The words of Rama | Ayodhya-Kanda-Sarga-022 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வனத்தில் தான் வசிப்பதே தெய்வவிருப்பம் என்று சொல்லி லக்ஷ்மணனை சமாதானப்படுத்திய ராமன்; தன் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தியது...
ஆத்மவானான {தற்கட்டுப்பாடுடைய} ராமன், தைரியத்தால் மனத்தை அடக்கிக் கொண்டு, நல்ல ஹிருதயம் கொண்டவனும், அன்புக்குரிய சகோதரனும், தீனனாக இருந்தவனும், கோபத்தால் கண்கள் விரிய படபடத்தவனும், நாகேந்திரனை {பாம்புகளின் மன்னனைப்} போலக் கடுஞ்சீற்றத்தில் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தவனுமான சௌமித்ரியின் {லக்ஷ்மணனின்} அருகில் சென்று இதைச் சொன்னான்:(1,2) "கோபத்தையும், சோகத்தையும் அடக்கி, தைரியத்தை மட்டுமே பற்றிக் கொண்டு, இந்த அவமானத்தை மறந்து, உத்தமமான மகிழ்ச்சியை அடைவாயாக. என் அபிஷேக நிமித்தம் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்தையும் கைவிட்டு, குற்றமற்ற காரியத்தை சீக்கிரம் செய்வாயாக.(3,4) சௌமித்ரியே {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணா}, என் அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளில் இருந்த உற்சாகத்தைப் போலவே, அபிஷேகத்தை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளிலும் உற்சாகத்தைக் காட்டுவாயாக.(5)
என் மாதா {கைகேயி}, என் அபிஷேகம் குறித்து பரிதபித்துக் கொண்டிருப்பாள். இக்காரியத்தில் அவளது மனத்தில் எந்த பயமும் உண்டாகாதவாறு செயல்படுவாயாக.(6) சௌமித்ரியே, சந்தேகத்தால் அவள் மனத்தில் உண்டாகும் துக்கத்தை நான் ஒரு முஹூர்த்தமேனும் அலட்சியப்படுத்த விரும்பவில்லை.(7) அறிந்தோ, அறியாமலோ என் மாதாக்களுக்கோ, பிதாவுக்கோ விரும்பத்தகாத சிறு காரியத்தையேனும் எக்காலத்திலும் இங்கே நான் செய்ததாக எனக்கு நினைவில்லை.(8) சத்தியவாதியும், சத்தியபராக்கிரமரும், பரலோக பயத்தால் பீடிக்கப்பட்டவரும், எப்போதும் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவருமான என் பிதா {தசரதர்} அச்சமற்றவராக இருக்கட்டும் {அவர் செய்து கொடுத்த சத்தியம் மெய்யாகட்டும்}.(9) இந்தக் காரியத்தை {அபிஷேகத்தை} நிறுத்தவில்லையெனில் சத்தியத்தில் அவருக்கும் {தசரதருக்கும்} மனஸ்தாபம் {வருத்தம்} உண்டாகும். அவரது வருத்தம் என்னையும் தகிக்கும் {எரிக்கும்}.(10)
இலக்ஷ்மணா, அதன்காரணமாகவே அபிஷேக ஏற்பாடுகளை நிறுத்திவிட்டு உடனடியாக இங்கிருந்து நான் வனம் செல்ல விரும்புகிறேன்.(11) இதோ நான் புறப்பட்டுச் சென்றதும் நோக்கம் நிறைவேறியவள் {கைகேயி}, கலக்கமேதுமின்றி தன் மகன் பரதனுக்கு அபிஷேகம் செய்து வைப்பாள்.(12) மான்தோல் தரித்து, ஜடா மண்டலமும் தரித்து நான் அரண்யத்திற்குச் சென்றுவிட்டால், கைகேயியின் மனத்திற்கு சுகமுண்டாகும்.(13) திடமான மனத்துடன் இதை நிச்சயித்தவளுக்கு வருத்தம் விளைவிப்பது எனக்குத் தகாது. தாமதமின்றி புறப்படுவேன்.(14)
சௌமித்ரியே, என்னை நாடு கடத்துவதும், எனக்குக் கொடுக்கப்பட்ட ராஜ்ஜியத்தை மீண்டும் எடுப்பதும் {இவர்களல்ல} விதியேவென அறிவாயாக.(15) கைகேயிக்கு இந்த எண்ணம் உண்டானது விதியல்லவென்றால், {என்னிடம் அன்பாக இருந்த} அவள் எவ்வாறு என்னைப் பீடிக்க {துன்புறுத்தத்} தீர்மானித்திருப்பாள்.(16) சௌம்யா {நற்குணம் கொண்டவனே}, பூர்வத்தில் என் மாதாக்களுக்கிடையில் எனக்கும், அதிலும் விசேஷமாக எனக்கும், தன் சுதனுக்கும் {மகன் பரதனுக்கும்} இடையில் அவளுக்கும் {கைகேயிக்கும்} எந்த வேறுபாடும் இல்லையென்பதை நீ அறிவாய்.(17) என் அபிஷேகத்தை நிறுத்தும் நோக்கமும், என்னை நாடுகடத்தும் விருப்பமும் கொண்ட அவளது வாக்கியங்களும், உக்கிரமான துர்வசனங்களும் தைவத்தாலன்றி {தெய்வத்தாலன்றி / விதியாலன்றி} வேறெவராலும் விளையவில்லை என நான் காண்கிறேன்.(18) {இல்லையெனில்} நல்ல இயல்பும், நற்குணங்களும் கொண்ட அந்த ராஜபுத்திரி {கைகேயி}, ஒரு சாதாரணப் பெண்ணைப் போலத் தன் பர்த்தாவின் சந்நிதானத்தில் {கணவரின் முன்னிலையில்} எவ்வாறு என்னைப் பீடிப்பாள்?(19) சிந்தனைக்கு அப்பாற்பட்ட தைவத்திற்கு {தெய்வத்திற்கு} எதிர்வினையாற்ற உயிரினங்கள் எதனாலும் முடியாது. எனக்கும், அவளுக்கும் விதி பாதகமாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.(20)
சௌமித்ரியே, தைவத்திற்கு {தெய்வத்திற்கு / விதிக்கு} எதிராக எந்த மனிதன் உற்சாகமாகப் போரிடுவான்? தென்படாத பிற பொருள் யாவும் அதனை கிரஹித்தே {இந்த விதியை ஏற்றுக் கொண்டே} செயல்படுகின்றன.(21) சுகதுக்கம், பயக்ரோதம் {அச்சமும் கோபமும்}, லாபாலாபம் {லாபமும் நஷ்டமும்}, பிறப்பிறப்பு போன்ற {முரண்பட்ட ரெட்டைகள்} யாவும் தைவத்தின் கர்மங்களே {விதியின் செயல்களே}.(22) உக்ர தபசிருந்த ரிஷிகளுங்கூட, தைவத்தால் பீடிக்கப்பட்டு, நியமங்களைக் கைவிட்டு, காமத்தாலும், கோபத்தாலும் இழிவடைகிறார்கள்.(23) இங்கே {இவ்வுலகில்} ஆரம்பித்து செய்த ஒன்றைத் திடீரென நிறுத்தி மனத்திலும் நினையாத மற்றொன்றைச் செய்தால், அது தைவத்தின் செயலன்றி வேறில்லை.(24) {தெய்வத்தின் செயலே என்ற} உண்மையான இந்த புத்தியைக் கொண்டு ஆத்மாவால் ஆத்மாவை அடக்கியிருக்கும் நான், இந்த அபிஷேகம் நிறுத்தப்பட்டால் பரிதபிக்கமாட்டேன் {வேதனை அடையமாட்டேன்}.(25)
எனவே, நீயும் என்னை அனுசரித்து வேதனையேதுமின்றி அபிஷேகம் தொடர்பான இக்காரியத்தில் இருந்து சீக்கிரம் விலகுவாயாக.(26) இலக்ஷ்மணா, அபிஷேகத்திற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் குடங்கள் அனைத்தும், {இப்போது} என் தவ விரத ஸ்நானத்திற்குப் பயன்படட்டும்.(27) மாறாக ராஜதிரவியங்களான இவற்றால் {இந்தக் குடங்களில் உள்ள நீரால்} எனக்குப் பயனென்ன? என்னால் {என் கைகளால்} எடுக்கப்பட்ட நீரைக் கொண்டே என் விரதத்திற்கான காரியங்களைச் செய்ய வேண்டும்.(28) இலக்ஷ்மணா, லக்ஷ்மி தேவி விபரீதமாகிவிட்டாளேயென சந்தாபம் கொள்ளாதே {என் செழிப்புநிலை மாறிவிட்டதே என வேதனை அடையாதே}. ராஜ்ஜியமோ, வனவாசமோவெனில் வனவாசமே பெருஞ்செல்வமாகும்.(29) இலக்ஷ்மணா, கர்மத்தடங்கலில் {அபிஷேகம் நின்று போனதில்} இளைய மாதாவை {கைகேயியை} சந்தேகிப்பது தகாது. தைவ {தேவ / விதி} வசத்தாலேயே அனிஷ்டத்தை {விரும்பாதனவற்றை} அவள் உரைக்கிறாள். தைவமும் அத்தகைய பிரபாவம் {பெருமை} கொண்டதே என்பதை அறிவாயாக" {என்றான் ராமன்}.(30)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 022ல் உள்ள சுலோகங்கள் : 30
Previous | | Sanskrit | | English | | Next |