Friday 18 March 2022

ராஜ்யாபிஷேக ஏற்பாடுகள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 003 (49)

Arrangements for the anointing ceremony | Ayodhya-Kanda-Sarga-003 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனின் பட்டாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு வசிஷ்டரையும், வாமதேவரையும் கேட்டுக் கொண்ட தசரதன்; இராமனை சபைக்கு அழைத்து வந்த சுமந்திரன்; இராமனுக்கு அறிவுரை வழங்கிய தசரதன்...

Rama goes to Dasharatha

தாமரை மொட்டுகளுக்கு ஒப்பான அவர்களின் {அவர்களது கூப்பிய கைகளின்} வணக்கங்களை அனைத்து வகையிலும் ஏற்றுக் கொண்ட ராஜா {தசரதன்}, அவர்களிடம் இதமாகவும், இனிமையாகவும் {பின்வருமாறு} பேசினான்:(1) "அஹோ, என் பிரியத்திற்குரிய ஜேஷ்ட புத்திரனை {அன்புக்குரிய மூத்த மகன் ராமனை} யுவராஜனாக்க எதனால் நீங்கள் விரும்புகிறீர்களோ, அதனாலேயே நான் பரம பிரீதி {மகிழ்ச்சி} அடைகிறேன். என் நற்பேறும் ஒப்பற்றதாக இருக்கிறது" {என்றான் தசரதன்}.(2)

இவ்வாறு அவர்களை மதித்த அந்த ராஜா {தசரதன்}, அவர்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், பிற பிராமணர்களிடமும் இதைப் பேசினான்:(3) "புஷ்பங்கள் பூத்துக் குலுங்குவதும், மகத்தானதும், புண்ணியமானதுமான இந்தச் சைத்ர மாஸத்தில் {சித்திரை மாதத்தில் பட்டாபிஷேகத்திற்கான} ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்படட்டும்" {என்றான் தசரதன்}. ராஜனின் இந்த வாக்கியம் நிறைவடைந்ததும் அங்கே மகத்தான ஜனகோஷம் உண்டானது {மக்களிடம் பேராரவாரவொலி எழுந்தது}.(4,5அ)

அந்த ஜனகோஷம் படிப்படியாகக் குறைந்ததும், ஜனாதிபனான அந்த ராஜா {தசரதன்}, முனிஷார்தூலரான {முனிவர்களில் புலியான / சிறந்தவரான} வசிஷ்டரிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(5ஆ,6அ) "பகவானே, ராமனின் அபிஷேகத்திற்கு வேண்டிய கர்மங்கள் {செயல்பாடுகள்} அனைத்தையும் இனி நீர் ஆணையிடுவதே தகும்" {என்றான் தசரதன்}.(6ஆ,7அ)

துவிஜசத்தமரான {இருபிறப்பாளர்களில் சிறந்தவரான} வசிஷ்டர், பூமிபாலன் {பூமியை ஆளும் தசரதன்} சொன்னதைக் கேட்டதும், அந்த மன்னனின் முன்பு கூப்பிய கைகளுடன் நின்றிருந்த அதிகாரிகளுக்கு {பின்வருமாறு} கட்டளையிட்டார்:(7ஆ,8அ) "சுவர்ணம் {தங்கம்} முதலியவை, ரத்தினங்கள், பலிகள் {பூஜைக்குத் தேவையான நைவேதனங்கள்}, பல்வேறு மூலிகைகள், வெண்மலர்மாலைகள், பொரிகள், தேன், நெய், புத்தாடைகள், சாமரங்கள், துவஜம் {கொடிக்கம்பம்}, வெண்குடை, அக்னி போல் பிரகாசிக்கும் பொன்மயமான நூறு கும்பங்கள், கொம்புகளில் பொற்குப்பிப் பூட்டப்பட்ட ரிஷபம் {காளை}, முழுமையான {பழுதில்லாத} புலித்தோல் ஆகியவற்றை மஹீபதியின் அக்னியகாரத்தில் {பூமியின் தலைவனான தசரதன் நெருப்பு வளர்க்கும் அறையில் [தசரதனின் வேள்விச்சாலையில்]} அதிகாலையில் திரட்டி வைப்பீராக.

ரதங்கள், சகல ஆயுதங்கள், சதுரங்க பலம் {நால்வகைப் படை}, சுபலக்ஷணமுள்ள கஜம் {யானை} ஆகியவற்றையும் ஆயத்தமாக வைத்திருப்பீராக.(8ஆ-12அ) இன்னும் வேண்டிய சிறு பொருட்கள் வேறு எவையாக இருப்பினும் அவை அனைத்தையும் ஆயத்தமாக வைத்திருப்பீராக. அந்தப்புரத்தின் வாயில்களையும், நகரத்தில் உள்ள வாயில்கள் யாவற்றையும் நல்ல வாசனைத் திரவியங்களாலும், நல்ல மணத்தைத் தரும் சந்தன மாலைகளாலும், மலர்மாலைகளாலும் அலங்கரித்து வழிபடுவீராக.(12ஆ,13) நல்ல குணத்துடன் கூடியதும், தயிர், பால் முதலியவை கலந்ததுமான அன்னம், முழுமையாக நூறாயிரம் {ஒரு லட்சம்} துவிஜர்களுக்கு {இருபிறப்பாளர்களுக்குப்} போதுமான அளவுக்கு இருக்கட்டும்.(14) அது {அந்த அன்னம்}, நெய், தயிர், பொரி ஆகியவற்றுடனும், ஏராளமான தக்ஷிணைகளுடனும் நாளை அதிகாலையில் துவிஜமுக்கியர்களுக்கு மதிப்புடன் கொடுக்கப்படட்டும்.(15)

நாளை சூரியன் உதித்ததும், ஸ்வஸ்திவாசனம் {அனைவரின் நலத்தை நாடும் பிரார்த்தனை} நடைபெறப்போவதால் பிராமணர்களை அழைப்பீராக. ஆஸனங்களையும் ஆயத்தம் செய்து வைப்பீராக.(16) பதாகைகள் {கொடிகள்} கட்டப்படட்டும். ராஜமார்க்கம் நனைக்கப்படட்டும் {அரசவீதியில் நீர் தெளிக்கப்படட்டும்}. இசைக் கலைஞர்களும், கணிகையரும் சிங்காரித்துக் கொண்டு, ராஜமாளிகையின் இரண்டாவது கட்டில் இருக்கட்டும்.(17,18அ) அன்னத்துடனும், பக்ஷணங்களுடனும் {சிற்றுண்டிகளுடனும்}, தக்ஷிணைகளுடனும், மாலைகளுடனும் கூடிய தக்கார் {தகுந்த மனிதர்கள்} தேவாயதனங்கள் {கோவில்கள்}, வீதிகள், பொதுமண்டபங்கள் ஆகியவற்றில் தனித்தனியாகக் காத்திருக்கட்டும்.(18ஆ,19அ) நீண்ட வாள் தரித்துக் கொண்டும், கவசம் பூண்டு கொண்டும், தூய்மையான உடை உடுத்திக் கொண்டும் போர்வீரர்கள் அனைவரும் அந்த மஹோத்ஸவம் நடைபெறும் ராஜமாளிகையின் முன்பு ஓங்கி வளர்ந்திருக்கும் முகப்பில் நுழையட்டும்" {என்றார் வசிஷ்டர்}.(19ஆ,20அ)

நல்ல கவனத்துடன் கூடிய அந்த விப்ரர்கள் இருவரும் {வசிஷ்டரும், வாமதேவரும்}, அங்கே செய்யப்பட வேண்டிய காரியங்களை ஆணையிட்டுவிட்டு, அதை அந்தப் பார்த்திபனுக்கும் {மன்னன் தசரதனுக்கும்} தெரிவித்து, {அவற்றிலும்} எஞ்சிய காரியங்களைச் செய்து கொண்டிருந்தனர்.(20ஆ,21அ) அந்த துவிஜரிஷபர்கள் {இருபிறப்பாளர்களில் சிறந்த வசிஷ்டரும், வாமதேவரும்} நிறைவடைந்தவர்களாக, மகிழ்ச்சியுடன்  அந்த ஜகத்பதியை {உலகத்தலைவனான தசரதனை} அணுகி, அவனுடைய சொற்களின்படியே அனைத்தும் செய்யப்பட்டன என்பதை அவனுக்குத் தெரிவித்தனர்.(21ஆ,22அ)

அதன்பிறகு, பிரகாசமிக்கவனான அந்த ராஜா {தசரதன்}, சுமந்திரனிடம் இந்த வசனத்தைச் சொன்னான், "கிருதாத்மனான {புத்தி ஒழுங்குடன் கூடிய} ராமனை சீக்கிரம் அழைத்து வருவீராக" {என்றான் தசரதன்}.(22ஆ,23அ) தேரோட்டிகளில் சிறந்தவனான சுமந்திரன், "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, ராஜாவின் சாசனப்படி {ஆணைக்கிணங்க} ராமனை அங்கே ரதத்தில் அழைத்து வந்தான்.(23ஆ,24அ)

அதன்பிறகு, கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்குத் திசைகளைச் சேர்ந்த பூமிபாலர்களும் {நிலத்தின் ஆட்சியாளர்களும்}, மிலேச்சர்களும், ஆரியர்களும் {உன்னதர்களும்}, வனப்பகுதிகளில் உள்ள பிறரும், மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுமென அனைவரும் அங்கே அமர்ந்து வாசவனை {இந்திரனைக்} கவனிக்கும் தேவர்களைப் போல, அந்த தசரத நிருபனை கவனித்தனர்.(24ஆ-26அ) மருதர்களுக்கு {தேவர்களுக்கு} மத்தியிலுள்ள வாசவனை {இந்திரனைப்} போன்ற அந்த ராஜரிஷி {தசரதன்}, அவர்களின் மத்தியில், அரண்மனையில் இருந்தவாறே தன் ஆத்மஜன் {தன் மகனான ராமன்} ரதத்தில் வருவதைக் கண்டான்.(26ஆ,27அ)

கந்தர்வ ராஜனுக்கு இணையான அழகனும், உலகில் புகழ்பெற்றவனும், நீண்ட கரங்களையும், மஹாபலத்தையும், மதங்கொண்ட யானையின் நடையையும், சந்திரனைப் போன்ற காந்த முகத்தையும் கொண்டவனும், காண்பதற்கு இனிமையானவனும், ரூபத்தாலும், மகத்தான குணங்களாலும் மனிதர்களின் கண்களையும், மனங்களையும் கவர்பவனுமான ராமன், கோடைகால வெப்பத்தில் வேகும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பர்ஜன்யனை {மேகத்தைப்} போல வருவதைக் கண்டும் அந்த நராதிபனுக்கு {மனிதர்களின் தலைவனான தசரதனுக்குத்} தெவிட்டவில்லை.(27ஆ-30அ)

சுமந்திரன், அந்தச் சிறந்த தேரில் இருந்து ராகவன் {ராமன்} இறங்கத் துணை புரிந்து, கூப்பிய கைகளுடன் பின்தொடர்ந்து, பிதாவின் சமீபத்தில் {தசரதனின் அருகில்} அவனை அழைத்துச் சென்றான்.(30ஆ,31அ) நரபுங்கவனான அந்த ராகவன், நிருபனை {மனிதர்களிற் சிறந்த ராமன், தசரதமன்னனைக்} காண, கைலாச மலைக்கு ஒப்பான அந்த மாளிகைக்குள் சூதனுடன் {தேரோட்டியான சுமந்திரனுடன்} சென்றான்.(31ஆ,32அ)

இராமன், கூப்பிய கைகளுடன் தன் பிதாவின் அருகில் சென்று வணங்கியும், தன் நாமத்தை {பெயரைச்} சொல்லியும் தன் பிதாவின் பாதங்களை வழிபட்டான்.(32ஆ,33அ) அந்த நிருபன் {தசரதன்}, வணக்கம் தெரிவிக்கும் தன் பிரிய ஆத்மஜனின் {அன்புக்குரிய மகனின்} கூப்பிய கைகளைத் தன்னுடைய கூப்பிய கைகளால் பற்றித் தன்னருகே அழைத்து அவனை அணைத்துக் கொண்டான்.(33ஆ,34அ) அந்த ராஜா {தசரதன்}, உயர்ந்ததும், திவ்யமானதும், அழகானதும், மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான பரமாசனத்தை {உயர்ந்த இருக்கையை} ராமனுக்கு அளித்தான்.(34ஆ,35அ)

அந்தச் சிறந்த ஆசனத்தைப் பெற்றுக் கொண்ட ராகவன் {ராமன்}, உதயத்தில் மேருவை ஒளிரச் செய்யும் களங்கமில்லா ரவியை {சூரியனைப்} போலத் தன் பிரபையால் அதை {தன்னொளியால் அந்த ஆசனத்தை} ஒளிரச் செய்தான்.(35ஆ,36அ) மங்காத கிரகநக்ஷத்திரங்களுடன் கூடிய கூதிர் கால வானம் இந்துவால் {சந்திரனால்} ஒளிர்வதைப் போல அந்தச் சபையானது அவனால் {ராமனால்} அங்கே அதிகமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது.(36ஆ,37அ) அந்த நிருபன் {மன்னன் தசரதன்}, அலங்காரத்துடன் கூடிய தன்னையே கண்ணாடியில் காண்பதைப் போலத் தன் பிரிய ஆத்மஜனை {தன் அன்புக்குரிய மகனைக்} கண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தான்.(37ஆ,38அ)

புத்திரர்களைக் கொண்டவர்களில் சிறந்தவனான அந்த ராஜா {தசரதன்}, தேவேந்திரனுடன் கசியபரைப் போலத் தன் புத்திரனிடம் {ராமனிடம்} புன்னகையுடன் இந்தச் சொற்களைச் சொல்லி உரையாடினான்:(38ஆ,39அ) "இராமா, நீ என் ஜேஷ்ட பத்தினிக்கு உண்டான தகுந்த சுதனாக {மூத்த மனைவிக்குப் பிறந்த தகுதிவாய்ந்த மகனாக} இருக்கிறாய். குணசிரேஷ்டனான {குணங்களில் சிறந்தவனான} நீ, என்னுடைய பிரிய ஆத்மஜனாகவும் {அன்புக்குரிய மகனாகவும்} இருக்கிறாய்.(39ஆ,40அ) உன்னால் இந்தப் பிரஜைகள் {மக்கள்} பேணப்பட்டனர். அந்த குணத்தால், புஷ்ய யோகத்தில் {பூச நட்சத்திரம் கொண்ட நாளில்} நீ யுவராஜ்ஜியத்தை {யுவராஜன் / இளவரசன் என்ற பட்டத்தை} அடைகிறாய்.(40ஆ,41அ) புத்திரனே, உன்னுடைய இயல்பாலேயே நீ அடக்கமானவனாகவும், குணவானாகவும் இருப்பதால், நான் உன்னிடம் கொண்ட சினேகத்தின் காரணமாக உனக்கு இதமானதைச் சொல்லப் போகிறேன்.(41ஆ,42அ)

இன்னும் பணிவுள்ளவனாவாயாக; நித்யம் ஜிதேந்திரியனாக {எப்போதும் புலன்களை வெல்பவனாக} இருப்பாயாக. காமத்திலும் {ஆசையிலும்}, குரோதத்திலும் {கோபத்திலும்} உண்டாகும் தீய பழக்கங்களைக் கைவிடுவாயாக.(42ஆ,43அ) நடத்தையால் நேரடியாகவும், மறைமுகமாகவும் அமாத்யர்களையும் {அமைச்சர்களையும்}, பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாயாக.(43ஆ,44அ) மக்களை மகிழ்விக்கும் வகையில் களஞ்சியங்களும், ஆயுத சாலைகளும் விளிம்புவரை நிரம்பும்போது, அமுதத்தை அடைந்த அமரர்களைப் போல, மேதினி பாலனம் செய்பவனின் மித்ரர்களும் {பூமியை ஆள்பவனின் நண்பர்களும்} மகிழ்ச்சியடைகிறார்கள். எனவே நீயும் அவ்வாறே செயல்படுவாயாக" {என்றான் தசரதன்}.(44ஆ-46அ)

இராமனின் நலவிரும்பிகள் இதைக் கேட்டதும் கௌசல்யைக்கு நன்மை செய்யும் நோக்கில் அவளிடம் விரைந்து சென்று இதைத் தெரிவித்தனர்.(46ஆ,47அ) பெண்களில் சிறந்தவளான கௌசல்யை, இந்த நல்ல செய்தியைச் சொன்னவர்களுக்கு ஹிரண்யங்களையும் {தங்கத்தையும்}, கோவையும் {பசுக்களையும்}, பல்வேறு வகையான ரத்தினங்களையும் கொடையளித்தாள்.(47ஆ,48அ)

இராகவன் {இராமன், தசரத} ராஜனை வணங்கிய பின்னர், ரதத்தில் ஏறி தன்னுடைய அற்புதமான இல்லத்திற்குச் சென்று, ஜனக்கூட்டங்களால் வழிபடப்பட்டான்.(48ஆ,49அ) அந்த நிருபதியின் {மனிதர்களில் தலைவனான தசரதனின்} வசனத்தைக் கேட்டவர்களும், தங்கள் விருப்பம் நிறைவேறியவர்களுமான நகரவாசிகள், அந்த நரேந்திரனிடம் {மனிதர்களின் தலைவனான தசரதனிடம்} விடைபெற்றுத் தங்கள் இல்லங்களுக்குச் சென்றவுடன் தேவர்களை வழிபட்டனர்.(49ஆ,இ,ஈ,உ)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 003ல் உள்ள சுலோகங்கள் : 49

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை