Thursday 17 March 2022

மந்திராலோசனை | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 002 (54)

Counsel | Ayodhya-Kanda-Sarga-002 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமனை யுவராஜனாக நியமிக்க சபையில் ஆலோசனை கேட்ட தசரதன்; இராமனின் குணங்களை மகிழ்ச்சியுடன் எடுத்துரைத்து தசரதனின் முன்மொழிவை ஏற்றுக்கொண்ட சபை...

Dasharatha's counsel

பிறகு அந்த வஸுதாதிபன் {பூமியின் தலைவனான தசரதன்}, சபைக்கு அழைக்கப்பட்ட யாவரும் அறியும் வண்ணம் இவ்வாறான, இதமான, புகழ்வாய்ந்த, இனிய சொற்களைப் பேசினான்.(1)

நிருபதியான அந்த ராஜா {மனிதர்களின் தலைவனான தசரத மன்னன்}, துந்துபியின் ஒலியைப் போலும், மேக முழக்கத்தைப் போலும் கம்பீரமிக்க, மகத்தான சுவரத்திலும், ராஜலக்ஷணங்கள் பொருந்திய இனிய குரலிலும், ஒப்பற்ற இனிமையுடனும் மற்ற நிருபர்களிடம் {மனிதர்களின் தலைவர்களிடம் பின்வருமாறு} பேசினான்:(2,3) "என்னுடைய உத்தமராஜ்ஜியம் எங்கள் பூர்வீக ராஜேந்திரர்களால் எவ்வாறு ஒரு மகனைப் போல {பரிவுடன்} பரிபாபலனம் செய்யப்பட்டது என்பதை நீங்கள் நன்கறிவீர்கள்.(4) அவ்வழியில் வந்த நான், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றல்களான பல்வேறு நரேந்திரர்களால் {மனிதர்களின் தலைவர்களால்} பரிபாலிக்கப்பட்ட ஜகம் அகிலமும் {உலகம் முழுவதும்} நல்லியல்பு அருளப்பட்டதாகவும், மகிழ்ச்சிக்குத் தகுந்ததாகவும் இருக்க விரும்புகிறேன்.(5)

முன்னோர் பின்பற்றிய பாதையைப் பின்பற்றும் நானும், என் சக்திக்கு இயன்ற மட்டும், எப்போதும் விழிப்புடன் பிரஜைகளைப் பாதுகாத்து வருகிறேன்.(6) உலகத்தார் அனைவரின் நன்மைக்காகச் செயல்பட்ட {அரசு செலுத்திய} இந்த சரீரம் வெண்கொற்றக் குடை நிழலின் கீழ் வாடியிருக்கிறது {பலவீனமடைந்திருக்கிறது}.(7) இந்தச் சரீரம் பல்லாயிரம் வருட காலம் ஜீவனுடையதாக இருக்கிறது. வயதடைந்துவிட்டதால் நான் ஓய்வை விரும்புகிறேன்.(8) ராஜ பிரபாவத்தால் {அரசனின் சக்தியால்} சேவிக்கப்படுவதும், புலன்களை வெல்லாதவர்களுக்குப் பெரும் சுமையாக இருப்பதுமான உலகத் தர்மத்தைச் சுமந்து களைப்படைந்திருக்கிறேன்.(9) என்னருகில் இருக்கும் இந்தத் துவிஜ ரிஷபர்கள் {இரு பிறப்பாளர்களில் சிறந்தவர்கள்} அனைவரின் அனுமதியைப் பெற்று, பிரஜாஹிதத்தில் {மக்களின் நன்மைக்கான காரியங்களில்} என் புத்திரனை நியமித்துவிட்டு ஓய்வடைய விரும்புகிறேன்.(10)

என் ஜேஷ்டாத்மஜன் {மூத்தமகன்} ராமன், வீரத்தில் புரந்தரனுக்கு {இந்திரனுக்கு} இணையானவன், பகைவரின் நகரங்களை வெல்பவன், என்னுடைய குணங்கள் அனைத்துடனும் பிறந்தவன்.(11) புஷ்யத்துடன் {பூசம் நட்சத்திரத்துடன்} சேர்ந்த சந்திரனைப் போன்றவனும், தர்மத்தைப் பாதுகாப்பவர்களில் சிறந்தவனும், புருஷ புங்கவனுமான {மனிதர்களிற்சிறந்தவனுமான} அவனைப் பிரீதியுடன் {மகிழ்ச்சியுடன்} நான் யுவராஜனாக நியமிப்பேன்.(12) அந்த லக்ஷ்மணாக்ரஜன் {ராமன்} நாதனானால் மூவுலகங்களும் சிறந்த நாதனைக் கொண்டவையாகும். அந்த லக்ஷ்மிவானே நாதனாகத் தகுந்தவன்.(13) இந்த மஹீயை என் சுதனான {மகனான} அவனிடம் கொடுத்துவிட்டால், நன்மைக்கான ஏற்பாட்டை சீக்கிரம் செய்தவனாக நான் கிலேசமற்றவனாவேன் {வருத்தமற்றவனாவேன்}.(14) நன்கு சிந்தித்த பிறகே நான் இதைச் சொல்கிறேன். இது தகுந்ததாகவும், நல்லதாகவும் இருந்தால் உங்கள் அனுமதியை எனக்குத் தருவீராக. வேறு எவ்வாறு என்னால் இதைச் செய்ய முடியும்?(15) இதுவே என் விருப்பமாக இருப்பினும், வேறேதும் நல்ல வழி இருந்தால் சிந்திப்பீராக. குறிப்பிடத்தகுந்தவையாகவும், ஆய்வில் ஓங்கி வளர்ந்தவையாகவும் இருப்பவை மத்தியஸ்தர்களின் {நடுநிலையாளர்களின்} சிந்தனை " {என்றான் தசரதன்}.(16)

மழை பொழியும் மஹாமேகத்தைக் கண்டு, உரக்க அகவும் மயில்களைப் போல மகிழ்ச்சியடைந்த நிருபர்கள் {மன்னர்கள்}, இவ்வாறு சொன்ன அந்த நிருபனை {தசரதராஜனைப்} புகழ்ந்தனர்.(17) பெரும் மகிழ்ச்சியில் இருந்த அந்த ஜனக்கூட்டம் உண்டாக்கிய எதிரொலியின் உரத்த ஆரவார இனிய அதிர்வில் விமானம் {அந்தக் கட்டடம்} நடுங்குவதைப் போலத் தெரிந்தது.(18)

தர்மார்த்த {அறம், பொருள் தொடர்பான} காரியங்களை நன்கறிந்த அவனது {தசரதனின்} கருத்தை அனைத்து வகையிலும் புரிந்து கொண்ட பிராமணர்கள் உள்ளிட்ட நகரவாசிகளும், ஜானபதர்களும் {கிராமவாசிகளும்}, முக்கியஸ்தர்களும் சேர்ந்து, மனத்தில் ஆலோசனை செய்து, உடன்பட்டு விருத்தனான {முதிர்ந்தவனான} தசரத நிருபனிடம் {பின்வருமாறு} பேசினார்கள்:(19,20) "பார்த்திபா, அநேக ஆயிரம் வருடங்கள் வயதான விருத்தனாக {முதிர்ந்தவனாக} நீ இருக்கிறாய். பார்த்திப {ஆளும்} யுவராஜனாக இராமனை நியமிப்பாயாக.(21) மஹாபாஹுவும் {நீண்ட கரங்களைக் கொண்டவனும்}, ரகுவீரனும் {ரகு குலத்தில் தோன்றிய வீரனும்}, மஹாபலம் பொருந்தியவனுமான ராமனை, வெண்குடை மறைத்த முகத்துடன் மஹாகஜத்தில் {பெரும் யானையில்} வலம் வருபவனாகக் காண நாங்கள் விரும்புகிறோம்" என்றனர்.(22)

இவ்வாறான அவர்களின் வசனத்தைக் கேட்ட ராஜா {தசரதன்}, அவர்களின் மனவிருப்பத்தை அறியாமல், அறிய விரும்புபவனைப் போல இந்த வசனத்தைச் சொன்னான்:(23) "ராஜர்களே, இந்த ஐயம் எனக்கிருக்கிறது. என் வசனத்தைக் கேட்டதும் ராகவனை {ராமனைப்} பதியாக்க {தலைவனாக்க} ஏன் விரும்புகிறீர்கள்? இதில் உண்மையைச் சொல்வீராக.(24) தர்மத்துடன் இந்தப் பிருத்வீயை {பூமியை} நான் ஆள்கையில், என் ஆத்மஜனை {மகனை} யுவராஜனாகக் காண எவ்வாறு {ஏன்} விரும்புகிறீர்கள்?" {என்று கேட்டான் தசரதன்}.(25)

நகர ஜனங்களுடன் கூடிய அவர்கள் {மன்னர்கள்}, அந்த மஹாத்மாவிடம் {தசரதனிடம்} அவனை {ராமனைக்} குறித்து {பின்வருமாறு} சொன்னார்கள்: "நிருபா {மன்னா}, உன் புத்திரன், கல்யாண {மங்கல} குணங்கள் பலவற்றைக் கொண்டவனாக இருக்கிறான்.(26) தேவா, அந்த நன்மதியாளனின் {உன் மகன் ராமனின்} பல்வேறு குணங்களைச் சொல்கிறோம் கேட்பாயாக. அவனது குணங்கள் தேவர்களுக்கு நிகரானவை; அனைவராலும் விரும்பப்படுபவை; ஆனந்தத்தை அளிப்பவை.(27) விஷாம்பதியே {மக்களின் தலைவா}, திவ்ய குணங்களில் ராமன் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவன்; சத்திய பராக்கிரமம் கொண்டவன்; இக்ஷ்வாகுக்கள் அனைவரிலும் மகத்தானவன்.(28) இராமன், உலகில் சத்புருஷன் {நல்ல மனிதன்}; சத்தியத்திலும், தர்மத்திலும் விருப்பம் கொண்டவன். இராமனால் மட்டுமே தர்மத்தையும், செல்வத்தையும் பிரியாமல் ஒருங்கிணைக்க முடியும் {இராமனிடம் மட்டுமே தர்மமும், செல்வமும் பிரியாமல் ஒருங்கிணைந்திருக்கிறது}.(29) பிரஜைகளை {மக்களை} மகிழ்விப்பதில் சந்திரனுக்கும், பொறுத்துக் கொள்ளும் குணத்தில் {பொறுமையில்} வஸுதைக்கும் {பூமிக்கும்}, புத்தியில் பிருஹஸ்பதிக்கும், வீரியத்தில் சசிபதிக்கும் {இந்திரனுக்கும்} இணையானவன்.(30)

அவன் தர்மத்தை அறிந்தவன்; சத்தியசந்தன்; சீலவான் {நற்குணம் கொண்டவன்}; அநசூயகன் {பொறாமையற்றவன்}; க்ஷாந்தன் {அமைதியானவன்}; துன்பத்தில் இருப்போருக்கு ஆறுதல் அளிப்பவன்; நற்சொற்களைப் பேசுபவன்; நன்றியுணர்வுமிக்கவன்; புலன்களை வென்றவன்.(31) அந்த இராகவன் {ராமன்}, மிருதுவனாவன் {மென்மையானவன்}, ஸ்திர சித்தம் {திடபுத்தி} கொண்டவன்; எப்போதும் மங்கலன்; அநசூயகன் {பொறாமையற்றவன்}; பூதங்களுக்குப் பிரியவாதி, சத்தியவாதி {உயிரினங்களிடம் அன்புடனும், உண்மையுடனும் பேசுபவன்}; பல்வேறு சாத்திரங்களில் ஞானம் கொண்ட முதிர்ந்த பிராமணர்களை வழிபடுபவன். அதன் காரணமாகவே ஒப்பற்றவையான அவனது கீர்த்தியும் {புகழும்}, மகிமையும், தேஜஸும் {காந்தியும்} இவ்வுலகில் வளர்கின்றன.(32,33) தேவர்களும், அசுரர்களும், மனிதர்களும் அறிந்த சர்வ அஸ்திரங்களிலும் அவன் விசாரதன் {ஆயுதங்கள் அனைத்திலும் திறன் கொண்டவன்}; அங்கங்களுடன் கூடிய வேதங்களை முறைப்படி அறிந்து வித்யாவிரத ஸ்நானம் {கல்வியின் நிறைவில் புனித நீராடல்} செய்தவன்.(34)

அந்த பரதாக்ரஜன் {பரதனின் அண்ணனான ராமன்}, இசையில் சிறந்தவனாக இருக்கிறான்; சிறந்த உறவினர்களைக் கொண்டிருக்கிறான்; சாதுவாகவும், பலகீன மனமற்றவனாகவும், மஹாமதி படைத்தவனாகவும் இருக்கிறான்.(35) {அவன்}, துவிஜ சிரேஷ்டர்களால் {இருபிறப்பாளர்களில் சிறந்தவர்களால்} காரியங்கள் அனைத்திலும் பயிற்றுவிக்கப்பட்டவன்; தர்மார்த்த நிபுணன் {அறம், பொருள் சார்ந்த காரியங்களில் திறன் கொண்டவன்}; கிராமங்களிலோ, நகரங்களிலோ போரிடும்போது சௌமித்ரியுடன் {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணனுடன்} சென்று வெல்லாமல் திரும்பாதவன் {எப்போதும் வெற்றியுடன் திரும்புபவன்}.(36) போரிலிருந்து திரும்பியதும் உறவினனைப் போலவும், புத்திரர்களிடம் செல்லும் பிதாவைப் போலவும் குஞ்சரத்திலோ {யானையிலோ}, ரதத்திலோ {தேரிலோ} சென்று முறைப்படி நகரவாசிகளுடைய புத்திரர்கள், அக்னி, தாரங்கள் {மனைவியர்}, பணியாட்கள், சீடர்களின் குசலத்தை {நலத்தை} எப்போதும் முழுமையாக விசாரிப்பவன்.(37,38,39அ)

புருஷவியாகரனான {மனிதர்களில் புலியான} ராமன், எப்போதும் இவ்வாறே {பின்வருமாறே} எங்களிடம் பேசுவான். "உங்கள் சிஷ்யர்கள் தங்கள் தொண்டுகளில் முறையாகச் செயல்படுகின்றனரா?" {என்று எப்போதும் எங்களிடம் கேட்பான்}.(39ஆ,40அ) அவன் ஒரு பிதாவை {தந்தையைப்} போல மனிதர்களின் துயரங்களில் பெரும் துக்கமடைவான்; அவர்களின் உத்சவங்களில் {பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட விழாக்களில்} எப்போதும் மகிழ்ச்சியடைவான்.(40ஆ,41அ) சத்தியவாதியும், பெரும் வில்லைக் கொண்டவனும், மூத்தவர்களை சேவிப்பவனும், ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, பேசும் முன் புன்னகைப்பவனும்; எப்போதும் தர்மத்தையே உறைவிடமாகக் கொண்டவனும்,(41ஆ,42அ) நல்ல முறையில் நன்மைகளை அடைபவனும், சச்சரவை உண்டாக்கும் பேச்சில் விருப்பமில்லாதவனும், மறுமொழிகளிலும், எதிருரைகளிலும் வக்தனுமான {பேச்சில் திறன் கொண்டவனுமான}(42ஆ,43அ) ராமன், தன் அழகிய புருவங்களாலும், தாமிரம் போன்ற நீண்ட செவ்வழிகளாலும் உலகத்தை மயக்குபவனாகவும், சௌர்யம், வீர்யம், பராக்கிரமம் ஆகியவற்றில் சாக்ஷாத் விஷ்ணுவைப் போன்றவனாகவும் இருக்கிறான்.(43ஆ,44அ) பிரஜாபரிபாலனத்தின் {மக்களை ஆள்வதின்} தத்துவத்தை அறிந்தவனும், ஆசையால் பீடிக்கப்படாத புலன்களைக் கொண்டவனும், மஹீயைத் தவிர {பூமியைத் தவிர} மூவுலகங்களையும் ஆளத்தகுந்தவனுமான அவனைக் குறித்து வேறு என்ன சொல்வது?(44ஆ,45அ)

அவனது கோபமும், கருணையும் ஒருபோதும் பயனற்றுப் போவதில்லை; அவன் கொல்லத்தகுந்தவர்களை நியமத்துடன் {நியாயமாக} நிச்சயம் கொல்வான். கொல்லத்தகாதவர்களிடம் ஒருபோதும் கோபங்கொள்ள மாட்டான்.(45ஆ,46அ) அவன், யாரிடம் திருப்தியடைகிறானோ, அவர்களுக்குச் செல்வத்தை அளிப்பான். கதிர்களால் ஒளிரும் சூரியனைப் போலவே ராமனும், சர்வ ஜனங்களையும் மயக்குபவையும், நரர்களுக்கு {மனிதர்களுக்கு} மகிழ்ச்சியை உண்டாக்குபவையுமான தன் குணங்களால் ஒளிர்கிறான்.(46ஆ,47) குணங்களெனும் செல்வங்களைக் கொண்டவனும், சத்திய பராக்கிரமனும், லோகபாலர்களுக்கு ஒப்பானவனுமான ராமனையே தன் நாதனாகக் கொள்ள மேதினி {பூமி} விரும்புகிறாள்.(48)

இராகவா {தசரதா}, மரீசிக்குக் கசியபரைப் போலப் புத்திர குணங்களுக்குத் தகுந்தவனான அவன் {ராமன்}, உன் நற்பேற்றாலேயே உனக்கு வத்சனாக {மகனாகப்} பிறந்திருக்கிறான்.(49) தலைநகரவாசிகள், நகரவாசிகள், ஜானபதர்கள் {கிராமவாசிகள்}, நெருங்கியோர் உள்ளிட்ட ராஷ்டிரத்தின் சர்வ ஜனங்கள், கந்தர்வர்கள், உரகர்கள் உள்ளிட்ட மனிதர்களுக்கும், தேவாசுரர்களுக்கும் மத்தியில் மதிக்கத் தக்க இயல்பைக் கொண்ட ராமனின் பலத்தையும், ஆரோக்கியத்தையும், ஆயுளையும் வேண்டுகின்றனர்.(50,51) விருத்தர்களும், இளைஞிகளுமான ஸ்திரீகள் {கிழவிகளும், குமரிகளும்}, மாலையிலும், காலையிலும் நிலையான மனத்துடன் புகழ்பெற்ற ராமனின் நன்மையை சர்வ தேவர்களிடமும் வேண்டுகின்றனர்.(52)

இராஜோத்தமா {மன்னர்களில் சிறந்தவனே}, தேவா {தசரத மன்னா}, கருநெய்தலைப் போன்ற நிறம் கொண்டவனும், சத்ருக்கள் அனைவரையும் அழிப்பவனும், உன் ஆத்மஜனுமான {மகனுமான} ராமன், யுவராஜனாவதை நிச்சயம் நாங்கள் காண்போம். உன் அருளால் அவர்களின் {மக்களின்} வேண்டுதல் பலிக்கட்டும்.(53) வரதா {வரங்களை அளிப்பவனே / ஆசைகளை நிறைவேற்றுபவனே, தசரதா}, தேவதேவனுக்கு {விஷ்ணுவுக்கு} ஒப்பானவனும், சர்வலோகத்தின் நன்மையில் விருப்பமுள்ளவனும், சிறந்த குணங்களைக் கொண்டவனுமான உன் ஆத்மஜனுக்கு {மகனுக்கு / ராமனுக்கு} சீக்கிரம் மகிழ்ச்சியுடன் அபிஷேகம் {பட்டாபிஷேகம்} செய்து வைப்பதே உனக்குத் தகும்" என்றனர்.(54)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 002ல் உள்ள சுலோகங்கள் : 54

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை