Thursday, 2 December 2021

பரசுராமர் நிந்தனை | பால காண்டம் சர்க்கம் - 75 (28)

Parashurama's censure | Bala-Kanda-Sarga-75 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: தசரதனை அலட்சியம் செய்து, ராமனிடம் வைஷ்ணதனுசில் நாணேற்றச் சொன்ன பரசுராமர்...

Dasharatha Rama and Parashurama

{பரசுராமர் ராமனிடம்}, "தாசரதி {தசரதனின் மகனான} ராமா, வீரா, உன் வீரியம் அற்புதமெனக் கேள்விப்பட்டேன். {சைவ} தனுசை முறித்தது முதலிய காரியங்களையும் முழுமையாக நான் கேட்டேன்.(1) அவ்வகையில், தனுசை {வில்லை} முறித்தது, அற்புதமானதும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதுமாகும். அதைக் கேள்விப்பட்டதும் நான் மற்றொரு மேலான சுபதனுவை எடுத்து வந்தேன்.(2) கோரஸங்காசத்துடன் கூடியதும் {அதிபயங்கரமானதும்}, ஜமதக்னியிடம் இருந்து பெற்றதுமான இந்தத் தனு மகத்தானதாகும். இதில் சரத்தை {கணையைப்} பொருத்தி இழுத்து உன் பலத்தைக் காட்டுவாயாக.(3) அப்போது நான், இந்தத் தனுசை எடுத்து ஏவும் உன் பலத்தைக் கண்டு கொள்வேன். பிறகு நான், வீரத்திற்குத் தகுந்த துவந்த யுத்தத்தை உனக்குக் கொடுப்பேன் {உன்னுடன் போரிடுவேன்}" என்றார் {பரசுராமர்}.(4)

அப்போது அவரது வசனத்தைக் கேட்ட தசரத ராஜன், துயருற்ற முகத்துடன், தீனனாக {பரிதாபத்திற்குரியவனாகக்} கைகளைக் கூப்பிக் கொண்டு, இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(5) "க்ஷத்திரியர்களின் மீது கொண்ட கோபம் தணிந்தீர். மஹாதபஸ்வியான பிராமணராகவும் இருக்கின்றீர். பாலர்களான என் புத்திரர்களுக்கு அபயம் அளிப்பதே {என் மகன்களின் பயத்தைப் போக்குவதே} உமக்குத் தகும்.(6) {வேத} அத்தியாயங்கள், விரதங்கள் ஆகியவற்றில் ஈடுபடும் பார்க்கவ குலத்தில் பிறந்த நீர், சஸ்திரங்களைக் கைவிடுவதாக சஹஸ்ராக்ஷனிடம் {ஆயிரங்கண் இந்திரனிடம்} பிரதிஜ்ஞை செய்தீர்.(7) அத்தகைய நீர், தர்மத்தில் அர்ப்பணிப்புடன் கூடியவராக, காசியபருக்கு வசுந்தரையை {பூமியை} தத்தம் செய்து, வனத்திற்குச் சென்று, மஹேந்திரத்தை {மகேந்திரமலையை} வசிப்பிடமாக்கிக் கொண்டீர்[1].(8) மஹாமுனியே, நீர் எங்களைச் சர்வநாசம் செய்யவே திரும்ப வந்திருக்கிறீர். {இதன் மூலம்} இராமனை மட்டுமே அழித்தாலும், நாங்கள் அனைவரும் ஜீவித்திருக்க மாட்டோம்" {என்றான் தசரதன்}.(9)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிராமணர்கள் சாந்தமாக இருக்க வேண்டும். ஒரு காலத்தில் அது குலைக்கப்பட்டாலும், இரக்கமற்ற க்ஷத்திரியர்களை அழித்துச் சாந்தத்தை அடைந்தீர். இவ்வாறு உமது சீற்றம் தணிந்தது. அமைதியாக தவம் செய்து, உயர்ந்த அருளையும் பெற்றீர். எல்லாம் அறிந்த, முதிர்ந்த பிராமணராக இருந்தும், இப்போது சிறுவர்களுடன் மோதி உமது சாந்தியை மீண்டும் குலைத்துக் கொள்ள விரும்புகிறீர். "சஸ்திரசந்நியாசம் கொள்கிறேன் {ஆயுதம் எடுப்பதைக் கைவிடுகிறேன்}" என்று செய்த உறுதிமொழியை நீர் மீறலாமா? காசியபருக்கு பூமியை தானமளித்துவிட்டு இங்கே நீர் திரும்பிவரலாமா? என்பது இங்கே மறைமுகப் பொருள்" என்றிருக்கிறது


தசரதன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது, பிரதாபவானான ஜாமதக்னேயர் {ஜமதக்னியின் மகனான பரசுராமர்}, அந்த வாக்கியத்தை அலட்சியம் செய்து, ராமனிடம் நேரடியாகச் சொன்னார்:(10) "சிரேஷ்டமானவையும், திவ்யமானவையும் {சிறந்தவையும், தெய்வீகமானவையும்}, உலகத்தால் பூஜிக்கப்படுபவையும், திடமானவையும், பலமானவையும், முக்கியமானவையுமான இரண்டு தனுக்கள் விஷ்வகர்மனால் நன்றாக அமைக்கப்பட்டனவாகும்.(11) நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, காகுத்ஸ்தா, எதை நீ பங்கம் செய்தாயோ, அது போரிடும் திரையம்பகன் {சிவன்}, திரிபுரத்தை அழிப்பதற்காக ஸுரர்களால் {தேவர்களால்} கொடுக்கப்பட்டது.(12)
அழிவற்றதான இந்த இரண்டாவது {வில்}, ஸுரோத்தமர்களால் விஷ்ணுவுக்குத் தத்தம் செய்யப்பட்டது. காகுத்ஸ்தா, ராமா, பரபுர ஜயத்தை {அடுத்தவர் / பகைவர் நகரங்களைக் கைப்பற்றுவதில் வெற்றியைக்} கொடுத்த வைஷ்ணவ தனுவான இது, {மிதிலையில் நீ முறித்த} ரௌத்ரதனுசுக்கு சமமான சாரம் கொண்டதாகும்.(13,14அ)

ஒரு காலத்தில் சர்வ தேவர்களும், சிதிகண்டன் {சிவன்}, விஷ்ணு ஆகியோரின் பலாபலத்தை {பலத்தையும், பலவீனத்தையும்} அறிந்து கொள்ளப் பிதாமஹனிடம் {பிரம்மனிடம்} கேட்டுக் கொண்டிருந்தனர்[2]. சத்தியவாதிகளில் சிறந்த பிதாமஹன், தேவர்களின் நோக்கத்தை உணர்ந்து, அவர்களுக்கிடையில் {சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில்} விரோதத்தை உண்டாக்கத் தொடங்கினான்[3].(14ஆ-16அ) விரோதத்தில் பரஸ்பரம் ஜயமடைய விரும்பிய சிதிகண்டனும், விஷ்ணுவும், மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் மஹாயுத்தம் செய்தனர்.(16ஆ,17அ) அப்போது உண்டான {விஷ்ணுவின்} ஹுங்காரத்தில், பயங்கரப் பராக்கிரமம் வாய்ந்த சைவதனு கொட்டாவி விட்டது {சிதிலமடைந்தது}. திரிலோசனனான {முக்கண்ணனான} மஹாதேவனும் ஸ்தம்பித்து நின்றான்.(17ஆ,18அ) தேவர்களால் கூட்டப்பட்ட ரிஷி சங்கங்களும், சாரணர்களும் அவ்விருவரிடம் {சிவனிடமும், விஷ்ணுவிடமும்} வேண்டினர். பிறகு அந்த ஸுரோத்தமர்கள் {சிவனும், விஷ்ணுவும்} தணிவடைந்து, நட்புறவை அடைந்தனர்.(18ஆ,19அ) {விஷ்ணுவின்} பராக்கிரமத்தால் சிதிலமடைந்த அந்தச் சைவ தனுவைக் கண்டு ரிஷிகணங்களும், தேவர்களும் விஷ்ணுவே அதிகன் {அதிக பலம் வாய்ந்தவன்} என்று கருதினர்.(19ஆ,20அ)

[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தேவதைகள் ப்ரஹ்மாவைப் பார்த்து 'முன்பு வராஹாதி ரூபங்களால் பூமியையெடுக்கை முதலிய காரியங்களை விஷ்ணு செய்தது பற்றி அவ்விஷ்ணுவே அதிகனென்று நீ புகழ்ந்தரைக்க, நாங்கள் கேட்டிருக்கின்றனம். இப்பொழுது சிவன் விஷ்ணுவைக் கேவலம் ஒரு ஸாதநமாகச் செய்து கொண்டு தானே முக்கியனாகி த்ரிபுரங்களையுங் கொளுத்தினதைக் கண்டால் சிவனே அதிகனென்று எங்களுக்குத் தோன்றுகின்றது. ஆகையால் இவ்விருவரிலும் மேலானவன் யாவன்?" என்று வினாவினரென்றுத் தெரிகின்று" என்றிருக்கிறது.

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ர்மதேவன் விஷ்ணுவைப் பார்த்து 'த்ரிபுரஜயத்தில் சிவன்தானே வில்லாளியாயிருந்தபடியால் அந்த ஜயத்தில் தானே முக்கியனென்றும், நீ ஸாதநமாக மாத்திரமிருந்தாயாகையால் அமுக்கியனென்றும் எனக்குச் சொன்னான்' என்றுரைத்து அத்தேவனுக்குச் சிவனிடத்தில் விரோதத்தையும், சிவனைப் பார்த்து 'விஷ்ணு, உனது பாணத்தின் நுனியில் தானிருந்தது பற்றி, நானே த்ரிபுரங்களை ஜயித்தேனென்றும் சிவனல்லவென்றும் என்னுடன் சொன்னான்' என்று மொழிந்து அச்சிவனுக்கு விஷ்ணுவிடத்தில் விரோதத்தையும் விளைவித்தானென்றுணர்க" என்றிருக்கிறது.

இதனால் தூண்டப்பட்டவனும், பெரும் புகழ்பெற்றவனுமான ருத்திரன், விதேஹர்களில் ராஜரிஷியான தேவராதனிடம், கணையுடன் கூடிய அந்த நீண்ட தனுவை {சைவதனுசை} ஒப்படைத்தான்[4].(20ஆ,21அ) இராமா, அந்த விஷ்ணு, பரபுரஜயம் {பகைநகரை வெற்றி} கொண்ட இந்த வைஷ்ண தனுவை, பார்க்கவரான ரிசீகருக்கு நம்பத்தகுந்த பெரும் நம்பிக்கையுடன் கொடுத்தான்.(21ஆ,22அ) மஹாதேஜஸ்வியான ரிசீகரும், ஒப்பற்ற செயல்களைச் செய்தவரும், தமது புத்திரரும், மஹாத்மாவும், என் பிதாவுமான {தந்தையுமான} ஜமதக்னிக்கு, இந்த திவ்யத்தை {தெய்வீக வில்லை} தத்தம் செய்தார்.(22ஆ,23அ) நற்புத்தியற்ற அர்ஜுனன் {கார்த்தவீரியார்ஜுனன்}, தபோபலமிக்கவரும், சஸ்திரங்களை {ஆயுதங்களைத்} துறந்தவருமான என் பிதாவைக் கொன்றான்.(23ஆ,24அ)

[4] தேசிராஜுஹனுமந்தாவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சிவனுக்குச் சொந்தமான இந்தப் பெரிய வில்லானது, சதியின் தந்தையும், சிவனின் மாமனாருமான தக்ஷப்ரஜாபதியின் வேள்வி அழிந்த பிறகு கொடுக்கப்பட்டதாக 1:66:9ல் {இராமாயணம், பாலகாண்டம் 66ம் சர்க்கம், 9ம் சுலோகத்தில்} சொல்லப்படுகிறது. தக்ஷனின் இந்த வேள்வி பல பிரச்சனைகளின் கலவையாகத் திகழ்கிறது. சிவன், ஒரு தேவனாகவோ, தக்ஷனின் மருமகனாகவோ அந்த வேள்விக்கு அழைக்கப்படவில்லை. {இதனால்} சிவனின் மனைவியான சதி, தன் தந்தையின் வேள்வியில் தீக்குளிக்கிறாள். வீரபத்திரனும், சிவனின் தொண்டர்கள் பிறரும் அந்த வேள்வியை அழிக்கிறார்கள். இந்தச் சிவ கேசவ யுத்தமும் நிகழ்கிறது. ஒரு தனி நபரின் விருப்பமின்மையானது, புனிதமான திருமணத்தையும் கெடுத்துவிடும் என்பதையே இவையாவும் காட்டுகின்றன. தக்ஷன் தன் மகளான சதியை சிவனுக்குக் கொடுப்பதில் விருப்பமில்லாமல் இருந்தான்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "தக்ஷயஜ்ஞத்தின் முடிவில் சிவன் தநுஸ்ஸைத் தேவர்களுக்குக் கொடுத்தானென்று முன்பு சொல்லப்பட்டது. சிவன் வில்லைத் தேவராதனிடம் கொடுத்தானென்று இவ்விடத்திற் சொல்லப்பட்டது. விச்வாமித்ராச்ரமத்தில் ரிஷிகள் 'தேவதைகள் ஜநகனுக்கு யாகத்திற் கொடுத்தன்' என்று மொழிந்தனர். சீதை, அநஸூயையுடன் வருணன் அந்த வில்லை ஜநகனுக்குக் கொடுத்தானென்று சொல்லினள். இவையெல்லாம் ஒன்றோடொன்று விருத்தமாயிருக்கின்றன. இவைக்கு ஸங்கதியெப்படியெனில், தக்ஷ யாகத்தின் முடிவில் சிவன் கோபத்தோடு அவ்வில்லைத் தேவர்களுக்குக் கொடுக்க முயலுகையில், அக்கோபத்தைக் கண்டு தேவதைகள் அவனருற் சென்று அவ்வில்லை வாங்கிக் கொள்ளப் பயந்து, அதைத் தமக்குப் பதிலாகத் தேவராதனிடங் கொடுக்கும்படி ப்ரார்த்திக்க, சிவன் அதைத் தேவராதனிடம் வைத்தனன். ஆனது பற்றியே சிவன் அதைத் தேவர்களுக்குக் கொடுத்தானென்றும், தேவராதனுக்குக் கொடுத்தானென்றும் இரண்டும் பொருந்துகின்றன. சிவன் தேவராதனிடம் வைத்தனென்கையால் அவனுக்குத் தேவதைகள் சொந்தமாகக் கொடாமல் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்தனரென்று தெரிகின்றது. பின்பு ஜநகன் யாகத்தினால் தேவதைகளைக் களிக்கச் செய்து, தன்னிடம் வைத்திருக்கச் சொல்லிக் கொடுத்த வில்லைச் சொந்தமாகத் தனக்குக் கொடுக்கும்படி ப்ரார்த்திக்க, தேவர்களும் அதை அவனுக்குச் சொந்தமாகக் கொடுத்துவிட்டனர்" என்றிருக்கிறது.

இராமா, மாற்றற்ற ரூபம் கொண்டதும், பயங்கரமானதுமான பிதாவின் வதத்தைக் கேட்டு சீற்றமடைந்த நான், பிறந்து கொண்டேயிருந்த க்ஷத்திரியர்களை அநேக காலம் அழித்து, பிருத்வி முழுவதையும் என் வசப்படுத்தி, ஒரு யஜ்ஞத்தின் {வேள்வியில்} முடிவில், மஹாத்மாவும், புண்ணியக் கர்மங்களைச் செய்தவருமான காசியபருக்குத் அதை தக்ஷிணையாகக் கொடுத்து, தபோபலத்துடன் மஹேந்திர நிலையத்தில் இருக்கிறேன் {மகேந்திர மலையில் வசித்து வருகிறேன்}.(24ஆ-26அ) இராமா, அந்தத் தனுசை முறித்ததைக் கேட்டதால், இங்கே நான் விரைந்து வந்தேன். {முன்பு} க்ஷத்திரிய தர்மத்தை முன்னிட்டதைப் போல் {சிவதனுசைத் தரித்தது போல} பித்ருபைதாமஹர்களுக்குரியதும் {தந்தை, பாட்டன் வழி வந்ததும்}, மஹத்தானதும், உத்தமமானதுமான {இந்த} வைஷ்ணவ தனுவை நீ எடுப்பாயாக[5].(26ஆ,27) காகுத்ஸ்தா, பரபுரஜயம் தந்த சரத்துடன் {பகைவரின் நகரங்களை வெற்றிகொண்ட கணையுடன்} கூடிய இந்தச் சிறந்த தனுவை ஏற்கும் சக்தனாக நீ இருந்தால், உனக்கு நான் துவந்தம் தருவேன்" {உன்னுடன் நான் போரிடுவேன்", என்றார் பரசுராமர்}.(28)

[5] நரசிம்மாசாரியர் பதிப்பில், "தகப்பன் பாட்டன் வரிசையிலிருந்து க்ரமமாக எனக்கு வந்ததும், அவ்விஷ்ணுதேவன் வைத்துக்கொண்டிருந்ததும், பெருமை பொருந்தியதுமாகிய அவ்வில் இதோ இருக்கின்றது. நீ க்ஷத்ரியனாயிருப்பவன். ப்ராஹ்மணனைப்போல் என் கையிலாகாதென்று உரையாமல், க்ஷத்ரிய தர்மத்தை முன்னிட்டுக்கொண்டு சிவனது வில்லைப் போல் சிதிலமாகாமல் மிகுந்த வலிவுடைய இம்மேலான வில்லை வாங்கிக்கொள்வாயாக. விற்களனைத்திலும் உயர்ந்த இவ்வில்லில் நீ வல்லவனாயின், சத்ருபட்டணங்களைத் தொலைக்கவல்லதான ஒரு பாணத்தைத் தொடுப்பாயாக. காகுத்தனே! பிறகு உன் சக்தியை அறிந்து கொண்டு, உன்னுடன் தவந்தவயுத்தஞ் செய்கின்றேன்" என்றிருக்கிறது.

பாலகாண்டம் சர்க்கம் – 75ல் உள்ள சுலோகங்கள் : 28

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்