Tuesday 5 April 2022

பேருவகை பொங்கப் புக்கான் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 015 (49)

He entered overwhelmed in joy | Ayodhya-Kanda-Sarga-015 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைக் கண்ட சுமந்திரன்; இராமனின் பெரும் மாளிகைக்குள் நுழைந்தது...

Sumanthra and kings

இரவு முழுவதும் அங்கே தங்கியிருந்தவர்களும், வேதபாரகர்களுமான {வேதங்களில் திறன்மிக்கவர்களுமான} பிராமணர்கள், ராஜபுரோஹிதரின் {வசிஷ்டரின்} அருகே வந்து நின்றனர்.(1) அபிஷேக காரியத்தை வரவேற்கும் அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, பலமுக்கியஸ்தர்கள் {படைத் தலைவர்கள்}, நகர முக்கியஸ்தர்கள் ஆகியோரும் அங்கே கூடினர்.(2) துவிஜேந்திரர்கள் {இருபிறப்பாளர்களில் தலைவர்கள்} சூரியன் உதித்து புஷ்யமும், இராமனின் ஜன்ம லக்னமான கர்கடகம் வந்ததும் ராமனின் அபிஷேகத்தை நடத்த ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.(3,4அ) 

காஞ்சனஜலகும்பங்களும் {பொன்மயமான நீர்க்குடங்களும்}, நன்கு அலங்கரிக்கப்பட்ட பத்ரபீடங்களும் {அரியணைகளும்}, ஒளிரும் புலித்தோலால் மறைக்கப்பட்ட ரதமும் ஆயத்தமாக இருந்தன.(4ஆ,5அ) கங்கா யமுனா சங்கமத்தில் இருந்தும், அந்நிய சரிதங்கள் {வேறு ஆறுகள்}, மடுக்கள், கிணறுகள், ஓடைகள் ஆகியவற்றில் இருந்தும் கொண்டு வரப்பட்ட புண்ணிய ஜலமும், மேல்நோக்கிப் பாயும், குறுக்காகப் பாயும், ஒன்றாகக் கலப்பவையுமான ஆறுகளில் இருந்தும், சமுத்திரங்களில் இருந்துமென அனைத்துப் பக்கங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜலமும் அங்கே இருந்தன.(5ஆ-7அ) பொன், வெள்ளி மயமான குடங்கள், சிறந்த நீர், பொரிகளால் நிறைந்து, பாலில் நனைந்த இலைகளாலும், தாமரைகளாலும், கருநெய்தல்களாலும் மறைக்கப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன.(7ஆ,8அ) 

தேன், தயிர், நெய், பொரி, தர்ப்பை, மலர்கள், பால் ஆகியவை ஆயத்தமாக இருந்தன. நல்ல பழக்கவழக்கங்களைக் கொண்ட வேசிகளும், சர்வ ஆபரணங்களுடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு அங்கே நின்றனர்.(8ஆ,9அ) சந்திரக் கதிர்கள் பாய்ந்தது போன்றதும், காஞ்சனத்தால் {பொன்னால்} ஆனதும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான உத்தம வாலவியாஜனம்  {சாமரம்} ராமனுக்காகத் தயாராக இருந்தது.(9ஆ,10அ) சந்திர மண்டலத்திற்கு இணையாக அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்த வெண்குடையும் அபிஷேகத்திற்காகத் தயாராக வைக்கப்பட்டிருந்தது.(10ஆ,11அ) நல்ல நிலையில் இருந்த வெள்ளை ரிஷபமும் {காளையும்}, வெள்ளை அஷ்வமும் {குதிரையும்}, அழகும், வலிமையும் கொண்டதும், மன்னர்கள் ஏறத் தகுந்ததுமான கஜமும் {யானையும்} தயாராகக் காத்திருந்தன.(11ஆ,12அ) சர்வாபரணபூஷிதைகளான அஷ்ட மங்கல கன்னிகளும், சர்வவாத்தியங்களுடன் கூடிய வந்திகளும் {துதிபாடிகளும்}, பிறரும் காத்திருந்தனர்.(12ஆ,13அ)

அபிஷேகத்திற்கு வேண்டிய பொருட்களைத் திரட்டிக் கொண்டு, இராஜபுத்திரனின் அபிஷேகத்திற்கான ராஜவசனத்தின் பேரில் அங்கே கூடியவர்கள், இக்ஷ்வாகுக்களுடைய ராஜ்ஜியத்தின் மஹீபதியைக் காணாமல், "இது குறித்து ராஜனிடம் சொல்லப் போவது யார்?" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்:(13ஆ-15அ) "இராஜனைக் காணமுடியவில்லை. திவாகரனும் {சூரியனும்} உதித்துவிட்டான். மதிமிக்கவனான ராமனின் யௌவராஜ்ஜியாபிஷேகத்திற்கான அனைத்தும் தயாராக இருக்கின்றன" {என்று அவர்கள்},(15ஆ,16அ) இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, ராஜனால் நன்கு மதிக்கப்படுபவனான சுமந்திரன், சர்வ பூமிக்கும் சொந்தக்காரர்களான அந்த மஹீபதிகளிடம் இதைச் சொன்னான்:(16ஆ,17அ) "இராஜாவுடைய ஆணையின் பேரில் நான் ராமனிடம் விரைந்து செல்கிறேன். நீங்கள் அனைவரும் எங்கள் ராஜனால், விசேஷமாக ராமனால் பூஜிக்கத்தகுந்தவர்கள்.(17ஆ,18அ) ஆயுஷ்மான்களான நீங்கள், ராஜன் விழித்திருந்தும் இங்கே வராததற்கான காரணம் குறித்தும், அவரது சுகத்தைக் குறித்துக் கேட்கிறீர்கள் என்பதை நான் அவரிடம் சொல்வேன்" {என்றான் சுமந்திரன்}.(18ஆ,19அ)

புராணங்களை அறிந்த சுமந்திரன், இவ்வாறு பேசிவிட்டு, அந்த வீட்டில் எப்போதும் சாத்தியே இருக்கும் அந்தப்புர வாயிலுக்குள் பிரவேசித்தான்.(19ஆ,20அ) விஷாம்பதியின் வம்சத்தைப் புகழ்ந்தவாறே இவ்வாறு பிரவேசித்தவன், நரேந்திரனின் {தரசரதனின்} சயன அறையை நெருங்கியதும் தொலைவிலேயே நின்று கொண்டான்.(20ஆ,21அ) அவன் அந்த வீட்டிற்குள் சென்று திரைச்சீலையின் அருகே நின்று ராகவனின் குணங்களைப் பட்டியலிட்டு ஆசிகள் கூறி {பின்வருமாறு} புகழ்ந்தான்.(21ஆ,22அ) "காகுத்ஸரே, சோமன், சூரியன், சிவன், வைஸ்ரவணன் {குபேரன்}, வருணன், அக்னி, இந்திரன் ஆகியோர் உமக்கு வெற்றியை அளிக்கட்டும்.(22ஆ,23அ) நிருபசார்தூலரே {மன்னர்களில் புலியே}, பகவதியான {போற்றத்தக்க} ராத்திரி கடந்துவிட்டது. மங்கல நாளும் வந்தது. எழுவீராக. இனி செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வீராக.(23ஆ,24அ) இராகவ நிருபரே, பிராமணர்களும், படையின் முக்கியஸ்தர்களும், வணிகர்களும் உம்மைக் காண விரும்பி வந்திருக்கின்றனர். எழுவீராக" {என்றான் சுமந்திரன்}.(24ஆ,25அ)

அதன்பிறகு அந்த ராஜா {தசரதன்} எழுந்திருந்து, அப்போதும் துதித்துக் கொண்டிருந்தவனும், மந்திராலோசனைகளில் சிறந்தவனும், சூதனுமான சுமந்திரனிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(25ஆ,26அ) "சூதரே, ராமனை அழைத்து வருமாறு சொல்லப்பட்ட பிறகும் என்ன காரணத்தினால் என் ஆஜ்ஞையை {ஆணையை} மீறினீர்" {என்றான்}.(26ஆ,27அ) இராஜா தசரதன் மீண்டும் அந்த சூதனிடம் இதை ஆணையிட்டான், "நான் உறங்கவில்லை. உடனே ராமனை இங்கே அழைத்துவருவீராக" {என்றான் தசரதன்}.(27ஆ,28அ)

இராஜவசனத்தைக் கேட்டவன், அவனுக்கு சிரசால் பிரதிபூஜை செய்துவிட்டு, மிக நல்ல செய்தியென நினைத்துக் கொண்டே நிருபனின் வசிப்பிடத்தில் இருந்து புறப்பட்டான்.(28ஆ,29அ) அமைதியடைந்த மனத்துடன் கூடிய அந்த சூதன், பதாகைகள், துவஜங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராஜமார்க்கங்களை {அரசவீதிகளைக்} கண்டவாறே மகிழ்ச்சியாகவும், இன்பமாகவும் சென்றான்.(29ஆ,30அ) அந்த சூதன், மக்கள் அனைவரும் ராமன் அதிகாரம் பெறப்போவதைக் குறித்து மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டான்.(30ஆ,31அ) பிறகு அந்த சுமந்திரன், கைலாச சிகரம் போல ஒளிர்ந்து கொண்டிருப்பதும், சக்ரனின் மாளிகையைப் போல பிரகாசிப்பதுமான ராமனின் மாளிகையைக் கண்டான்.(31ஆ,32அ)

அந்த சூதன், பெரிய வாயிற்கதவுகளுடன் கூடியதும், நூற்றுக்கணக்கான முகப்புகளால் அலங்கரிக்கப்பட்டதும்,  காஞ்சனப்ரதிமைகளுடன் {பொற்சிலைகளுடன்} கூடிய மாடங்களைக் கொண்டதும், மணிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வாயில்களைக் கொண்டதும், கூதிர் கால மேகத்தைப் போல ஒளிர்வதும், மேரு மலையின் குகைக்கு ஒப்பானதும், மணிகளாலும், சிறந்த பெரும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், ஏராளமான முத்துகளால் ஒளிர்ந்து கொண்டிருந்ததும், சந்தனம் மற்றும் அகிலால் அலங்கரிக்கப்பட்டு நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்ததும், இன்னொலி எழுப்பும் சாரஸங்களாலும், மயூரங்களாலும் {கொக்குகளாலும், மயில்களாலும்} ஒளி பொருந்தியிருந்ததும், நன்கு நிலைநிறுத்தப்பட்ட செந்நாய் சிற்பங்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டதும், பூதங்களின் கண்களையும், மனங்களையும் ஈர்க்கும் வகையில் இருந்ததும், சந்திரன், பாஸ்கரனுக்கு {சூரியனுக்கு} இணையாகப் பிரகாசித்துக் கொண்டிருந்ததும், குபேரனின் பவனத்திற்கு {மாளிகைக்கு} ஒப்பானதும், மஹேந்திரனின் மாளிகைக்கு இணையானதும், நானாவித பக்ஷிகள் நிறைந்ததும், மேரு மலைக்கு ஒப்பானதுமான ராமனின் மாளிகையைக் கண்டான். குவியல் குவியலாக ஜனங்களும், ஜானபதவாசிகளும் இராமாபிஷேகத்தைக் காணும் விருப்பத்தில் பரிசுப் பொருட்களுடன் அங்கே வந்து கைகளைக் கூப்பி காத்திருந்தனர். நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த குப்ஜர்களும் {கூனர்களும்}, கைராவகர்களும் {குள்ளர்களும்} திரிந்து கொண்டிருந்த அந்த மாளிகை மஹாமேகத்தைப் போல உயர்ந்திருந்தது.(32ஆ-40)

குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் ஏறிச் சென்ற அந்த சாரதி {சுமந்திரன்}, மனித குலத்திற்கு அழகூட்டுவதும், நகர மக்களின் மனங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதுமான ராமனின் கிருஹத்தை அணுகினான்.(41) மான்களாலும், மயில்களாலும் நிறந்ததும், சசிபதியின் {இந்திரனின்} மாளிகையைப் போல பெருஞ்செல்வமிக்கதுமான அந்தச் சிறந்தவனின் மாளிகையை அணுகியதும் அந்த சாரதிக்கு மயிர்ச்சிலிர்ப்பு உண்டானது[1].(42) அந்த ரதிகன் {சாரதியான சுமந்திரன்}, திரிதசர்களின் {தேவர்களின்} வசிப்பிடங்களுக்கு ஒப்பாக அலங்கரிக்கப்பட்டவையும், கைலாச மலையைப் போன்று உயரமானவையுமான ராமனின் நலன்விரும்பிகளான சிறந்த நண்பர்களின் வசிப்பிடங்களைக் கடந்து சுதாந்தத்திற்குள் பிரவேசித்தான்.(43) அப்போது ராமாபிஷேகம் குறித்தும், அந்த நரேந்திரனின் மங்கலச் செல்வம் குறித்தும் ஜனங்கள் மகிழ்ச்சியாகப் பேசிக் கொள்வதைக் கேட்டான்.(44) 

[1] என்றனள் என்னக் கேட்டான் எழுந்த பேருவகை பொங்கப்
பொன் திணி மாட வீதி பொருக்கென நீங்கி புக்கான்
தன்திருவுள்ளத்துள்ளே தன்னையே நினையும் மற்று அக்
குன்று இவர் தோளினானைத் தொழுது வாய் புதைத்து கூறும்

- கம்பராமாயணம் 1574ம் பாடல்

பொருள்: பிள்ளையைக் கொணர்க என்று கைகேயி சொன்னதைக் கேட்டு உண்டாகிய பெரும் மகிழ்ச்சி பொங்க, பொன்னும், மணியும் மிகுந்த மாடவீதிகளை விரைவாகக் கடந்து சென்று (இராமனின் மாளிகைக்குள்) புகுந்தான். தன் மனத்துள்ளே தன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்ற குன்று போன்ற தோள்களைக் கொண்டவனை {இராமனை} வணங்கி வாய்மூடி பின்வருமாறு சொன்னான்.


மஹேந்திரனின் மாளிகைக்கு நிகரானதும், மான்களாலும், பக்ஷிகளாலும் நிறைந்ததும், மேரு மலையின் உச்ச சிகரம் போல பிரகாசித்துக் கொண்டிருந்ததுமான ராமனின் அழகிய மாளிகையை அந்த சுமந்திரன் கண்டான்.(45) அதன் வாயில், தங்கள் தங்கள் வாகனங்களை விட்டுவிட்டு பரிசுகளுடன் கைகளைக் கூப்பிக் கொண்டு செல்லும் கோடிகோடியான ஜானபதவாசிகாலும், ஜனங்களாலும் நிறைந்திருப்பதைக் கண்டான்.(46) அதன் பிறகு உயரமாக இருப்பதும், மஹாமேகம் போன்றதும், அங்குசத்திற்குக் கட்டுப்படாததும், மதங்கொண்டதும், ராமனின் வாகனமுமான சத்ருஞ்ஜயம் என்றழைக்கப்படும் அழகிய நாகத்தை {யானையைக்} கண்டான்.(47) வல்லபர்களும் {மன்னனின் விருப்பத்திற்குரியவர்களும்}, நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களுமான முக்கிய அமாத்யர்கள் {அமைச்சர்கள்}, குதிரை வண்டிகளில் வந்திருப்பதையும் கண்ட அவன், அனைத்துப் பக்கங்களிலும் கூடியுள்ள ஜனங்களைக் கடந்து சென்று வளமிக்க அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(48) பிறகு அந்த சாரதி, ஒரு மகரம் எண்ணற்ற ரத்தினங்களுடன் கூடிய கடலுக்குள் நுழைவதைப் போல, மலைச்சிகரத்திற்கும், அசைவில்லாத மேகத்திற்கும் ஒப்பானதும், மஹாவிமானங்களைப் போன்றதுமான அந்த மாளிகைக்குள் தடையில்லாமல் நுழைந்தான்.(49)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 015ல் உள்ள சுலோகங்கள் : 49

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை