The room of wrath | Ayodhya-Kanda-Sarga-009 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கைகேயியின் மனத்தை மாற்றுவதில் வெற்றியடைந்த மந்தரை; அவளது தூண்டுதலால் கைகேயி கோபசாலைக்குள் நுழைந்தது...
இவ்வாறு {மந்தரையால்} பேசி முடிக்கப்பட்டதும், கைகேயி கோபத்தில் ஜ்வலிக்கும் முகத்துடன் தீர்க்கோஷ்ண {நீளமான சூடான} பெருமூச்சு விட்டபடியே மந்தரையிடம் இதைச் சொன்னாள்:(1) "இப்போதே சீக்கிரமாக நான் ராமனை இங்கிருந்து வனத்திற்கு அனுப்பிவிடுகிறேன். சீக்கிரமாக பரதனுக்கும் யௌவராஜ்யாபிஷேகம் செய்ய வைக்கிறேன்.(2) மந்தரையே, பரதன் ராஜ்ஜியத்தை அடைவதற்கும், ராமன் அடையாமல் போவதற்கும் உபாயமென்ன? சொல்வாயாக. இப்போது அதைக் கவனிப்பாயாக" {என்றாள் கைகேயி}[1].(3)
[1] அனைய தன்மையளாகிய கேகயன் அன்னம்வினை நிரம்பிய கூனியை விரும்பினள் நோக்கிஎனை உவந்தனை இனியை என் மகனுக்கும் அனையான்புனையும் நீள் முடி பெறும்படி புகலுதி என்றாள்- கம்பராமாயணம் 1485ம் பாடல்பொருள்: இவ்வாறு தன்மை மாறிய கைகேயிவினை நிரம்பிய கூனியி விரும்பி நோக்கிஎன்னிடம் அன்புள்ளவளே, என் மகனுக்கும் இனியவளே அந்தப் பரதன்புனையும் நீள்முடி கிரீடத்தை அடையும் விதத்தை சொல்வாயாக என்றாள்.
தேவியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், பாபதர்ஷினியான {பாபசிந்தனை கொண்டவளான} மந்தரை, ராமனுக்கான நன்மையைக் கெடுக்கக் கைகேயியிடம் இதைச் சொன்னாள்:(4) "கைகேயி, மகிழ்ச்சியடைகிறேன். உன் புத்திரன் பரதன் மட்டுமே ராஜ்யத்தை எவ்வாறு அடைவான் என்பதைச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேட்பாயாக.(5) கைகேயி, உன் நன்மைக்குத் தகுந்தவற்றை என்னிடம் நீ கேட்க விரும்புகிறாய். உனக்கு நினைவில்லையா? நினைவிருந்தும் மறைக்கிறாயா?(6) விலாசினி {கவர்ச்சி நிறைந்தவளே}, என்னால் சொல்லப்படுவதை நீ கேட்க விரும்பினால், நான் சொல்கிறேன் கேட்பாயாக. கேட்ட பிறகு விதிப்படி செயல்படுவாயாக" {என்றாள் மந்தரை}.(7)
மந்தரையின் இந்த வசனத்தைக் கேட்ட கைகேயி, நன்கு விரிக்கப்பட்ட சயனத்திலிருந்து கொஞ்சம் எழுந்து, இதைச் சொன்னாள்:(8) "மந்தரையே, பரதன் ராஜ்ஜியத்தை அடைவதற்கும், ராமன் அடையாததற்கும் உரிய உபாயமென்ன? அந்த உபாயத்தை எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டாள்}.(9)
அந்தத் தேவியால் {கைகேயியால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், குப்ஜையும், பாபதர்ஷினியுமான {கூனியும், பாபசிந்தனை கொண்டவளுமான} மந்தரை, ராமனின் நன்மையைக் கெடுக்க இந்த வசனத்தைச் சொன்னாள்:(10) "தேவி, தேவாஸுர யுத்தத்தில், தேவராஜனுக்கு {இந்திரனுக்கு} உதவி செய்வதற்காக உன் பதி {கணவர் தசரதர்}, உன்னையும் அழைத்துக் கொண்டு, ராஜரிஷிகள் ஸஹிதராகத் தண்டகவனத்தை[2] நோக்கி தென்திசையில் திமித்வஜன் {திமிங்கலக் கொடி கொண்ட சம்பராசுரன்} வசித்த வைஜயந்தம் என்ற புகழ்பெற்ற நகரத்திற்குச் சென்றார்.(11,12) நூறு மாயைகளைச் செய்பவனும், புகழ்பெற்ற மஹாஸுரனுமான அந்த சம்பரன், தேவர்களால் வீழ்த்தப்பட முடியாதவனாகச் சக்ரனுடன் {இந்திரனுடன்} போரிட்டுக் கொண்டிருந்தான்.(13) அந்தப் பெரும்போரில் ராக்ஷசர்கள், கணைகளால் வீழ்த்தப்பட்டவர்களும், ராத்திரியில் உறங்கிக் கொண்டிருந்தவர்களுமான மனிதர்களை அணுகி பலவந்தமாக அவர்களைக் கொன்றனர்[3].(14)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "தண்டக வனம் என்பது தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்டது. தண்டகம் என்ற சொல், தண்டனையாக மக்கள் அங்கே நாடு கடத்தப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது" என்றிருக்கிறது.
[3] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "காயமடைந்த மக்களையும், பாதுகாப்பில்லாமல் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் மக்களையும் கொல்வது சாத்திரப்படி தர்மமல்ல. ராக்ஷசர்கள் அத்தகைய சாத்திரங்களைப் பின்பற்றுபவர்களல்ல" என்றிருக்கிறது.
அங்கே அப்போது தசரதராஜன் மஹாயுத்தம் செய்தார். நீண்ட கரங்களைக் கொண்டவரான அவர் {தசரதர்}, அசுரர்களின் சஸ்திரங்களால் {ஆயுதங்களால்} நொறுங்கி சிதைந்தார் {மயக்கமடைந்தார்}.(15) தேவி, {அவ்வாறு} நனவிழந்த அவர் உன்னால் போர்க்களத்தில் இருந்து வேறிடம் கொண்டு செல்லப்பட்டார். அங்கேயும் சஸ்திரங்களால் {ஆயுதங்களால்} தாக்கப்பட்ட உன் பதி உன்னால் காக்கப்பட்டார்.(16) சுபதர்ஷனியே {மங்கலத் தோற்றம் கொண்ட கைகேயியே}, இதனால் மகிழ்ச்சியடைந்த அவர், உனக்கு இரண்டு வரங்களை அளித்தார். நீ, உன் பதியிடம் {கணவர் தசரதரிடம்}, "எப்போது அந்த வரங்களை விரும்புவேனோ, அப்போது கேட்கிறேன்" என்று சொன்னாய். அந்த மஹாத்மாவும், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார்.(17,18அ) தேவி, இதை {இந்தக் காரியம்} குறித்து நானேதும் அறியேன். பூர்வத்தில் நீயே இந்தக் கதையை எனக்குச் சொன்னாய். {உன் மீது கொண்ட} சினேகத்தால் நான் இதை {மறக்காமல்} மனத்திலேயே வைத்திருந்தேன்.
இராமாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வலுக்கட்டாயமாகத் தடுப்பாயாக.(18ஆ,19) பரதனுக்கு அபிஷேகம் செய்வது, பதினான்கு வருஷங்கள் ராமனை நாடுகடத்துவது என்ற இரு வரங்களை நீ உன் பர்த்தாவிடம் {கணவரிடம்} கேட்பாயாக.(20) பதினான்கு வருஷங்களுக்கு ராமனை வனத்திற்கு நாடுகடத்தினால், உன் புத்திரன் {பரதன்}, பிரஜைகளின் சினேகத்தையும், நெருக்கமான உறவையும் ஈட்டி ஸ்திரமடைவான்.(21) அஸ்வபதிசுதே {அசுவபதியின் மகளே கைகேயி}, இப்போது கோபத்தில் இருப்பவளைப் போலக் குரோதாகாரத்திற்குள் {கோபசாலைக்குள்} பிரவேசித்து, அழுக்காடைகளைப் உடுத்திக் கொண்டு, விரிப்புகளேதுமற்ற பூமியில் {தரையில்} கிடப்பாயாக.(22) அவரை {தசரதரைக்} கண்டதும், தலையெடுத்துப் பார்க்காமலும், முகங்கொடுத்துப் பேசாமலும் சோகத்துடன் அழுவாயாக.(23)
நீ எப்போதும் உன் பர்த்தாவின் அன்புக்குரியவள். எனக்கு இதில் ஐயமேதுமில்லை. அந்த மஹாராஜா, உனக்காக ஹுதாசனத்திலும் {நெருப்பிலும்} விழுவார்.(24) ராஜா {தசரதர்}, உன்னைக் குரோதமடையச் செய்யும் சக்தரல்லர் {கோபமடையச் செய்ய இயன்றவரல்ல}. குரோதத்தில் உன்னைக் காணவும் இயலாதவர். உன் பிரியத்தை அடைவதற்காகப் பிராணனையும் கொடுப்பவர்.(25) மந்த சுவபாவம் கொண்டவளே, மஹீபதி {பூமியின் தலைவரான தசரதர்} உன் வாக்கியத்தை மீற மாட்டார். உன்னுடைய சௌபாக்கிய பலத்தை நீ அறியாமல் இருக்கிறாய்.(26) தசரதராஜர், மணிகளையும், முத்துக்களையும், சுவர்ணத்தையும் {தங்கத்தையும்}, விதவிதமான ரத்தினங்களையும் கொடுக்கலாம். அவற்றில் நீ மனத்தைச் செலுத்தாதே.(27)
மஹாபாக்யவதியே, தேவாசுர யுத்தத்தில் எந்த வரங்களைக் கொடுத்தாரோ அவ்விரண்டு வரங்களையும் தசரதருக்கு நினைவூட்டுவாயாக. நன்மை {நினைத்த காரியம்} உன்னை மீறாமல் பார்த்துக் கொள்வாயாக.(28) தசரதர் தானே உன்னை எழுப்பி உனக்கான வரத்தைக் கொடுக்க முன் வருவார். இவ்வாறு அந்த மஹாராஜரை உறுதியடையச் செய்த பிறகு, நீ இந்த வரத்தைக் கேட்க வேண்டும்:(29) "பார்த்திபரிஷபரே, ராமனை நவபஞ்ச {பதினான்கு} வருஷங்கள் அரண்யத்திற்கு நாடு கடத்துவீராக. பரதனைப் பிருத்வியின் ராஜாவாகச் செய்வீராக" {என்று கேட்பாயாக}.(30) இராமன் சதுர்தச {பதினான்கு} வருஷங்கள் வனத்திற்கு நாடு கடத்தப்பட்டதும் உன் சுதன் {மகன்} உறுதியாக எஞ்சிய காலமும் வேரூன்றி நிலைத்திருப்பான்.(31)
தேவி, ராமனை நாடு கடத்துவதையும் வரமாகவே நீ அவரிடம் கேட்க வேண்டும். இவ்வாறே உன் புத்திரன் நன்மைகள் அனைத்தையும் அடைவான்.(32) இவ்வாறு நாடுகடத்தப்படும் ராமன், அராமன் {மக்களுக்கு விரும்பத்தகாதவன்}[4] ஆவான். பரதன், பகைவரழிந்ததும் ராஜா ஆவான்.(33) எந்தக் காலத்தில் ராமன் வனத்தில் இருந்து திரும்பி வருவானோ, அந்தக் காலத்தில் விவேகியான உன் புத்திரன் மனிதர்களை வசப்படுத்திக் கொண்டு, நண்பர்களுடன் கூடியவனாக வேரூன்றி நிலைத்திருப்பான்.(34,35அ) உனக்குப் பிராப்தகாலம் {வேண்டியவை கிட்டும் தகுந்த காலம்} இதுவென நான் நினைக்கிறேன். கவனத்தை ஈர்த்து, அச்சத்தை அடக்கி, ராமாபிஷேக சங்கல்பத்திலிருந்து ராஜனைத் திருப்புவாயாக" {என்றாள் மந்தரை}.(35ஆ,36அ)
[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "'ராமோராமோ பவிஷ்யதி' என்று மூலம், 'ராமன் ராமனே ஆவான்' என்று பொருள். 'ராமன் ஸஹாய ஸம்பத்தியில்லாமல் தான் கேவலம் ஒருவனாகவே ஆவான்' என்றபடி அல்லது 'ரமயதீதிராம:' என்கிற வ்யுதபத்தியால் அரண்யத்தில் ரிஷிகளை ஆனந்திக்கச் செய்வான். அங்கேயே இருந்து விடுவானென்று கருத்து. அல்லது 'ராமோராமோ பவிஷ்யதி' என்று பதவிபாகஞ் செய்து கொண்டு ராமன் அராமன் - என்றால் ப்ரஜைகளை மனக்களிப்புறச் செய்யாதவன், வெகுகாலம் அரண்யத்திலிருப்பதனால் ப்ரஜைகளின் ஸ்னேஹத்திற்குப் பாத்ரமாகாதவன் ஆவான் என்று பொருள்" என்றிருக்கிறது.
மந்தரையின் மூலம் அர்த்த ரூபத்தில் அநர்த்தத்தைக் கிரஹித்த {தகாததைத் தகுந்ததாகப் புரிந்து கொண்ட} கைகேயி மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டு மந்தரையிடம் இதைச் சொன்னாள்.(36ஆ,37அ) நல்லியல்பு கொண்டவளான கைகேயி, அந்த குப்ஜையின் வாக்கியத்தில் பரம ஆச்சரியம் அடைந்து ஒரு சிறுமியைப் போல உத்பாதத்தை {தீய பாதையை} அடைந்தாள்.(37ஆ,இ) {கைகேயி}, "குப்ஜையே {கூனியே}, சிறந்த காரியங்களைச் சொல்வதில் சிறந்தவளான உன்னை நான் அறிந்து கொள்ளவில்லை. பிருத்வியிலுள்ள புத்திசாலி குப்ஜைகளில் நீயே உத்தமி {புத்திசாலித்தனத்தில் பூமியிலுள்ள கூனிகளில் நீயே சிறந்தவள்}.(38) குப்ஜையே, நீ ஒருத்தியே எப்போதும் என் நலத்தில் விருப்பமுள்ள ஹிதைஷிணியாக {நலன் விரும்பியாக} இருக்கிறாய். ராஜனின் செயலில் உள்ள நோக்கங்களை நான் அறிந்திருக்க மாட்டேன்.(39,40அ)
குப்ஜைகளில் பலர், விகாரமான உடல் கொண்டவர்களாகவும், வக்ரர்களாகவும், பரம பயங்கரர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் நீயோ வாதத்தில் வளைந்த பத்மத்தைப் போன்ற பிரியதர்ஷனியாக {தென்றல் காற்றில் வளைந்த தாமரையைப் போல அழகிய தோற்றம் கொண்டவளாக} இருக்கிறாய்[5].(40ஆ,41அ) உன் மார்பு இரு மருங்கிலும் சமமாகத் தோள்வரை உயர்ந்திருக்கிறது. அவற்றுக்குக் கீழே {பருத்த மார்பைக் கண்டு} வெட்கப்படுவதைப் போல உன் நாபி இளைத்து உள்ளடங்கி இருக்கிறது.(41ஆ,42அ) மந்தரையே, பரிபூரணமான இடை, உருண்ட மார்பு, களங்கமற்ற நிலவுக்கு நிகரான முகம் ஆகியவற்றுடன், அஹோ நீ ஒளிர்ந்து கொண்டிருக்கிறாயே.(42ஆ,43அ) உன் இடை, பொன் கச்சையுடன் {அரைநூல்மாலையுடன் / ஒட்டியாணத்துடன்} ஒளிர்ந்தவாறே ஒலித்துக் கொண்டிருக்கிறது. தொடைகள் இரண்டும் இருண்டு திரண்டிருக்கின்றன. உன் கால்கள் இரண்டும் நீண்டிருக்கின்றன.(43ஆ,44அ) மந்தரையே, பட்டாடை உடுத்தியிருக்கும் நீ, என் முன் நீண்ட தொடைகளுடன் நடக்கையில் ராஜஹம்சத்தைப் போலத் தெரிகிறாய்.(44ஆ,இ)
[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "உலகத்தில், விகாரமான அவயவங்கள் பெற்றுக் கோணலாகிப் பார்க்கும்பொழுது மிகவும் வெறைப்பைத் தரும்படியான கூனிகள் பலருண்டு, நீ அப்படியன்று காற்றினால் வளைந்த கமலம் போல வாத தோஷத்தினால் உனது சரீரம் வளைந்திருக்கிறது" என்றிருக்கிறது.
அசுராதிபனான சம்பரனிடம் இருந்த ஆயிரம் மாயைகள் எவையோ, அவை அனைத்தும், அதற்கு மேல் ஆயிரமும் உன்னிடம் இருக்கின்றன.(45) ரதத்தின் கோபுரத்தைப் போல நீண்டிருக்கும் இந்தக் கூனில், உன் எண்ணங்களும், ராஜவித்தைகளும், மாயைகளும் வசிக்கின்றன.(46,47அ) குப்ஜையே, ராகவன் வனத்திற்குச் சென்று, பரதன் அபிஷேகம் பெறும்போது, நான் இதை {இந்தக் கூனை} ஹிரண்யமயமான மாலையால் {பொன்மாலையால்} அலங்கரிப்பேன்.(47ஆ,48அ) மந்தரையே, நன்மையை அடைந்து மகிழ்ச்சியடைந்த பிறகு, நல்ல தரமுள்ள தூய்மையான சுவர்ணத்தை {தங்கத்தை / தங்கம் போன்ற சந்தனத்தை} உன் கூனில் பூசுவேன்[6].(48ஆ,49அ) குப்ஜையே, அழகிய ஆபரணங்களையும், உன் முகத்துக்கான பல்வேறு வகையான சுப திலகங்களைப் புடம்போட்ட தங்கத்தால் செய்விப்பேன்.(49ஆ,50அ) பகைவருக்கு மத்தியில் முக்கிய நிலையை அடைந்து கர்வத்துடனும், சந்திரனுடன் போட்டியிடும் ஒப்பற்ற முகத்துடனும், சுப வஸ்திரங்களைப் பூண்டு கொண்டு தேவதையைப் போல நீ திரிந்திருப்பாய்.(50ஆ,51) குப்ஜையான நீ எனக்குச் செய்வதைப் போல, சர்வாபரணபூஷிதைகளான {அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட} குப்ஜைகள் எப்போதும் உன் பாதத்திற்குத் தொண்டு செய்வார்கள்" {என்றாள் கைகேயி}.(52)
[6] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "எனக்குக் கார்யம் ஸித்தித்தபின்பு ஸந்தோஷம் அடைந்து நான் பத்தரை மாற்றுள்ள மேலான அபரஞ்சி தங்கத்தை உருக்கிப் பூசி உனது கூனை அலங்கரிக்கின்றனன். அல்லது சந்தனத்துடன் கலந்த மேலான அபரஞ்சியைக் கொண்டு உனது கூனின் மீது பூசுகின்றனன்" என்றிருக்கிறது.
இவ்வாறு புகழப்பட்டவள் {மந்தரை}, வேள்வியின் அக்னி ஜுவாலையைப் போலத் தூய சயனத்தில் கிடந்த கைகேயியிடம் இதைச் சொன்னாள்:(53) "கல்யாணி {மங்கலமானவளே}, நீர் வெளியேறிய பிறகு அணை கட்டுவது ஆகாது. எழுவாயாக மங்கலச் செயலைச் செய்து உன் தாக்கத்தை ராஜனுக்குக் காட்டுவாயாக" {என்றாள் மந்தரை}.(54)
விசாலாக்ஷியும் {நீள்விழியாளும்}, சௌபாக்கியத்தில் {பேரழகில்} கர்வம் கொண்டவளும், வரம்பெற்றவளுமான கைகேயி தேவி, அந்த குப்ஜையால் {கூனியால்} இவ்வாறு ஊக்கப்படுத்தப்பட்டதும், அவளது வாக்கியத்திற்கு அடிபணிந்து, அநேக நூறாயிரங்களுக்கான {லட்சங்களுக்கான} மதிப்புடைய முத்தாரத்தையும், பெருமதிப்புள்ள பிற ஆபரணங்களையும் கழற்றி, மந்தரையுடன் குரோதாகாரத்தில் {கோபசாலைக்குள்} நுழைந்து, அங்கே ஒரு பொற்கொடியைப் போலப் பூமியில் கிடந்து, மந்தரையிடம் இதைச் சொன்னாள்:(55-57) "குப்ஜையே {கூனியே}, ராகவன் {ராமன்} வனத்தை அடைந்து, பரதன் பூமியை அடைய வேண்டும். அல்லது, நான் இங்கே இறந்துவிட்டேனென நிருபரிடம் {தசரத மன்னரிடம் / கேகய ராஜனிடம்} அறிவிப்பாயாக.(58) சுவர்ணத்தாலோ, ரத்தினங்களாலோ, பூஷணங்களாலோ {ஆபரணங்களாலோ} எனக்குப் பயனில்லை. இராமனுக்கு அபிஷேகம் நடந்தால், அப்போதே என் ஜீவிதம் முடியும்" {என்றாள் கைகேயி}.(59)
பிறகு மந்தரை, மன்னனின் மஹிஷியும், தனக்கு நன்மையானதும், ராமனுக்கு நன்மையற்றதுமான வசனத்தை மஹாபராக்ரமத்துடன் பேசிக் கொண்டிருந்தவளுமான பரதனின் மாதாவிடம் {கைகேயியிடம்} மீண்டும் {பின்வருமாறு} பேசினாள்:(60) "இராமன் இந்த ராஜ்ஜியத்தை அடைந்தால், நீயும் உன் மகனும் அழிவடைவீர்கள். இது நிச்சயம். கல்யாணி {மங்கலமானவளே}, எனவே, எவ்வழியில் உன் மகன் பரதன் அபிஷேகம் பெறுவானோ அவ்வழியில் இதைச் செய்வாயாக" {என்றாள் மந்தரை}.(61)
அந்த குப்ஜையின் {கூனியின்} சொற்கணைகளால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்ட மஹிஷி {மன்னனின் மனைவியான கைகேயி} சோகமும், கோபமுமடைந்து, கைகளை ஹிருதயத்தில் வைத்துக் கொண்டு ஆச்சரியத்துடன் அந்த குப்ஜையை மீண்டும் மீண்டும் புகழ்ந்தாள். பிறகு:(62) "குப்ஜையே, நான் இங்கிருந்து யமலோகம் செல்வதைக் கண்டு நீ அறிவிக்க வேண்டும். அல்லது ராகவன் வனத்திற்குச் சென்று, பரதன் என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.(63) இராகவன் இங்கிருந்து வனம் செல்லவில்லையெனில், நான் விரிப்புகளையோ, சந்தனத்தையோ, அஞ்சனத்தையோ, பான போஜனங்களையோ, ஜீவிதத்தையோ விரும்பமாட்டேன்" {என்றாள் கைகேயி}.(64)
இந்தக் கொடூர வசனத்தைச் சொன்ன அந்த பாமினி {அழகிய கைகேயி}, ஆபரணங்கள் அனைத்தையும் கழற்றி ஓரிடத்தில் வைத்துவிட்டு, வீழ்ந்து கிடக்கும் கின்னரியைப் போல விரிப்பால் மறைக்கப்படாத மேதினியில் {வெறுந்தரையில்} கிடந்தாள்.(65) அந்த நரேந்திரபத்தினி {மன்னனின் மனைவியான அந்தக் கைகேயி}, விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் அனைத்தையும் அகற்றிவிட்டு, அதீத கோபத்தின் இருளால் முகம் மறைக்கப்பட்டு, தளர்ந்த மனத்துடன் நட்சத்திரமற்ற இருள் சூழ்ந்த வானம் போலத் தெரிந்தாள்.(66)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 009ல் உள்ள சுலோகங்கள் : 66
Previous | | Sanskrit | | English | | Next |