Dare not following to forest | Ayodhya-Kanda-Sarga-021 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனின் கோபம்; ராஜ்ஜியத்தைப் பலவமந்தமாக அபகரிக்குமாறு ராமனிடம் சொன்னது; கௌசல்யையையும், லக்ஷ்மணனையும் தேற்றிய ராமன்...
தீனமடைந்த {மனம் நொந்த} லக்ஷ்மணன், இவ்வாறு அழுதுகொண்டிருந்த ராமனின் மாதாவிடம் {கௌசல்யையிடம்} காலத்திற்குத் தகுந்த சொற்களை பேசினான்:(1) "ஆரியையே, ராகவர் ஒரு ஸ்திரீயின் வாக்கியத்திற்குக் கட்டுப்பட்டு, செழிப்பான ராஜ்ஜியத்தைக் கைவிட்டு வனத்திற்குச் செல்வதை நானும் விரும்பவில்லை.(2) விபரீத மனம் கொண்டவரும், விருத்தரும் {கிழவரும்}, விஷயங்களில் {புலன் நுகர் இன்பங்களில்} விருப்பம் கொண்டவரும், மதங்கொண்டவருமான நிருபர் {தசரத மன்னர்}, {கைகேயியால்} தூண்டப்பட்டால் எதையும் பேசக் கூடியவராக இருக்கிறார்.(3)
ராஷ்டிரத்திலிருந்து வனவாசம் செய்ய விரட்டுவதற்கு இராகவரிடம் எந்த விதமான தோஷத்தையோ, அபராதத்தையோ {எவ்விதக் குற்றங்குறைகளையும்} நான் காணவில்லை.(4) பகைவனோ, கைவிடப்பட்டவனோ எவனாயினும் இவரிடம் தோஷமுண்டென மறைமுகமாகவும் பேசக்கூடிய ஒருவனையும் இவ்வுலகில் நான் காணவில்லை.(5) தர்மத்தைக் கடைப்பிடிக்கும் எவன், தேவனுக்கு நிகரானவனும், நேர்மையாளனும், தன்னடக்கமுள்ளவனும், பகைவரிடமும் அன்பு பாராட்டுபவனுமான ஒரு மகனைக் காரணமில்லாமல் விரட்டுவான்?(6) அரச வழக்கத்தை நினைவில் கொண்ட எவனால் {எந்த மகனால்}, பால்யத்தை திரும்ப அடைந்த {சிறு பிள்ளையைப் போலச் செயல்படும்} இந்த ராஜரின் வசனங்களின்படி ஹிருதயப்பூர்வமாகச் செயல்பட இயலும்?" {என்று கௌசல்யையிடம் சொன்ன லக்ஷ்மணன்},(7)
{மேலும் ராமனிடம்}, "இந்தக் காரியத்தை வேறு எந்த நரனும் {மனிதனும்} அறியும் முன்பே, என்னுடன் சேர்ந்து {இந்த ராஜ்ஜியத்தில்} உமது சாசனத்தை {அதிகாரத்தை} ஏற்படுத்திக் கொள்வீராக.(8) இராகவரே, யமனைப் போல நிற்கும் உமதருகில் வில்லுடன் நான் உம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும்போது, எந்த சமர்த்தனாலும் அதிகம் என்ன செய்து விட முடியும்?(9) மனுஷரிஷபரே {மனிதர்களில் காளையான ராமரே}, உமக்கெதிராக எவனும் நின்றால் மொத்த அயோத்தியையும் என் கூரிய கணைகளால் மனிதர்களற்றதாக்கி விடுவேன்.(10) பரதனின் தரப்பை அடைவோரையும், அவனது நன்மையை விரும்புவோரையும் நான் கொல்வேன். மிருதுவானவன் {மென்மையானவன்} நிச்சயம் அவமதிக்கப்படுகிறான்.(11)
துஷ்டரான நம் பிதா {தசரதர்}, கைகேயியால் தூண்டப்பட்டுப் பகைவரானால் எந்த பந்தமுமின்றி அவர் {தசரதர்} சிறையிலடைக்கப்பட்டுக் கொல்லப்பட வேண்டும்.(12) ஆணவம் பிடித்தவர், காரியாகாரியங்களை {நல்லன தீயன} அறியாதவர், தீய வழியை நாடுபவர் எவரும் குருவாக இருந்தாலும், சாசனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் {தண்டிக்கப்பட வேண்டும்}.(13) புருஷரிஷபரே {மனிதர்களில் காளையான ராமரே}, எந்த பலத்தை, எந்தக் காரணத்தைச் சார்ந்து, அவர் உமக்குரிய இந்த ராஜ்ஜியத்தை கைகேயிக்கு தத்தம் செய்ய விரும்புகிறார்?(14) அரிசாஸனரே {பகைவரைத் தண்டிப்பவரே}, உம்மிடமும், என்னிடமும் கடும் வைரத்தை {விரோதத்தை} ஏற்படுத்திக் கொண்டு பரதனுக்கு செல்வத்தை தத்தம் செய்ய அவருக்கு சக்தி ஏது?[1]" {என்று ராமனிடம் சொன்ன லக்ஷ்மணன்},(15)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "1. ப்ரபுசக்தி - மன்னர்களாயிருக்கும் அந்தஸ்தால் ஏற்படும் தருமவிருத்தமின்றி அதிகாரம் செலுத்துதற்குரிய சக்தி. 2. மந்திரசக்தி - தரும விருத்தமின்றி ஸதா நியாயவழிகளேயே ஆலோசனைகள் செய்யும் மந்திரிமார்களின் ஆலோசனைக் கீடுபட்டு, அதனால் அதிகாரம் கொண்டு செய்யும் சக்தி. 3. உத்ஸாஹசக்தி - திமிர் பிடித்து, ஒரு கார்யத்தில் நியாயப்படி புகக்கூடததாயிருக்கையில், தலைக்கொழுப்பால் புகுவோமெனும் நினைக்கும் சக்தி. இப்படிப்பட்ட மூவகைப்பட்ட மன்னர்களுக்கு உரிய சக்திகளில் எந்த சக்தி?" என்றிருக்கிறது.
{மீண்டும் கௌசல்யையிடம்}, "தேவி, என்னுடன் பிறந்தவரிடம் {அண்ணன் ராமரிடம்} அர்ப்பணிப்பும், பற்றும் கொண்ட நான், சத்தியத்தின் மீதும், தனுசின் மீதும், தானத்தின் மீதும், வேள்வியின் மீதும் உன்னிடம் சபதம் செய்கிறேன்.(16) தேவி, சுடர்விடும் அக்னியிலோ, அரண்யத்திலோ ராமர் பிரவேசித்தால், அதற்கு முன்பு நான் அங்கே பிரவேசித்துவிட்டேனென நீ நிச்சயமடைவாயாக.(17) உதயசூரியன் இருளை அகற்றுவதைப் போல வீரத்தால் நான் உன் துக்கத்தை அகற்றுவேன். தேவியும், ராகவரும் என் வீரத்தைக் காண்பாராக" {என்றான் லக்ஷ்மணன்}.(18)
மகத்தானவளான கௌசல்யை, லக்ஷ்மணனின் இந்த வசனத்தைக் கேட்டு சோகத்தில் மூழ்கி அழுதவாறே ராமனிடம் {இவ்வாறு} பேசினாள்:(19) "புத்திரா, உன்னுடன் பிறந்த லக்ஷ்மணனின் வாதத்தை நீ கேட்டாய். உனக்கு ஏற்புடையதாக இருந்தால் செய்ய வேண்டிய காரியத்தை உடனே செய்வாயாக.(20) என் சக்களத்தியான கைகேயி சொன்ன அதர்ம வசனத்தைக் கேட்டு, சோகத்தில் மூழ்கியிருக்கும் என்னைக் கைவிட்டு, இங்கிருந்து செல்வது உனக்குத் தகாது.(21) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ தர்மத்தின்படி நடக்க விரும்பினால், தர்மத்தை அனுஷ்டித்து இங்கே இருப்பாயாக. எனக்குத் தொண்டு செய்வதே உன் உத்தம தர்மமாகும்.(22) ஜனனிக்கு {அன்னைக்கு} தொண்டாற்றும் கடுந்தவத்தில் ஈடுபட்டு, தற்கட்டுப்பாட்டுடன் தன் கிருஹத்தில் வசித்திருந்த காசியபர் திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றார்.(23) கௌரவத்துடன் பூஜிக்கத்தகுந்த இராஜாவைப் போலவே, நானும் உன்னால் பூஜிக்கத்தகுந்தவளே. எனவே, இங்கிருந்து நீ வனம் செல்வது முறையல்ல. நான் அனுமதிக்க மாட்டேன்.(24) உன்னைப் பிரிந்தால் ஜீவிதத்திலோ, சுகத்திலோ எனக்குக் காரியமேது? உன்னுடன் புல்லை உண்டு இருப்பதும் உயர்ந்ததே.(25) சோகத்தில் பீடிக்கப்பட்டிருக்கும் என்னைக் கைவிட்டு நீ வனத்திற்குச் சென்றால் நான் பட்டினி கிடந்து சாவேன். இங்கே என்னால் ஜீவிக்க இயலாது.(26) புத்திரா, அதன்பிறகு நீ, சரிதம்பதியான சமுத்திரன் {ஆறுகளின் கணவனான பெருங்கடலானவன், பிப்பலாத முனிவருக்கு} அதர்மம் செய்து பிரம்மஹத்தியை {பிராமணனைக் கொல்லும் பாபத்தை} அடைந்ததைப் போலவே உலகப் புகழ்பெற்ற நிரயத்தை {நரகத்தை} அடைவாய்" {என்றால் கௌசல்யை}.(27)
அப்போது தர்மாத்மாவான ராமன், இவ்வாறு தீனமாக விலாபித்து {பரிதாபமாக அழுது} கொண்டிருந்த ஜனனியான {அன்னையான} கௌசல்யையிடம் தர்மத்தை எடுத்துக்காட்டும் இந்தச் சொற்களைச் சொன்னான்:(28) "பிதாவின் வாக்கியத்தை மீறும் சக்தி என்னிடமில்லை. நான் தலைவணங்கி உன்னிடம் கேட்கிறேன். நான் வனத்திற்குச் செல்ல விரும்புகிறேன்.(29) விரதசாரியும், தர்மத்தை அறிந்தவரும், கல்விமானுமான கண்டு என்ற ரிஷி, பிதாவின் வாக்கியத்தின் படி செயல்பட்டு கோவதமும் செய்தார் {பசுவையும் கொன்றார்}.(30) பூர்வத்தில் நம் குலத்தைச் சேர்ந்த சாகரர்கள் {சகரனின் மகன்கள்}, பிதாவான சகரனின் ஆஜ்ஞைப்படி பூமியைத் தோண்டி மகத்தான வதம் அடைந்தனர்.(31) ஜாமதக்னியான ராமர் {பரசுராமர்}, தாமே பிதா சொற்களின் படி ஜனனியான {தம் அன்னையான} ரேணுகையை அரண்யத்தில் பரசால் {கோடரியால்} வெட்டினார்.(32) தேவி, இவர்களும், தேவர்களுக்கு இணையான இன்னும் பலரும் பிதாவின் சொற்களை வீணாக்கியதில்லை. பிதாவுக்கு ஹிதமானதையே நான் செய்வேன்.(33) தேவி, பிதாவின் சாசனப்படி செயல்படுபவன் நான் மட்டுமல்ல. உன்னாலும், என்னாலும் குறிப்பிடப்பட்ட இவர்கள் அனைவரும் அவ்வாறே செய்தனர்.(34) உனக்காக தர்மத்திற்கு பிரதிகூலமான அபூர்வ காரியத்தை நான் செய்யப் போவதில்லை. {பழக்கவழக்கத்திற்கு முரண்பட்ட புதிய காரியத்தை நான் செய்யவில்லை}. பூர்வர்கள் ஏற்றுச் சென்ற மார்க்கத்தையே நானும் பின்பற்றுகிறேன்.(35) புவியில் இத்தகைய காரியத்திற்கு முரண்பட்டு என்னால் செயல்பட இயலாது. பிதாவின் சொற்கள் படி செயல்படும் எவருக்கும் கெடுதி நேராது" {என்றான் ராமன்}.(36)
வாக்கியவித சிரேஷ்டனும் {பேச்சை அறிந்தவர்களில் சிறந்தவனும்}, தனுசு தரித்தவர்கள் அனைவரிலும் சிறந்தவனுமான அவன், ஜனனியிடம் {தன் அன்னை கௌசல்யையிடம்} இவ்வாறு பேசிவிட்டு, திரும்பி லக்ஷ்மணனிடம் {இவ்வாறு} பேசினான்:(37) "இலக்ஷ்மணா, என்னிடம் நீ கொண்ட உத்தம சினேஹத்தையும், உன் வீரத்தையும், பலத்தையும், தகர்க்க முடியாத உன் தேஜஸையும் நான் அறிவேன்.(38) சுபலக்ஷணா {நல்ல குணங்களைக் கொண்டவனே}, சத்தியம், நிலையமைதி ஆகியவற்றின் பொருளை அறியாததால் என் மாதா மகத்தான துக்கத்தை அடைகிறாள்.(39) உலகத்தில் தர்மமே பரமம் {உயர்ந்தது}. சத்தியம் தர்மத்திலேயே பிரதிஷ்டை செய்யப்படுகிறது {நிலைநிறுத்தப் படுகிறது}. பிதாவின் இந்த உத்தம வசனத்திலும் தர்மம் பொதிந்துள்ளது.(40) வீரா, தர்மத்தைப் பின்பற்றுபவன், பிதாவுக்கோ, மாதாவுக்கோ, பிராமணருக்கோ உறுதியளித்துச் சொன்ன வாக்கியத்தை வீணாக்கக் கூடாது {உறுதியளித்த வாக்கு தவறலாகாது}.(41) வீரா, பிதாவின் ஆணையை என்னால் மீற முடியாது. பிதாவின் வசனத்தைக் கொண்டே கைகேயி என்னைத் தூண்டினாள்.(42) எனவே க்ஷத்ர தர்மத்தைப் பின்பற்றி இந்த அநாரிய மதியை {பலத்தைப் பிரயோகிக்கும் இந்தக் குறுகிய மனப்பான்மையைக்} கைவிடுவாயாக. இந்த மூர்க்க எண்ணத்தைக் கைவிட்டு தர்மத்தைப் பின்பற்றுவாயாக. என் கருத்தை ஏற்பாயாக" {என்றான் ராமன்}.(43)
அந்த லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணன் ராமன்}, தன்னுடன் பிறந்தானிடம் அன்புடன் பேசிவிட்டு, சிரம் தாழ்த்தி கைகளைக் கூப்பியபடியே கௌசல்யையிடம் மீண்டும் {இவ்வாறு} பேசினான்:(44) "தேவி, வனம் செல்ல என்னை அனுமதிப்பாயாக. என் உயிரின் மீது ஆணையாகக் கேட்கிறேன். எனக்கு ஆசி கூறுவாயாக.(45) பூர்வத்தில் திவத்தை {சொர்க்கத்தை} விட்டகன்ற ராஜரிஷி யயாதி மீண்டும் திவத்தை அடைந்ததைப் போலவே நானும் பிரதிஜ்ஞை நிறைவேற்றிவிட்டு வனத்திலிருந்து {இந்த அயோத்தியா} புரியை அடைவேன்.(46) மாதாவே, துன்புறாதே, ஹிருதயத்தில் நன்றாகப் பொறுத்துக் கொள்வாயாக. பிதாவின் சொற்படி வனவாசத்தை நிறைவேற்றிவிட்டு மீண்டும் இங்கே நான் வருவேன்.(47) நானும், நீயும், சீதையும், லக்ஷ்மணனும், சுமித்திரையும் பிதாவின் ஆணையில் நிற்க வேண்டும். இதுவே சநாதன தர்மமாகும் {தொன்மையான கடமையாகும்}.(48) அம்ப {அம்மா, அபிஷேகத்திற்கான} சம்பாரங்களை {ஏற்பாடுகளை} நிறுத்திவிட்டு ஹிருதயத்திலிருந்து துக்கத்தை விலக்கி தர்மப்படி நான் வனவாசம் செல்ல அனுமதிப்பாயாக" {என்றான் ராமன்}.(49)
அந்த தேவிமாதா {கௌசல்யை}, தர்மம் பொதிந்தவையும், மிடுக்கானவையும், மனக்கலக்கமின்றி சொல்லப்பட்டவையுமான அவனது சொற்களைக் கேட்டு நனவு மீண்டு ராமனைப் பார்த்து மீண்டும் இதைச் சொன்னாள்:(50) "புத்திரா, உன் பிதாவைப் போலவே நானும் உன் குருவே, ஸ்வதர்மத்தினாலும், நான் கொண்ட பெரும் பற்றினாலும் துக்கத்தில் இருக்கும் என்னைவிட்டு நீ செல்வதை நான் அனுமதிக்கமாட்டேன்.(51) நீ இல்லாமல் நான் இங்கே ஜீவிப்பதால் என்ன பயன்? {நான் இறந்தபிறகு} இவ்வுலகத்தினாலோ, ஸ்வதையினாலோ {பித்ருக்களுக்குக் கொடுக்கப்படும் ஹவிஸினாலோ, ஸ்வர்க்கத்தை அடைந்தால் கிட்டும்} அமிர்தத்தினாலோ எனக்கு என்ன பயன்? ஜீவலோகத்தையும்விட ஒரு முஹூர்த்த காலமேனும் உன்னருகில் இருப்பதே எனக்குச் சிறந்தது" {என்றாள் கௌசல்யை}.(52)
ஜனனியின் {அன்னையின்} பரிதாபகரமான புலம்பலைக் கேட்டவன் {ராமன்}, எரிபந்தங்களைக் கொண்டு மனிதர்களால் தடுக்கப்படும் மஹாகஜத்தை {பெரும் யானையைப்} போலத் துயருற்றான்.(53) தர்மத்தில் திடமாக இருந்தவன், பிரஜ்ஞையற்றவளாக மாதாவிடமும் {நனவற்றவளாகத் தென்பட்ட தன் கௌசல்யையிடமும்}, கலக்கமடைந்து மனந்தளர்ந்திருந்த சௌமித்ரியிடமும் {லக்ஷ்மணனிடமும்} தன்னால் மட்டுமே சொல்லத்தகுந்தவையும், அந்நேரத்திற்குத் தகுந்தவையுமான தர்மம் பொதிந்த {பின்வரும்} சொற்களை சொன்னான்:(54) "லக்ஷ்மணா, என்னிடம் நீ கொண்டிருக்கும் பக்தியையும், உன் பராக்கிரமத்தையும் நான் அறிவேன். ஆனால் என் அபிப்ராயத்தைப் பாராமல் மாதாவுடன் சேர்ந்து நீயும் பேசுவது அதிக துக்கத்தைத் தருகிறது.(55) ஐயா, இந்த உலகத்தில் தர்மத்தின் பலனை அடைவதில் தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு மனைவி கீழ்ப்படிந்திருப்பவளாக, அன்புக்குரியவளாக, நல்ல புத்திரர்களைப் பெறுபவளாக இருப்பதைப் போலவே {நீ செய்யும்} நற்செயல்களும் அவை அனைத்தையும் {அறம், பொருள், இன்பம் யாவற்றையும்} விளைவிக்கின்றன என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை[2].(56) எதில் {எந்தக் காரியத்தில்} இவை யாவும் ஒன்று சேராதிருக்குமோ அதைக் கைவிட்டு, எதன்மூலம் தர்மம் {மட்டுமாவது} உண்டாகுமோ அதுவே செய்யப்பட வேண்டும். இவ்வுலகில் அர்த்தத்தில் {செல்வத்தில்} மட்டுமே விருப்பம் கொண்டவன் வெறுக்கத்தகுந்தவன் ஆகிறான். அதே போல காமத்தை மட்டுமே விரும்புகிறவனும் நல்லவனாகக் கருதப்படமாட்டான்.(57)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "குழந்தாய், உலகில் எந்த ஒரு தருமத்தினின்று நான்கு புருஷார்த்தங்களும் விளைகின்றனவோ அது பலித்து உதயமாகும் வேளைகளில் தருமம், அர்த்தம், காமம் என்று மூன்று புருஷார்த்தங்களும் ப்ரத்தியக்ஷத்தில் காணப்பட்டிருக்கின்றன. கிரந்தமாய் எழுதாமல் பாரம்பரிய கேழ்வியால் தெரிந்து கொண்ட சங்கதி இது. அவைகள் எல்லாம் அதன் பயனாய் அதாவது அந்த தருமத்தின் பயனாய், ஸ்வாதீனையான விருப்பிற்கிடமான நற்புதல்வனைப் பெற்ற மனைவி ஒருத்தி போலவே ஒருவனுக்கு சித்திக்கின்றன. எனக்கு இதில் ஐயமில்லை" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பா, தர்மத்திற்குரிய பலங்களாகிய ஸௌக்யங்களை உண்டு பண்ணுங் காரணங்கள் தர்மார்த்தகாமங்களென்று லோகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் புருஷார்த்தங்கள் அனைத்தும் அந்த தர்மத்திலேயே நிலை நின்றிருக்கும் அனைத்துக்கும் அதுவே ஆதாரம். இதற்கு ஸந்தேஹம் இல்லை. ஒரு பார்யை அனுகூலையாகி தர்மத்தையும், அன்பிற்கிடமாயிருந்து காமத்தையும், நற்குணமுள்ள பிள்ளைகளைப் பெற்றவளாகி அப்புத்ரனது பாக்யரேகையால் அர்த்தத்தையும், எப்படி விளைவிக்க வல்லளோ அப்படியே ஒரு தர்மத்தை அனுஷ்டித்தோமாயின் அதனால் ஸௌக்யத்தைக் கொடுக்கும்படியான அர்த்தம் காமம் முதலிய ஸமஸ்த புருஷார்த்தங்களும் ஸித்திக்கின்றன" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இவ்வுலகில் தருமம் அடியாகவுள்ள நற்பயன்களுக்குக் காரணமாக தருமப்பொருளின்பங்களன்றோ காணப்பட்டன. அவற்றுள்ளும், அறமின்றிப் பொருளின்பங்கள் மட்டும் பயன்படா; தருமமொன்றே முதற்காரணமாகும், மனத்துக்கினியாளும், கட்டழகியும், நன்மக்களைப் பெற்றவளுமாகிய மனையாளொருத்தியே முறையே அறம்பொருளின்பங்களெனும் மூன்று பேறுகளையும் தருகின்றனளன்றோ?" என்றிருக்கிறது.
குருவும், ராஜாவும், விருத்தருமான {முதிர்ந்தவருமான} பிதா {தசரதர்}, குரோதத்தின் காரணமாகவோ, பெரும் மகிழ்ச்சி அல்லது ஆசையின் காரணமாகவோ ஒரு காரியத்தை ஆணையிட்டால் தர்மத்தை மதிப்பவனும், கொடூரனல்லாதவனுமான எவன்தான் அதைச் செய்யமாட்டான்?(58) என்னால் பிதாவின் பிரதிஜ்ஞையை முழுவதையும் தவிர்க்க இயலாது. நம்மிருவருக்கும் தந்தையானவர் ஆணையிடும் குருவாக இருக்கிறார். நம் தேவியாருக்கும் {அன்னை கௌசல்யைக்கும்} அவர் தர்மப்படி அதிகாரம் கொண்ட பர்த்தாவாக இருக்கிறார்.(59) அந்த தர்மராஜா {தசரதர்} ஜீவித்திருக்கும் வரையில், குறிப்பாக அவர் தர்மத்தின் பாதையில் செல்லும் வரையில், அந்நிய விதவா நாரீயைப் போல {வேறு விதவைப் பெண்ணைப் போல, கௌசல்யா} தேவியால் எவ்வாறு என்னுடன் இங்கிருந்து வெளியே வர இயலும்?[3]" {என்று லக்ஷ்மணனிடம் சொல்லிவிட்டு},(60) {மீண்டும் கௌசல்யையிடம்}, "தேவி, வனம் செல்ல என்னை அனுமதிப்பாயாக. சத்தியத்தால் {சொர்க்கத்திற்குத்} திரும்பிய யயாதியைப் போலவே, நானும் காரியம் முடிந்ததும் நிச்சயம் வந்து சேர்வேன். நலத்திற்கான மந்திரங்களைச் சொல்லி ஆசிகூறுவாயாக.(61) கேவலம் ராஜ்ஜிய காரணத்திற்காக மதிப்பையும், புகழையும் என்னால் துறக்க இயலாது. தேவி, தீர்க்க காலமற்ற ஜீவிதத்தில் {நெடுங்காலம் நிலைக்காத வாழ்க்கையில்} இப்போது அற்பமான மஹீயை {பூமியை} அதர்மமான முறையில் ஏற்க விரும்பேன்" {என்றான் ராமன்}.(62)
[3] என்னை நீங்கி இடர்க்கடல் வைகுறும்மன்னர் மன்னனை வற்புறுத்தாது உடன்துன்னு கானம் தொடரத் துணிவதோஅன்னையே அறம் பார்க்கிலை ஆம் என்றான்- கம்பராமாயணம் 1624ம் பாடல்பொருள்: "என்னைப் பிரிந்து துன்பக்கடலில் மூழ்கியுள்ள மன்னர் மன்னனைத் தேற்றாமல் அடர்ந்த காட்டில் என் பின்தொடர நீ துணியலாமோ? அன்னையே, நீ மனைவியின் அறம் ஆராய்ந்து பார்க்கவில்லையே" என்றான் ராமன்.
நரரிஷபனான அவன் {ராமன்}, பராக்கிரமத்துடன் தண்டகவனம் செல்ல விரும்பி, மாதாவுக்கு ஆறுதல் கூறி, நற்சிந்தனைகளால் தீவிரமாகத் தம்பிக்கு அறிவுரை கூறி, ஹிருதயப்பூர்வமாகத் தமது ஜனனியை {அன்னையை} பிரதக்ஷிணம் செய்தான் {வலம் வந்தான்}.(63)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 021ல் உள்ள சுலோகங்கள் : 63
Previous | | Sanskrit | | English | | Next |