The words of a Brahmana | Ayodhya-Kanda-Sarga-029 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வனத்திற்கு அழைத்துப் போக மீண்டும் கேட்ட சீதை; முற்காலத்தில் சொல்லப்பட்ட அந்தணரின் சொற்களைச் சொன்னது; அவளை சமாதானப்படுத்த முயன்ற ராமன்...
இராமனின் இந்த வசனத்தைக் கேட்ட சீதை துக்கமடைந்து, கண்ணீரால் முகம் நனைந்து மந்தமாக இந்த வசனத்தைச் சொன்னாள்:(1) "வன வாசம் குறித்து உம்மால் சொல்லப்பட்ட தோஷங்கள் {தீமைகள்} எவையோ, அவை உம்முடைய சினேகம் இருந்தால் குணமாவிடும் {நன்மைகளாகிவிடும்}.(2) இராகவரே, மான்கள், சிம்மங்கள், யானைகள், புலிகள், சரபங்கள், பக்ஷிகள், கவரிமான்கள் ஆகியவையும், வனத்தில் திரியும் பிற விலங்குகள் அனைத்தும் இதற்கு முன்பு காணப்படாத ரூபமான உமது ரூபத்தைக் கண்டதும் ஓடிவிடும். பயத்திற்கான காரணமிருக்கும்போது, அனைத்தும் நிச்சயம் பீதியடையவே செய்யும்.(3,4)
இராமரே, குரு ஜனங்களின் ஆஜ்ஞைப்படி {பெரியோரின் ஆணைப்படி} நானும் உம்முடன் வருவேன். நீர் என்னைவிட்டுப் பிரிந்தால் என் ஜீவிதம் இங்கேயே கைவிடப்படும்.(5) இராகவரே, உமது சமீபத்தில் இருப்பவளான என்னை, ஸுரர்களின் ஈச்வரனான சக்ரனாலும் {தேவர்களின் தலைவனான இந்திரனாலும்} தன் சக்தியால் பீடிக்க இயலாது.(6) பதியில்லாத எந்த நாரீயும் {கணவனில்லாத பெண்கள் எவரும்} ஜீவிக்கும் சக்தியுடைவர்களல்ல. இராமரே, உண்மையில் இவ்விதம் நீரே எனக்குக் கற்பித்தீர்.(7)
அனைத்தும் அறிந்தவரே, இதையுந் தவிர, பூர்வத்தில் என் பிதாவின் கிருஹத்தில், 'நான் வனத்தில் வசிக்க வேண்டியது சத்தியம்' என்று சொன்ன பிராமணரின் சொல்லை நான் கேட்டிருக்கிறேன்.(8) மஹாபலம் கொண்டவரே, பூர்வத்தில் இலக்ஷணங்களை உணர்ந்து சொன்ன அந்த துவிஜரின் வசனத்தைக் கேட்டவளான நான், நித்யம் வனத்தில் வசிப்பதற்கான உற்சாகத்தை அடைந்தேன்.(9) பிரியரே, வனவாசம் குறித்த அந்தக் கணிப்பை உணர்ந்த நான், உம்முடன் சேர்ந்து அங்கே வருவேனேயன்றி வேறாகாது.(10) நான் உம்முடன் வந்து விதிக்கப்பட்டதை நிறைவேற்றியவளாவேன். அந்த துவிஜருக்கான காலமும் வந்துவிட்டது. அந்த துவிஜர் சத்தியவாக்குடைவர் ஆகட்டும்.(11)
வீரரே, அறியா மனம் கொண்ட புருஷர்களால் வனவாசத்தில் அடையப்பட்ட துக்கங்கள் பலவும் உண்மைதான் என்பதை நான் அறிவேன்.(12) நான் பிதாவின் கிருஹத்தில் கன்னியாக இருந்தபோது, நன்னடத்தை கொண்ட ஒரு பிக்ஷிணி மூலம் இந்த வனவாசம் குறித்து என் மாதாவின் முன்னிலையில் நான் கேட்டறிந்தேன்.(13) பிரபுவே, உம்முடன் வனவாசம் செய்ய வேண்டுமெனப் பூர்வத்தில் பலமுறை நான் விரும்பிச் சொன்னபோதெல்லாம் நீர் மகிழ்ச்சியடைந்தீர்.(14) இராகவரே, அனைத்தும் நன்மையேயாகட்டும். வனவாசம் செல்ல நான் காத்திருக்கிறேன். சூரரான உமக்கு வனவாசத்தில் தொண்டாற்றுவதே எனக்கு மகிழ்ச்சி.(15)
சுத்தாத்மாவே {தூய மனம் கொண்டவரே}, பிரேம பாவத்துடன் பர்த்தாவை {காதலுடன் கணவரைப்} பின்தொடர்ந்து நான் களங்கமற்றவளாவேன். எனக்கு பர்த்தாவே உண்மையில் தைவம் {கணவனே என் கண்கண்ட தெய்வம்}.(16) மரணத்திற்குப் பின்பும் மங்கலமாக உம்முடன் நான் சங்கமிப்பேன். மஹாத்மாவே, "இந்த உலகத்தில் எந்த ஸ்திரீ, தன் பெற்றோரால் எவனுக்கு நீருடன் சேர்த்துத் தத்தம் செய்யப்பட்டாளோ, அவனுக்கே அவள் மரணத்திற்குப் பின்பும் சுவதர்மத்தின் அடிப்படையில் உரியவள்" என்று பிராமணர்களால் சொல்லப்பட்டிருக்கும் புண்ணிய ஸ்ருதிகளை {வேத வசனங்களை} நான் கேட்டிருக்கிறேன்.(17,18)
நல்லொழுக்கம் கொண்டவளும், பதிவிரதையும், உமக்குரிய நாரீயுமான என்னை இவ்வாறு இங்கிருந்து அழைத்துச் செல்ல இப்போது நீர் விரும்பாததற்கான காரணமேது?(19) காகுத்ஸரே, பக்தையும், பதிவிரதையும், தீனமானவளும், சுக துக்கங்களில் சமானமாக உமது சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்பவளுமான என்னை நீர் அழைத்துச் செல்லவே வேண்டும்.(20) இவ்வாறு துக்கமடைந்திருக்கும் என்னை உம்முடன் அழைத்துச் செல்ல நீர் விரும்பவில்லையென்றால், மரண காரணத்திற்காக விஷத்தையோ, அக்னியையோ, ஜலத்தையோ நான் நாடுவேன்" {என்றாள் சீதை}.(21)
இவ்வாறே அவள், அவனுடன் செல்லப் பலவிதங்களில் வேண்டிக் கொண்டாலும், அந்த மஹாபாஹு {பெருந்தோள்களைக் கொண்ட ராமன்}, ஜனங்களற்ற வனத்திற்கு அவளை அழைத்துச் செல்ல உடன்பட்டானில்லை.(22)
இவ்வாறு பேசிய அந்த மைதிலி, கண்கள் சிந்தும் வெண்ணீரால் பூமியை நனைத்துவிடுபவளைப் போல துக்கமடைந்தாள்.(23) ஆத்மவானான அந்த காகுத்ஸன் {ராமன்}, தாமிரவண்ண இதழ்களைக் கொண்டவளும், இவ்வாறு துயரமடைந்தவளுமான சீதையைத் தடுக்கும் வண்ணம் பலவாறு ஆறுதல் சொன்னான்.(24)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 029ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | | Sanskrit | | English | | Next |