகத்தில் வருணன் வில்லு முதலியவற்றைக் கொடுத்ததாகப் பாலகாண்டத்தில் சொல்லக் காணோம். ஆயினும் முன்பு சொன்னாற்போல் இங்கு பிரஸ்தாவஞ் செய்வதற்குக் காரணம் என்னென்னில் - இது வால்மீகி மஹர்ஷியின் சைலி (நடை). அப்பொழுது ப்ரஸக்தங்களாகிய விஷயங்களை ப்ரதிபாதிப்பதில் மனவூக்கங் கொண்டு எதை எங்குச் சொல்ல வேண்டுமோ, அதை அங்குச் சொல்லாமல், அங்ஙனஞ் சொல்லாதவற்றை மேலில் மற்றோரிடத்தில் ஏதோ ஒரு வ்யாஜத்தினால் முன் சொல்லியதை மறுபடியும் சொல்வது போல் சொல்லுகின்றனர். பாலகாண்டத்தில் சொல்லாத மணிபந்தனத்தை ஸுந்தரகாண்டத்தில் சொல்லினர். அயோத்யா காண்டத்தில் சொல்லாத காகஸுர வ்ருத்தாந்தத்தை சுந்தரகாண்டத்திற் சொல்லினர்" என்றிருக்கிறது.
வனவாசத்தில் நிச்சயமடைந்த லக்ஷ்மணன், தன் நட்பு ஜனங்களிடம் {நண்பர்களிடம்} விடைபெற்றுக் கொண்டு இக்ஷ்வாகுக்களின் குருவை {வசிஷ்டரை} அணுகி, அந்த உத்தம ஆயுதங்களை எடுத்துக் கொண்டான்.(30) ராஜசார்தூலனான சௌமித்ரி {இளவரசர்களில் புலியான லக்ஷ்மணன்}, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடப்பட்ட அந்த திவ்ய ஆயுதங்கள் அனைத்தையும் ராமனிடம் காட்டினான்.(31)
ஆத்மவானான {கட்டுப்படுத்தப்பட்ட மனம் கொண்ட} ராமன், அங்கே வந்த லக்ஷ்மணனிடம் பிரீதியுடன் {பின்வருமாறு} பேசினான், "இலக்ஷ்மணா, சௌம்யா {அழகும் அடக்கமும் கொண்டவனே}, நான் விரும்பியவாறே காலத்திற்கு வந்து சேர்ந்தாய்.(32) பரந்தபா {பகைவரை தண்டிப்பவனே}, எனக்குரிய இந்த தனத்தை நான் உன்னுடன் சேர்ந்து, தபம் பயிலும் பிராமணர்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன்.(33) குருக்களுக்கு திடமான பக்தர்களாக இங்கே வசிக்கும் சிறந்த துவிஜர்களுக்கு {பெரியோரிடம் அர்ப்பணிப்புடன் இங்கே வசிக்கும் இரு பிறப்பாளர்களுக்கு} எனக்குரிய அனைத்தையும் கொடுக்க விரும்புகிறேன்.(34) துவிஜர்களில் சிறந்தவர்கள் அனைவரையும் வணங்கிவிட்டு, அவர்களிலும் சிறந்தவரும், வசிஷ்ட புத்திரரும், ஆரியருமான ஸுயஜ்ஞரை {சுயஜ்ஞரை} உடனே இங்கே அழைத்து வருவாயாக. நான் வனம் செல்ல வேண்டும்" {என்றான் ராமன்}.(35)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 031ல் உள்ள சுலோகங்கள் : 35
Previous | | Sanskrit | | English | | Next |