Wednesday, 1 December 2021

பரசுராமர் | பால காண்டம் சர்க்கம் - 74 (24)

Parashurama | Bala-Kanda-Sarga-74 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இமயத்திற்கு விடைபெற்றுச் சென்ற விஷ்வாமித்ரர்; மகள்களுக்கு சீதனமளித்த ஜனக மன்னன்; தன் நாட்டுக்குப் புறப்பட்ட தசரத மன்னன்; எதிர்வந்த பரசுராமர்...

Parashurama

அந்த ராத்திரி கடந்ததும் விஷ்வாமித்ர மஹாமுனிவர், மன்னர்களிடமும் {தசரதன், ஜனகன் ஆகியோரிடமும்}, அவ்விருவரிடமும் {ராமலக்ஷ்மணர்களிடமும்} விடைபெற்றுக் கொண்டு உத்தரப் பர்வதத்திற்கு {இமய மலைக்குப்} புறப்பட்டார்.(1) விஷ்வாமித்ரர் சென்ற பிறகு, தசரத ராஜன், மிதிலாதிபதனான வைதேஹனிடம் {ஜனகனிடம்} விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய {அயோத்தி} நகரத்திற்குப் புறப்பட்டான்.(2)

அப்போது மிதிலேஷ்வரனான விதேஹராஜன், {தசரதனுடன் சேர்ந்து பாதி வழி சென்று} ஏராளமான கன்யாதனத்தை தத்தம் செய்தான் {தன் பெண்களுக்கு சீதனங்களைக் கொடுத்தான்}. ஏராளமான பசுக்களையும், நூறாயிரம் {லட்சம்} சிறந்த கம்பளங்களையும், கோடிக்கணக்கான பட்டாடைகளையும், ஹஸ்த, அஷ்வ, ரதப் பாதாதிகளையும் {யானைகள், குதிரைகள், தேர்கள், காலாள்களையும்}, திவ்யரூபம் கொண்டவர்களும், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களும், உத்தமர்களுமான தாசிகளையும் {பணிப்பெண்களையும்}, தாசர்களையும் {பணியாட்களையும்}, நூறு கன்னிகைகளையும் தத்தம் செய்தான்.(3-5அ) அந்த ராஜன் {ஜனகன்}, பெரும் மகிழ்ச்சியுடன் ஹிரண்யங்களையும், சுவர்ணங்களையும் {பொன், வெள்ளிகளையும்}, முத்துக்களையும், பவளங்களையும் உத்தம கன்யாதனமாக {தன் பெண்களுக்கான சிறந்த சீதனமாகக்} கொடுத்தான்.(5ஆ,6அ) மிதிலேஷ்வரனான அந்த ராஜன் பலவிதப் பொருட்களை தத்தம் செய்து, அந்தப் பார்த்திபனுக்கு {தசரதனுக்கு} விடை கொடுத்தனுப்பி, தன் நிலையமான மிதிலைக்குள் பிரவேசித்தான்[1].(6,7அ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "{சம்மந்திகள்}, கிராமம், அல்லது நகரத்தின் எல்லைவரை திருமணக்கூட்டத்தைப் பின்தொடர்ந்து செல்வது வழக்கம். அந்த இடைப்பட்ட வேளையில், மணமகளின் தாயாரும், மணமகளும் இரண்டு மூன்று முறை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணங்களும், மணமகளின் தந்தை முகத்தை மறைத்துக் கொண்டு கண்ணீர் சிந்தும் தருணங்களும் வாய்க்கும். மணமகளை அனுப்பி வைக்கையில், விரும்பியபோதெல்லாம் அவள் தன் தந்தையின் வீட்டிற்கு வர முடியாது என்பதால் அத்தருணம் அவளது மறுபிறப்பாகக் கருதப்படுகிறது. இத்தருணத்தில் இருந்து கணவனின் வீடே அவளது வீடாகப் போவதால், அவள் தந்தை வீட்டிற்கு வந்தாலும், அவள் எந்நிலையிலும் தன் கணவனின் இடத்திற்குத் திரும்பவே வேண்டும். ஆனால் இங்கேயோ, இந்த சர்க்கத்திற்குப் பிறகு சீதை மிதிலைக்குத் திரும்பிச் செல்லப் போவதே இல்லை. இராமன் அவளைக் கைவிடும்போதும், அவள் தன் அன்னையான பூமிமாதாவின் கருவறையை அடைகிறாளேயன்றி மிதிலையையல்ல" என்றும், இன்னும் சில வரிகளும் இருக்கின்றன.

அயோத்யாதிபதியான ராஜா {தசரதன்}, மஹாத்மாக்களான புத்திரர்கள் ஸஹிதம் ரிஷிகள் அனைவரையும் முன்னிட்டுக் கொண்டு, படைகள் பின்தொடரச் சென்றான்.(7ஆ,8அ) ரிஷிகணங்களுடனும், ராகவர்களுடனும் {ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களுடனும்} அந்த நரவியாகரன் {மனிதர்களில் புலியான தசரதன்} சென்று கொண்டிருந்த போது, சுற்றிலும் பக்ஷிகள் கோரவொலி எழுப்பத் தொடங்கின.(8ஆ,9அ) பூமியின் மிருகங்கள் அனைத்தும் பிரதக்ஷிணம் செய்து {இடமிருந்து வலம் வந்து} கொண்டிருந்தன. இவற்றைக் கண்ட அந்த ராஜஷார்தூலன் {மன்னர்களில் புலியான தசரதன்}, வசிஷ்டரிடம் இதுகுறித்துக் கேட்டான்:(9ஆ,10அ) "சௌம்யமற்ற கோரவொலியெழுப்பும் பக்ஷிகளையும், பிரதக்ஷிணம் செய்யும் மிருகங்களையும் {மென்மையற்றுக் கதறும் பறவைகளையும், வலம் வரும் விலங்குகளையும்} கண்டு இதயம் நடுங்குகிறது. இஃது என்னவென என் மனம் வருந்துகிறது" என்று கேட்டான்.(10ஆ,11அ)

தசரத ராஜன் சொன்னதைக் கேட்ட அந்த மஹாரிஷி {வசிஷ்டர்}, இந்த மதுரமான வாக்கியத்தைச் சொன்னார்: "இதற்கான பலனைக் கேட்பாயாக.(11ஆ,12அ) பக்ஷிகள் முகத்தில் இருந்து வெளிப்படுவது {பறவைகள் வெளிப்படுத்தும் கதறலானது, ஏற்படவிருப்பதும்,} திவ்யமானதும், கோரமானதுமான பயத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால், இந்த மிருகங்களின் நடத்தை அது {பயம்} நீங்கும் என்பதை அறிவிக்கிறது. எனவே இந்த மன வருத்தத்தை நீ கைவிடுவாயாக" {என்றார் வசிஷ்டர்}.(12ஆ,13அ)

அவர்கள் இவ்வாறு விவாதித்துக் கொண்டிருந்தபோது, மேதினி நடுங்கி, பெரும் மரங்கள் அனைத்தும் விழும் வகையில் அங்கே பெருங்காற்றுச் சுழன்று விசிற்று.(13ஆ,14அ) சூரியன் இருளால் மறைக்கப்பட்டான். சர்வ திசைகளும் இருண்டன. {தசரதனின்} அந்தப் படைகள் அனைத்தும் புலப்படாத வகையில் பஸ்மத்தில் {சாம்பல் போல எழுந்த புழுதியில்} மறைந்தன.(14ஆ,15அ) அப்போது வசிஷ்டரும், பிற ரிஷிகளும், மகன்களுடன் கூடிய ராஜாவும் திரிந்து கொண்டிருந்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் அனைத்தும் அசைவற்றிருந்தன.(15ஆ,16அ)

கோரமான அந்த இருளில், பஸ்மத்தில் {சாம்பலில்} மூழ்கியதைப் போன்றிருந்த அந்த சம்முவானது {சமூ என்று அழைக்கப்படும் அந்தப் படைப்பிரிவானது},{16ஆ} பயங்கரத் தோற்றமுடையவரும், ஜடாமண்டலதாரியும் {சடை தரித்தவரும்}, ராஜாராஜவிமர்தனரும் {ராஜர்களை அடக்கிய ராஜரும்},{17} கைலாசத்தைப் போல அசைக்கமுடியாதவரும், காலாக்னியைப் போலத் தடுக்கப்படமுடியாதவரும், தேஜஸ்ஸில் ஜுவலிப்பதால் {தன்னொளியில் ஒளிர்வதால்} பொதுஜனங்களுக்குப் புலப்படாதவரும்,{18} ஸ்கந்தத்தில் பரசை {தோளில் கோடரியை} தரித்தவரும், மின்னற்கூட்டத்தைப் போன்ற தனுவை {வில்லைக்} கொண்டவரும், உக்கிர சரத்தை {பயங்கரமான கணையைப்} பிடித்திருப்பவரும், திரிபுரக்னம் செய்த {திரிபுரத்தை எரித்த} சிவனைப் போன்றவரும், பார்க்கவருமான ஜாமதக்னியரை {பரசுராமரைக்} கண்டது.{19}(16ஆ-19)

ஜப, ஹோம பாராயணம் செய்யும் விப்ரர்களான வசிஷ்டரும், பிற பிரமுகர்களும், முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி, பாவகனைப் போல ஜுவலித்துக் கொண்டிருக்கும் {வேள்வி நெருப்பைப் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்} அந்தப் பயங்கரத் தோற்றத்தைக் கொண்டவரை {பரசுராமரை} மேலும் கீழுமாகப் பார்த்து முணுமுணுக்கத் தொடங்கினர்:(20,21அ) "பித்ருவதத்திற்கு {தந்தை ஜமதக்னியின் கொலைக்குப்} பழிதீர்க்க இப்போதும் இவன் க்ஷத்திரியர்களை அழிப்பானோ? பூர்வத்தில் க்ஷத்ரவதம் செய்ததில் இவன் கோபம் தணிந்திருக்காதோ? இனி மீண்டும் க்ஷத்திரியர்களை அழிப்பது இவனது நோக்கமாக இராது" {என்று அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்தனர்}[2].(21ஆ,22)

[2] பரசுராமரின் பூர்வக் கதைகளை மஹாபாரதத்தில் பரசுராமர் என்ற சுட்டிக்குச் சென்றால் அறியலாம்.

ரிஷிகள் இவ்வாறு சொல்லிக்கொண்டே அர்க்கியத்தை எடுத்து, பயங்கரத் தோற்றம் கொண்ட அந்தப் பார்க்கவரிடம் {பரசுராமரிடம்}, "இராமரே, ராமாரே" என்ற இந்த மதுரவாக்கியத்தைச் சொன்னார்கள்.(23) பிரதாபவானான ஜாமதக்னேய ராமர் {ஜமதக்னியின் மகனான பரசுராமர்}, ரிஷிகள் செய்த பூஜையை {வழிபாட்டை} ஏற்றுக் கொண்டு, தாசரதியான {தசரதனின் மகனான} ராமனிடம் பேசத்தொடங்கினார்.(24)

பாலகாண்டம் சர்க்கம் – 74ல் உள்ள சுலோகங்கள் : 24

Previous | Sanskrit | English | Next

Labels

அக்னி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதாமன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திரிஜடர் திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்