Come and have the crown | Ayodhya-Kanda-Sarga-016 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் மாளிகையை அடைந்த சுமந்திரன்; தந்தையைச் சந்திக்க அரசவைக்குப் புறப்பட்ட ராமன்; வழியில் அயோத்தியாபுரிவாசிகளின் கருத்துகளைக் கேட்டவாறே சென்றது...
புராணங்களை {[அந்த அரண்மனையின்] பூர்வ கதைகளை} அறிந்த சுமந்திரன், அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து, தனிமையாக அந்தப்புர வாயிலை அடைந்து, கைகளில் விற்களையும், கணைகளையும் வைத்திருப்பவர்களும், பளபளக்கும் காது குண்டலங்களுடன் கூடியவர்களும், விழிப்புடனும், கவனத்துடனும், அர்ப்பணிப்புடனும் காப்பவர்களுமான இளைஞர்களால் வழிநடத்தப்பட்டவனாக {அம்மாளிகையின்} உள்கட்டை அடைந்தான்.(1,2) அங்கே காவி உடை தரித்தவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், கைகளில் பிரம்புடனும், தற்கட்டுப்பாட்டுடனும் கூடியவர்களும், விருத்தர்களுமான {பெண்களின் அறைகளைக் காவல் காக்கும் முதியவர்களுமான} மாளிகை கண்காணிப்பாளர்கள்[1] வாயில்களில் இருப்பதைக் கண்டான்.(3) இராமனின் நலன்விரும்பிகளான அவர்கள் அனைவரும், அவன் {சுமந்திரன்} வருவதைக் கண்டு, தங்கள் ஆசனங்களில் இருந்து சட்டென விரைந்தெழுந்து நின்றனர்.(4)
[1] இங்கே மாளிகை கண்காணிப்பாளர்கள் என்று சொல்லப்படுவது, ஒரு சில பதிப்புகளில் கைகளில் கோலேந்திய பெண்களைக் கண்காணிப்பவர்கள் என்ற பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "காவிவஸ்திரங்களைத் தரித்திருந்தவர்களும் வாயில் காப்பவர்கள் கையில் வைத்துக் கொண்டிருக்கும் கோல்களைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தவர்களும், நன்கு அலங்கரிக்கப்பெற்றவர்களும், மஹாபுண்யம் செய்தவர்களும், முதியவர்களுமான மாதர்களைக் காப்பவர்களை உட்கார்ந்திருப்பவர்களாய் கண்டார்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "மேலும் அவ்விடத்தில் ராமனுக்கு மனக் களிப்புண்டாகும் பொருட்டு அலங்காரமாகக் காவியுடை உடுத்து நன்கு அலங்காரஞ் செய்து கொண்டு, அந்தப்புரத்தில் வேலை செய்யும் பெண்டீர்களுக்குத் தலைவர்களாகிக் கையில் பிரம்பைப் பிடித்துக் கொண்டு அவ்வந்தப்புரத்து வாசற்படியிலிருந்து மிக மனவூக்கத்துடன் பாதுகாத்துக் கொண்டிருக்கிற சில விருத்தர்களைக் கண்டனன்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "மூப்பினராய்க் காவித்துணியுடுத்துப் பிரப்பந்தடி பிடித்து நிற்கின்ற கஞ்சுகமாக்களும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அங்கே முதியவர்கள், காவி உடை உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து, கைகளில் பிரம்பைப் பிடித்துக் கொண்டிருந்தனர். அவன் அந்த வாயில்களில் நின்று கொண்டிருப்பவர்களும், தற்கட்டுப்பாட்டுடன் கூடியவர்களுமான இந்தக் கண்காணிப்பாளர்களைக் கண்டான். ராமனின் இன்பத்திற்குரிய காரியங்களைச் செய்து கொண்டிருந்த அவர்கள் அவன் வருவதைக் கண்டனர்" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதிப்பில், "செவ்வாடை உடுத்தி நன்கலங்கரித்திருந்த முதியவர்கள், கைகளில் பிரம்புடன் ராணிகளின் அறைகளைக் காவல் காத்துக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.
பணிவான மனம் கொண்டவனான அந்த சூதபுத்திரன் {சுமந்திரன்}, அவர்களிடம், "வாயிலில் மதிப்புடன் சுமந்திரன் நிற்கிறான் என்று சீக்கிரம் ராமனிடம் அறிவிப்பீராக" {என்றான்}.(5) தலைவனின் {ராமனின்} நலன் விரும்பிகளான அவர்கள், பாரியையுடன் கூடிய ராமனிடம் விரைந்து சென்று அறிவித்தனர்.(6) சுமந்திரன், தன் பிதாவுக்கு அணுக்கமானவன் என்பதை அறிந்திருந்த ராகவன், இவ்வாறு சொல்லப்பட்டதும் தன் அன்பைக் காட்ட விரும்பி அங்கே அவனை உடனே அழைத்தான்.(7)
அந்தச் சூதன், வராஹ உதிரத்தை {பன்றியின் குருதியைப்} போன்றதும் {போன்று சிவந்ததும்}, தூய்மையானதும், சுகந்தமானதும், சிறந்ததுமான சந்தனத்தைப் பூசித் தன்னை அலங்கரித்துக் கொண்டு, சிறந்த விரிப்புடன் கூடிய பொன் மஞ்சத்தில் வைஷ்ரவணனை {குபேரனைப்} போல அமர்ந்து, சித்திரையுடன் கூடிய சசியை {சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சந்திரனைப்} போல, அருகில் சாமரத்துடன் நிற்கும் சீதையுடன் கூடிய பரந்தபனை {பகைவரை அழிப்பவனான ராமனைக்} கண்டான்.(8,9,10) மதிக்கத் தெரிந்தவனான அந்த வந்தி {துதிபாடியான சுமந்திரன்}, சூரியனைப் போலத் தன்னொளியால் ஒளிர்பவனும், பண்பட்டவனும், வரதனுமான அவனை மதிப்புடன் வணங்கினான்.(11)
இராஜமதிப்புடன் நடத்தப்பட்ட சுமந்திரன், விஹார சயனாசனத்தில் {தோள்சாய்ந்து படுக்கும் மஞ்சத்தில்} இருந்தவனும், அழகிய முகம் கொண்டவனுமான அந்த ராஜபுத்திரனிடம் {இளவரசனான ராமனிடம்} கூப்பிய கரங்களுடன் இதைச் சொன்னான்:(12) "கௌசல்யையின் நன்மகனே ராமா, உன் பிதாவும் {தசரதனும்}, மஹிஷியான கைகேயியும் உன்னைக் காண விரும்புகின்றனர். தாமதமின்றி அங்கே செல்வாயாக" {என்றான்}[2].(13)
[2] கொற்றவர் முனிவர் மற்றும் குவலயத்துள்ளார் உன்னைப்பெற்றவன் தன்னைப் போலப் பெரும் பரிவு இயற்றி நின்றார்சிற்றவைதானும் ஆங்கே கொணர்க எனச் செப்பினாள் - அப்பொன்தட மகுடம் சூடப் போதுதி, விரைவின் என்றான்- கம்பராமாயணம் 1575ம் பாடல்பொருள்: அரசர்களும், முனிவர்களும், உலகில் உள்ளோர் அனைவரும் உன்னைப் பெற்ற தசரதனைப் போல உன் மேல் பெரும் அன்பைக் காட்டினர். உன் சிற்றன்னையும் உன்னை அழைத்து வருமாறு சொன்னாள். எனவே, பொன்னாலான மகுடம் சூட விரைந்து வருவாயாக என்றான்.
பேரொளி படைத்த அந்த நரசிம்மன் {மனிதர்களில் சிங்கம் போன்ற ராமன்}, அவன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு நிறைவடைந்து, அவனைக் கௌரவித்து, சீதையிடம் இதைச் சொன்னான்:(14) "தேவி, தேவரும் தேவியும் {ராஜாவான தசரதரும், ராணியான கைகேயியும்} சேர்ந்து அபிஷேகம் தொடர்பாக என்னைக் குறித்து நிச்சயம் ஏதோ ஆலோசிக்கின்றனர். (15) கரிய கண்களைக் கொண்டவளும், சுதக்ஷிணையும் {நல்ல அறிவுத் திறன் கொண்டவளும்}, என் நலத்தை விரும்புகிறவளுமானவள் {கைகேயி}, ஏதோ அபிப்ராயத்தை அடைந்து, என் நிமித்தமாக ராஜாவைத் தூண்டுகிறாள்.(16) கேகயாதிபதியின் மகளும், என் தாயுமான அவள், என் செழிப்பை விரும்பி, என் நன்மையை விரும்பி, பெரும் மகிழ்ச்சியுடன் மஹாராஜாவைப் பின்தொடர்கிறாள்.(17) பிரியமஹிஷியுடன் கூடிய மஹாராஜா, என் விருப்பங்களையும், ஆசைகளையும் நிறைவேற்றுபவரான சுமந்திரரைத் தூதனுப்பியது என் பாக்கியம்.(18) எவ்வகையில் வர வேண்டுமோ அதே வகையில் தூது வந்திருக்கிறது. ராஜா, நிச்சயம் இன்றே என்னை யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப் போகிறார்.(19) இதோ சீக்கிரம் இங்கிருந்து சென்று மஹீபதியைக் காணப் போகிறேன். நீ பரிவாரங்களுடன் {உன் நட்புக்குழாமுடன்} மகிழ்ச்சியாக இன்புற்றிருப்பாயாக" {என்றான் ராமன்}.(20)
பதியால் மதிப்புடன் நடத்தப்பட்டவளும், கரிய கண்களைக் கொண்டவளுமான சீதை, மங்கலமானவற்றை நினைத்து வாயில் வரை தன் பர்த்தாவை {கணவனைப்} பின்தொடர்ந்து சென்றாள்.(21) {சீதை}, "பிரம்மன் வாசவனுக்கு {இந்திரனுக்குச்} செய்த ராஜசூய அபிஷேகத்தில் நடந்ததைப் போலவே, துவிஜர்களால் {இருபிறப்பாளர்களால்} சேவிக்கப்படும் ராஜ்ஜியத்தை {தசரத} ராஜா உமக்குக் கொடுக்கப் போகிறார்[3].(22) சிறந்த மான்தோலை உடுத்திக் கொண்டும், தூய்மையானவராகக் கைகளில் மான்கொம்பைப் பிடித்துக் கொண்டும் விரதசம்பன்னராக தீக்ஷை பெறப்போகும் உம்மைக் கண்டு நான் மகிழ்வேன்.(23) கிழக்குத் திசையில் வஜ்ரதாரியும் {இந்திரனும்}, தக்ஷிணத்தில் {தென் திசையில்} யமனும், மேற்குத் திசையில் வருணனும், உத்தரத் திசையில் தனேசனும் {குபேரனும்} உம்மைப் பாதுகாக்கட்டும்" {என்றாள் சீதை}.(24)
[3] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "தேவரீருக்கு பிரம்மதேவர் இந்திரனுக்கு எவ்வண்ணமோ அவ்வண்ணமே அந்தணர்களால் மங்களமாய்ச் செய்யப்பட்டதும் சக்ரவர்த்தியாய் விளங்குமபிஷேகத்தை லோகபரிபாலத்திற்குச் செய்து வைக்கத் திருவுளமுவக்கக்கடவர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராஜஸூய யாகத்திற் செய்ய வேண்டிய அபிஷேகத்திற்குத் தகுந்திருக்கிற உனக்குப் பிரஹ்மதேவன் இந்த்ரனுக்குச் செய்தாற்போல, அரசன் ப்ராஹ்மணர்கள் வந்து நடத்துவிக்கிற யௌவராஜ்யாபிஷேகத்தை இப்பொழுது நடத்தத்தகும்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "இராச சூயயாகஞ் செய்வதற்குரிய சிறந்த அந்தணர்களுடன் கூடிய தேசத்தை நான்முகக் கடவுள் தேவேந்திரனுக்கு அளித்தாற்போல அரசர் பெருமானும் தேவருக்களித்து இனிது செய்யக்கடவர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இராமன் சீதையிடம் சொல்லும் யாவும் இருக்கிறது. சீதை ராமனிடம் சொல்லும் ஒன்றும் இல்லை. ஹரிபிரசாத் சாஸ்திரியின் பதிப்பில், "பிரம்மனால் மகுடஞ்சூட்டப்பட்ட இந்திரனைப் போல உமக்கு மகுடஞ்சூட்டத்தகுந்த கற்றறிந்த பிராமணர்கள் பலர் இந்த ராஜ்ஜியத்தில் இருக்கிறார்கள். தீக்ஷை பெற்று நீர் ராஜசூய வேள்வியைச் செய்யும்போது, மான்தோலுடுத்தி, கைகளில் மான் கொம்புகளைக் கொண்டிருக்கும் உம்மை நான் வணங்குவேன்" என்றிருக்கிறது.
மங்கலச் சடங்குக்குத் தகுந்தவாறு தன்னை அலங்கரித்துக் கொண்ட ராமன், சீதையிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, சுமந்திரனுடன் தன் நிவேசனத்தில் {வீட்டில்} இருந்து புறப்பட்டான்.(25) மலைக்குகையில் வசிக்கும் சிங்கம், அந்தப் பர்வதத்தில் இருந்து வெளிப்படுவதைப் போலப் புறப்பட்ட ராமன், தலைக்கு மேல் கைகளைக் குவித்து வாயிலில் வணங்கி நிற்கும் லக்ஷ்மணனைக் கண்டான்.(26) பிறகு, ராஜநந்தனனும், புருஷவியாகரனுமான {மனிதர்களில் புலியுமான} அவன், நடுக்கட்டில் உள்ள தன் நண்பர்களைச் சந்தித்தான். பிறகு தன்னைக் காண விரும்பி அணுகியவர்கள் அனைவரையும் கண்டு அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று, புலித்தோல் போர்த்தி, பாவகனை {அக்னியைப்} போல ஒளிர்ந்த உத்தம ரதத்தில் ஏறினான்.(27,28) மேக நாதத்துடன் கூடியதும் {இடியைப் போன்ற ஒலியுடன் கூடியதும்}, நெரிசலற்றதும், மணிகளாலும், தங்கத்தாலும் அலங்கரிக்கப்பட்டதும், மேரு மலையைப் போலக் கண்களைக் களவாடுவதும், யானைக்குட்டிகளைப் போலத் தெரியும் சிறந்த வாஜிகள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், வேகமாகச் செல்லக்கூடியதுமான அந்த ரதத்தில் அவன் ஏறினான். செழிப்புடன் ஜ்வலித்துக் கொண்டிருந்த ராகவன் {ராமன்}, சஹஸ்ராக்ஷனான {ஆயிரங்கண்ணனான} இந்திரனின் குதிரைகளுடன் கூடிய தேரில் ஏறியவனைப் போல மிகத் துரிதமாகச் சென்றான்.(29-31அ)
ஆகாயத்தில் ஒலியெழுப்பும் பர்ஜன்யனை {மழைமேகத்தைப்} போன்ற ஒலியுடைய அது {அந்தத் தேர்}, பெரும் மேகக்கூட்டத்தில் இருந்து {வெளிப்படும்} சந்திரனைப் போல அந்த வீட்டில் இருந்து புறப்பட்டது.(31ஆ,32அ) இராகவானுஜனும், சகோதரனுமான {ராமனின் உடன்பிறந்த தம்பியான} லக்ஷ்மணன், அந்த ரதத்தின் பின்புறம் ஏறிக் கொண்டு, கைகளில் குடை, சாமரத்துடன் தன்னுடன் பிறந்தானைப் பாதுகாத்தான்.(32ஆ,33அ) அப்போது அனைத்துப் பக்கங்களிலும் கலைந்து சென்ற ஜனக்கூட்டம், ஆரவாரப் பேரொலியை எழுப்பியது.(33ஆ,34அ) நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் இருந்த முக்கியர்கள் பலர், சிறந்த ஹயங்களிலும் {குதிரைகளிலும்}, கிரிகளைப் போலத் தெரிந்த நாகங்களிலும் {யானைகளிலும்} ராமனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(34ஆ,35அ) சந்தனமும், அகிலும் பூசி, கவசம்பூண்டு, வாள்களையும், விற்களையும் தரித்திருந்த சூர ஜனங்கள் அவனது {ராமனின்} வரவை அறிவித்தவாறே அவனுக்கு முன்பு சென்றனர்.(35ஆ,36அ) அப்போது வாத்திய சத்தங்களும், வந்திகளின் துதி சத்தங்களும், சூரர்களின் சிங்கநாதங்களும் வழியில் கேட்டுக் கொண்டே இருந்தன.(36ஆ,37அ)
அந்த அரிந்தமன் {பகைவரை அழிக்கும் ராமன், இவ்வாறு} சென்று கொண்டிருந்த போது, வீட்டு முகப்புகளில் நின்று கொண்டிருந்தவர்களும், நன்கு அலங்கரித்திருந்தவர்களுமான ஸ்திரீகள், சுற்றிலும் இருந்து புஷ்பங்களை மழையாகப் பொழிந்தனர்.(37ஆ,38அ) மாடங்களிலும், தரையிலும் நின்று கொண்டிருந்தவர்களும், கவரும் அழகிய வடிவம் கொண்டவர்களுமான அந்தப் பெண்கள், ராமனை நிறைவடையச் செய்ய விரும்பி, சிறந்த சொற்களால் {பின்வருமாறு} ராமனை வணங்கினர்:(38ஆ,39அ) "மாத்ருநந்தனா {அன்னையை மகிழ்ச்சியடையச் செய்யும் ராமா}, உன் யாத்திரை சித்தியடையட்டும் {உன் பயணம் வெற்றியடையட்டும்}. உன் மாதா கௌசல்யை, பித்ரு ராஜ்ஜியத்தை அடையும் உன்னைக் கண்டு நிச்சயம் மகிழ்ச்சியடைவாள்" {என்றனர்}.(39ஆ,40அ) அந்த நாரிகைகள், ராமனின் ஹிருதயத்திற்குப் பிரியமான சீதையே பெண்கள் அனைவரிலும் சிறந்த பெண்ணென எண்ணி,(40ஆ,41அ) "சந்திரனுடன் கூடிய ரோஹிணியைப் போலவே இந்த தேவியும் {சீதையும்}, நிச்சயம் பூர்வத்தில் சிறப்பாகச் செய்த மஹத்தான தபத்தின் மூலம் ராமனை அடைந்திருக்கிறாள்" என்றனர்.(41ஆ,42அ)
இராஜமார்க்கத்தில் இருந்த அந்த நரோத்தமன் {மனிதர்களில் உத்தமனான ராமன்}, மதில்மேல் நின்ற பெண்கள் இவ்வாறு பேசும் பிரிய வசனத்தைக் கேட்டான்.(42ஆ,43அ) பிறகு அந்த ராகவன், அங்கே கூடியிருந்த மக்களின் சொற்களையும், மகிழ்ச்சியில் இருந்த நகரஜனங்கள் தன்னைக் குறித்துப் பல்வேறு வகையில் பேசிய {பின்வரும்} சொற்களையும் கேட்டான்:(43ஆ-உ) "இராஜாவின் புண்ணியத்தால் இந்த ராகவன் விபுலையை {பூமியை} அடைந்து, பெருஞ்செல்வத்தை ஈட்டப்போகிறான். இவன் நம்மை ஆளும்போது நம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.(44) இந்த ராஷ்டிரம் முழுவதையும் இவன் நீண்ட காலம் ஆள்வது, இந்த ஜனங்களுக்கு லாபமே {நன்மையே}. இவன் மனுஜாதிபனானால், விருப்பமற்றவையும், துக்கமானவையுமான எதையும், எவரும், எப்போதும் காண மாட்டார்கள்" {என்றனர்}.(45)
சூதர்களும், மாகதர்களும் மங்கலச் சொற்களைச் சொல்லி மிகச் சிறந்த வாத்தியங்களுடனும், பெரும் மதிப்புடனும் புகழ்ந்து துதித்தவாறே முன்சென்று கொண்டிருந்தபோது, அவன் {ராமன்} ஹயநாக கோஷங்களுடன் {குதிரைகளின் கனைப்பொலிகளுடனும், யானைகளின் பிளிறல்களுடனும்} வைஷ்ரவணனை {குபேரனைப்} போலச் சென்றான்.(46) இராமன், களங்கமற்றதும், ஏராளமான ரத்தினங்களுடனும், ஏராளமான வைரங்களுடனும், ஏராளமான விற்பனை பொருட்களுடனும் கூடியதும் {பல கடைகளைக் கொண்டதும்}, ஜனங்கள் நிறைந்திருக்கும் நாற்சந்திகளுடன் கூடியதும், கரேணு மாதங்கங்களாலும் {பிடி / பெண் யானை, களிறு / ஆண் யானைகளாலும்}, ரதங்களாலும், அஷ்வங்களாலும் {குதிரைகளாலும்} நிறைந்ததுமாக அந்த நெடும்பாதையைக் கண்டான்.(47)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 016ல் உள்ள சுலோகங்கள் : 47
Previous | | Sanskrit | | English | | Next |