Fetch Rama | Ayodhya-Kanda-Sarga-014 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வரங்களை வற்புறுத்திக் கேட்ட கைகேயி. கைகேயியை துறந்த தசரதன். வசிஷ்டரின் வருகை. இராமனை அழைத்து வர சுமந்திரனை அனுப்பிய கைகேயி...
அந்தப் பாபி {கைகேயி}, புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவனும், நனவற்று விழுந்து புவியில் {தரையில்} புரண்டு கொண்டிருந்தவனுமான இக்ஷ்வாகனிடம் {தசரதனிடம்} இதைச் சொன்னாள்:(1) "இஃதென்ன? எனக்குக் கொடுத்த வாக்கைக் கேட்டுவிட்டு, ஏதோ பாபத்தை இழைத்துவிட்டவரைப் போல துன்பத்துடன் தரையில் கிடக்கிறீர். உறுதியைக் காப்பதே உமக்குத் தகும்.(2) தர்மத்தை அறிந்த ஜனங்கள், சத்தியத்தையே பரம தர்மமாகச் சொல்வார்கள். சத்தியத்தைப் புகலிடமாகக் கொண்டிருக்கும் நான் தர்மத்தையே {உமது கடமையையே} உமக்குச் சொல்கிறேன்.(3)
இராஜாவே, பக்ஷியான பருந்துக்கு உறுதியளித்தபடியே தன் உடலைத் தந்து உத்தம கதியை அடைந்தான் ஜகத்பதியான சைப்பியன் {சிபி}.(4) அதேபோல, தேஜஸ்வியான அலர்க்கன், வேதபாரகரான பிராமணர் யாசித்ததும் வருத்தமேதுமின்றி தன் நேத்திரங்களை {விழிகளைப்} பிடுங்கிக் கொடுத்தான்.(5) சத்தியத்தை அனுசரித்த சரிதாம்பதியும் {ஆறுகளின் தலைவனான கடலும்}, சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து அற்பமான அளவிலும் தன் எல்லையை மீறுவதில்லை.(6)
சத்தியமென்ற ஏகபதமே {ஒற்றைச் சொல்லே} பிரம்மமாகும். சத்தியத்திலேயே தர்மம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது {நிறுவப்படுகிறது}. சத்தியமே அழிவற்ற ஞானமாகத் திகழ்கிறது. சத்தியத்தின் மூலம் மட்டுமே பரமும் அடையப்படுகிறது {பரமனும் அடையப்படுகிறான்}.(7) சத்தமரே {சிறந்தவரே}, தர்மத்தில் மதி {மனம்} திடமாக இருந்தால் சத்தியத்திற்குக் கீழ்ப்படிவீராக. நீர் வரதரானதால் {வரம் தருபவரானதால்} என் வரத்தைக் கொடுப்பீராக.(8) இதில் தர்மத்தை வேண்டி விரும்பி என் தூண்டுதலின் பேரில் சுதனான {உமது மகன்} ராமனை நாடு கடத்துவீராக. நான் மும்முறை உமக்குச் சொல்லிவிட்டேன்.(9) ஆரியரே {மதிப்புமிக்கவரே}, என் வேண்டுகோளை நிறைவேற்றாதிருந்தால், கைவிடப்பட்டவளான நான் உமது முன்னிலையிலேயே என் ஜீவிதத்தைக் கைவிடுவேன்" {என்றாள் கைகேயி}.(10)
கைகேயியால் தயக்கமில்லாமல் இவ்வாறு நிர்பந்திக்கப்பட்ட அந்த ராஜா {தசரதன்}, பலிக்காக {வாமனன் மூலம்} இந்திரனால் வீசப்பட்டதைப் போன்ற பாசத்தில் {கைகேயிக்குக் கொடுத்த வாக்கு என்ற சுருக்குக்கயிற்றில்} இருந்து விடுபடும் சக்தனாக இல்லை[1].(11) நுகத்தடிக்கும் சக்கரத்திற்கும் இடையில் அகப்பட்ட எருதைப் போலவே அவனும் ஹிருதயம் கலங்கியவனாக வதன வர்ணத்தை {முகத்தின் நிறத்தை} இழந்தான்.(12)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "முன்பு பலி சக்ரவர்த்தி தன்னை இந்திரனுக்கு உடன் பிறந்தவனாகிய வாமனமூர்த்தி கட்டின பாசத்தை விடுவித்துக் கொள்ள முடியாதது போல, அம்மன்னவனும் கைகேயிக்கு ஸத்யஞ்செய்திருப்பது பற்றி அந்த ஸத்யபாசத்தை விடுவித்துக் கொள்ள முடியாதிருந்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அரசர்க்கரசரும் அது கேட்டு இந்திரனிட்ட பாசத்தை அவிழ்த்துக் கொள்ளப் பலிச்சக்கரவர்த்தி திறனற்று நின்றது போலக் கைகேயியிட்ட தருமபாசத்தை விடுவித்துக் கொள்ளத் திறனற்றவராகி" என்றிருக்கிறது. பலியின் கதையை ஹரிவம்சத்தின் பவிஷ்ய பர்வம் 40ம் அத்தியாயம் முதல் 47ம் அத்தியாயம் வரையுள்ள பகுதியில் அறியலாம்.
பார்வை இல்லாதது போலத் தெரிந்த மங்கிய கண்களுடன் கூடிய அந்த பூபதி {பூமியின் தலைவனான தசரதன்}, சிரமத்துடன் உறுதியான தைரியமடைந்து, கைகேயியிடம் இதைச் சொன்னான்:(13) "பாபியே, மந்திரப்பூர்வமாக அக்னியின் முன்னால் நான் பற்றிய உன் கைகளைக் கைவிடுகிறேன். {இனி நீ என் மனைவியுமல்ல, நான் உன் கணவனுமல்ல}. எனக்குப் பிறந்த உன் புத்திரனையும் உன்னுடன் சேர்த்துக் கைவிடுகிறேன்.(14) தேவி, சூரிய உதயம் திரும்பியதுடன் ரஜனி {இரவு} கழிந்தது. குருஜனங்கள் {பெரியோர்}, ராமாபிஷேகத்திற்காகத் திரட்டப்பட்ட உரிய சம்பாரங்களுடன் வந்து அபிஷேகத்துக்காக நிச்சயம் என்னைத் துரிதப் படுத்துவார்கள்.(15,16அ) அசுபாசாரியே {தீய நடத்தை கொண்டவளே}, ராமாபிஷேகத்தை நீ தடுத்தால், என் மரணத்திற்குப் பிறகு, நீயும் உன் மகனும் எனக்கு நீர்க்காணிக்கை அளிக்கமுடியாது {ஜலதர்ப்பணம் செய்ய முடியாது}.(16ஆ,17) எந்த ஜனத்தைப் பூர்வத்தில் சுகமாக {மகிழ்ச்சியாகக்} கண்டேனோ, அவர்களை ஆனந்தம் தொலைந்தவர்களாக தொங்கிய முகத்துடன் கூடியவர்களாக, விரைவில் மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களாக என்னால் காண முடியாது" {என்றான் தசரதன்}.(18)
மஹாத்மாவான அந்த பூமி பாலன் {தசரதன்}, அவளிடம் இவ்வாறு பேசியபோது, சந்திர நக்ஷத்திரங்களுடன் கூடிய அந்தப் புனித இரவு விடிந்தது.(19) அதன்பிறகு, பாப நடத்தை கொண்டவளும், திறம்படப் பேசுபவளுமான கைகேயி, ரோஷத்தில் பூரித்தவளாக அந்தப் பார்த்திபனிடம் மீண்டும் இந்தக் கொடுஞ்சொற்களைப் பேசினாள்:(20) "துன்பமிக்க நோயைப் போன்ற {விழுங்க முடியாத} வாக்கியங்களை நீர் சொல்கிறீர். இஃதென்ன? தாமதமின்றி இங்கே புத்திரன் ராமனை அழைப்பதே உமக்குத் தகும்.(21) என் மகனை ராஜ்ஜியத்தில் அமர்த்தி, ராமனை வனத்தில் திரியச் செய்து, என்னை பகைவரற்றவளாக்குவதன் மூலம் நீர் உமது கடமையைச் செய்தவராவீர்" {என்றாள் கைகேயி}.(22)
சவுக்கால் கடுமையாக அடிக்கப்படும் உத்தம ஹயத்தை {சிறந்த குதிரையைப்} போல மீண்டும் மீண்டும் தூண்டப்பட்ட அந்த ராஜா, கைகேயியிடம் இதைச் சொன்னான்:(23) "நான் தர்ம பந்தத்தில் கட்டப்பட்டுள்ளேன். என் சேதனமும் நஷ்டமடைந்தது {என் அறிவும் தொலைந்துவிட்டது}. தார்மீகனும், ஜேஷ்டனும் {மூத்தவனும்}, என் பிரியத்திற்குரியவனுமான ராமனைக் காண விரும்புகிறேன்" {என்றான் தசரதன்}.(24)
திவாகரன் உதித்து, இரவு விடிந்து, புண்ணிய முஹூர்த்தமும், நட்சத்திரமும் கூடி வந்த போது, குணவளங்கொண்ட வசிஷ்டர், சம்பாரங்களை {வேள்விக்குத் தேவையான பொருட்களைத்} திரட்டிக் கொண்டு சிஷ்யர்கள் சூழ அந்நகருக்குள் பரபரப்புடன் பிரவேசித்தார்.(25,26) நன்கு பெருக்கிக் கூட்டி, நீர்தெளித்திருந்த பாதைகளைக் கொண்டதும், உத்தம பதாகைகளால் {சிறந்த கொடிகளால்} அலங்கரிக்கப்பட்டதும், விசித்திர வண்ண மலர்களாலும், பல்வேறு வகை மாலைகளாலும் பிரகாசித்துக் கொண்டிருந்ததும், மகிழ்ச்சியான மக்களால் நிறைந்திருந்ததும், ஏராளமான கடைகள், சந்தைகளுடன் கூடியதும், மஹோத்சவங்களால் நிறைந்திருந்ததும், ராமனுக்காக ஆவலாகக் காத்திருப்பதும், அனைத்துப் பக்கங்களிலும் சந்தன, அகில் தூபங்களால் மூட்டப்பட்டிருந்ததும், புரந்தரபுரிக்கு {இந்திரனின் தலைநகரான அமராவதிக்கு} ஒப்பானதுமான அந்நகர் {அயோத்தியாபுரி}, சிறந்த மனிதர்களான குடிமக்களாலும், நகரவாசிகளாலும் நிறைந்திருப்பதையும், யஜ்ஞ விதியறிந்த பிராமணர்களாலும், சதஸில் {வேள்வி மண்டபத்தில்} இருப்பவர்களாலும் பிரகாசிப்பதையும், அந்த மண்டபம் பரமதுவிஜர்களால் நிறைந்திருப்பதையும் அவர் {வசிஷ்டர்} கண்டார்.(27-30) பரமரிஷியான வசிஷ்டர், பரமபிரீதியுடன் அந்த ஜனங்களைக் கடந்து சென்று அந்தப்புரத்தை அடைந்து நுழைந்தார்.(31)
அமைச்சரும், சாரதியும், விரும்பத்தக்க தோற்றம் கொண்டவருமான சுமந்திரர், மனுஜசிம்மத்திடம் {மனிதர்களில் சிங்கமான தசரதனிடம்} இருந்து வெளிப்படுவதை வாயிலில் அவர் {வசிஷ்டர்} கண்டார்.(32) மஹாதேஜஸ்வியான வசிஷ்டர், விசாரதரான {விவேகியான} அந்த சூதபுத்திரரிடம் {சுமந்திரரிடம்}[2] இவ்வாறு சொன்னார், "நான் இங்கே வந்திருப்பதை சீக்கிரமாக நிருபதியிடம் சொல்வீராக.(33,34அ) இந்தக் குடங்கள் கங்கை நீரால் நிறைந்திருக்கின்றன. காஞ்சனக்குடங்களில் கடல் நீர் இருக்கிறது. அத்திமரத்தால் செய்யப்பட்ட மங்கலப் பீடம் {இராமனின்} அபிஷேகத்திற்காக வந்திருக்கிறது. அனைத்து வகை வித்துக்களும், கந்தங்களும் {வாசனை திரவியங்களும்}, ரத்தினங்களும், பல்வேறு வகையான தேன் வகைகளும், தயிர், நெய், பொரிகள், தர்ப்பை, மலர்கள், பால் ஆகியனவும், அழகுவாய்ந்த எட்டு கன்னிகளும், மதங்கொண்ட வாரணமும் {யானையும்}, நான்கு அஷ்வங்களுடன் {குதிரைகளுடன்} கூடிய மகத்தான ரதமும் {தேரும்}, நிஸ்திரிம்ச வாளும், உத்தம தனுவும் {சிறந்த வில்லும்}, சுமப்பவர்களுடன் கூடிய வாகனமும் {பல்லக்கும்}, சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான குடையும், சாமரங்களும், பொன்னாலான குடுவையும், பெரும் திமில்களுடன் கூடிய காளையும், சிறந்த பிடரியுடனும், நான்கு பெரிய கோரைப்பற்களுடனும் கூடிய சிறந்த சிங்கமும், புலித்தோலுடன் கூடிய சிம்மாசனமும், மூட்டப்பட்ட ஹுதாசனமும் {நெருப்பும்}, அனைத்து வகை வாத்தியங்களும் {தயாராக இருக்கின்றன}, வேசிகளும், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்திரீகளும், ஆச்சாரியர்களும், பிராமணர்களும், கவங்களும் {பசுக்களும்}, புண்ணியமான மிருக பக்ஷிகளும் {விலங்கு மற்றும் பறவைகளும்}, சிறந்த குடிமக்களும், நகரவாசிகளும், இனிமையாகப் பேசும் வணிகக்கூட்டத்தினரும் என இவர்களும், பார்த்திபர்களும் {பிற மன்னர்களும்} ராமனின் அபிஷேகத்திற்காகக் காத்திருக்கின்றனர்.(34ஆ-42அ) புண்ணிய நட்சத்திரத்தில் இந்நாள் தொடங்கும்போதே ராமன் ராஜ்ஜியத்தை அடைய மஹாராஜனைத் துரிதப்படுத்துவீராக" {என்றார் வசிஷ்டர்}.(42ஆ,43அ)
[2] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "சூதன் என்ற சொல், ஒரு க்ஷத்திரியனுக்கு ஒரு பிராமண மனைவியிடம் பிறந்த மகனைக் குறிக்கிறது. "அவர்கள் {சூதர்கள்} பாணர்களாகவோ, சாரதிகளாகவோ இருப்பார்கள்" என்று அமரகோசம் சொல்கிறது" என்றிருக்கிறது.
அந்த மஹாத்மாவின் இந்தச் சொற்களைக் கேட்ட சூதபுத்திரன் {சுமந்திரன்}, நிருபதிசார்தூலன் {மனிதர்களின் தலைவர்களில் புலியான தசரதன்} இருந்த நிவேசனத்திற்குள் {வீட்டிற்குள்} பிரவேசித்தான்.(43ஆ,44அ) ராஜன் விரும்பியதைச் செய்யக் காத்திருந்த வாயில் காப்போர், முன்பே வந்தவனும், விருத்தனும் {முதிர்ந்தவனும்}, ராஜனால் மதிக்கப்படுபவனுமான அவனைத் தடுக்க இயலவில்லை.(44ஆ,45அ) அங்கிருந்த சூழ்நிலையை அறியாமல் மன்னனின் சமீபத்தில் நின்றவன் {சுமந்திரன்} இனிமையான சொற்களால் துதிக்கத் தொடங்கினான்.(45ஆ,46அ)
சூதனான அந்த சுமந்திரன், பார்த்திபனின் நிவேசனத்தில் {தனியறையில்} கைகளைக் கூப்பி நின்று, காலத்திற்குத் தகுந்தவாறு அந்த ஜகத்பதியைத் துதித்தான்:(46ஆ,47அ) பாஸ்கர உதயத்தில் தேஜஸ் பொருந்திய சாகரம் மகிழ்வதைப் போல இயல்பாகவே ஆனந்தமாக இருக்கும் உமது மனத்தால் எங்களை மகிழ்விப்பீராக[3].(47ஆ,இ) இதே வேளையில் {இந்திரனின் தேரோட்டியான} மாதலி, இந்திரனைத் துதித்தான். அவன் {இந்திரன்} சர்வ தானவர்களையும் வீழ்த்தினான். இதோ நானும் உம்மை எழுப்புகிறேன்.(48,49அ) சுயம்புவும், விபுவுமான பிரம்மனுக்கு வித்யாங்கங்களுடன் கூடிய வேதங்கள் வழிகாட்டுவதைப்[4] போலவே இதோ நானும் உம்மை எழுப்புகிறேன்.(49ஆ,50அ) சந்திரனுடன் கூடிய ஆதித்யன், பூதங்களைத் தாங்கும் அழகிய பிருத்விக்கு விழிப்பூட்டுவதைப் போலவே இதோ நானும் உம்மை எழுப்புகிறேன்.(50ஆ,51அ) மஹாராஜாவே, மங்கல உடைகளைத் தரித்து பிரகாசமாக ஒளிரும் உடலுடன் மேருமலையில் இருந்து எழும் சூரியனைப் போல எழுவீராக.(51ஆ,52அ)
[3] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தேஜஸ்வியாகி ஸமுத்ர ராஜன் பரிபூரண சந்த்ரோதய காலங்களில் அவனது கிரணங்கள் தன் மேற்படப்பெற்று மனமகிழ்ந்து மிகுந்த ஆனந்தத்துடன் எப்படி உத்ஸாஹப்படுகின்றானோ, அப்படியே பெருமை பொருந்திய நீயும் உனக்கேற்றபடி ஆனந்தம் பெறுவாயாக" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சூரியனுதயமாகுங்காலையில், (பூர்ண சந்திரனுதிக்கையில்) பெருங்கடல் மகிழ்ந்து பெருகுவது போல அன்புடையவராகத் தேவரும் எங்களை மகிழ்விக்கக் கடவீர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இப்பகுதி இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில், "சூரிய உதயத்தில் பெருங்கடல் மக்களை மகிழ்விப்பதைப் போலவே நீரும் மகிழ்ச்சியான இதயத்துடன் எங்களை மகிழ்விப்பீராக" என்றிருக்கிறது.
[4]கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "பிரம்மன், படைப்பின் தொடக்க காலத்தில் வெளிப்படும் பொருள்களின் ஞானத்தை வேதங்களில் இருந்தே அடைகிறான்" என்றிருக்கிறது.
காகுத்ஸரே {தசரதரே}, சோம, சூரிய, சிவ, வைஷ்ரவண {குபேர}, வருண, அக்னி, இந்திரர்கள் உமக்கு வெற்றியை அளிப்பாராக.(52ஆ,53அ) நிருபசார்தூலரே {மன்னர்களில் புலியே}, புனித ராத்திரி கடந்துவிட்டது. இதுவரை நடந்திருக்கும் காரியங்களை அறிந்து கொண்டு, இன்னும் செய்ய வேண்டியதைச் செய்வீராக. இராமனின் அபிஷேகத்துக்கு வேண்டியவை ஆயத்தமாக உள்ளன.(53ஆ,54) பகவான் வசிஷ்டர், பிராமணர்கள் சஹிதராகவும், நகரவாசிகள், ஜனபதவாசிகள், வணிகர்கள் ஆகியோரால் கைகூப்பி வணங்கப்படுபவராகவும் தானே வந்து நிற்கிறார்.(55) இராஜாவே, ராமனின் அபிஷேகத்திற்கு சீக்கிரம் ஆணையிடுவீராக. இராஜன் காணப்படாத ராஷ்டிரம், பாலனில்லாத கால்நடையைப் போலவும், நாயகனில்லாத சேனையைப் போலவும் சந்திரனில்லாத ராத்திரியைப் போலவும், காளையில்லாத பசுக்களைப் போலவும் ஆகும்" {என்றான் சுமந்திரன்}.(56,57)
இவ்வாறு பொருள் பொதிந்ததும், சாந்தி பூர்வமானதுமான அவனது சொற்களைக் கேட்ட அந்த மஹீபதி {தசரதன்}, மீண்டும் சோகத்தால் சூழப்பட்டவனானான்.(58) தார்மீகனும், ஸ்ரீமானுமான அந்த ராஜா, தன் மகன் நிமித்தமாக மகிழ்ச்சியை இழந்து ரத்தம் போன்று சிவந்த சோகக் கண்களுடன் அந்த சூதனை {சுமந்திரனைப்} பார்த்து, "உன் வாக்கியத்தால் மேலும் மேலும் என் மர்மங்களை {முக்கியப் பகுதிகளைப்} பிளக்கிறாய்" என்றான்.(59,60அ)
சுமந்திரன், காதால் கேட்கமுடியாதவற்றைக் கேட்டும், பார்த்திபன் தீனனாக இருப்பதைக் கண்டும் தன் கைகளைக் கூப்பி வணங்கி அந்த இடத்தில் இருந்து சற்றே ஒதுங்கி நின்றான்.(60ஆ,61அ) மஹீபதி {தசரதன்} மனச்சோர்வால் எதையும் சொல்லாதிருந்தான். அப்போது முன் ஆலோசனையுடன் கூடிய கைகேயி சுமந்திரனுக்கு மறுமொழி கூறினாள்:(61ஆ,62அ) "சுமந்திரரே, ராமன் குறித்து மகிழ்ச்சியான உணர்வெழுச்சியுடன் இரவெல்லாம் இருந்ததால் களைத்துப் போய் நித்திரையின் வசப்பட்டிருக்கிறார்.(62ஆ,63அ) எனவே சுமந்திரரே, மகிமைமிக்க ராஜபுத்திரன் ராமனை அழைத்து வருவீராக. நீர் மங்கலமாக இருப்பீராக. இதில் விசாரம் {தயக்கம்} வேண்டாம்" {என்றாள் கைகேயி}.(63ஆ,64அ)
அந்த மங்கல நிகழ்வை நினைத்து ஹிருதயத்தில் இன்பத்துடன் மகிழ்ந்தவன் {சுமந்திரன்}, ராஜசாசனத்தின் பேரில் துரிதமாகப் புறப்பட்டான்.(64ஆ,65அ) இவ்வாறு அவளால் தூண்டப்பட்ட சுமந்திரன், "தர்மவானான ராமன் அபிஷேகத்திற்காக நிச்சயம் இங்கே வருவான்" என்று நினைத்தான்.(65ஆ,66அ) இவ்வாறு நினைத்த அந்த சூதன், நீண்ட கரங்களுடன் கூடிய ராகவனைக் காண விரும்பி பெரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றான்.(66ஆ,67அ) சாகரத்தில் உள்ள ஒரு மடுவைப் போன்ற அந்தப்புரத்தில் இருந்து வெளிப்பட்ட சுமந்திரன், வாயிலில் ஜனக்கூட்டம் நிறைந்திருப்பதைக் கண்டான்.(67ஆ,68அ) அதன்பிறகு வாயில் வரை மேலும் முன்னேறிச் சென்ற அவன், அந்த வாயிலின் அருகே வந்ததும், மஹீபதிகளும், மஹாதனவான்களும், நகரவாசிகளும் வந்திருப்பதைக் கண்டான்.(68ஆ,இ,ஈ,உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 014ல் உள்ள சுலோகங்கள் : 68
Previous | | Sanskrit | | English | | Next |