Tuesday 19 April 2022

கன்று பிரிந்துழிக் கறவை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 020 (55)

A cow without calf | Ayodhya-Kanda-Sarga-020 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: நாடுகடத்தப்பட்டு வனத்துக்குச் செல்ல இருப்பதைச் சொல்ல கௌசல்யையை அணுகிய ராமன்; மயக்கமடைந்த கௌசல்யை; அவளது புலம்பல்...

Rama Kausalya

புருஷவியாகரனான அவன் {மனிதர்களில் புலியான ராமன், தன் தந்தையான தசரதனை}, வணங்கிப்  புறப்பட்டபோது, அந்தப்புரத்து ஸ்திரீகள் துன்பத்துடன் {இவ்வாறு புலம்பி} உரக்க அழுதனர்:(1) "பிதாவால் தூண்டப்படாமலேயே எவன் தன் செயல்களால் அந்தப்புரம் முழுமையையும் பாதுகாத்து வந்தானோ அந்த ராமன் இப்போது நாடுகடத்தப்படுகிறான்.(2) இந்த ராகவன் பிறந்தது முதல் ஜனனியான {தாயான} கௌசல்யையிடம் நடந்து கொள்வதைப் போலவே நம்மிடமும் கவனமாக நடந்து கொண்டான்.(3) குரோத காரியங்களைத் தவிர்த்து, குரோதமடைபவர்கள் அனைவரையும் தணித்து, அவதூறு செய்யப்பட்டாலும் குரோதமற்றவனாக இருந்தவன் இப்போது இங்கிருந்து நாடுகடத்தப்படுகிறான்.(4) இந்த புத்தியற்ற ராஜா {தசரதன்}, சர்வபூதங்களையும் பாதுகாத்த ராகவனைக் கைவிட்டு ஜீவலோகத்தைப் புண்படுத்துகிறான்"(5) என்றே கன்றை இழந்த பசுக்களைப் போல சர்வ மஹிஷிகளும் {இராஜனின் பத்தினிகள் அனைவரும்} பதியை நிந்தித்து உரக்க அழுது கொண்டிருந்தனர்.(6) துயர்மிக்க அந்த கோர சத்தத்தை அந்தப்புரத்தில் கேட்ட மஹீபதி {தசரதன்}, புத்திரசோகத்துடன் கூடியவனாக ஆசனத்தில் விழுந்தான்.(7) 

பெரிதும் துன்புற்ற ராமன், குஞ்சரத்தை {யானையைப்} போல பெருமூச்சு விட்டபடியும், தற்கட்டுப்பாட்டுடனும், தன்னுடன் பிறந்தவனுடன் மாதாவின் {லக்ஷ்மணனுடன் கௌசல்யையின்} அந்தப்புரத்திற்குச் சென்றான்.(8) அவன், அந்த கிருஹத்தின் வாயிலில் பரமபூஜை செய்யப்படும் விருத்த புருஷனையும் {கிழவன் ஒருவனையும்}, அங்கே நின்று கொண்டிருக்கும் பலரையும் கண்டான்.(9) இராமனைக் கண்ட அவர்கள் அனைவரும் உடனே எழுந்திருந்து, "ஜெயசிரேஷ்டனான {வெல்பவர்களில் சிறந்தவனான} ராகவனுக்கு ஜெயம்" என்று உற்சாகமாக வாழ்த்தினர்.(10) அவன் முதல் வாயிலுக்குள் பிரவேசித்ததும், மன்னனால் கௌரவிக்கப்பட்டவர்களும், வேத சம்பன்னர்களும், விருத்தர்களுமான பிராமணர்களை இரண்டாம் வாயிலில் கண்டான்.(11) இராமன் அந்த விப்ரர்களை வணங்கிவிட்டு, மூன்றாம் வாயிலைக் காவல் காக்கும் விருத்த ஸ்திரீகளையும், சிறுமிகளையும் கண்டான்.(12) மகிழ்ச்சியடைந்த அந்த ஸ்திரீகள் {ஜயவிஜயீபவ என்ற} வெற்றி மொழியால் {ராமனை} வாழ்த்திவிட்டு, துரிதமாக கிருஹத்திற்குள் பிரவேசித்து, ராமனின் மாதாவிடம் {கௌசல்யையிடம்} அந்த இன்செய்தியை அறிவித்தனர்.(13) 

இராத்திரி முழுவதும் நிலைமாறா உறுதியுடன் {பரமாத்மாவை தியானித்தபடியே விழித்து} இருந்த கௌசல்யை, விடியலில் புத்திரனின் {ராமனின்} நலத்தை வேண்டி விஷ்ணு பூஜை செய்து கொண்டிருந்தாள்.(14) நித்தியம் விரதம் நோற்க விரும்பும் அவள், மங்கல வெண்பட்டுடுத்தி, பேரானந்தத்தில் சிலிர்த்தபடியே மந்திரங்களுடன் அக்னி ஹோமம் செய்து கொண்டிருந்தாள்.(15) அப்போது மாதாவின் {கௌசல்யையின்} மங்கல அந்தப்புரத்திற்குள் பிரவேசித்த ராமன், அங்கே ஹுதாசன ஹாவயந்தம் {அக்னி ஹோமம்} செய்து கொண்டிருந்த தன் மாதாவைக் கண்டான்.(16) அங்கே தேவகாரிய நிமித்தமாக தயிர், அக்ஷதை {நொறுங்கலற்ற அரிசி}, நெய், மோதகங்கள், ஹவிசுக்கான பொருட்கள், பொரி, வெண்மாலைகள், பாயஸம், கிருசரம் {எள் பணியாரம்}, சமித்துகள் {வேள்விக்கான விறகுக்குச்சிகள்}, பூர்ணகும்பங்கள் {நீர்நிறைந்த குடங்கள்} ஆகிய வழிபாட்டுக்குரிய பொருட்கள் திரட்டி வைக்கப்பட்டிருப்பதை அந்த ரகுநந்தனன் கண்டான்.(17,18) வெண்பட்டுடுத்தியவளும், விரத யோகத்தால் மெலிந்திருந்தவளுமான அந்த தேவவர்ணினி {தேவதையைப் போன்ற தோற்றம் கொண்ட கௌசல்யை}, தேவர்களுக்கு நீர்க்காணிக்கையளிப்பதை அவன் கண்டான்.(19) 

மாத்ருநந்தனனான தன் ஆத்மஜன் {அன்னைக்கு மகிழ்ச்சியளிப்பவனான தன் மகன் ராமன்} வந்திருப்பதை வெகுநேரத்திற்குப் பிறகுக் கண்டவள், கன்றிடம் வரும் படபையை {பெண் குதிரையைப்} போல அவனது முன்பு வந்தாள்.(20) மாதாவிடம் சென்று அவளது பாதங்களில் விழுந்து வணங்கிய ராமனை அவள் தன் கைகளில் வாரி அணைத்துக் கொண்டு உச்சிமுகர்ந்தாள்.(21) கௌசல்யை, வெல்லப்பட முடியாதவனான தன் ஆத்மஜன் ராகவனிடம் {தன் மகன் ராமனிடம்} இந்தப் பிரியமான, இதமான சொற்களை புத்ரவாத்சல்யத்துடன் சொன்னாள்:(22) "விருத்தர்களும், தர்மசீலர்களுமான ராஜரிஷிகளைப் போல நீண்ட ஆயுளையும், கீர்த்தியையும், உன் குலத்திற்குரிய தர்மத்தையும் அடைவாயாக[1].(23) இராகவா, சத்தியப்பிரதிஜ்ஞரும், உன் பிதாவுமான ராஜரைப் பார். தர்மாத்மாவான அவர் இன்றே உன்னை யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிப்பார்" {என்றாள் கௌசல்யை}.(24)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "இந்த உயர்குலத்தில், பெரியோர்களுடைய அனுஷ்டான ஸம்பிரதாயத்தையும், தர்மாத்மாக்களுடைய தருமத்தையும், மஹாத்மாக்களுடைய கீர்த்தியையும், ராஜர்ஷிகளுடைய ஆயுளையும் நீ பெற்று வாழ்வாயாக" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "விருத்தர்களும், தார்மிகர்களும், மஹானுபவர்களுமாகிய ராஜர்ஷிகளைப் போல, நீ தீர்க்காயுஷ்யத்தையும், பெருங்கீர்த்தியையும், உன் குலத்திற்குத் தகுந்த தர்மத்தையும் பெறுவாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "விருத்தர்களாகியும், தருமசீலர்களாகியும், மஹாத்துமாக்களாகியும் ராஜரிஷிகளுமாகியுமிருந்த முன்னோர்களுடைய நிறைந்த ஆயுளையும், கீர்த்தியையும், குலத்திற்குரிய அறத்தையும் பெற்று வாழ்வாயாக" என்றிருக்கிறது.

போஜனத்திற்கு {உணவருந்த கௌசல்யையால்} அழைக்கப்பட்ட ராகவன், தத்தம் செய்யப்பட்ட {உணவருந்துவற்காக தனக்கு அளிக்கப்பட்ட} ஆசனத்தைத் தொட்டு, கூப்பிய கைகளை மெல்ல உயர்த்தி தன் மாதாவிடம் பேசினான்.(25) அடக்கமான சுபாவமும், தாயிடம் மதிப்பும் கொண்டவன் {ராமன்}, தண்டகாரண்யத்திற்குப் புறப்பட்டுச் செல்லுமுன் அவளிடம் {இவ்வாறு} அனுமதி கோரும் வகையில்:(26) "தேவி, நேரப்போகும் மகத்தான பயத்தை நீ அறிந்தாயில்லை. இஃது உனக்கும், வைதேஹிக்கும் {விதேஹ இளவரசியான சீதைக்கும்}, லக்ஷ்மணனுக்கும் துக்கத்தை அளிக்கும்.(27) தண்டகாரண்யம் செல்லப்போகும் எனக்கு இந்த ஆசனம் எதற்கு? விஷ்டராஸனத்திற்கான {தர்ப்பைப் புல்லாலான ஆசனத்தில் அமர்வதற்கான} காலமிது[2].(28) மாமிசம் கைவிட்டு, மதுமூலபழங்களை {தேன், கிழங்கு, கனிகளை} உண்டு, ஜனங்களற்ற வனத்தில் வசித்து, சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} முனிவரைப் போல ஜீவிக்கப்போகிறேன்.(29) மஹாராஜா யௌவராஜ்ஜியத்தை பரதனுக்கும், மேலும் தண்டகாரண்ய வாச தவத்தை எனக்கும் கொடுத்திருக்கிறார்.(30) வனத்தில் கிட்டுவனவற்றைக் கொண்டு நிறைவடைய வேண்டிய நான், கனிகளும், கிழங்குகளும் உண்டு, ஜனங்களற்ற வனத்தில் ஷட்சாஷ்ட வருஷங்கள் {ஆறும், எட்டுமான பதினான்கு ஆண்டுகள்} வசித்திருப்பேன்" {என்றான் ராமன்}.(31)

[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தண்டகாரண்யத்திற்கு இதோ நான் போகின்றேன். இந்த நான் நுணியோடிருக்கிற இருபத்தைந்து தருப்பைகள் பரப்பப்பட்ட முனிவர்களின் ஆஸனத்தில் இருக்க வேண்டியவனாக இருக்கிறேன். எனக்கும் பூர்வஜன்ம க்ருத்யங்களின் பயனாய் விளையும் விதி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த காலதாமதம் செய்து சற்றிங்கிருப்பதால் எனக்கு என்ன ப்ரயோஜனம்?" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான் தண்டகாரண்யத்திற்குப் போகப் போகிறேன். எனக்கு இந்த மணமயாஸனம் ஏதுக்காக? தர்ப்பாஸனத்தில் உட்காரவேண்டுங் காலமன்றோ இதோ எனக்கு வந்திருக்கின்றது" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "விஷ்டரமென்றால் இருப்பத்தைந்து தர்ப்பங்களால் செய்யப்பட்ட தாபஸர்களின் ஆஸனம்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நான் இப்பொழுதே தண்டகாரணியம் செல்கின்றேன்; ஆதலின், இப்பொன்மணையாலெனக்கென்ன செய்யத்தக்கது? ரிஷிகளுக்குரிய இருப்பத்தைந்து தருப்பைகளாற் செய்யப்பட்ட விட்டரமென்னும் ஆசனத்திலுட்காருங்காலமன்றோ எனக்கு வாய்த்திருக்கின்றது" என்றிருக்கிறது.

அந்த தேவி {கௌசல்யை}, வனத்தில் பரசால் {கோடரியால்} வெட்டப்பட்ட ஆச்சா மரக் கிளையைப் போலும், திவத்தில் {தேவலோகத்தில்} இருந்து தள்ளப்பட்ட தேவதையைப் போலும் திடீரெனத் தரையில் விழுந்தாள்.(32) இராமன், துக்கத்திற்குத் தகாதவளான தன் மாதா {கௌசல்யை}, நனவிழந்தவளாகத் தரையில் வாழைமரத்தைப் போல விழுந்ததைக் கண்டு அவளைத் தூக்கினான்.(33) தீனமாக இருந்தவளும், நறுமணப்பொடியால் மறைக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டவளுமான அவளை அவன் {கௌசல்யையை ராமன்} தொட்டபோது, சுமை சுமக்கும் பெண் குதிரையைப் போலப் புரண்டு எழுந்தாள்[3].(34) 

[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "மகத்தான கஷ்டத்தை சுமக்கின்றவளாய் தன்னறிவையிழக்கும் தசையை அடைந்து தன்னறிவை பெற்றவளும் அச்வினீதேவதையைப் போன்றவளும், தேகமெல்லாம் பூஜாத்ரவ்யமாகிற கற்பூரத் தூள் படிந்திருக்கப்பெற்றவளுமான அவளை திருக்கரத்தினால் உற்சாகப்படுத்தி தட்டித் தடவிக் கொடுத்தருளினார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பாரத்தை வஹித்ததனால் மிகவும் ச்ரமப்பட்டு அந்த ச்ரமம் தீருகைக்காகப் பூமியில் விழுந்து புரண்டு எழுந்திருந்து ஓய்ந்திருக்கிற பெட்டைக் குதிரை போல அக்கௌஸல்யையும் துக்கத்தின் மிகுதியைப் பொறுக்க முடியாமல் கீழே விழுந்து ஸமஸ்த அவயங்களிலும் புழுதி நிரம்பப்பெற்று ராமன் எழுந்திருக்க எடுக்கையில் எழுந்திருந்தனள். அப்பொழுது ராமன் தனது தாயாருடைய தேஹம் முழுவதும் தூசி போகும்படி தன் கைகளால் தடவிக் கொடுத்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சுமையைச் சுமந்திறக்கி நிலத்தில் புரண்டெழுந்த பெண் குதிரைப் போன்ற தம் தாயின் திருமேனியில் படிந்திருந்த துகள்களைத் தமது திருக்கையால் துடைத்தேற்றினர்" என்றிருக்கிறது.

சுகத்திற்குத் தகுந்தவளும், சோகத்தால் பீடிக்கப்பட்டவளுமான அவள் {கௌசல்யை}, லக்ஷ்மணன் உடனிருந்து கேட்க புருஷவியாகரனான ராகவனிடம் {மனிதர்களில் புலியான ராமனிடம் இவ்வாறு} பேசினான்:(35) "புத்திரா, ராகவா, இந்த சோகத்தை ஏற்படுத்த நீ எனக்குப் பிறக்காதிருந்தாலும், பிரஜையற்றவளான {பிள்ளையற்றவளான} நான் இதைவிடப் பெரிய துக்கத்தை அடைந்திருக்க மாட்டேன் {நான் பிள்ளையற்றவளாக இருந்தாலும் இதைப் போன்ற துக்கத்தை அனுபவித்திருக்க மாட்டேன். எனக்கு சோகத்தை உண்டாக்கவே எனக்கு நீ பிறந்திருக்கிறாய்}.(36) புத்திரா, மலடிக்கும் கூட "பிள்ளையில்லையே" என்ற ஒரேயொரு சோகத்தைத் தவிர வேறு சந்தாபம் {மனத்துன்பம்} ஏதும் இல்லை.(37) இராமா, பூர்வத்தில் என் பதியின் {கணவரின்} ஆதிக்கத்தில் சுகத்தையோ, செழிப்பையோ நான் கண்டதில்லை. என் புத்திரனாலாவது அவற்றைக் காண்பேனென நம்பிக்கொண்டிருந்தேன்.(38) வராஸதீயான நான் {அறம்சார்ந்த சிறந்த மனைவியான நான்}, எனக்கு இளையவர்களும், இதயத்தைத் துளைப்பவர்களுமான சகபத்னிகளின் {சக்களத்திகளின்} இனிமையற்ற வாக்கியங்கள் பலவற்றைக் கேட்கப்போகிறேன்.(39) எனக்கு உண்டாகும் இந்த முடிவில்லாத அழுகையையும், சோகத்தையும் விட பெண்களுக்கு துக்கமிக்கவை வேறென்ன?(40) 

ஐயா, நீ அருகில் இருக்கும்போதே நான் புறக்கணிக்கப்படுகிறேன். நீ நாடு கடத்தப்பட்டதும் நேரப்போவதை சொல்லவும் வேண்டுமோ? மரணம் எனக்கு நிச்சயம்.(41) கணவரால் நித்தியம் புறக்கணிக்கப்பட்ட நான், கைகேயியின் பரிவாரத்திற்கு {பணியாட்களுக்கு} இணையானவளாகவோ, தாழ்ந்தவளாகவோ பெருமை இழந்துவிட்டேன்.(42) என்னை சேவிக்கும் எவரும், என்னைப் பின்தொடரும் எந்த ஜனமும் கைகேயியின் புத்திரனை {பரதனைக்} கண்ட பிறகு என்னிடம் பேசவும் மாட்டார்கள்.(43) புத்திரா, எப்போதும் குரோதத்துடன் புண்படுத்திப் பேசும் கைகேயியின் முகத்தை துர்க்கதியை அடைந்திருக்கும் என்னால் எவ்வாறு காண இயலும்?(44) இராகவா, உனக்கு ஜாதஸ்யம் செய்தது {ஏழு வயது முடிந்ததும் நேரும் இரண்டாம் பிறப்பான உபநயனஞ் செய்தது} முதல் தசசப்த வருஷங்களாக {பதினேழு ஆண்டுகளாக} என் துக்கங்கள் மறையும் என்ற நம்பிக்கையுடன் நான் காத்துக் கொண்டிருக்கிறேன்[4].(45) 

[4] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராம, நீ பிறந்தது முதல், இருபத்திநான்கு வருஷங்கள் என்னால் எப்படிப்பட்ட கஷ்டத்திற்கும் தடுபடாதிருத்தல் என்பதை எதிர்பாராதவளாய் கழிக்கப்பட்டன" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராமா, நீ பிறந்தது முதற்கொண்டு இப்பொழுதைக்குப் பதினேழு ஸம்வத்ஸரங்களாக, உனக்கு யௌவராஜ்யம் வந்து என் துக்கம் தீர வேண்டுமென்று விரும்பிக் கொண்டு நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கின்றனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "நீ அவதாரஞ்செய்து ஏழு வருஷஞ்சென்றபின் எட்டாவதாகிய கர்ப்பவாசம் முதலொன்பதாவதாகிய பருவத்தில் உனக்கு உபநயனஞ்செய்யப்பட்டதன்றோ? அது உனக்கு இரண்டாவது பிறப்பாயிற்று; அதுமுதலாக இதுவரையில் பதினேழுவருடங்களாயின. ஆக உனக்கு இருபத்துமூன்று வயது சென்று, இருபத்துநான்காவது வயதன்றோ? இது இதுவரையும், நான் துக்கமெல்லாந்தீர்ந்து இன்பமடைவெனென்றே எண்ணி எண்ணிக் காலத்தைக் கழித்தேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீ பிறந்து பதினேழு வருடங்கள் கழிந்து விட்டன" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதிப்பில், "புனித நூலை நீ பெற்று பதினேழு ஆண்டுகளாகின்றன. அப்போது முதல் உன் அபிஷேகத்தையும், அதன் மூலம் என் கவலைகள் விலகுவதையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "உன் (இரண்டாம்) பிறப்பில் இருந்து பதினேழு வருடங்களை என் சோகம் தீரும் என்ற நம்பிக்கையுடன் கழித்திருக்கிறேன்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இங்கே காட்டிற்குச் செல்லும்போது இராமனின் வயதைச் சொல்வதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். திருமணத்தின் போது ராமனின் வயது பதினாறு. சீதையை மணந்து கொண்டு, அபிஷேகம் முன்மொழியப்படுவது வரை பனிரெண்டு வருடங்கள் அவன் அவளோடு இன்புற்றிருந்தான். இஃது அப்போது அவனுக்கு இருபத்தேழு வயது எனக் கொள்ளச் செய்கிறது. இங்கே சொல்லப்படும் பதினேழு என்ற கூற்றை ஏற்றால், பத்து வருடங்கள் குறைகிறது. தச சப்தசா என்று சொல்லப்படுவதிலேயே மற்றொரு பத்து இருக்கிறது என்று கொண்டு சிலர் இருபத்தேழு என்ற வயதை ராமனுக்குக் கொடுக்கின்றனர். பின் வரும் சர்க்கங்களில் ராமனின் வயதை ராவணனிடம் சீதை சொல்லும்போது இருபத்தைந்து என்று சொல்கிறாள். ராமன் விஷ்வாமித்ரருடன் செல்லும்போது பதினாறு வயதுக்கும் குறைந்தவன். அதாவது பதினைந்தாகவும் இருக்கலாம், பனிரெண்டாகவும் இருக்கலாம். பனிரெண்டு வயதில் திருமணத்திற்குப் பிறகு ராமன் பனிரெண்டு வருடங்கள் வீட்டில் இன்புற்றிருந்தான் எனக் கொண்டால் அவனுக்கு இருபத்துநான்கு வயதாகிறது. ஏழு கடந்த எட்டாம் வயதில் உபநயனம் எனும் இரண்டாம் பிறப்பு நேர்ந்தால் இந்த தச சப்த என்ற உரை இருபத்து நான்கு என்ற வயதைச் சரியாகச் சுட்டுகிறது" என்றிருக்கிறது.

இராகவா, எனவே இவ்வாறு மூப்படைந்திருக்கும் நான், சகபத்னிகள் அவமதிக்கும் முடிவுறாத நீண்டகால சோகத்தை சகிக்க விரும்பவில்லை.(46) பரிதாபகரமான என்னால், பரிபூரண சசிபிரபையான {முழு நிலைவைப் போல ஒளிரும்} உன் முகத்தைக் காணாமல் இந்தப் பரிதபாத்திற்குரிய ஜீவிதத்தை எவ்வாறு கடத்த முடியும்?(47) உபவாஸங்கள், யோகங்கள், துக்கத்துடன் கூடிய பல்வேறு கடும் முயற்சிகளாலும் துர்க்கதியடைந்திருக்கும் என்னால் நீ வளர்க்கப்பட்டாய். {அவையனைத்தும்} வீணே.(48) மழைக்காலப் புது வெள்ளத்தால் பீடிக்கப்பட்டாலும் உடையாத மஹாநதியின் கரையைப் போலவே என் இதயமும் திடமாக இருக்கிறதே.(49) உண்மையில் எனக்கு மரணமில்லை போலும். யமனின் வசிப்பிடத்தில் எனக்கு இடமும் இல்லை. அதனால்தான் அழுது கொண்டிருக்கும் பெண்மானைக் கொண்டு செல்லும் சிங்கத்தைப் போல அந்தகன் இப்போதே என்னைக் கொண்டு போகாமல் இருக்கிறான்.(50) 

உண்மையில் இந்த துக்கத்தால் என் தேகம் துளைக்கப்படுகிறது. இருந்தாலும் என் இதயம் இரும்பாலானதைப் போல திடமாக இருக்கிறது. அதனால்தான் அது துண்டுகளாக நொறுங்கி புவியில் விழாமல் இருக்கிறது. எனக்கு அகால மரணமில்லை என்பது நிச்சயம்தான்.(51) என் விரதங்களும், தானங்களும், கட்டுப்பாடுகளும் வீணானது எனக்கு துக்கத்தைத் தருகிறது. உவர் நிலத்தில் விதைக்கபட்ட வித்தைப் போல சந்ததிக்காக நான் செய்த தபங்கள் வீணாகியிருக்கின்றன.(52) பெருந்துக்கத்தில் இருக்கும் ஒருவன் தன் விருப்பத்தின் பேரில் அகால மரணமடைய முடியுமென்றால், கன்றை இழந்த தேனுவை {பசுவைப்} போல நீயில்லாத நானும் இறந்தவர்களின் புகழ்மிக்க கதியை அடைந்திருப்பேன்[5].(53) மேலும் சந்திரனைப் போல ஒளிரும் முகத்தைக் கொண்டவனே, நீ இல்லாமல் நான் ஜீவிப்பதில் பயனில்லை. இரங்கத்தக்க பலமற்ற பசு கன்றுடன் செல்வதைப் போல நானும் உன்னுடனே வனத்திற்கு வருகிறேன்" {என்றாள் கௌசல்யை}.(54)

[5] அறம் எனக்கு இலையோ எனும் ஆவி நைந்து
இறவு அடுத்தது என் தெய்வதங்காள் எனும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்

- கம்பராமாயணம் 1618ம் பாடல்

பொருள்: தர்மம் எனக்குத் துணையாக இல்லையோ என்பாள். தெய்வங்களே, என் ஆவி நைந்து இறக்கும்படி வந்ததென்ன என்பாள். அவளுக்கு வேறு உவமை சொல்வது என்ன பயன்? கன்றைப் பிரிந்த கறைவைப் பசுவைப் போல அவள் மனம் உருகிக் கலங்கினாள்.

அப்போது அவள், தன் மகன் துக்கத்தில் கட்டப்பட்டதைக் கண்டு பலவாறு அழுது புலம்பும் கின்னரியைப் போல மகத்தான வியசனத்தில் {பெருந்துன்பத்தில்} இருக்கும் ராகவனைப் பார்த்து சுகமற்றவளாகக் கோபத்துடன் அழுதாள்.(55)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 020ல் உள்ள சுலோகங்கள் : 55

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை