The agony of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-013 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயியை சமாதானப்படுத்த முயன்ற தசரதன்; பிடிவாதத்தைக் கேட்டு அடைந்த வேதனை...
அநர்த்தமே வடிவானவளும், தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டவளும், அச்சமற்றவளும், பயத்தை ஏற்படுத்துபவளுமான கைகேயி, இத்தகைய சூழ்நிலைக்குத் தகாதவனும், இது போன்ற சூழலை ஒருபோதும் எதிர்கொள்ளாதவனும், புண்ணியம் தீர்ந்து தேவலோகத்தில் இருந்து விழுந்த யயாதியைப் போல தரையில் சயனித்துக் கொண்டிருந்தவனுமான மஹாராஜனிடம் {தசரதனிடம்} அந்த வரங்களைக் குறித்து மீண்டும் சொன்னாள்:(1,2) "மஹாராஜாவே, "நான் திட விரதன், சத்தியவாதி" என்று சொல்லும் நீர், என்னுடைய இந்த வரத்தைத் தடுக்க விரும்புவது ஏன்?" {என்று கேட்டாள்}.(3)
கைகேயி இவ்வாறு சொன்னதும், கோபமடைந்த தசரத ராஜன், ஒரு முஹூர்த்த காலம் மனந்தடுமாறியதன் பிறகு மீண்டும் பேசினான்:(4) "அநாரியையே {தீயவளே}, என் பகைவியே, மனுஜபுங்கவனான {மனிதர்களில் முதன்மையான} ராமன் வனத்திற்குச் சென்று, நான் மரித்த பிறகு உன் ஆசை நிறைவேறி மகிழ்ச்சியுடன் இருப்பாயாக. உனக்கு ஐயோ.(5) சுவர்க்கத்தில் என்னைக் காணும் தைவதைகள், ராமனின் குசலத்தை விசாரித்தால் அறியாதவனான நான் என்ன சொல்வேன்? ஐயோ.(6) கைகேயியிடம் அன்பு செலுத்த விரும்பிய என்னால் ராமன் வனத்திற்கு அனுப்பப்பட்டான் என்ற இந்த சத்தியத்தைச் சொன்னால் {ராமனுக்குப் பட்டங்கட்டுகிறேன் என்று சொல்லி காட்டுக்கு அனுப்புவதால்} அஃது அசத்தியமாகிவிடும்.(7) புத்திரனற்றவனான நான் சிரமப்பட்டு, மஹானும், பெரும்பலமிக்கவனுமான ராமனைப் புத்திரனாகப் பெற்றேன். அத்தகையவனை நான் எவ்வாறு கைவிடுவேன்?(8)
சூரனும், வித்தை கற்றவனும், குரோதத்தை வென்றவனும், பொறுமைசாலியும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனுமான ராமனை நான் எவ்வாறு நாடு கடத்துவேன்?(9) கருநெய்தல் போன்ற கரிய நிறம் கொண்டவனும், நெடுங்கைகளைக் கொண்டவனும், மஹாபலம் பொருந்தியவனும், அருள்நிறைந்தவனுமான ராமனை நான் எவ்வாறு தண்டகத்திற்கு {தண்டக வனத்திற்கு} அனுப்புவேன்?(10) சுகங்களுக்குப் பழக்கப்பட்டவனும், துக்கங்களால் அணுகப்படாதவனும், மதிமிக்கவனுமான ராமன் துக்கமடைவதை நான் எவ்வாறு காண்பேன்?(11) துக்கத்திற்குத் தகாதவனான இராமனுக்கு துக்கத்தை உண்டாக்காமல் இப்போதே எனக்கு மரணம் சம்பவித்தால் நான் சுகத்தை அடைந்தவனாவேன்.(12) கொடூரமானவளே, பாபசங்கல்பியே கைகேயி, என் பிரியத்திற்குரியவனும், சத்தியபராக்ரமனுமான ராமனுக்கு நீ ஏன் தீங்கிழைக்க நினைக்கிறாய்? லோகத்தில் நான் ஒப்பற்ற அகீர்த்தியையும், அவமானத்தையும் நிச்சயம் அடைவேன்" {என்றான் தசரதன்}.(13,14அ)
இவ்வாறு குழம்பிய மனத்துடன் தசரதன் அழுது கொண்டிருந்தபோது, சூரியன் அஸ்தமனமாகி இரவும் வந்தது.(14ஆ,15அ) துக்கத்துடன் இவ்வாறு அழுது கொண்டிருந்த அந்த ராஜனுக்கு, மூன்று யாமங்களை {ஒன்பது மணி நேரத்தைக்} கொண்ட இரவு, சந்திர மண்டலத்தால் அலங்கரிக்கப்பட்டதாக இருந்தாலும் ஒளிரவில்லை {அந்த இரவு இருளாகவே இருந்தது}.(15ஆ,16அ) விருத்தனான {முதிர்ந்தவனான} தசரத நிருபன், உஷ்ணமான பெருமூச்சு விட்டபடியே கண்களை ஆகாயத்தில் நிலைக்கச் செய்து துக்கத்துடன் அழுது கொண்டிருந்தான்.(16ஆ,17அ)
"நக்ஷத்திரங்களை ஆபரணங்களாகக் கொண்ட மங்கல இரவே, நீ விடியாதே. அதை நான் விரும்பவில்லை. நான் கைகளைக் கூப்புகிறேன் {உன்னை வேண்டுகிறேன்}. என்னிடம் தயை கொள்வாயாக.(17ஆ,18அ) அல்லது சீக்கிரம் விடிவாயாக. எவள் நிமித்தம் இந்த விசனம் {துன்பம்} உண்டானதோ, வெட்கமற்றவளும், கொடூரியுமான இந்தக் கைகேயியைக் காணவும் நான் விரும்பவில்லை" {என்று புலம்பினான் தசரதன்}.(18ஆ,19அ)
அந்த ராஜா இவ்வாறு சொல்லிவிட்டு, கைகேயியிடம் கைகளைக் கூப்பி வேண்டினான். பிறகு மீண்டும் மீண்டும் கைகேயியிடம் இதைச் சொன்னான்:(19ஆ,20அ) "மங்கல தேவியே, நன்னடத்தை கொண்டவனும், தீனனாக உன் புகலிடம் நாடும் கிழவனும், மன்னனுமான என்னிடம் கருணை கொள்வாயாக.(20ஆ,21அ) நல்லிடை கொண்டவளே, இவை சூனியத்தில் {இன்மையில்} சொல்லப்படவில்லையல்லவா?[1] பாலே {சிறுமியே}, என்னிடம் கருணை கொள்வாயாக. நீ உண்மையில் நல்ல ஹிருதயம் கொண்டவள்.(21ஆ,22அ) தேவி, கரிய கடைக்கண்களைக் கொண்டவளே, கருணை கொள்வாயாக. நீயே என் ராஜ்ஜியத்தை ராமனுக்குக் கொடுத்துப் பெரும்புகழை அடைவாயாக.(22ஆ,23அ) பருத்த பிட்டம் கொண்டவளே, அழகிய முகத்தையும், கண்களையும் கொண்டவளே, எனக்கும், ராமனுக்கும், இந்த உலகத்துக்கும், குருக்களுக்கும், ஏன் பரதனுக்கும்கூடப் பிரியமான இதைச் செய்வாயாக" {என்றான் தசரதன்}.(23ஆ,24அ)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஒருவருமில்லாத இடத்தில் நான் ராமனுக்குப் பட்டங்கட்டப் போகிறேனென்கிற வார்த்தையைச் சொல்லவில்லையன்றோ? ஸமஸ்த ஜனங்களுங் கூடிய ஸபையிலன்றோ யான் பட்டங்கட்டுகிற வார்த்தையைச் சொல்லினன். யான் புத்தியில்லாமல் அங்ஙனம் மொழிந்து விட்டனன்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "யான் தனியே அன்றிச் சபை நடுவில் ஸ்ரீராமனுக்குத் திருமுடி சூட்டுவேனென்று சொல்லிவிட்டேன். அதனைப் பொய்யாகச் செய்வது இகழ்வு; யான் இதுவரையிலுரைத்ததையெல்லாம் காட்டில் அழுகையாக நினையற்க" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "(துன்பத்தில்) புலனுணர்வை இழந்த நான் உன்னிடம் இவ்வாறு பேசிவிட்டேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் தசரதன் புலம்பும் இரண்டு அத்தியாயங்கள் இல்லை. ஹரிபிரசாத்சாஸ்திரியின் பதிப்பில், "நான் ஒரு ராஜா, தனியாக அல்லாமல் அரச சபையில் ராமனை ராஜாவாக அறிவித்திருக்கிறேன். என்னிடம் கருணை கொள்வாயாக" என்றிருக்கிறது.
துஷ்ட சுபாவம் கொண்டவளும், கொடூரமானவளும், நல்ல இயல்பற்றவளுமான அவள் {கைகேயி}, நல்லிதயம் கொண்டவனும், தீனனும், தாமிரம் போலச் சிவந்திருந்த கண்களில் நீர் நிறைந்தவனும், பர்த்தாவுமான {கணவனுமான} அந்த ராஜன் விசித்திரமான வகையில் பரிதாபமாக அழுதபடியே {இவ்வாறு} சொன்ன சொற்களை ஏற்றாளில்லை.(24ஆ,இ,ஈ,உ) புத்திரனைக் காட்டுக்கு அனுப்புவது குறித்து இனிமையற்றுப் பேசிக் கொண்டிருப்பவளும், நிறைவற்றவளுமான தன் மனைவியைக் கண்டு அந்த ராஜா துக்கித்து, மீண்டும் மீண்டும் நனவிழந்து தரையில் விழுந்தான்.(25) இவ்வாறு துயருற்றவனும், தன்மானம் கொண்டவனுமான அந்த ராஜா, {துயருடன் இவ்வாறு} கோரமான பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தபோதே அந்த இரவும் கழிந்தது. அப்போது எழுப்பிவிடப்பட்ட அந்த ராஜசத்தமன் {சிறந்த மன்னன்} தன்னை எழுப்புவதைத் தடுத்தான்[2].(26)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பொழுது வைதாலிகர் {தாளமில்லாமல் வாயால் பாடுபவர்} முதலியோர் வந்து அந்தத் தசரத மஹாராஜனை வழக்கப்படி எழுப்ப முயலுகையில், அம்மன்னவன் எழுப்ப வேண்டாமென்று ஆஜ்ஞாபித்தனன்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "சக்கரவர்த்தியார் தரணியில் விழுந்து மூர்ச்சையடைந்து வருந்தி, விடியற்காலையில், தம்மை எழுப்புவதற்காக முழக்கும் வீணை முதலிய வாத்தியங்களையும், வந்திகள் பாடுவதையும் மறுத்து, மகிழ்வற்றுக் கடுந்துயர் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 013ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |