Consolation by Dasharatha | Ayodhya-Kanda-Sarga-010 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கோபசாலையை அடைந்த தசரத மன்னன்; பல்வேறு வழிகளில் கைகேயிக்கு ஆறுதல் கூறியது...
பெரும் பாபியான அந்த குப்ஜையால் {மந்தரையால்} விபரீதமாக போதிக்கப்பட்ட கைகேயி, நச்சுக்கணையால் தாக்கப்பட்ட கின்னரியைப்[1] போலத் தரையில் கிடந்தாள்.(1) திறன்மிக்கவளான அந்த பாமினி {அழகிய பெண்}, செய்ய வேண்டுவதெவையெனத் தன் மனத்தில் தீர்மானித்ததையெல்லாம் மந்தரையிடம் மெல்லச் சொன்னாள்.(2) மந்தரையின் வாக்கியத்தால் மோஹமடைந்த அந்த பாமினி {அழகிய பெண் கைகேயி}, தீனமடைந்து, நாகக் கன்னியைப் போல தீர்க்கோஷ்ணமான பெருமூச்சு விட்டபடியே உறுதியாக நிச்சயம் {தீர்மானம்} செய்து கொண்டு, ஆத்மசுகத்திற்கான மார்க்கத்தை ஒரு முஹூர்த்த காலம்[2] வரை சிந்தித்தாள்.(3,4அ) நன்மையை விரும்புகிறவளான மந்தரை, அந்த நிச்சயத்தைக் கேட்டு சித்தியடைந்தவளைப் போலப் பரமபிரீதியடைந்தாள்.(4ஆ,5அ)
[1] முந்தைய சர்க்கத்தின் 65ம் சுலோகத்திலும் இந்தக் கின்னரி உவமை சொல்லப்பட்டது. கின்னரர்கள் என்போர் தெய்வீக இசைக்கலைஞர்களாவர். பாதி மனித உடலையும், மீதி பறவைகள் உடலையும் பெற்ற தொன்ம உயிரினங்களாவர். அவர்களில் பெண்கள் கின்னரிகள் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
[2] ஒரு முஹூர்த்த காலம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்களாகும்.
அபலையான அந்த தேவி {கைகேயி}, கோபமடைந்தவளாக, முகத்தின் புருவங்களை நெருக்கியபடியே நன்கு நிச்சயம் செய்து கொண்டு பூமியில் கிடந்தாள்.(5ஆ,6அ) அதன்பிறகு கைகேயியால் வீசப்பட்ட பலவண்ண மாலைகளும், திவ்ய ஆபரணங்களும் பூமியை அடைந்தன.(6ஆ,7அ) அவளால் வீசப்பட்ட மாலைகளும், ஆபரணங்களும் வானில் உள்ள நட்சத்திரங்களைப் போல வசுதையை {பூமியை} ஒளிரச்செய்தன.(7ஆ,8அ) ஒற்றைப் பின்னலாக {கூந்தலை} இறுகக் கட்டிக் கொண்டும், அழுக்காடை உடுத்திக் கொண்டும், குரோதாகாரத்தில் {கோபசாலையில்} கிடந்த கைகேயி, ஒரு கின்னரியைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தாள்.(8ஆ,9அ)
ஆனால் மஹாராஜா {தசரதன்}, ராகவனின் அபிஷேகத்திற்கு ஆணையிட்டுவிட்டு, {பெரியோரிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு, அந்த நிவேசனத்தின் உபஸ்தானத்திற்குள் பிரவேசித்தான்.(9ஆ,10அ) அனைத்தையும் வசத்தில் கொண்டவன் {தசரதன்}, பிரியமானதைப் பிரியமானவளிடம் சொல்ல {நல்ல செய்தியை தன் அன்புக்குரியவளிடம் சொல்ல} அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(10ஆ,11அ) பெரும்புகழ்படைத்த அவன் {தசரதன்}, ராகுவுடன் கூடிய வெண்மேகங்கள் மிதக்கும் ஆகாயத்தில் {பிரவேசிக்கும்} சந்திரனைப் போலக் கைகேயியின் மிகச் சிறந்த கிருஹத்திற்குள் பிரவேசித்தான்.(11ஆ,12அ)
மஹாராஜனான அந்த {தசரத} ராஜன், கிளிகள், மயில்கள் ஆகியவற்றைக் கொண்டதும், கிரௌஞ்ச ஹம்சங்களின் ஒலிகளால் நிறைந்ததும், இசைக்கருவிகளின் ஒலியை எதிரொலித்துக் கொண்டிருந்ததும், கூன் விழுந்தவர்களும், குள்ளர்களுமான பணிப்பெண்களைக் கொண்டதும், அழகிய சம்பக, அசோக மரங்களுடன் கூடியதும், லதாகிருஹங்களுடனும் {புதர்களும், கொடிகளும் நிறைந்த மாடங்களுடனும்}, சித்திரகிருஹங்களுடனும், தந்தம், வெள்ளி மற்றும் பொன்னாலான வேதிகைகளுடனும் {வேள்விப்பீடங்களுடனும்}, எப்போதும் புஷ்பங்களும், பழங்களும் விளைந்திருக்கும் மரங்களுடனும், கிணறுகளுடனும் கூடியதும், தந்தம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றாலான பரம ஆசனங்களாலும், விதவிதமான அன்னபானாதிகளாலும் {உண்ணும் உணவு, பருகும் பானம் ஆகியவற்றாலும்}, விதவிதமான பக்ஷணங்களாலும் {தின்பண்டங்களாலும்} பூஷணங்களுடன் {ஆபரண அலங்காரத்துடன்} கூடிய தகுந்த பெண்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டதும், திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} ஒப்பானதுமான மகத்தான அந்தப்புரத்திற்குள் பிரவேசித்தும், உத்தம சயனத்தில் {சிறந்த படுக்கையில்} கைகேயியைக் காணாது நின்றான்.(12ஆ-17அ)
காமபலத்தால் பீடிக்கப்பட்ட அந்த மனுஜாதிபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, தன் அன்புக்குரிய பாரியையை {மனைவியைக்} காணாமல் காமவிகாரத்தில் வருந்தி {அங்கிருந்த பெண்களிடம்} விசாரித்தான்.(17ஆ,18அ) பூர்வத்தில் அந்த {கைகேயி} தேவி இத்தகைய வேளையில் தப்பிப் போனதில்லை {அங்கே இல்லாமல் இருந்ததில்லை}. அந்த {தசரத} ராஜாவும் சூன்ய கிருஹத்திற்குள் ஒருபோதும் பிரவேசித்ததுமில்லை.(18ஆ,19அ) கிருஹத்திற்குள் சென்ற அந்த ராஜா, தன்னலம் விரும்பி அவள் அறிவு கெட்டுப் போயிருப்பதை அறியாமல் முன்பைப் போலவே விசாரித்தான்.(19ஆ,20அ) அப்போது அச்சமடைந்த பிரதிஹாரி {வாயில்காக்கும் பெண்}, தன் கைகளைக் கூப்பிச் சொன்னாள்: "தேவா, தேவி பெருங்குரோதத்துடன் கூடியவளாகக் குரோதாகாரத்திற்குள் {கோபசாலைக்குள்} விரைந்து சென்றாள்" {என்றாள்}.(20ஆ,21அ)
ஏற்கனவே பெரும் மனக்கலக்கத்திலிருந்த ராஜா, பிரதிகாரியின் வசனத்தைக் கேட்டு குழம்பிக் கலக்கமடைந்த இந்திரியங்களுடன் {புலன்களுடன்} மேலும் துயருற்றான்.(21ஆ,22அ) ஜகத்பதியான அவன், துக்கத்தில் எரிவதைப் போலத் தகாத நிலையில் தரையில் சயனித்துக் கிடப்பவளை அங்கே {கோபசாலையில்} கண்டான்.(22ஆ,23அ) முதிர்ந்தவனும், பாவமற்றவனுமான அவன், தன் பிராணனைவிடப் பெரியவளான அந்த இளம்பாரியை {இளம் மனைவி}, பாபசங்கல்பத்துடன் கிடப்பதைக் கண்டான். வேருடன் விழுந்த கொடியைப் போலவும், {புண்ணியம் தீர்ந்து} வீழ்ந்துவிட்ட தேவதையைப் போலவும், கலங்கி விழுந்த கின்னரியைப் போலவும், {ஸ்வர்க்கத்திலிருந்து} நழுவி விழுந்த அப்சரஸைப் போலவும், விலக்கப்பட்ட மாயை விழுந்தது போலவும், கட்டுண்ட பெண் மானைப் போலவும் கிடப்பதைக் கண்டு,(23ஆ-25) வன வேடனின் நச்சுக்கணையால் பீடிக்கப்பட்ட பெண்யானையைத் தீண்டும் அரண்யத்தின் மஹாகஜத்தை {பெரும் ஆண் யானையைப்} போல சினேகத்துடன் வருடினான்[3].(26)
[3] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "அறுப்புண்ட கொடிபோலவும், புண்யத்தை அனுபவித்துத் தீருகையில் கீழே விழுந்த தேவதாஸ்த்ரீ போலவும், கலக்கமுற்ற கின்னரப்பெண் போலவும், ஸ்வர்க்கத்தினின்று பூமியில் நழுவின அப்ஸர மடந்தை போலவும், பிறரை மோஹிப்பதற்காக ப்ரயோகிக்கப்பட்டுத் தன் வர்ணங்களெல்லாம் மழுங்கி மாறின மாயை போலவும், பூமியில் விழுந்த பெண் குதிரை போலவும், வலையில் கட்டுண்ட மான்பேட்டைப் போலவும், அரண்யத்தில், வேடன், விஷம் பூசின பாணத்தைக் கொண்டடிக்க அடியுண்டு கீழே விழுந்த பெண் யானையைப் போலவும் தோற்றித் தரையில் படுத்திருக்கக் கண்டு, அரண்யத்தில் வேடனது பாணத்தினாலடியுண்டு கீழே விழுந்த அப்பெண் யானையைப் பெரியதொரு மத்தகஜம் அருகில் வந்து கரத்தினால் தடவிக் கொடுப்பது போல, அம்மடந்தையை ஸ்னேஹத்தினால் மனந்தளரப் பெற்றுச் சரீரமெங்கும் ஸ்பரிசித்தனன்" என்றிருக்கிறது.
காமமும், மனத்தில் அச்சம் கொண்டவனுமான அவன் {தசரதன்}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்த வனிதையைத் தன் கைகளால் தீண்டியவாறே இதைச் சொன்னான்:(27) "தேவி, கல்யாணி {மங்கலமானவளே}, நீ என்னிடம் குரோதங்கொண்டிருக்கிறாயோ நான் அறியேன். யாரால் சபிக்கப்பட்டாய்? அல்லது யாரால் அவமதிக்கப்பட்டாய்? இவ்வாறு நீ புழுதியில் {அழுக்கடைந்த தரையில்} கிடப்பது எனக்கு துக்கத்தைத் தருகிறது.(28,29அ) {உனக்கு எப்போதும் நல்லது செய்யுமளவில்} எனக்கு நல்ல மனம் இருக்கும்போது, பூதத்தால் பீடிக்கப்பட்டவளை {பிசாசம் பிடித்தவளைப்} போலப் பூமியில் கிடந்து நீ ஏன் என் மனத்தைத் துன்புறுத்துகிறாய்?(29ஆ,இ)
பாமினி {அழகிய பெண்ணே}, திறன்மிக்கவர்களும், அனைத்து வகையிலும் துதிக்கப்படுபவர்களுமான என் வைத்தியர்கள் பலர் இங்கே இருக்கின்றனர். வியாதியைச் சொல் ,அவர்கள் உன்னை சுகமாக்குவார்கள்.(30) யார் விரும்பும் காரியத்தை நிறைவேற்ற நீ விரும்புகிறாய்? நீ விரும்பாததைச் செய்தது யார்? இப்போது யாருக்கு உதவி {நன்மை} செய்ய வேண்டும்? யாருக்கு அப்ரியத்தைச் செய்ய வேண்டும் {தண்டனையளிக்க வேண்டும்}?(31) தேவி, நீ அழாதே. உன் உடலை {வருத்தி} வற்றச் செய்யாதே. வதம் செய்யத்தகாத எவரை வதம் செய்ய வேண்டும்? வதம் செய்யத்தகுந்த எவரை விடுவிக்க வேண்டும்? தரித்திரன் எவனை செல்வந்தனாக்க வேண்டும்? திரவியவான் எவனை திரவியமற்றவனாக்க வேண்டும்?(32,33) நானும், என்னைச் சேர்ந்த அனைவரும் உன் வசப்பட்டவர்களாக இருப்போம். உன் சிறு அபிப்ராயத்தையும் நான் கெடுக்க விரும்ப மாட்டேன்.(34)
நீ உன் மனத்தில் விரும்புவதைச் சொல், அதை என் ஜீவனைக் கொடுத்தாவது செய்வேன். என் மீதான உன் பலத்தை {ஆதிக்கத்தை} அறிந்தும் நீ என்னை சந்தேகிக்காதே. நீ விரும்புவதைச் செய்வேன் என என் புண்ணியத்தின் பேரில் உறுதியளிக்கிறேன்.(35,36அ) என் வசுந்தரை {பூமியானது, தேர்ச்} சக்கரம் சுழலும் எல்லைவரையிலும் உள்ளது. கிழக்கு தேசங்கள், சிந்து, சௌவீரம், சௌராஷ்டிரம், தக்ஷிணாபதங்கள் {தென்தேசங்கள்}, வங்கம், அங்கம், மகதம், மத்ஸ்யம், காசி, கௌசலம் ஆகியவை செழித்திருக்கின்றன.(36ஆ,37) அங்கே தன, தானியங்களும், செம்மறி வெள்ளாடுகளும், பல்வேறு திரவியங்களும் விளைகின்றன. கைகேயி, அவற்றில் நீ மனத்தால் எதை விரும்புகிறாய்?(38) பீரு {அச்சமுள்ளவளே}, இந்த ஆயாசம் {அலுப்பு / சோர்வு} ஏன்? சோபனையே {அழகிய பெண்ணே}, எழுந்திரு, எழுந்திடுவாயாக. கைகேயி, உன் பயம் எங்கிருந்து வந்தது என்பதை எனக்குச் சொல்வாயாக. சூரியனைக் கண்ட பனியைப் போல அதை நான் விலகச் செய்வேன்" {என்றான் தசரதன்}.(39,40அ)
இவ்வாறு சொன்னதன் மூலம் ஆறுதலடைந்த அவள், விரும்பத்தகாததைச் சொல்லும் நோக்கில் தன் பர்த்தாவை {கணவனை} மேலும் பீடிக்கத் தொடங்கினாள்.(40ஆ,இ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 010ல் உள்ள சுலோகங்கள் : 40
Previous | | Sanskrit | | English | | Next |