Wednesday 23 March 2022

கைகேயி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 008 (39)

Kaikeyi | Ayodhya-Kanda-Sarga-008 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியைத் தூண்டிய மந்தரை; இராமனின் நற்குணங்களை உரைத்த கைகேயி; ராமனின் பட்டாபிஷேகம் பரதனுக்குத் தீங்கிழைக்கும் என்ற மந்தரை...

Manthara incites Kaikeyi

மந்தரையோ, அவளிடம் {கைகேயியிடம்} எரிச்சலடைந்து அந்த ஆபரணத்தை வீசியெறிந்துவிட்டு, கோபத்துடனும், துக்கத்துடனும் இதைச் சொன்னாள்:(1) "மூடப்பெண்ணே, சோக சாகரத்தின் மத்தியில் நீ இருப்பதை அறியாமல், பொருந்தாத வகையில் மகிழ்ச்சியடைகிறாயே. இஃதென்ன?(2) தேவி, வருந்தத்தக்க இந்தப் பேரிடரில் {அதை அறியாமல்} மகிழும் உன்னைக் கண்டு நான் துக்கத்தால் பீடிக்கப்பட்டாலும் மனத்தில் {சோகமாக} சிரித்துக் கொள்கிறேன்.(3) உன் துர்மதிக்காக நான் வருந்துகிறேன். புத்தியுள்ள எந்தப் பெண், பகைவனான சகபத்னி புத்திரனின் {சக்களத்தி மகனின்} செழிப்பில் மகிழ்ச்சியடைவாள்? இது மிருத்யுவிடம் {மரணத்தில்} மகிழ்ச்சியடைவதைப் போலில்லையா?[1](4) ராஜ்ஜியத்தில் சம உரிமை கொண்ட பரததேவனிடம் ராமன் பயங்கொண்டிருக்கிறான். பீதியில் உள்ளோரிடம் நாமும் பயம் கொள்கிறோம். இதைச் சிந்தித்தே நான் வருந்துகிறேன்.(5)

[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "உன் மதிகேட்டிற்கு யான் சோகிக்கின்றனன். உனது சக்களத்தியின் பிள்ளை உனக்குப் பகைவனே. அவனுக்கு நன்மை நேருவது நமக்கு மரணம் வந்தாற்போலவே. ம்ருத்யுவைப் போல அது வரக்கண்டும் மனத்தெளிவுள்ளவள் எவள்தான் அதை ஸந்தோஷமாகக் கொள்வாள்?" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "ஸ்ரீராமபிரான் நற்குணமுள்ளவனென நீ நினைத்தாலும், அவன் சக்களத்தி பிள்ளையாதலால், உனக்குப் பகைவனல்லனோ? அவனுக்கு அபிஷேகமாவதை யறிந்தும், நீ மகிழ்வதாகுமோ?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "மரணத்தையே போன்ற சக்களத்தியின் மகனுடைய முன்னேற்றத்தை புத்தியுள்ள எந்தப் பெண்ணால் மகிழ்ச்சியாகக் கொண்டாடமுடியும்?" என்றிருக்கிறது.

பெரும் வில்லைக் கொண்ட லக்ஷ்மணனும், சர்வாத்மனாக {முழு இதயத்துடன்} ராமனைத் தொடர்ந்தான். காகுத்சனிடம் {ராமனிடம்}, லக்ஷ்மணன் இருப்பதைப் போலவே சத்ருக்னன் பரதனுடன் இருக்கிறான்.(6) பாமினி {அழகிய பெண்ணே, கைகேயி}, பிறப்பின் அடிப்படையிலும், ராஜ்ஜியக்ரமத்தினாலும் பரதன் மட்டுமே இளையவர்களான அவர்கள் இருவரை {சகோதரர்களை} விட அதிக உரிமை உள்ளவனாக இருக்கிறான்.(7) கல்விமானும், அரசியல் நுண்ணறிவுமிக்கவனும், உரிய காலத்தில் தகுந்தவாறு செயல்படுபவனுமான ஒருவனிடம் {ராமனிடம்} கொண்ட பயத்தில், உன் ஆத்மஜனை {மகனை} சிந்தித்து நடுங்குகிறேன்.(8) கௌசல்யை நற்பேறுபெற்றவள். அவளது புத்திரன் நாளை புஷ்யத்தில் துவிஜோத்தமர்களால் {இரு பிறப்பாளர்களில் சிறந்தவர்களால்} யுவராஜனாக அபிஷேகம் செய்யப்படப் போகிறான்.(9) பெரும் மகிழ்ச்சிக்கும், புகழுக்கும் பிராப்தமுடையவளும், பகைவரை அழிப்பவளுமான கௌசல்யைக்குக் கூப்பிய கைகளுடன் தாசியாக {பணிப்பெண்ணாக} நீ தொண்டு செய்ய வேண்டியிருக்கும்.(10) இவ்வாறு எங்களுடன் நீயும் அவளது பணிப்பெண்ணானால், உன் புத்திரனும் {பரதனும்} ராமனின் பணியாளாவான்.(11) இராமனின் பரமஸ்திரீகள் {மனைவியர்} பெரும் மகிழ்ச்சியடைவார்கள். உன் மருமகள்கள் பரதனின் பலவீனமான நிலையால் மகிழ்ச்சியற்றவர்களாவார்கள்[2]" {என்றாள் மந்தரை}.(12)

[2] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே ராமனின் மனைவியர் என்று சொல்லப்படும் சொற்கள் ராமனுக்குப் பல மனைவியர் இருந்தனர் என்பதை உறுதி செய்யவில்லை. இராமன் மன்னனாகிவிட்டால் எதிர்காலத்தில் வேறு பெண்களையும் மணந்து கொள்வான் என மந்தரை எதிர்பார்க்கிறாள். அந்தக் காலத்தில் மன்னர்கள் பல மனைவியரைக் கொள்வது பொதுவாகக் காணப்படும் வழக்கமே" என்றிருக்கிறது.

மந்தரை இவ்வாறு இனிமையற்றவற்றைப் பேசுவதைக் கண்ட கைகேயி, ராமனின் குணங்களைப் {பின்வருமாறு} புகழ்ந்தாள்:(13) "இராமன் தர்மங்கள் அனைத்தையும் அறிந்தவன்; பெரியோரால் பயிற்றுவிக்கப்பட்டவன்; நன்றிமிக்கவன்; சத்தியவாதி; தூய நடத்தை கொண்டவன் {ஒழுக்கமுள்ளவன்}; {தசரத} ராஜனின் ஜேஷ்ட சுதன் {மூத்த மகன்}. எனவே, யௌவராஜ்ஜியத்திற்குத் தகுந்தவன்.(14) தீர்க்காயுள் கொண்ட அவன் தன் சகோதரர்களையும், பணியாட்களையும் பிதாவைப் போலக் காப்பான். குப்ஜையே {கூனியே}, ராமாபிஷேகத்தைக் கேட்டு நீ ஏன் பரிதபிக்கிறாய்?(15) நூறு வருஷங்களுக்குப் பிறகு, புருஷரிஷபனான பரதனும் தன் பித்ரு பிதாமஹர்களின் {பாட்டன்மாரின்} ராஜ்ஜியத்தை ராமனிடம் இருந்து பெறுவான்.(16) மந்தரையே, மகிழ்ச்சிக்கான பிராப்தம் இப்போது இருக்கிறது, எதிர்கால விழாவும் காத்திருக்கிறது எனும்போது நீ ஏன் {பொறாமையில்} பரிதபிக்கிறாய்?(17) எனக்கு பரதன் எவ்வாறோ, அவ்வாறும், அதற்கு மேலும் ராகவன் {ராமன்} விரும்பத்தகுந்தவன். அவன், கௌசல்யைக்குச் செய்வதை விட எனக்கே அதிகம் தொண்டு செய்கிறான்.(18) இராஜ்ஜியம் ராமனுடையதானால் அது பரதனுடையதுமாகும். இராமன் தன் சகோதரர்களையும் தன்னைப் போலவே கருதுகிறான்" {என்றாள் கைகேயி}.(19)

கைகேயியின் வசனத்தைக் கேட்ட மந்தரை, பெரிதும் துக்கித்து, தீர்க்கோஷ்ணமான {நீளமான, சூடான} பெருமூச்சு விட்டுக் கைகேயியிடம் இதைச் சொன்னாள்:(20) "சோகமும், ஆபத்தும் நிறைந்த துக்க சாகரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறாய். மூர்க்கத்தால் உண்மையைக் காணாமலும், உன் நிலையை அறியாமலும் இருக்கிறாய்.(21) கைகேயி, ராகவன் {ராமன்} ராஜாவாவான். இராகவனுக்குப் பிறகு அவனது மகன் {மன்னன்} ஆவான். பரதனோ, ராஜவம்சத்தில் இருந்து விலக்கப்படுவான்.(22) பாமினி {அழகிய பெண்ணே}, ராஜனின் மகன்கள் அனைவரும் ராஜ்யத்தில் நியமிக்கப்படுவதில்லை. அனைவரும் ஸ்தாபிக்கப்பட்டால் நீதிக்குப் பெருங்கேடு விளையும்.(23) பழுதற்ற அங்கங்களைக் கொண்ட கைகேயி, எனவேதான் பார்த்திபர்கள், குணம் நிறைந்த இதரர் இருந்தாலும், மூத்தவனையே ராஜ்ஜிய காரியங்களில் ஸ்தாபிப்பார்கள்.(24) வத்சலையே {அன்புமிக்கவளே}, உன் புத்திரன், சுகங்களையும், ராஜாவம்சத்தையும் இழந்த அநாதையைப் போல நிர்பாக்கியனாவான்.(25) நான் உனக்காகவே வந்தேன். நீயோ, என்னைப் புரிந்து கொள்ளவில்லை. உன் சகபத்னி செழிப்படைகையில் எனக்கு வெகுமதி அளிக்க விரும்புகிறாயே.(26)

இராமன், இடையூறின்றி {பகைவரற்ற}[3] ராஜ்ஜியத்தை அடைந்ததும், பரதனை தேசாந்தரத்திற்கோ {வேறு நாட்டிற்கோ}, லோகாந்தரத்திற்கோ {வேறு உலகத்திற்கோ} அனுப்புவான் {இராமன் பரதனை நாடு கடத்துவான், அல்லது கொல்வான்}. இது நிச்சயம்.(27) பரதன் பாலனாக இருக்கும்போதே உன்னால் மாதுலனிடம் {தாய்மாமனிடம்} அனுப்பப்பட்டான். அருகில் இருந்தால் தாவரங்களிடமும் அன்பு பிறக்கும். {பரதனைத் தொலை தூரம் அனுப்பி அவனிடம் தசரதர் அன்புகொள்ள முடியாமல் செய்துவிட்டாய்}.(28) சத்ருக்னனும் பரதனிடம் ஈர்ப்புக் கொண்டு அவனுடன் சென்று விட்டான். இலக்ஷ்மணன் ராமனைத் தொடர்வதைப் போலவே அவனும் பரதனைத் தொடர்கிறான்.(29)

[3] இங்கே நிஷ்கண்டகம் என்ற சொல் இருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "நிஷ்கண்டகம் - சத்ருவற்றிருக்கிற கண்டகன் - சத்ரு" என்றிருக்கிறது.

{முள் நிறைந்த} இஷீக புற்களால் சூழப்பட்டிருந்த ஒரு குறிப்பிட்ட மரம், வனத்தில் ஜீவிப்பவர்களால் வெட்டப்படும் பரம பயத்தில் இருந்து விடுபட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.(30) சௌமித்ரி {இலக்ஷ்மணன்} ராமனைப் பாதுகாப்பான், ராகவன், லக்ஷ்மணனைப் பாதுகாப்பான். அஸ்வினிகளைப் போன்ற இவர்களின் சகோதர அன்பு இவ்வுலகில் புகழ்பெற்றது.(31) எனவே, ராமன் லக்ஷ்மணனுக்குச் சிறு பாபத்தையும் செய்ய மாட்டான். ஆனால் ராமன் பரதனுக்கு பாபத்தைச் செய்வான். இதில் ஐயமேதுமில்லை.(32) எனவே, {ராமாபிஷேகம் நடந்தால்} உன் மகன் {பரதன், தன் மாமனின்} ராஜகிருஹத்தில் இருந்து வனத்திற்குச் செல்வதையே நான் விரும்புகிறேன். இதுவே உனக்கும் நன்மையானது.(33) தர்மப்படி பிதாவின் ராஜ்ஜியம் பரதனுக்குக் கிடைத்தால், உனக்கும், உன் தரப்பு ஞாதிகளுக்கும் {உறவினர்களுக்கும்} நன்மை உண்டாகும். இஃது இவ்வாறு நடந்தால்,(34) சுகவாசியான உன் பாலன் {பரதன்}, ராமனுக்கு இயற்கையான பகைவனாவான். பெருஞ்செல்வமிக்கவனின் வசத்தில் செல்வமில்லாதவனால் எவ்வாறு ஜீவிக்கமுடியும்?(35)

அரண்யத்தில் தலைமை கஜம் {யானை} சிம்மத்தால் விரட்டப்படுவதைப் போல, ராமனால் பீடிக்கப்படப் போகும் பரதனை நீதான் காக்க வேண்டும்.(36) சௌபாக்கியவதி என்ற ஆணவத்தில் உன்னால் பூர்வத்தில் நிராகரிக்கப்பட்டவளும் {அவமதிக்கப்பட்டவளும்}[4], உன் சகபத்னியுமான ராமனின் மாதா {கௌசல்யை, இப்போது} வைரத்துடன் பழிதீர்க்கமாட்டாளா?(37) பாமினி {அழகிய பெண்ணே}, பெருங்கடல், மலைகள், பட்டணங்கள் ஆகியவற்றைத் தாங்கும் இந்தப் பிருத்வியை ராமன் அடைந்தால், பரதனும், நீயும் தீனமும், அசுபமுமான சிறுமையை {அவமானத்தை} அடைவீர்கள்.(38) இராமன் பிருத்வியை அடைந்தால், பரதன் நிச்சயம் நசிந்து போவான். எனவே, பகைவனை {ராமனை} நாடு கடத்தவும், உன் மகன் ராஜ்ஜியத்தை அடையவும் சிந்திப்பாயாக" {என்றாள் மந்தரை}.(39)

[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இது {கௌசல்யை கைகேயியால் அவமதிக்கப்பட்டது} குறித்து வேறு தகவலேதும் இல்லை" என்றிருக்கிறது.


அயோத்தியா காண்டம் சர்க்கம் – 008ல் உள்ள சுலோகங்கள் : 39

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை