The sorrow of Manthara | Ayodhya-Kanda-Sarga-007 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் பட்டாபிஷேகம் குறித்து கைகேயியிடம் சொன்ன மந்தரை; மந்தரைக்கு வெகுமதி அளித்த கைகேயி...
பிறந்தது முதல் கைகேயியுடன் இருப்பவளும், ஞாதிகளின் தாசியுமான[1] ஒருத்தி {கைகேயியுடைய தாயாதியரின் பணிப்பெண்ணுமான மந்தரை}, முழுநிலவுக்கு ஒப்பான மாளிகையின் மேல்மாடத்திற்குத் தற்செயலாகச் சென்றாள்.(1) மேல்மாடத்திலிருந்த அந்த மந்தரை, அயோத்தி முழுவதும் உள்ள ராஜபாதைகளில் நீர் தெளிக்கப்பட்டும், குவியல்களாக மலர்கள் தூவப்பட்டும் இருப்பதைக் கண்டாள்.(2)
[1] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "இதற்கு "ஜ்ஞாதிதாஸீ யதோஜாதா" என்பது மூலம். (யதோஜாதா} எங்கேயோ பிறந்தவள். அவளது தாய்தந்தைகளாவது, பிறந்த இடமாவது ஒன்றுந்தெரியாதிருந்ததென்றபடி இதற்கு விசேஷார்த்தம் - (யதோஜாதா) எங்கேயோ பிறந்தவள், ராமனது அபிஷேகத்திற்கு இடையூறு செய்யும்படியான இப்படிப்பட்ட துஷ்டஸ்வபாவமுடையவள் அயோத்யாபுரத்தில் பிறக்க நேராது ஆகையால், எங்கேயோ பிறந்தவளென்றபடி அன்றியே - (யதோஜாதா) இப்படிப்பட்ட பாபிஷ்டர்களது பேரும் ஊரும் வாயினால் மொழியவுந்தகாதென்று "எங்கேயோ பிறந்தவள்" என்று கூறப்பட்டது. ஆனது பற்றியே மந்தரையென்னும் அவளது பேரை இங்குச் சொல்லவில்லை. (யதோஜாதா) ராமனைக் கொண்டு ராவணனைத் தொலைப்பதற்காகக் கைகேயிக்கும், அவனுக்கும் பேதம் உண்டாகச் செய்யும்படி தேவதைகளே அவளை அனுப்பினார்களாகையால், அவளது குலம் முதலியவற்றைச் சொல்லில் இந்தத் தேவரஹஸ்யம் வெளியாகுமென்று அவைகளை இங்குச் சொல்லவில்லை என்றுங்கூறுவர்" என்றிருக்கிறது. கே.எம்.கே.மூர்த்தியின் பதிப்பில் யதோஜாதா என்பதற்கு "பிறந்தது முதல்" என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "கைகேயிக்குத் தாதியாகிய மந்தரையென்னுங் கூனி கைகேயின் மனையின் மேல்மாடத்திலேறித் தற்செயலாய்..." என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "கைகேயிக்குத் தன்னுடன் வாழும் பணிப்பெண் ஒருத்தி இருந்தாள். அவள், கைகேயியின் உறவினர்களின் வீட்டில் இருந்து அவளிடம் வந்திருந்தாள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "கைகேயியின் தாய்மாமன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்தவளும், கைகேயியுடன் வளர்ந்தவளுமான பெண்ணொருத்தி நிலவுக்கு ஒப்பான மாளிகையின் மேல் ஏறினாள்" என்றிருக்கிறது.
சிறந்த நகரமான அந்த அயோத்தியானது, பதாகைகளாலும் {கொடிகளாலும்}, துவஜங்களாலும் {கொடிக்கம்பங்களாலும்} அலங்கரிக்கப்பட்டிருப்பதையும், பாதைகள் செம்மைப்படுத்தப்பட்டிருப்பதையும், ஜனங்கள் தலைக்குளித்திருப்பதையும், கைகளில் மாலைகள், மோதகங்கள் {இனிப்பு} ஆகியவற்றுடன் பிராமணர்கள் அபிநாதம் செய்து {மகிழ்ச்சிக் கூச்சலிட்டுக்} கொண்டிருப்பதையும், தேவகிருஹங்களின் {கோவில்களின்} வாயில்களில், பல்வேறு இசைக்கருவிகள் முழங்குவதையும், ஜனங்கள் பெருமகிழ்ச்சியுடன் இருப்பதையும், பிரம்மகோஷம் எழுப்பப்படுவதையும், ஹஸ்தங்களும் {யானைகளும்}, அஷ்வங்களும் {குதிரைகளும்} கூட மகிழ்ச்சியாக இருப்பதையும், கோரிஷபங்கள் {பசுகளும், காளைகளும்} முழங்குவதையும், நெடுந்துவஜ மாலைகளால் {கொடிக்கம்ப வரிசையால்} அலங்கரிக்கப்பட்ட வீடுகளில் நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சியுடன் நிற்பதையும் மேல்மாடத்தில் இருந்த அந்த மந்தரை கண்டாள்.(3-6)
மகிழ்ச்சியில் பிரகாசிக்கும் கண்களைக் கொண்டவளும், பட்டாடை உடுத்தியவளுமாக அருகில் இருந்த ஒரு தாதியிடம்[2], அந்த மந்தரை {பின்வருமாறு} கேட்டாள்:(7) "அர்த்தத்தை {செல்வத்தை} அதிகம் விரும்புகிறவளான இந்தக் கௌசல்யை, மகிழ்ச்சியுடன் ஜனங்களுக்கு தனத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாளே ஏன்?(8) இந்த ஜனங்கள் ஏன் பெரும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மஹீபதி {பூமியின் தலைவரான தசரதர்} திருப்தியுடன் காரியமேதும் செய்யப் போகிறாரா? எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டாள்}.(9)
[2] தமிழ்ப் பதிப்புகளில் இவள் ராமனின் வளர்ப்புத் தாய் என்று சொல்லப்படுகிறது. ஆங்கிலப்பதிப்புகளில் தாதி என்று மட்டுமே சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியில் வெடித்துக் கொண்டிருந்த அந்தத் தாதி, ராகவனுக்கு {ராமனுக்கு} அளிக்கப்பட இருக்கும் கௌரவத்தைக் குறித்துப் பெரும் மகிழ்ச்சியுடன் அந்தக் குப்ஜையிடம் {கூனியிடம் பின்வருமாறு} சொன்னாள்:(10) "நாளை புஷ்யத்தில் {பூச நட்சத்திர நாளில்} ராஜா தசரதன், களங்கமற்றவனும், ராகவனுமான ராமனுக்கு யௌவராஜ்ஜியாபிஷேகம் செய்யப் போகிறான்" {என்றாள் தாதி}.(11)
அந்தத் தாதியின் வசனத்தைக் கேட்ட குப்ஜை {கூனி}, கோபத்துடன் சீக்கிரமாக மேல்மாடத்தில் இருந்து இறங்கினாள்.(12) பாப எண்ணம் கொண்டவளும், கோபத்தில் எரிந்து கொண்டிருந்தவளுமான அந்த மந்தரை, சயனத்தில் {படுக்கையிற்} கிடந்த கைகேயியிடம், இந்த வசனத்தைச் சொன்னாள்:(13) "மூடே {மூடப்பெண்ணே}, எழுவாய். ஏன் உறங்குகிறாய்? உனக்குப் பெரும்பயம் நேர இருக்கிறது. தொல்லைகளெனும் பெருவெள்ளம் உன்னை மூழ்கடிக்கப்போகிறது. இதை நீ ஏன் அறியாமல் இருக்கிறாய்?(14) கணவனின் அன்புக்குரியவளாகத் தோன்றினாலும் {அவனால்} விரும்பப்படாதவளாக நீ இருக்கிறாய். சௌபாக்கியங்குறித்து கர்வத்துடன் பிதற்றுகிறாயே. கோடைகால நதியின் ஓடை போல அந்த சௌபாக்கியம் நிலையற்றது" {என்றாள் மந்தரை}.(15)
பாப எண்ணம் கொண்டவளான அந்த குப்ஜை {கூனியான மந்தரை}, கோபத்துடன் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னபோது, கைகேயி பரம வருத்தம் அடைந்தாள்.(16) கைகேயி அந்த குப்ஜையிடம் {கூனியான மந்தரையிடம்} சொன்னாள்: "மந்தரையே, க்ஷேமம் {நலம்} இல்லையா? நீ பெருந்துக்கத்துடனும், வருத்தங்கொண்ட முகத்துடனும் இருப்பதாக நான் காண்கிறேன்" {என்று கேட்டாள் கைகேயி}.(17)
மதுராக்ஷரங்கள் {இனிய சொற்களைக்} கொண்ட கைகேயியின் வசனத்தைக் கேட்டவளும், வாக்கியவிசாரதையுமான {பேசுவதில் திறன்மிக்கவளுமான} மந்தரை கோபத்துடன் பேசத் தொடங்கினாள்.(18) அவளது {கைகேயியின்} நலத்தை விரும்புகிறவளும், வருத்தமுற்றவளுமான அந்த குப்ஜை {மந்தரை}, ராகவனிடம் {ராமனிடம்} அவளை பேதங்கொள்ளச் செய்வதற்காகப் {பின்வருமாறு} பேசினாள்:(19) "தேவி, முடிவற்றதும், மகத்தானதுமான விநாசம் {முற்றழிவு} உன்னைச் சூழ்ந்திருக்கிறது. தசரத ராஜன், ராமனுக்கு யௌவராஜ்ஜியாபிஷேகம் செய்யப் போகிறார்.(20) நான் அடியற்ற பயக்குழியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். அனலனால் {நெருப்பால்} சுடப்பட்டதைப் போல துக்கத்திலும், சோகத்திலும் நான் எரிந்து கொண்டிருந்திருந்தாலும், உனக்காகவே இங்கே வந்திருக்கிறேன்.(21)
கைகேயி, உன் துக்கம் எனக்கு மகத்தான துக்கமாகும். உன் செழிப்பு என் செழிப்பாகும். இதில் ஐயமேதுமில்லை.(22) தேவி, நராதிப குலத்தில் பிறந்து, மஹீபதியின் மஹிஷியாகியும் {மனைவியாகியும்} ராஜதர்மத்தின் உக்ரத்துவம் {கொடுமை} குறித்து ஏன் நீ புத்தியற்றவளாக இருக்கிறாய்?(23) தர்மவாதியான பர்த்தா {கணவர்}, கமுக்கமாகத் தீங்கிழைக்கிறார். இனிமையாகப் பேசினாலும், கொடூரராக இருக்கிறார். தூயமனம் கொண்டவளே, நீ அவரால் வஞ்சிக்கப்படுகிறாய் என்பதைக் கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையே.(24) உன் பர்த்தா {கணவர்}, உன் முன்னிலையில் வந்து பயனற்ற நல்வார்த்தைகளைச் சொன்னாலும், கௌசல்யைக்கு மட்டும் இன்று நன்மையைச் செய்திருக்கிறார்.(25) துஷ்டாத்மாவான அவர், பரதனை பந்துக்களிடம் அனுப்பிவிட்டு, இடையூறேதுமின்றி {நாளை} அதிகாலையில் ராமனை ராஜ்ஜியத்தில் நிறுவப் போகிறார்.(26)
பாலே {குழந்தாய்}, மாதாவைப் போல, நீ அவரது இதத்தை விரும்புகிறாய். அவரோ, உன் மடியிலுள்ள நஞ்சுமிக்கப் பாம்பைப் போல, பெயருக்குப் பதி {கணவர்} வேடம்பூண்ட சத்ருவாக இருக்கிறார்.(27) இன்று தசரத ராஜனால் உனக்கும், உன் புத்திரனுக்கும் செய்யப்பட்டதென்ன? பாம்பையோ, சத்ருவையோ போல நீங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறீர்கள்.(28) பாலே {சிறுமியே}, நித்ய சுகத்திற்குத் தகுந்தவளான உன்னை, உண்மையற்ற இனிய மொழிகளால் பீடித்த பாபி {தசரதர்}, அந்த ராமனை ராஜ்ஜியத்தில் ஸ்தாபித்து, உன்னையும், உன் பிள்ளையையும் வஞ்சித்திருக்கிறார்.(29) அற்புத அழகுடன் கூடிய கைகேயியே, நீ உன்னையும், புத்திரனையும் {பரதனையும்}, என்னையும் காத்துக் கொள்ளக் காலத்திற்குத் தகுந்த செயலை சீக்கிரம் செய்வாயாக" {என்றாள் மந்தரை}.(30)
சயனத்தில் கிடந்த அந்த அழகிய முகம் படைத்தவள் {கைகேயி}, மந்தரையின் சொற்களைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்து, கூதிர் காலச் சந்திரனைப் போல எழுந்தாள்.(31) ஆச்சரியத்துடன் பெருமகிழ்ச்சியடைந்த கைகேயி, அருள்மிக்க ஓராபரணத்தை எடுத்து அந்த குப்ஜைக்கு {கூனிக்குக்} கொடுத்தாள்[3].(32)
[3] ஆய பேரன்பெனும் அளக்கர் ஆர்த்தெழதேய்விலா முகமதி விளங்கித் தேசுறதூயவள் உவகை போய் மிக சுடர்க்கு எலாம்நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள்.- கம்பராமாயணம் 1458ம் பாடல்பொருள்: உண்டாக்கிய பேரன்பு எனும் கடல் ஆர்ப்பரித்து எழும்பகளங்கமில்லாத முகமாகிய சந்திரன் பிரகாசித்து ஒளிவீசதூயவள் கைகேயியின் மகிழ்ச்சி எல்லா கடக்க, மூன்று சுடர்களுக்கும்தலைமையானது போல விளங்கும் ரத்தின மாலையொன்றை (மந்தரைக்கு) அளித்தாள்.
பெண்களில் சிறந்தவளான அந்தக் கைகேயி, குப்ஜையான {கூனியான} அந்த மந்தரைக்கு ஓராபரணத்தை தத்தம் செய்து, மீண்டும் மீண்டும் இதைச் சொன்னாள்:(33) "மந்தரையே, எனக்குப் பரம மகிழ்ச்சியளிப்பதை நீ சொல்லியிருக்கிறாய். எனக்கு இத்தகைய நல்லதைச் சொன்ன உனக்கு நான் இன்னும் செய்ய வேண்டியதென்ன?(34) இராமனுக்கும், பரதனுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை. இராஜா {தசரதர்}, ராமனை ராஜ்ஜியத்தில் அபிஷேகிப்பதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.(35) பிரியையே {அன்புக்குரியவளே}, எனக்கு இதை விடப் பெரியதேதும் நீ செய்துவிடமுடியாது. விரும்பும் இனிய செய்தியை சொன்னதைப் போல, நீ பரம பிரியத்துடன் {வேறெதையும்} எளிதாகச் சொல்லிவிட முடியாது. இதற்காகவே நான் உனக்குச் சிறந்த வரமொன்றைத் தருகிறேன். அதைக் கேட்பாயாக" {என்றாள் கைகேயி}.(36)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 007ல் உள்ள சுலோகங்கள் : 36
Previous | | Sanskrit | | English | | Next |