Sunday, 24 April 2022

இலக்ஷ்மணனின் கோபம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 023 (41)

The wrath of Lakshmana | Ayodhya-Kanda-Sarga-023 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனின் வீரச் சொற்கள்; விதியை பலமற்றதென நிந்தித்தது; போரிடத் தூண்டியது...

Lakshmana and Rama

இராமன் இவ்வாறு பேசியதைக் கேட்ட லக்ஷ்மணன், தன் சிரம் தாழ்த்தி மீண்டும் மீண்டும் ஆலோசித்தபடியே துக்கத்திற்கும், மகிழ்ச்சிக்கும் மத்தியில் நிலைபெற முடியாதவனாக இருந்தான்.(1) அதன்பிறகு அந்த நரரிஷபன் {மனிதர்களிற்காளையான லக்ஷ்மணன், மனத்தில்} உறுதியடைந்து, நெற்றியின் மத்தியில் புருவங்களை உயர்த்தி வளைத்து, பொந்தில் சினத்துடன் இருக்கும் மஹாசர்ப்பத்தை {பெரும்பாம்பைப்} போலப் பெருமூச்சுவிட்டான்.(2) சுருங்கிய புருவங்களுடன் பயங்கரமாகத் தெரிந்த அவனது முகம், பிறகு கோபத்துடன் கூடிய சிம்ஹத்தைப் போல ஒளிர்ந்தது.(3) அவன், யானையின் துதிக்கையைப் போலத் தன் கையை அசைத்து, சரீரத்திலிருந்து கழுத்தை மேல்நோக்கிச் சாய்த்து, குறுக்காக ஓரக்கண்ணால் தன் சகோதரனைப் பார்த்தபடியே {இவ்வாறு) சொன்னான்:(4) 

{இலக்ஷ்மணன்}, "செருக்குமிக்க க்ஷத்திரியரிஷபரே {க்ஷத்திரியர்களில் காளையே}, தர்மதோஷம் ஏற்படுமென்றும், உலகம் சந்தேகிக்குமென்றும் {நினைப்பதால்} காலத்திற்குப் பொருந்தாத இந்தப் பெருங்குழப்பம் உம்மிடம் பிறந்திருக்கிறது. சக்தியற்ற தைவத்தை {விதியைக்} குறித்து உம்மைப் போன்றோரால் எவ்வாறு இப்படிப் பேச முடிகிறது?(5,6,7அ) பரிதாபத்திற்குரியதும், சக்தியற்றதுமான தைவத்தை {விதியை} ஏன் புகழ்கிறீர்? பாபிகளான அவ்விருவரையும் {கைகேயியையும், தசரதரையும்} எவ்வாறு நீர் சந்தேகிக்காமல் இருக்கிறீர்?(7ஆ,இ) தர்மாத்மாவே, அவ்விருவரும் உமது நன்னடத்தையைப் புறக்கணித்துத் தன்னலத்துடன் நியாயமற்ற முறையில் தர்மத்தின் பேரில் நயமாக வஞ்சிக்கின்றனர் என்பதை நீர் ஏன் அறியாதிருக்கிறீர்?(8,9அ) இராகவரே, அவ்விருவரும் முன்பே இதைத் தீர்மானிக்காதிருந்தால், நீண்ட காலத்திற்கு முன்பே இயற்கையாக அந்த வரம் கொடுக்கப்பட்டிருக்கும்.(9ஆ,இ) வீரரே, உம்மைத்தவிர வேறு எவருக்கும் அபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டால், அதை உலகத்தவரும் விரும்பமாட்டார்கள், என்னாலும் சகித்துக் கொள்ள முடியாது. இக்காரியத்தில் நீர் என்னைப் பொறுத்துக் கொள்வதே தகும்.(10) 

மாமதியாளரே, எந்த தர்மத்தால் உமது புத்தி இரண்டானதோ {ஒன்றை ஆலோசித்து இப்போது வேறுபடுகிறதோ}, எந்த பிரசங்கத்தால் நீர் குழப்பமடைகிறீரோ அதை நான் துவேஷிக்கிறேன் {எதிர்க்கிறேன்}.(11) {எதிர்த்துச்} செயல்படும் சக்தி கொண்ட உம்மால், நிந்திக்கத்தக்கவையும், தர்மமற்றவையும், கைகேயியின் வசப்பட்டிருக்கும் பிதாவால் சொல்லப்பட்டவையுமான வாக்கியங்களின்படி எவ்வாறு செயல்பட முடியும்?(12) பாபம் நிறைந்த நோக்கத்துடன் இந்த நயவஞ்சகம் செய்யப்பட்டாலும், அவ்வாறே சரியான பொருளில் அதை நீர் எடுத்துக் கொள்ள மறுக்கிறீர் என்ற காரியத்தில் துக்கம் என்னுள் எழுகிறது. இத்தகைய தர்மப்பற்று நிந்தனைக்குரியதாகும்.(13) காம விருத்தத்துடன் நித்தியம் இதமற்றவற்றை செய்து {அக்கிரம வழியைப் பின்பற்றி மனம் போன போக்கில் நடந்து} பெற்றோரென்ற பெயரில் இருக்கும் இந்த சத்ருக்களின் {பகைவரின்} விருப்பத்தை மனத்தாலும் எவ்வாறு நீர் செய்வீர்?(14) தைவ {விதி} வசத்தில் அவ்விருவரும் செயல்படுகிறார்கள் என்பது உமது கருத்தாக இருக்கலாம். அவ்வாறு நீர் கருதுவதை நான் விரும்பவில்லை.(15)

எவன் விகல்பனோ {குழப்பவாதியோ}, வீர்யஹீனனோ {வீரமற்றவனோ} அவனே தைவத்தை {விதியை} அனுசரிப்பான். தன்மானம் கொண்ட வீரர்கள் தைவத்தை {விதியை} மதிப்பதில்லை.(16) எந்த புருஷன் {மனிதன்}, மனிதமுயற்சியால் தைவத்தைத் தள்ளி வைக்க வல்லவனோ, அவன் {ஒருபோதும்} தைவத்தால் {விதியால்} கெடுதியடைந்து வருந்த மாட்டான்.(17) இன்று தைவம் {விதி}, புருஷன் {மனிதன்} ஆகியோரின் பௌருஷத்தை {ஆற்றலைக்} காணலாம். தைவத்திற்கும், மனுஷனுக்குமிடையில் உள்ள வேறுபாட்டை இன்று தெளிவாகக் காணலாம்.(18) எந்த தைவத்தால் {விதியால்} இன்று உமது ராஜ்ஜியாபிஷேகம் அழிந்ததோ, அந்த தைவம் {விதி} என் பௌருஷத்தால் {ஆற்றலால்} நொறுங்குவதை இன்று ஜனங்கள் காண்பார்கள்.(19) அங்குசத்திற்கு அஞ்சாமல் மதபலத்துடன் ஓடும் கஜத்தை {யானையைப்} போன்ற அந்த தைவத்தை என் பௌருஷத்தால் {ஆற்றலால்} அடக்குவேன்.(20)

லோகபாலர்கள் அனைவராலோ, மூன்று லோகங்களாலோ கூட இன்றைய ராமாபிஷேகத்தைத் தடுக்க முடியாதென்றால் பிதாவைக் குறித்து என்ன சொல்ல?(21) இராஜாவே, நீர் அரண்யத்தில் வசிக்கவேண்டுமென ரகசியமாக வாதிடுபவர் யாவரோ அவர்களே அவ்வழியில் சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} அரண்யத்தில் வசிக்க வேண்டும்.(22) எனவே தான், தன் புத்திரனுக்கு ராஜ்ஜியத்தைக் கொடுக்க உமது அபிஷேகத்தைக் கெடுத்தவளின் ஆசையையும், பிதாவின் ஆசையையும் நான் தகர்க்கப் போகிறேன்.(23) என் பலத்தை எதிர்ப்போருக்கு உக்கிரமான என் பௌருஷம் எவ்வாறு துக்கத்தை உண்டாக்குமோ அவ்வாறு தைவபலத்தாலும் உண்டாக்க முடியாது.(24) நீர் சஹஸ்ர வருஷங்கள் {ஆயிரம் ஆண்டுகள்} பிரஜாபாலனம் {மக்களாட்சி} செய்து, வனம் சென்ற பிறகு, {உமது} ஆரிய புத்திரர்கள் மக்களை ஆளட்டும்.(25) பூர்வ ராஜரிஷிகள், புத்திரர்களைப் போல பிரஜைகளை பரிபாலனம் செய்த {மக்களை ஆண்ட} பிறகு, புத்திரர்களிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு வனவாசம் செல்வார்கள்.(26)

தர்மாத்மாவே, ராமரே, இராஜாவின் {தசரதரின்} நிலையற்ற மனத்தினால் ராஜ்ஜியத்தில் குழப்பமேற்படும் என சந்தேகித்து ராஜ்ஜியம் வேண்டாமென நினைத்தால், வீரரே, நீர் அஞ்ச வேண்டியதில்லை. சாகரத்தைக் காக்கும் கரையைப் போல நான் உமது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்காவிட்டால், சொர்க்கமெனும் வீர உலகை நான் அடைய மாட்டேன் எனப் பிரதிஜ்ஞை செய்கிறேன்.(27,28) நீர் மங்கல அபிஷேகம் செய்து கொள்வதில் ஈடுபடுவீராக. இதில் பலத்தால் மஹீபாலர்களை {பூமியின் தலைவர்களை} விரட்ட நான் ஒருவனே போதும்.(29) 

என் தோள்கள் அழகுக்கானவையல்ல. இந்த தனுசு அலங்காரத்துக்கானதில்லை. வாள் அரையில் {இடைக்கச்சையில்} கட்டிக் கொள்வதற்கானதில்லை. சரங்கள் {கணைகள்} அசைவற்று இருப்பதற்கானவையல்ல. இவை நான்கும் பகைவரை ஒடுக்கவல்லவை.(30,31அ) எவன் எனக்கு சத்ருவாக {பகைவராகக்} கருதப்படுகிறானோ அவனை நான் அதிகம் பொறுத்துக் கொள்ள விரும்பவில்லை. மின்னலைப் போல் ஒளிவீசும் கூர்முனை கொண்ட வாளை அணிந்திருக்கும் நான், இந்திரனேயானாலும் எந்தப் பகைவனையும் பொருட்படுத்தமாட்டேன்.(31ஆ,32) என் வாளால் தாக்கப்பட்டு நொறுங்கி விழும் யானைகள், குதிரைகள், மனிதர்களின் தலைகள், கைகள், கால்கள் ஆகியவற்றால் இந்தப் பூமி யாராலும் கடக்கப்பட முடியாததாகும், வசிப்போர் யாருமற்றதாகும்.(33) இனி என் வாளால் தாக்கப்படும் யானைகள்,  மின்னற்கீற்றுகளுடன் கூடிய மேகங்களைப் போலவும், ஒளிரும் மலைகளைப் போலவும் பூமியில் விழப் போகின்றன.(34) உடும்புத்தோலாலான உறைகளை அணிந்த விரல்களுடன் கூடிய வில்லைத் தரித்து நான் நிற்கும்போது, எந்த மனிதன் தன்னை புருஷர்களில் {மனிதர்களில்} வீரனாகக் காட்டிக் கொள்வான்?(35) நான் ஒருவனை பலவற்றாலும், பலரை ஒன்றாலும் வீழ்த்தும் பாணங்களை ஏவி நரவாஜிகஜங்களின் மர்மத்தைப் பிளப்பேன் {மனிதர்களின் முக்கிய உறுப்புகளையும், குதிரைகள் மற்றும் யானைகளின் முக்கிய அங்கங்களையும் பிளப்பேன்}.(36)

பிரபுவே {ராமரே}, என் பலமும், என் அஸ்திர பலமும் இன்று உம்மை பிரபுவாக்கி, {தசரத} ராஜரை பிரபுத்துவத்திலிருந்து விலக்கவல்லவையாகும்.(37) இராமரே, சந்தனம் பூசவும், கேயூரங்கள் அணியவும், செல்வங்களை அளிக்கவும், நண்பர்களைக் காக்கவும் தகுந்தவையான இந்தத் தோள்கள், இன்று உமது அபிஷேகத்தைத் தடுப்போரைத் தடுக்கும் கர்மத்தை {செயலைச்} செய்யப் போகின்றன.(38,39) என்னால் பிராணனை இழக்க வேண்டிய, கௌரவிக்கப்பட வேண்டிய, நட்பு பாராட்டப்பட வேண்டிய பகைவரை எனக்குச் சொல்வீராக. நான் உமது கிங்கரனாவேன் {பணியாளன் ஆவேன்}. இந்த வசுதை {பூமி} உமது வசம் ஆவது எவ்வாறோ அவ்வாறே எனக்கு ஆணையிடுவீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(40)

அந்த ராகவ வம்சவர்தனன் {ரகு குலத்தைச் செழிக்கச் செய்பவனான ராமன்}, லக்ஷ்மணனின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவனை மீண்டும் மீண்டும் தேற்றி இதைச் சொன்னான், "சௌம்யா {சிறந்தவனே}, பிதாவின் சொற்படி நிற்பவனாக என்னை அறிவாயாக. இதுவே சத்பாதையாகும் {நல்வழியாகும்}" {என்றான் ராமன்}.(41)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 023ல் உள்ள சுலோகங்கள் : 41

Previous | Sanskrit | English | Next

Labels

அக்னி அசுவபதி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்