The practice of fast | Ayodhya-Kanda-Sarga-006 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனும் சீதையும் நோற்ற சடங்குகள்; மகிழ்ச்சியடைந்த அயோத்தியாபுரிவாசிகள் மன்னனிடம் நன்றி தெரிவிப்பது; கிராமங்களில் இருந்து கூட்டங்கூட்டமாக வந்த மக்கள்...
புரோஹிதர் {வசிஷ்டர்} புறப்பட்டதும், ராமன் ஸ்நானம் செய்துவிட்டு, விசாலாக்ஷியான தன் பத்தினியுடன் {நீள்விழிகளைக் கொண்ட தன் மனைவி சீதையுடன்} சேர்ந்து, கவனம் சிதறாத மனத்துடன் நாராயணனைத் தொழுதான்.(1) பிறகு ஹவிஸ் {நெய்} பாத்திரத்தைத் தலையில் சுமந்து சென்று, அந்த நெய்யை விதிப்படி அக்னி ஜ்வாலையில் ஊற்றி மஹாதைவத்திற்கு {மஹாவிஷ்ணுவுக்கு} காணிக்கை அளித்தான்.(2) அந்த நரவராத்மஜன் {மனிதர்களில் சிறந்தவனின் மகனான ராமன்}, தன் நன்மையை விரும்பி அந்த ஹவிஸில் எஞ்சியதை உண்டு, பேசுவது நிறுத்தி, கட்டுப்பட்ட மனத்துடன் நாராயணத் தேவனை தியானித்து, விஷ்ணுவின் ஸ்ரீமத்யாயத்தில் {அற்புதக் கோவிலில்}[1] உரிய முறையில் இடப்பட்ட குசப்புற்படுக்கையில் வைதேஹியுடன் உறங்கினான்.(3,4)
[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கு சொல்லப்படும் தெய்வம், ராஜமாளிகையின் எல்லைக்குள் கட்டப்பட்ட தனி சந்நிதியில் அயோத்தி அரசர்களின் நீண்ட பட்டியலில் உள்ளோர் அனைவராலும் தங்கள் தெய்வமாகத் தேர்ந்தெடுத்து வழிபடப்பட்ட ரங்கநாதனைத் தவிர வேறு யாருமில்லை என்று கற்றறிந்த உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பத்ம புராணத்தின் பாதாள காண்டத்தில் எவ்வாறு அந்தச் சிலையை விபீஷணனிடம் ராமன் கொடுத்தான் என்று விரிவாகச் சொல்லப்படுகிறது. அந்த விபீஷணன் மூலமே அந்தச் சிலை தென்னிந்தியாவின் (திருச்சி அருகே உள்ள) ஸ்ரீரங்கங்கத்தை {திருவரங்கத்தை} அடைந்தது. இந்நாள் வரை அஃது அங்கேயே இருக்கிறது. இந்தியாவெங்கும் உள்ள பக்தர்களாலும், வைஷ்ணவர்களாலும் பெரும் மதிப்புடன் உயர்வாகக் கொண்டாடப்படுகிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பிலும், "இத்தகைய கோவில் அந்த அரண்மனைக்குள்ளேயே இருந்தது. இந்த சிலை இப்போது ஸ்ரீரங்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது" என்றிருக்கிறது.
இராமன், இரவில் ஒரு யாமம் {முன்று மணி நேரம்} எஞ்சியிருக்கும்போதே எழுந்திருந்து வீட்டிற்கான அலங்காரங்களை விதிப்படி முழுமையாகச் செய்தான்.(5) சூத, மாகத, வந்திகளின் சுகமான உரைகளைக் கேட்டு பூர்வ சந்தியை உபாசித்து {அதிகாலை சந்தியாவேளையை வழிபட்டு} கவனம் சிதறாத மனத்துடன் தியானித்தான் {காயத்ரி ஜபம் செய்தான்}[2].(6) அவன், மதுசூதனனைத் தலைவணங்கித் துதித்தான். தூய பட்டுடைகளை உடுத்திக் கொண்டு துவிஜர்களை {இருபிறப்பாளர்களைத்} துதிக்கச் செய்தான்.(7) அப்போது அவர்களது கம்பீரமான, மதுரமான புண்ணிய கோஷங்கள் தூரிய கோஷத்துடன் {இசைக்கருவிகளின் ஒலியோடு} இணைந்து அயோத்தியை நிறைத்தது.(8)
[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "யாமம் என்பது மூன்று மணிநேர காலமாகும். இரவானது மூன்று யாமங்களால் ஆனதால் அது திரியாமம் {திரிஜாமம் / முச்சாமம்} என்று அறியப்படுகிறது" என்றும், "சூதன் என்பவர் ஒரு பாணனாவார் {கதைபாடியாவார்}, மாகதர் என்பவர் அரசவைப் பாடகராவார், வந்தி என்பவர் துதிபாடியாவார். வந்திகள் தாங்களே எதையும் தொகுப்பதில்லை, அதே வேளையில் சூதர்கள் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், மாகதர்கள் அவற்றுக்குப் பாடல் வடிவம் கொடுத்தும் தாங்களே தங்கள் படைப்புகளைத் தங்கள் கலைவடிவில் தொகுப்பவர்களாவர்" என்றுமிருக்கின்றன.
அயோத்தியில் வசிக்கும் ஜனங்கள் அனைவரும், ராகவன் {ராமன்} வைதேஹி ஸஹிதனாக உபவாசமிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தனர்.(9) ராமாபிஷேகத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருந்த குடிமக்கள் அனைவரும், இரவு விடிவதைக் கண்டு நகரத்திற்கு அலங்காரம் செய்தனர்.(10) மேக வரிசைகளைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த தேவதாயதனேசங்களிலும் {கோவில்களிலும்}, சாலை சந்திப்புகளிலும், வீதிகளிலும், பெரும் மரங்களின் மீதும், நகர வாயில்களில் அமைந்திருக்கும் காவல் கோபுரங்களிலும், பலவிதப் பொருட்களுடன் கூடிய வணிகர்களின் கடைகளிலும், பெரும் செல்வந்தர்களான குடும்பிகளின் பவனங்களிலும், சபைகள் அனைத்திலும், கண்களில் தென்படும் விருக்ஷங்களிலும் {மரங்களிலும்} துவஜங்களும் {கொடிக்கம்பங்களும்}, சித்திரப்பதாகைகளும் ஏற்றப்பட்டன.(11-13) ஆங்காங்கே நடந்த, நர்த்தகக் கூட்டங்களிலும், பாடும் பாடகர்களின் பாடல்களிலும் மனத்திற்கும், காதுகளுக்கும் இனிய குரல்கள் கேட்கப்பட்டன.(14) ராமாபிஷேகம் நெருங்கும் வேளையில், அந்த ராமாபிஷேகம் குறித்து ஜனங்கள் ஒருவருக்கொருவர் நாற்சந்திகளிலும், வீடுகளிலும் உரையாடினர்.(15) கூட்டமாக விளையாடிக் கொண்டிருக்கும் பாலர்களும் ராமாபிஷேகம் குறித்துத் தங்கள் வீடுகளின் வாயில்களில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்.(16) குடிமக்கள், ராமாபிஷேகத்திற்காகப் புஷ்பங்கள் தூவி, தூப கந்தங்களால் நறுமணம் உண்டாக்கி ராஜமார்க்கத்தை அழகுப்படுத்தினர்.(17) பின்னும் இரவு தொடருமோ என்ற ஐயத்தில் அவர்கள் வீதிகள் அனைத்திலும் பிரகாசிக்கும் தீப விருக்ஷங்களை {மரங்களின் வடிவிலான விளக்குகளை} ஏற்பாடு செய்தனர்.(18)
நகரை இவ்வாறு அலங்கரித்த நகரவாசிகள் அனைவரும் ராமனின் யௌவராஜ்யாபிஷேகத்தை விரும்பி நாற்சந்திகளிலும், சபா மண்டபங்களிலும் கூடி, ஆங்காங்கே இது குறித்து ஒருவரோடு ஒருவர் பேசி ஜனாதிபனை {மன்னன் தசரதனைப்} புகழ்ந்தனர்:(19,20) "அஹோ, இக்ஷ்வாகு குல நந்தனனும், தன் விருத்தத்தை {முதிர்ச்சியை} அறிந்து ராஜ்ஜியத்தில் ராமனை அபிஷேகம் செய்யப் போகிறவனுமான இந்த ராஜா {தசரதன்} மஹாத்மாவாவான்.(21) உலகம் மொத்தத்தையும் கண்ட ராமன், நமக்கு நீண்ட காலப் பாதுகாவலனாகப் போவதால் நாம் கொடையருளப்பட்டவர்கள் ஆனோம்.(22) ஆணவமற்ற மனம் கொண்டவனும், வித்வானும், தர்மாத்மாவுமான ராமன், உடன் பிறந்தோரிடம் கொண்ட அன்பைப் போலவே நம்மிடமும் அன்பு கொண்டவனாவான்.(23) எவனுடைய அருளால் ராமாபிஷேகத்தை நாம் காணப் போகிறோமோ, அந்த தர்மாத்மாவும், களங்கமற்றவனுமான தசரதராஜன் நீண்ட காலம் ஜிவித்திருக்கட்டும்" {என்றனர் அயோத்திபுரிவாசிகள்} .(24)
{இராமாபிஷேக} செய்தியைக் கேட்டுப் பல்வேறு திக்குகளில் இருந்து வந்த ஜானபதர்கள் {கிராமவாசிகள்}, இவ்வாறு சொல்லும் நகரவாசிகளின் உரையைக் கேட்டனர்.(25) இராமாபிஷேகத்தைக் காணப் பல்வேறு திக்குகளில் இருந்து அந்த நகரத்திற்கு {அயோத்திக்கு} வந்த ஜானபதர்களான {கிராமவாசிகளான} அந்த ஜனங்களால் நிறைந்திருந்தது.(26) அங்கேயும் இங்கேயும் நகர்ந்த ஜனங்களின் ஒலி, பௌர்ணமி கால சாகரத்தின் {பெருங்கடலின்} முழக்கத்திற்கு ஒப்பாக இருந்தது.(27) இந்திரனின் வசிப்பிடத்திற்கு நிகரான அந்த {அயோத்தி} நகரம், சமுத்திர விலங்குகளால் நிறைந்த பெருங்கடல் நீரைப் போல, அங்கே விழாவைக் காண வந்திருந்த ஜானபதர்களின் {கிராமவாசிகளின்} ஒலியால் கலங்கி, ஒளிர்ந்து கொண்டிருந்தது.(28)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 006ல் உள்ள சுலோகங்கள் : 28
Previous | | Sanskrit | | English | | Next |