Lamentation of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-012 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயியின் சொற்களால் அதிர்ச்சியடைந்த தசரதன்; அவளை சமாதானப்படுத்த முயன்றது; செவி கொடுக்க மறுத்த கைகேயி...
கைகேயியின் கொடூரச் சொற்களைக் கேட்ட அந்த மஹாராஜா {தசரதன்}, சித்தம் கலங்கியவனாக ஒரு முஹூர்த்த காலம் பரிதபித்தான்.(1) "இஃது ஸ்வப்னமோ {கனவோ}? என் சித்தத்தின் மோஹமோ? எதிர்வரப்போகும் தீமையை வெளிப்படுத்தும் என் அனுபவத்தின் முன்னறிவிப்போ? அல்லது மன உபத்ரவமோ?"(2) என்று இவ்வாறு சிந்தித்த அந்த ராஜா சுகமற்றவனானான் {மயங்கினான்}. கைகேயியின் வாக்கியத்தால் பீடிக்கப்பட்ட அந்த நராதிபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, சுயநனவை அடைந்ததும் பெண்புலியைக் கண்ட மானைப் போல மனக்கலக்கமும், வேதனையும் அடைந்து, {பாம்பாட்டியின்} மந்திரத்தால் மண்டலத்தில் {வட்டக் கோட்டுக்குள் அடைபட்டுக்} கட்டுண்டு கிடக்கும் மஹாவிஷமுள்ள பன்னகத்தை {பாம்பைப்} போல, விரிப்புகளற்ற வெறுந்தரையில் அமர்ந்து, தீர்க்கோஷ்ண பெருமூச்சு விட்டபடியே கோபத்துடன், "அஹோ, சீ, சீ {இப்படியும் கூடுமோ?}" என்று சொல்லி சோக மனத்துடன் மீண்டும் மோஹமடைந்தான் {மயக்கமடைந்தான்}.(3-6அ)
நீண்ட நேரத்திற்குப் பிறகு, சுயநனவு மீண்டு துக்கமடைந்த அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, கண்களாலேயே எரித்துவிடுபவனைப் போலப் பார்த்தவாறே கோபத்துடன் கைகேயியிடம் {இவ்வாறு} பேசினான்:(6ஆ,7அ) "கொடூரமானவளே, துஷ்ட நடத்தை கொண்டவளே, இந்தக் குலத்தை அழிக்க வந்த பாபியே, ராமனாலோ, என்னாலோ உனக்குச் செய்யப்பட்டதென்ன {நாங்கள் உனக்கு என்ன தீங்கு செய்தோம்}?(7ஆ,8அ) இராகவன் தன் தாய்க்கு நிகராக உன்னிடம் நடந்து கொள்ளும்போது, அவனுக்கே நீ தீங்கிழைக்க நினைப்பதற்கான காரணமென்ன?(8ஆ,9அ) விஷத்துடன் சீறும் பெண்பாம்பாக அறிந்து கொள்ளாமல், என் அழிவுக்காகவே நான் என் பவனத்திற்குள் {வீட்டிற்குள்} உன்னை இளவரசியாக அனுமதித்துவிட்டேன்.(9ஆ,10அ)
சர்வ ஜீவலோகமும் {உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தும்} ராமனின் குணங்களைப் புகழ்ந்து கொண்டிருக்கும்போது, என்ன குற்றத்தைச் சொல்லி என் இஷ்ட சுதனை {அன்புக்குரிய மகனை} என்னால் விட்டகல முடியும்?(10ஆ,11அ) கௌசல்யையையும், சுமித்ரையையும், என் செல்வம் அனைத்தையும், ஏன் என் ஜீவனையும் நான் கைவிடுவேன். அந்தப் பித்ருவத்ஸலனை {பிதாவிடம் அர்ப்பணிப்பு கொண்ட ராமனை} என்னால் கைவிடமுடியாது.(11ஆ,12அ) மூத்த தனயனை {மகனைக்} காணும்போதே நான் பரமப்ரீதி அடைகிறேன். நான் ராமனைக் காணத் தவறினால் என் அறிவு கலங்கிவிடும்.(12ஆ,13அ) சூரியனின்றி லோகமும், நீரின்றிப் பயிர்களும் இருக்கலாம். ராமனின்றி என் தேஹத்தில் ஜீவிதம் இருக்காது.(13ஆ,14அ) பாப எண்ணம் கொண்டவளே, போதும். இந்தத் தீர்மானத்தைக் கைவிடுவாயாக. நான் உன் கால்களைத் தலையால் தீண்டுவேன். என்னிடம் கருணை கொள்வாயாக.(14ஆ,15அ)
பாபியே, உனக்கு இந்தப் பரமக் கொடூர சிந்தனை வந்ததேன்? பரதனைக் குறித்த என் பிரியாப்ரியத்தை {விருப்பு வெறுப்பை} நீ அறிய விரும்பினால், அவ்வாறே ஆகட்டும். பூர்வத்தில் ராகவனைக் குறித்து, "ஸ்ரீமானான அவனே எனக்கு ஜேஷ்ட சுதனும் {மூத்த மகனும்}, தர்மவான்களில் உயர்ந்தவனும் ஆவான்" என்று என்ன காரணத்தினால் சொன்னாய்? சேவைகளைப் பெறுவதற்காகவே அந்த அன்புச் சொற்களை என்னிடம் சொன்னாயோ?(15ஆ-17) அதனால்தான், பிறர் வசப்பட்டு, அவர்களின் சொற்களைக் கேட்டு, சோகத்தால் பீடிக்கப்பட்டு, சூன்ய கிருஹத்திற்குள் {குரோதாகாரதிற்குள் / கோபசாலைக்குள்} புகுந்து, என்னைப் பெரிதும் துன்புறுத்துகிறாயோ?(18) தேவி, உன் மதி கெட்டதால், ஒழுக்க வளம் கொண்ட இந்த இக்ஷ்வாகு குலத்திற்கு இதோ பெருங்கேடு நேர்கிறது.(19)
விசாலாக்ஷி {நீள்விழியாளே}, இதுவரையில் நீ எனக்கு விருப்பமற்ற, முறையற்ற எந்தச் சிறு காரியத்தையும் செய்ததில்லை. அதன் காரணமாகவே {நீ செய்வதை} என்னால் நம்பமுடியவில்லை.(20) பாலே {சிறுமியே}, உனக்கு ராகவனும், மஹாத்மாவான பரதனும் ஒன்றே என்று நீயே என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறாய்.(21) தேவி, பீரு {மருண்டவளே}, தர்மாத்மாவும், சிறப்புமிக்கவனுமான அவன் {ராமன்} நவபஞ்ச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} வனவாசம் செய்ய வேண்டுமென நீ எவ்வாறு நினைத்தாய்?(22) மென்மையான உடல் படைத்தவனும், தர்மத்தில் திட மனம் கொண்டவனுமான அவன், பயங்கர அரண்யத்தில் வாசம் செய்ய வேண்டுமென நீ எவ்வாறு நினைத்தாய்?(23) சுபலோசனையே {அழகிய கண்களைக் கொண்ட பெண்ணே}, உனக்கு இனிமையானவனும், பணிவுடன் தொண்டு செய்பவனுமான ராமன் நாடுகடத்தப்பட வேண்டுமென நீ எவ்வாறு நினைத்தாய்?(24) பரதனை விட ராமனே எப்போதும் உனக்கு அதிகத் தொண்டு செய்து வருகிறான். உன்னைப் பொறுத்தவரையில், அந்தக் காரணத்தினாலும் பரதனிடம் எந்த விசேஷத்தையும் நான் காணவில்லை.(25) மனுஜரிஷபனான {மனிதர்களில் சிறந்தவனான} அவனைத் தவிர வேறு எவனால் உனக்குக் கௌரவத்துடனும், பிரமாணத்துடனும் {உறுதியுடனும்}, பணிவுடனும் அதிகத் தொண்டு செய்ய முடியும்?(26,27அ)
உபஜீவனம் {பணிவிடைகள்} செய்யும் பலராலும், ஆயிரக்கணக்கான ஸ்திரீகளில் எவராலும் ராகவன் மீது பரிவாதமோ {பழிச்சொல்லோ}, அபவாதமோ {அவதூறோ} சொல்ல முடியாது. சர்வ பூதங்களிடமும் {அனைத்து உயிரினங்களிடமும்} தெளிவான மனத்துடன், சாந்தமாகப் பேசும் மனுஜவியாக்ரனான {மனிதர்களில் புலியான} ராமன், நாட்டில் வசிப்போரைத் தன் அன்பால் கிருஹிக்கிறான் {ஈர்க்கிறான்}.(27ஆ,28) வீரனான அந்த ராகவன், உலகத்தில் உள்ளோரை சத்தியத்தால் வெல்கிறான், தீனர்களை தானத்தால் வெல்கிறான், குருக்களை {பெரியோரைத்} தொண்டால் வெல்கிறான். சத்ருக்களை தனுசால் {பகைவரை வில்லால்} வெல்கிறான்.(29) இராகவன், சத்தியம், தானம், தபம், தியாகம், தூய்மை, நேர்மை, வித்தை கற்றல், குருக்களுக்கான தொண்டு ஆகியவற்றில் எப்போதும் உறுதியாக இருப்பவன்.(30)
தேவி, நேர்மையாளனும், தேவனுக்கு நிகரானவனும், மஹரிஷிகளுக்கு இணையான தேஜஸ் படைத்தவனுமான அந்த ராமனுக்கு நீ எவ்வாறு பாபம் செய்ய விரும்புகிறாய்?(31) உலகத்தில் பிரியவாதியான {உலக மக்களிடம் அன்பாகப் பேசும்} அவன் {ராமன்}, அப்ரிய வாக்கியமேதும் {விரும்பத்தகாதவையேதும்} பேசியதாக நினைவில்லை. பிரியத்திற்குரிய ராமனிடம் அப்ரியமாக நான் எவ்வாறு பேசுவேன்?(32) பொறுமை, தபம், தியாகம், சத்தியம், தர்மம், நன்றியுணர்வு, பூதங்களிடம் அஹிம்சை {உயிரினங்களுக்குத் தீங்கிழையாமை} எவனிடம் உண்டோ அவனைத் தவிர எனக்கு வேறு கதியென்ன?(33) கைகேயி, விருத்தனும் {முதிர்ந்தவனும்}, முடிவை நெருங்குபவனும், மனம் நொந்து துன்புறுபவனும், தீனனுமான என்னிடம் காருண்யம் {இரக்கங்} காட்டுவதே உனக்குத் தகும்.(34) சாகரத்தை எல்லையாகக் கொண்ட பிருத்வியில் எவற்றையெல்லாம் அடையமுடியுமோ, அவை அனைத்தையும் நான் உனக்குத் தருவேன். நீ கோபவசப்படாதே.(35) கைகேயி, கைகூப்பி வணங்குகிறேன், உன் பாதங்களையும் தொடுகிறேன். இராமனுக்குப் புகலிடம் அளிப்பாயாக. இதில் என்னை அதர்மம் பற்றாதிருக்கட்டும்" {என்றான் தசரதன்}.(36)
ரௌத்திரமாக இருந்த கைகேயி, துக்கத்தில் எரிந்து கொண்டிருந்தவனும், இவ்வாறு அழுது கொண்டிருந்தவனும், நனவு நழுவியவனும், கலக்கமடைந்திருந்தவனும், சோகத்தால் நிறைந்திருந்தவனும், சோகக் கடலில் இருந்து வேகமாக அக்கரை செல்ல மீண்டும் மீண்டும் வேண்டி விரும்பியவனுமான அந்த ராஜனிடம் {தசரதனிடம்} மேலும் ரௌத்திரமாக {பின்வருமாறு} பேசினாள்:(37,38) "இராஜரே, வரங்களைத் தத்தம் செய்துவிட்டு, மீண்டும் மீண்டும் நீர் வருந்தினால், வீரரே, பிருத்வியில் தர்மவான் {நெறிதவறாதவன்} என்று {உம்மை} எவ்வாறு சொல்லிக் கொள்வீர்?(39) தர்மத்தை அறிந்தவரே, ராஜரிஷிகள் பலரும் கூடி உம்மோடு உரையாடும்போது {உம்மை விசாரிக்கும்போது} நீர் என்ன மறுமொழி கூறுவீர்?(40) எவளின் கருணையால் நான் ஜீவித்திருக்கிறேனோ, எவளால் நான் பாதுகாக்கப்பட்டேனோ அந்தக் கைகேயியிக்குத் தவறிழைத்தேன் என்று சொல்வீரா?(41) நராதிபரே {மனிதர்களின் தலைவரே}, வரத்தை தத்தம் செய்துவிட்டு இப்போது மாற்றிப் பேசும் நீர் நரேந்திரர்களுக்குக் களங்கம் கற்பிக்கிறீர்.(42)
பருந்துக்கும், புறாவுக்கும் இடையிலான சச்சரவில் சைப்பியன் {சிபி}, பக்ஷிக்கு தன் மாம்சத்தைத் தத்தம் செய்தான். அலர்க்கன், தன் கண்களைத் தத்தம் செய்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தான்[1].(43) சாகரன் செய்த உடன்படிக்கையால் கரையைக் கடக்காமல் இருக்கிறான். பூர்வத்தில் நடந்தவற்றை மனத்தில் கொண்டு, கொடுத்த வாக்கைப் பொய்யாக்காதீர்.(44) துர்மதியாளரே, தர்மத்தைக் கைவிட்டு, ராமனை ராஜ்ஜியத்தில் அபிஷேகித்து, நித்தியம் கௌசல்யையுடன் சேர்ந்து இன்புற்றிருக்க நீர் விரும்புகிறீர்.(45) அதர்மமோ, தர்மமோ, நன்மையோ, தீமையோ எதுவாக இருப்பினும் நீர் எனக்குக் கொடுத்த வாக்குறுதி தவறக்கூடாது.(46) இராமனே அபிஷேகிக்கப்படுவதாக இருந்தால், உம் முன்னிலையில் இப்போதே ஏராளமான விஷத்தைப் பருகி, உமது கண்களுக்கு முன்பாகவே நான் மரிப்பேன்.(47) இராமனின் மாதாவானவள் {கௌசல்யை}, கைகள் கூப்பி வணங்கப்படுவதை ஒரே ஒரு நாள் நான் கண்டாலும் மரணமே எனக்குச் சிறந்தது.(48) மனுஜாதிபரே {மனிதர்களின் தலைவரே}, பரதன் மீதும், என் மீதும் ஆணையாக உமக்குச் சொல்கிறேன். இராமனை நாடுகடத்துவதைத் தவிர வேறெதையும் நான் விரும்பேன்" {என்றாள் கைகேயி}.(49)
[1] மஹாபாரதத்தில் வன பர்வம் 131, 196, துரோண பர்வம் 58, அநுசாஸன பர்வம் 32 ஆகிய பகுதிகளில் புறாவுக்காகத் தன் தசையைக் கொடுத்த சிபியின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. கே.எம்.கே.மூர்த்திப் பதிப்பின் அடிக்குறிப்பில், "அரசமுனியான அலர்க்கன், விழியற்ற பிராமணருக்கு வரமளிக்கும் நோக்கில் அவர் வேண்டுதலின்படி தன் கண்களையே அவருக்குக் கொடுத்தான்" என்றிருக்கிறது. மஹாபாரதம் அஸ்வமேத பர்வம் பகுதி 30ல் இந்த அலர்க்கன் குறித்த மற்றொரு கதை சொல்லப்பட்டிருக்கிறது.
கைகேயி இவ்வளவும் சொல்லிவிட்டு ஓய்ந்தாள். அழுது கொண்டிருந்த ராஜனிடம் அவள் மறுமொழியேதும் பேசவில்லை.(50) கைகேயி கேட்ட இராமனின் வனவாசம், பரதனின் ஐஷ்வர்யம் என்ற சிறிதும் விரும்பத்தகாதவற்றைக் கேட்ட {தசரத} ராஜன், இந்திரியங்கலங்கியவனாக {புலன்கள் கலங்கியவனாகக்} கைகேயியிடம் ஒரு முஹூர்த்த காலம்[2] பேசாதிருந்தான்.(51,52அ) விரும்பத்தகாத சொற்களைப் பேசிக் கொண்டிருந்த தன் அன்புக்குரிய தேவியை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். வஜ்ரம் போன்றதும், ஹிருதயம் விரும்பாததும், துக்கமயமானதும், சோகமயமானதும், கோரமானதுமான அந்த வசனத்தைக் கேட்ட அந்த ராஜனால் சுகமடைய முடியவில்லை.(52ஆ,53) அந்த தேவியின் கோரமான தீர்மானத்தையும், சபதத்தையும் நினைத்துப் பெருமூச்சு விட்டவன், "இராமா" என்று சொல்லி, வெட்டப்பட்ட மரம்போல் கீழே விழுந்தான்.(54)
[2] ஒரு முஹூர்த்த காலம் என்பது 48 நிமிடங்களாகும்.
அந்த ஜகத்பதி, சித்தம் அழிந்த உன்மத்தனை {பித்தனைப்} போலும், விபரீத நோயாளியைப் போலும், சீற்றமில்லா பாம்பைப் போலும் ஆனான்.(55) பிறகு அந்த ராஜா, தீன சுவரத்துடன் கைகேயியிடம் இதைச் சொன்னான், "அர்த்தம் போன்ற இந்த அநர்த்தத்தை {நல்லது போன்ற இந்தத் தீமையை} உனக்குக் காட்டியது {போதித்தது} யார்? பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போல லஜ்ஜையில்லாமல் {வெட்கமில்லாமல்} என்னிடம் பேசுகிறாயே.(56,57அ) தொடக்கத்திலேயே உன்னுடைய இந்த ஒழுக்கக்குறையை நான் அறிந்தேனில்லை. இப்போதுதான் அதை நான் உன்னிடம் காண்கிறேன். அது விபரீதமாயிருக்கிறது.(57ஆ,இ) பரதனை ராஷ்டிரத்திலும், ராமனை வனத்திலும் அமரச் செய்யும் இவ்விதமான வரத்தைக் கேட்கும் அளவுக்கு உன்னிடம் பயத்தை உண்டாக்கியது யார்?(58) உன் பர்த்தாவுக்கும் {கணவனுக்கும்}, உலகத்துக்கும், பரதனுக்கும் பிரியமான காரியத்தைச் செய்ய விரும்பினால் அந்த பாப நோக்கத்தை நீ கைவிடுவாயாக.(59,60அ) பாப சங்கல்பம் கொண்டவளே, கொடூரமானவளே, தீயவளே, தீச்செயல்களைச் செய்பவளே, எந்த துக்கத்தை, அல்லது குற்றத்தை என்னிடமோ, ராமனிடமோ நீ காண்கிறாய்?(60ஆ,61அ)
இராமன் இல்லாமல் எவ்வகையிலும் பரதன் ராஜ்ஜியத்தை ஏற்கமாட்டான். தர்மத்தில் ராமனைவிட அவன் பலவான் என நான் நினைக்கிறேன்.(61ஆ,62அ) "வனத்திற்குச் செல்" என்று சொல்லிவிட்டு, கிரஹணம் பீடித்த இந்துவை {சந்திரனைப்} போல ராமனின் முகம் நிறம் மங்குவதை நான் எவ்வாறு காண்பேன்?(62ஆ,63அ) நண்பர்களுடன் சேர்ந்து நன்கு திட்டமிட்டு நிச்சயிக்கப்பட்ட என்னுடைய நல்ல தீர்மானம், பகைவரால் அழிக்கப்பட்ட சம்முவை {படையைப்}[3] போலத் தடுமாறுவதை நான் எவ்வாறு காண்பேன்? பல்வேறு திக்குகளில் இருந்து வரப்போகும் ராஜாக்கள் என்னைக் குறித்து என்ன சொல்வார்கள்? "இக்ஷ்வாகனான அந்தப் பாலன் {சிறுவன் ராமன்} நீண்டகாலமாக ராஜ்யத்தில் அகாரியம் செய்து வந்திருக்கிறான்" என்பார்கள்.(63ஆ,-65அ) நல்ல ஞானம் கொண்டவர்களும், குணவான்களும், விருத்தர்களுமான {முதியவர்களுமான} பலர், காகுத்சனை {ராமனைக்} குறித்து என்னிடம் கேட்கும்போது நான் என்ன சொல்வேன்?(65ஆ,66அ) "கைகேயியால் துன்பமடைந்த என்னால் ராமன் வனத்திற்கு அனுப்பப்பட்டான்" என்ற சத்தியத்தைச் சொன்னாலும் அஃது அசத்தியத்தைச் சொன்னதாகவே ஆகும் {அந்த உண்மையை எவரும் நம்பமாட்டார்கள்}.(66ஆ,67அ)
[3] மஹாபாரதம் ஆதிபர்வம் 2ம் பகுதி சுலோகம் எண் 22ல் சம்முவைக் குறித்து அறியலாம்.
இராகவன் வனத்திற்குச் சென்றால், கௌசல்யை என்னிடம் என்ன சொல்வாள்? இத்தகைய விரும்பத்தகாத செயலைச் செய்துவிட்டு அவளிடம் நான் என்ன மறுமொழி கூறுவேன்?(67ஆ,68அ) தேவி, என்னிடம் எப்போதும் பிரியமாக இருப்பவளும், பிரிய புத்திரனைக் கொண்டவளும், பிரியமான சொற்களைப் பேசுபவளும், நன்கு நடத்தப்படத் தகுந்தவளுமான கௌசல்யை, தாசியை {பணிப்பெண்ணைப்} போலவும், சகியை {தோழியைப்} போலவும், பாரியையை {மனைவியைப்} போலவும், பாகினியை {உடன் பிறந்தவளைப்} போலவும், மாதாவைப் போலவும் எனக்குத் தொண்டு செய்து வந்தபோதும், உன் நிமித்தமாக அவள் ஒருபோதும் என்னால் நல்லமுறையில் நடத்தப்பட்டதில்லை.(68ஆ-70அ) என்னால் உனக்குச் செய்யப்பட்ட நன்மையானது, பத்தியமற்ற கறிச்சாற்றுடன் கூடிய அன்னத்தை உண்ட நோயாளியைப் போல என்னைப் பாதிக்கிறது.(70ஆ,71அ) இராமன் அவமதிப்புடன் நடத்தப்பட்டு வனத்திற்குப் புறப்படுவதைக் கண்டு பீதியடையும் சுமித்திரை எவ்வாறு என்னிடம் விசுவாசம் {நம்பிக்கை} வைப்பாள்.(71ஆ,72அ)
வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை}, ஐயோ, நான் இறந்துவிட்டேன், ராமன் வனம் செல்லப் போகிறான் என்ற இனிமையற்ற இரண்டு செய்திகளைத் துன்பத்துடன் கேட்பாளே.(72ஆ,73அ) ஐயோ, ஹிமவதத்தின் {இமயத்தின்} சாரலில் கின்னரனால் கைவிடப்பட்ட கின்னரியைப் போல சோகத்துடன் இருக்கப்போகும் வைதேஹி என் பிராணனை இழக்கச் செய்வாள்.(73ஆ,74அ) மஹாவனத்தில் வசிக்கும் ராமனையும், அழுது கொண்டிருக்கும் மைதிலியையும் {மிதிலையின் இளவரசியான சீதையையும்} கண்டும் நான் ஜீவித்திருக்க விரும்பவில்லை.(74ஆ,75அ)
தேவி, விதவையாகும் நீ உன் புத்திரனுடன் சேர்ந்து நிச்சயம் ராஜ்ஜியத்தை ஆளலாம். இராமன் நாடுகடத்தப்பட்டதும் நான் ஜீவித்திருக்க விரும்பவில்லை.(75ஆ,76அ) அழகிய வடிவுடன் கூடிய தீய மனைவியாகவே எப்போதும் இருந்த உன்னை, விஷத்துடன் மதுவுண்ட நரனை {மனிதனைப்} போல நான் சதியாக {நல்ல மனைவியாகக்} கருதினேன்.(76ஆ,77அ) கீதம் போன்ற ஒலியால் தூண்டி, மானைக் கொல்லும் வேடனைப் போல நீ என்னிடம் பொய்யாக நல்ல வார்த்தைகளுடன் ஆறுதலாகப் பேசினாய்.(77ஆ,78அ) வீதிகளில் கூடும் நல்ல மனிதர்கள், "புத்திரனை விக்கிரையம் செய்தவன் {விற்றவன்}" என்றும், "சுராபானம் பருகும் பிராமணனைப் போன்ற அநாரியன் {ஆரியனல்லாத தீயவன்}" என்றும் என்னை நிச்சயம் நிந்திப்பார்கள்.(78ஆ,79அ)
உன் சொற்களைப் பொறுத்துக் கொள்வது அஹோ, என்ன துக்கம்? அஹோ, என்ன துன்பம்? முற்பிறவியில் ஈட்டிய அசுபமே இப்போது எனக்கு துக்கமாக விதிக்கப்பட்டிருக்கிறது.(79ஆ,80அ) பாபியே, கழுத்தை நெரிக்கும் சுருக்குக்கயிற்றைப் போன்றவளான நீ, என் அறியாமையால் நீண்டகாலம் என்னால் கொண்டாடப்பட்டாய்.(80ஆ,81அ) உன்னுடன் வாழ்வை அனுபவித்த என்னால், மிருத்யுவை {மரணத்தைப் போன்ற உன்னை} உணர முடியவில்லை. யாருமில்லாத இடத்தில் சர்ப்பத்தைக் கையில் பிடிக்கும் பாலனைப் போல நான் உன்னைத் தீண்டியிருக்கிறேன்.(81ஆ,82அ) மஹாத்மாவான ராமன், துராத்மாவான என்னால் பித்ருவற்றவனாக்கப்பட்டான் {தந்தையும், பெரியோரும் இல்லாதவனாக்கப்பட்டான்}. இத்தகைய என்னிடம், இந்த ஜீவலோகம் ஆக்ரோஷம் கொள்வது நிச்சயம் தகுந்ததே.(82ஆ,83அ) "ஐயோ, ஸ்திரீக்காகப் புத்திரனை வனத்திற்கு அனுப்பிய காமாத்மாவான தசரத ராஜன் பெரும் மூடன்" {என்று உலகம் என்னை நிந்திக்கும்}.(83ஆ,84அ)
விரதங்களாலும், பிரம்மசரியத்தாலும், குருக்களாலும் மெலிந்த ராமன், {இன்பத்திற்குரிய} போக காலத்திலும் மஹத்தான கஷ்டத்தை மீண்டும் அனுபவிக்கப் போகிறான்.(84ஆ,85அ) "வனம் செல்வாயாக" என்று சொல்லப்பட்டாலும், என் புத்திரன் என்னிடம் இரண்டாம் {மற்றொரு} சொல்லைச் சொல்லமாட்டான். அவன், "அவ்வாறே ஆகட்டும்" என்றே சொல்வான்.(85ஆ,86அ) வனம் செல்ல என்னால் ஆணையிடப்பட்டதும் இராமன் என்னிடம் முரண்பட்டால், அஃது என் பிரியத்திற்குரியதாக இருக்கும். ஆனால் என் வத்ஸன் {அன்புக்குரியவன்} அவ்வாறு செய்யமாட்டான்.(86ஆ,87அ) தூய மனம் கொண்ட ராகவன், என் சிந்தனையை அறியமாட்டான். இவ்வாறு சொன்னதும், "அவ்வாறே ஆகட்டும்" என்றே அவன் சொல்வான்.(87ஆ,88அ) இராகவன் வனத்தை அடைந்ததும், சர்வலோகத்தாலும் நிந்திக்கப்பட்டவனான என்னை மிருத்யு {மரணதேவன்} அக்ஷமணீயத்திற்கு {தண்டனை அளிக்கும் யமனின் வசிப்பிடத்திற்கு} இட்டுச் செல்வான்.(88ஆ,89அ) மனுஜபுங்கவனான {மனிதர்களில் முதன்மையான} ராமன் வனம் சென்று, நான் மரணமடைந்ததும், எனக்கு இஷ்டமான ஜனங்களுக்கு நீ செய்ய நினைத்திருக்கும் பாபச் செயலென்ன எஞ்சியிருக்கிறதோ?(89ஆ,90அ)
கௌசல்யாதேவி, என்னையும், ராமனையும், புத்திரர்களையும் இழந்ததும், துக்கத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் என்னைப் பின்தொடர்வாள் {யமலோகம் செல்வாள்}.(90ஆ,91அ) கைகேயியே, கௌசல்யையையும், சுமித்ரையையும், மூன்று புத்திரர்களோடு கூடிய என்னையும் நரகத்தில் வீசிவிட்டு நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக.(91ஆ,92அ) என்னாலும், ராமனாலும் கைவிடப்பட்டதால் கலக்கமடைவதும், குணங்களால் அலங்கரிக்கப்பட்டதும், சாஷ்வதமாக {எப்போதும்} இருப்பதுமான இக்ஷ்வாகு குலத்தை வருத்தமடையச் செய்த நீயே அதைப் பரிபாலனம் செய்து கொள்வாயாக.(92ஆ,93அ) இராமனை நாடு கடத்துவது பரதனுக்கும் ஏற்புடையதென்றால், உயிர் பிரிந்ததும் எனக்கு அவன் பிரேத காரியம் {இறுதிச் சடங்கைச்} செய்ய வேண்டாம்.(93ஆ,94அ) ஐயோ, என் அமித்ரையே {என்னிடம் நட்பில்லாதவளே}, அநாரியையே {ஆரியமற்ற [உன்னதமில்லாத] பெண்ணே} கைகேயி, புருஷபுங்கவனான {மனிதர்களில் முதன்மையான} ராமன் வனத்திற்குச் சென்று, நான் மரித்த பிறகு, விருப்பங்கள் நிறைவேறி விதவையாகும் நீ, அதற்குப் பின் உன் புத்திரனுடன் சேர்ந்து ராஜ்ஜியத்தை ஆள்வாயாக.(94ஆ,95)
என் வீட்டில் ராஜபுத்திரியாக வசித்து வந்த உன்னால் பாபம் செய்த எனக்கு இவ்வுலகில் ஒப்பற்ற அகீர்த்தியும், அவமானமும், அவமதிப்பும் நிச்சயம் உண்டாகும்.(96,97அ) இரதங்களிலும் {தேர்களிலும்}, கஜங்களிலும் {யானைகளிலும்}, அஷ்வங்களிலும் {குதிரைகளிலும்} அடிக்கடி வலம் வந்த என் வத்ஸன் {அன்புக்குரிய மகன்} ராமன், மஹா அரண்யத்திற்குள் பாத நடையாக எவ்வாறு செல்வான்?(97ஆ,98அ) எவன் ஆகாரம் உண்ணும்போது, குண்டலதாரிகளான சுந்தர்கள் {காதுகளில் குண்டலங்கள் அணிந்தவர்களான சமையற்காரர்கள் / பாசகர்கள்} சிறந்த பான போஜனங்களை {போட்டிப் போட்டுக் கொண்டு} செய்தார்களோ, அவ்வாறான என் சுதன் {மகன்}, துவர்ப்பு, கசப்பு, காரம் ஆகியவற்றுடன் கூடிய வன ஆகாரத்தை உண்டு எவ்வாறு ஜீவிப்பான்?(98ஆ-100அ) விலையுயர்ந்த வஸ்திரங்களை உடுத்தியவனும், சுகத்தை மட்டுமே அடையத் தகுந்தவனுமான அவன், காஷாயம் {காவியுடை} உடுத்தி எவ்வாறு பூமியில் வசிப்பான்?(100ஆ,101அ) இராமன் அரண்யம் செல்லவும், பரதன் அபிஷேகம் பெறவுமான பயங்கரமான இத்தகைய நிலை, சிந்தனையற்ற யாருடைய வாக்கியத்தால் நேர்ந்தது?(101ஆ,102அ) பெண்கள் எப்போதும் வஞ்சகர்கள், எப்போதும் தன்னலம் மிக்கவர்கள். அவர்கள் நிந்திக்கப்படட்டும். நான் ஸ்திரீகள் அனைவரையும் சொல்லவில்லை, பரதனின் மாதாவைச் சொல்கிறேன்.(102ஆ,103அ)
தீய இயல்பைக் கொண்டவளே, தன்னலம் கொண்டவளே, கொடூரமானவளே, எனக்குத் துன்பத்தைத் தரும் தீர்மானம் கொண்டவளே, என்னாலோ, உனக்கு நன்மை செய்த ராமனாலோ செய்யப்பட்ட அப்ரியம் என்ன?(103ஆ,இ,ஈ,உ) இராமன் துன்பத்தில் மூழ்குவதைக் கண்டால், பிதாக்கள் புத்திரர்களைக் கைவிடுவார்கள், எப்போதும் அன்புடைய பாரியைகள் தங்கள் பதிகளைக் கைவிடுவார்கள் {தந்தை மகனையும், மனைவி கணவனையும் கைவிடுவார்கள்}. மொத்த ஜகமும் சீற்றமடையும்.(104) தேவகுமார ரூபனும், அலங்காரத்துடன் கூடியவனுமான மகன் அருகில் வருவதைக் கண்டு மகிழ்பவனான நான், அவனை மீண்டும் மீண்டும் கண்டு யௌவனத்தையும் {இளமையையும்} அடைகிறேன்.(105) சூரியனில்லாமலும், வஜ்ரதாரி {இந்திரன்} மழை பொழியாமலும் கூடிய இயற்கை சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால், ராமன் இங்கிருந்து செல்வதைக் கண்டு எவனாலும் ஜீவித்திருக்க முடியாது என்பதே என் கருத்தாகும்.(106) பகைவனால் வரும் மரணத்தைப் போல, என் அழிவை வேண்டிய உன்னை என் வீட்டில் வசிக்க வைத்திருந்தேன். ஐயோ, மஹாவிஷங்கொண்ட பெண்பாம்பை மோஹத்தால் என் மடியில் வைத்திருந்தேன். நான் கெட்டேன்.(107)
நானும், ராமனும், லக்ஷ்மணனும் இல்லாமல் பரதனும், நீயும் நகரத்தையம், ராஷ்டிரத்தையும் ஆள்வீராக. உன் பந்துக்களை {உறவினர்களைக்} கொன்று, என் பகைவருக்கு மகிழ்ச்சியளிப்பாயாக.(108) கொடூர இயல்புடையவளே, துன்பத்திலும் தாக்குதல் தொடுப்பவளே, பயங்கரச் சொற்களை நீ சொல்லும்போது, உன் பற்கள் ஏன் ஆயிரந்துண்டுகளாக விழுந்து சிதறவில்லை?(109) இதமற்றதும், அன்பற்றதுமான சிறு சொல்லையும் ராமன் சொல்லமாட்டான். கொடுஞ்சொற்களைச் சொல்வது அவனுக்குத் தெரியாது. அழகாகப் பேசுபவனும், குணங்களுக்காக எப்போதும் மதிக்கப்படுபவனுமான ராமனிடம் தோஷங்களை {குற்றங்களை} எவ்வாறு உன்னால் காண {சொல்ல} முடிகிறது?(110)
கேகய குலத்தைக் கெடுக்க வந்த கொடும்பாபியே, நீ சோர்ந்தாலும், எரிந்து போனாலும், நாசமடைந்தாலும், ஆயிரந்துண்டுகளாகப் பிளந்து பூமியில் விழுந்தாலும், கொடூரமானதும், எனக்கு இதமற்றதுமான உன் சொல்லின்படி நான் செயல்படமாட்டேன்.(111) கத்திக்கு ஒப்பானவளும், எப்போதும் பொய்யான இன்சொற்களைப் பேசுபவளும், தீய இயல்புடையவளும், சொந்த குலத்தையே அழிப்பவளும், மனவிலக்கம் கொண்டவளும், பந்துக்களுடன் {உறவினர்களுடன்} சேர்ந்து என் ஹிருதயத்தை எரிக்க நினைப்பவளுமான நீ ஜீவித்திருப்பதை நான் விரும்பவில்லை.(112) என் மகனில்லாமல் எனக்கு ஜீவிதமில்லை எனும்போது, இனி எவ்வாறு சுகமாக இருப்பேன்? நான் இருந்தாலும், வேறு யாரால் இன்பம் அடைவேன்? தேவி, எனக்கு இதமற்றதைச் செய்யாதே. நான் உன் பாதங்களைத் தீண்டுகிறேன். என்னிடம் கருணை கொள்வாயாக" {என்றான் தசரதன்}.(113)
தன் ஸ்திரீயால் {மனைவியான கைகேயியால்} ஹிருதயம் கிருஹிக்கப்பட்டவனும், மரபின் வரம்புகள் அனைத்தையும் மீறியவனும், அநாதையைப் போல அழுது கொண்டிருந்தவனுமான அந்த பூமிபாலன் {பூமியை ஆளும் தசரதன், கைகேயியின் பாதங்களில் வீழ்ந்தாலும், அவள் கால்களை விலக்கிக் கொண்டதால்} விரிந்து கிடந்த அவளது பாதங்களை அடையாமல் நோயாளியைப் போலத் தவறி விழுந்தான்.(114)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 012ல் உள்ள சுலோகங்கள் : 114
Previous | | Sanskrit | | English | | Next |