The fast | Ayodhya-Kanda-Sarga-005 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாக மேற்கொள்ள வேண்டிய உபவாசம் குறித்து ராமனுக்கும், சீதைக்கும் சொன்ன வசிஷ்டர்; அயோத்தியில் விழாக்கோலம்...
தசரதன், ராமனை அனுப்பிய பிறகு, புரோஹிதரான வசிஷ்டரை அழைத்து, நாளை நடைபெற இருக்கும் அபிஷேகத்திற்கானதைச் சொன்னான்:(1) "தபோதனரே, இன்று வாத்வையுடன் {என் மருமகள் சீதையுடன்} விரதமிருக்கப் போகும் காகுத்சனிடம் {ராமனிடம்}, சென்று, செல்வத்தையும், புகழையும், ராஜ்ஜியத்தையும் அடைவதற்கான உபவாசத்தை மேற்கொள்ளச் செய்வீராக" {என்றான் தசரதன்}.(2)
வேதங்களை அறிந்தவர்களில் சிறந்தவரும், மந்திரங்களில் திறன்மிக்கவரும், திட விரதங்களைக் கொண்டவருமான பகவான் வசிஷ்டர், அந்த ராஜனிடம் {தசரதனிடம்}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, தயாராக இருந்ததும், பிராமணர்களுக்குத் தகுந்ததுமான சிறந்த ரதத்தில் ஏறி, மந்திரங்களறிந்த ராமனை உபவாசமிருக்கச் செய்வதற்காகத் தானே ராமநிவேஷனத்திற்கு {ராமனின் வீட்டிற்குப்} புறப்பட்டுச் சென்றார்.(3,4) அந்த முனிசத்தமர் {முனிவர்களில் சிறந்த வசிஷ்டர்}, அடர்ந்த வெண் மேகம் போலப் பிரகாசித்த ராமபவனத்தை {ராமனின் வீட்டை} அடைந்து, ரதத்திலேயே மூன்று கட்டுகளையும் {வாயில்களையும்} கடந்தார்[1].(5)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சாதாரண மக்களாக இருந்தால் வெளி வாயிலிலேயே ரதத்தைவிட்டு இறங்கி, பாத நடையாகத்தான் அந்த மூன்று கட்டுகளையும் கடந்திருப்பர் என்பது இங்கே பொருள்" என்றிருக்கிறது.
வந்திருக்கும் மதிக்கத்தக்க ரிஷியை மதிப்பதற்காக ராமனும் அவசரத்துடன் நிவேஷனத்திலிருந்து {வீட்டிலிருந்து} துரிதமாக வெளியே வந்தான்.(6) அந்த நுண்ணறிவுமிக்கவருடைய {வசிஷ்டருடைய} ரதத்தின் அருகில் விரைந்து சென்று, தானாக அவரது கைகளைப் பற்றிக் கொண்டு, ரதத்திலிருந்து அவர் இறங்குவதற்குத் துணை புரிந்தான்.(7)
அந்தப் புரோஹிதரும் {வசிஷ்டரும்}, பிரியத்திற்குரியவனும், பணிவுள்ளவனுமான ராமனைக் கண்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் உண்டாக்கும் இந்தச் சொற்களைச் சொன்னார்:(8) "இராமா, உன் பிதா உன்னிடம் மகிழ்ச்சி கொண்டிருக்கிறார். நீ யுவராஜனாகப் போகிறாய். நீயும், சீதையும் இன்று உபவாசமிருப்பீராக.(9) நஹுஷன் யயாதிக்குச் செய்ததைப் போல உன் பிதாவான நராதிபன் தசரதன், பிரியத்துடன் நாளை காலையில் உனக்கு யௌவராஜ்ய அபிஷேகம் செய்யப் போகிறான்" {என்றார் வசிஷ்டர்}.(10)
மந்திரங்களுடன் விரதம் மேற்கொண்ட ராமன், அந்த முனிவர் இவ்வாறு சொன்னதும், வைதேஹியுடன் {விதேஹ இளவரசியான சீதையுடன்} சேர்ந்து உபவாசமிருந்தான்.(11) அதன்பிறகு ராமன், ராஜகுருவான அவரை {வசிஷ்டரை} தகுந்த முறையில் வழிபட்டதும், அவர் அந்தக் காகுத்ஸனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ராமநிவேசனத்தில் இருந்து புறப்பட்டார்.(12)
இராமன் அங்கே ஆசனத்தில் அமர்ந்து நண்பர்களிடம் பிரியத்துடன் பேசிக்கொண்டும், அவர்களின் அனைத்து வகை வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டும், அவர்களிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு {தன் வீட்டிற்கு} உள்ளே சென்றான்.(13) அப்போது, களிப்படைந்த பறவைக்கூட்டத்துடனும், மடல்விரிந்த தாமரைகளுடனும் கூடிய தடாகத்தைப் போல, மகிழ்ச்சியுடன் கூடிய நரநாரீகளால் {ஆண்கள், பெண்களால்} ராமனின் வீடு ஒளிர்ந்து கொண்டிருந்தது[2].(14)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "அப்பொழுது ராமக்ருஹத்திலுள்ள பெண்களும், புருஷர்களும் மிகுந்த ஸந்தோஷத்துடன் கலகலவென்று பேசிக்கொண்டு முகம் மலரப் பெற்றிருக்கையில் அம்மாளிகை மதங்கொண்ட பறவைகள் கலகலவென்றொலிக்கப் பெற்றுத் தாமரை மலர்கள் மலர்ந்த அழகிய தாமரையோடை போல விளங்கியது" என்றிருக்கிறது.
வசிஷ்டர், ராஜபவனத்திற்கு {அரச மாளிகைக்கு} நிகரான ராமநிவேசனத்தில் இருந்து புறப்பட்டபோது, அந்த மார்க்கம் {வீதி} ஜனங்களால் நிறைந்திருப்பதைக் கண்டார்.(15) அயோத்தியின் ராஜமார்க்கம் முழுவதிலும் குதூஹலமான ஜனங்கள் கூட்டங்கூட்டமாகச் சூழ்ந்து சாலைகளை நெருக்கினர்.(16) அப்போது அந்த ராஜமார்க்கத்தில் அலையலையாக மோதிய ஜனக்கூட்டத்தால் உண்டான பேராரவார ஒலியானது, சாகரத்தைப் போல எதிரொலித்துக் கொண்டிருந்தது.(17)
அந்நாளில் அயோத்தி, தூய்மைப்படுத்தப்பட்டு, நீர் தெளிக்கப்பட்ட சாலைகளுடனும், வரிசையான மரங்களுடனும், கொடிகள் ஏற்றப்பட்ட வீடுகளுடனும் கூடிய நகரமானது.(18) அப்போது அயோத்தியில் வசிக்கும் ஸ்திரீகள், பாலர்கள், அபலர்கள் உள்ளிட்ட ஜனங்கள் {பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட மக்கள்} ராமாபிஷேகம் நடைபெற விரும்பி, உதயமாகப் போகும் ரவிக்காக {சூரிய உதயத்திற்காகக்} காத்திருந்தனர்.(19), பிரஜைகளை அலங்கரிப்பதும், ஆனந்தத்தை அதிகரிப்பதுமான அயோத்தியா மஹோத்சவத்தைக் காணும் உற்சாகத்துடன் அந்த ஜனங்கள் இருந்தனர்.(20)
இவ்வாறே அந்தப் புரோஹிதர் {வசிஷ்டர்}, ஜனக்கூட்டத்தால் நெருங்கிய ராஜமார்க்கத்தில் இருந்து அந்த ஜனக்கூட்டத்தைப் பிளந்து செல்வதைப் போல, மெதுவாக ராஜகுலத்தை {அரச மாளிகையை} அடைந்தார்.(21) அவர், வெண்மேகத்தால் சூழப்பட்ட சிகரத்திற்கு ஒப்பான அந்த அரச மாளிகையில் ஏறி, சக்ரனை {இந்திரனைச்} சந்திக்கும் பிருஹஸ்பதியைப் போல அந்த நரேந்திரனை {தசரதனைச்} சந்தித்தார்.(22) அவர் வருவதைக் கண்ட நிருபன், ராஜாசனத்தில் இருந்து எழுந்து விசாரித்தான். அவரும் இன்னின்ன நடந்தது என்று அவனிடம் தெரிவித்தார்.(23) அப்போது உடன் {தசரதனுடன்} அமர்ந்திருந்த சபை உறுப்பினர்களும், அவனைப் போலவே ஆசனங்களில் இருந்து எழுந்து அந்தப் புரோஹிதரை {வசிஷ்டரைப்} பூஜித்தனர்.(24)
குருவால் அனுமதிக்கப்பட்ட ராஜா {தசரதன் வசிஷ்டரிடம் விடை பெற்றுக் கொண்டு} அந்த மனித சபையை விட்டகன்று, கிரியின் குகையில் நுழையும் சிம்ஹத்தைப் போல அந்தப்புரத்திற்குள் நுழைந்தான்.(25) அந்தப் பார்த்திபன் {தசரதன்}, மஹேந்திரனின் வீட்டைப் போன்றதும், பிரமாதமான அலங்காரத்துடன் கூடிய பெண்களால் நிறைந்ததுமான தன் நிவேசனத்திற்குள் {வீட்டிற்குள்} நுழைந்து, தாராகணங்களால் {நட்சத்திரக் கூட்டங்களால்} நிறைந்த ஆகாயத்திற்கு ஒளியூட்டும் சந்திரனைப் போலவே அதை {வீட்டை} ஒளிரச் செய்தான்.(26)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 005ல் உள்ள சுலோகங்கள் : 26
Previous | | Sanskrit | | English | | Next |