Monday, 29 November 2021

கோதானம் | பால காண்டம் சர்க்கம் - 72 (25)

Cow donation | Bala-Kanda-Sarga-72 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: பரதனுக்கும், சத்ருக்னனுக்கும் குசத்வஜன்களின் மகள்களைத் திருமணம் செய்ய முன்மொழிந்த விஷ்வாமித்ரர்; ஜனகன் சம்மதித்தது; பசுக்களையும், செல்வங்களையும் கொடையளித்த தசரதன்...

Rama sita and sacred Cow

விஷ்வாமித்ர மஹாமுனிவர், வசிஷ்டரிடம் இவ்வாறு பேசிய வீர நிருபன் வைதேஹனிடம் {ஜனகனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னார்:(1) "நரபுங்கவா {மனிதர்களில் மேன்மையானவனே}, கற்பனைக்கெட்டாதவர்களும், அளவிடப்பட முடியாதவர்களுமான இக்ஷ்வாகுகுலத்தினருடனும், விதேஹ குலத்தினருடனும் ஒப்பிடத்தக்கவர்கள் எவரும் இல்லை.(2) இராஜாவே, சீதையும், ஊர்மிளையும் ராமலக்ஷ்மணர்களுக்குத் தகுந்தவர்கள். {இரு குலங்களுக்கு இடையிலான} இந்த தர்மசம்பந்தம் அழகிலும், செழிப்பிலும் {இவ்விரு குலங்களுக்கும்} பொருத்தமானதாக இருக்கிறது.(3)

நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே}, என்னால் சொல்லப்படும் வசனத்தையும் கேட்பாயாக. உன் தம்பியான இந்தக் குசத்வஜ ராஜனும் தர்மஜ்ஞனாக {தர்மங்களை அறிந்தவனாக} இருக்கிறான்.(4) இராஜாவே, நரசிரேஷ்டா, இந்த தர்மாத்வாவின் மகள்கள் இருவர் புவியில் ஒப்பற்ற ரூபம் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள். பத்தினி அர்த்தத்திற்காக அவர்களையும் கேட்கிறோம்.(5) இராஜாவே, மஹாத்மாக்களான குமாரன் பரதனுக்கும், மதிமிக்கவனான சத்ருக்னனுக்கும் அந்த மகள்களைக் கேட்கிறோம்.(6) தசரதனின் புத்திரர்கள் அனைவரும் நல்ல ரூபத்தையும் {வடிவத்தையும்}, யௌவனத்தையும் {இளமையையும்} உடையவர்களாகவும், லோகபாலர்களுக்கு இணையானவர்களாகவும், தேவதுல்யபராக்கிரமர்களாகவும் {தேவர்களைப் போன்ற பராக்கிரமம் பொருந்தியவர்களாகவும்} இருக்கிறார்கள்.(7) இராஜேந்திரா, இக்ஷ்வாகு குலமும், புண்ணியக் கர்மங்களைச் செய்த உன் குலமும் இந்த சம்பந்தத்தால் வலிமையும், மேன்மையும் அடையட்டும்" {என்றார் விஷ்வாமித்ரர்}.(8)

விஷ்வாமித்ரரின் சொற்களைக் கேட்ட ஜனகன், வசிஷ்டரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, கைகளைக் கூப்பியபடியே அந்த முனிபுங்கவர்களிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(9) "எது தகுந்ததோ அந்தக் குலசம்பந்தம், முனிபுங்கவர்களான உங்கள் இருவரின் ஆணையின் பேரில் ஏற்படுவதால், என் குலம் தன்யமடைந்தது {மேன்மையடைந்தது} எனக் கருதுகிறேன்.(10) அவ்வாறே ஆகட்டும். நீங்கள் மங்கலமாக இருப்பீராக. குசத்வஜனின் மகள்கள் இருவரும் சத்ருக்னபரதர்கள் இருவருக்கும் பத்தினிகளாகட்டும்.(11) மஹாமுனிவரே {விஷ்வாமித்ரரே}, மஹாபலவான்களான ராஜபுத்திரர்கள் நால்வரும், ஒரே நாளில் இந்த ராஜபுத்திரிகள் நால்வரின் கரங்களைப் பற்றட்டும்.(12) பிராமணரே, பிரஜாபதி பகனின் உத்தரப் பல்குனியில் {உத்தர நட்சத்திரம் கொண்ட நாளில் திருமணம்} பிற்பகலில் வைவாஹிகம் செய்வது உத்தமம் என்று பண்டிதர்கள் புகழ்கின்றனர்[1]" {என்றான் ஜனகன்}.(13)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சோதிட நோக்கில் இந்த நட்சத்திரத்தில் திருமணம் செய்வது குறித்து நிறைய உரைகள் இருக்கின்றன. "உத்தர திவசம்" என்ற சொல்லுக்குச் சிலர் சிறந்த நாள் என்றும் பொருள் கொள்கின்றனர். திருமணங்களுக்கு "ரோஹிணி, மிருகசீரிஷம், உத்தரம், சுவாதி ஆகிய நட்சத்திரங்கள் சிறந்தவை" என்று போதாயன சூத்திரம் சொல்கிறது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "உத்தர நட்சத்திரத்தின் தலைமை தேவன் பகன் ஆவான். அவன் திருமணம் மூலம் கிட்டும் மகிழ்ச்சிக்கும், செழிப்புக்கும் உரிய தேவன் ஆவான். இங்கே உத்தரம் என்று சொல்லப்படுவது பிற்பகலையும் குறிக்கும்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "உடன்பிறந்தவர்களுக்கு ஓர் யாண்டுக்குள் மணஞ்செய்யக் கூடாதென்று சோதிட நூல்கள் விதித்திருக்க, ஸ்ரீராமாதிகள் நால்வருக்கும் ஒரே வருஷத்தில் திருமஞ் செய்யலாகுமோவெனின்? மற்றும் பல ஜோதிட நூலில் உடன் பிறந்தார்களுக்கும் ஒரு தினத்திலே ஒரு லக்கினத்தில் விவாஹஞ்செய்யலாகுமென விதித்திருப்பதினால், ஒரு வருஷத்துக்குள் உடன் பிறந்தார்களுக்குத் தனித்தனித் திருமணஞ்செய்யலாகாதென்பது கருத்தே அன்றி, ஒரு தினத்தில் செய்யலாகுமென்பது கருத்தெனக் கொள்க" என்றிருக்கிறது.

ஜனகராஜன் இவ்வாறு அழகான சொற்களைச் சொல்லி மீண்டும் கரங்களைக் குவித்துக் கொண்டு அந்த முனிவரர்கள் இருவரிடமும் இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(14) "எனக்குப் பரம தர்ம காரியத்தைச் செய்தீர்கள். நான் என்றும் உங்கள் சிஷ்யனாக இருப்பேன். முனிபுங்கவர்களே, இந்த முக்கிய ஆசனங்களில் அமர்வீராக.(15) இது {மிதிலை} தசரதனுடையது என்பது போலவே, அயோத்யாபுரி எனதாகும். பிரபுத்வத்தில் சந்தேகமில்லை. இதற்குப் பொருந்த நீங்கள் நடப்பீராக[2]" {என்றான் ஜனகன்}.(16)

[2] நரசிம்மாசாரியரின் பதிப்பில், "நீங்கள் என் தம்பி குசத்வஜனுடையவும் என்னுடையவும் தசரதமஹாராஊனுடையவும் ஆகிய இம்மூவருடையவும் ஸிம்ஹாஸநங்களில் ஏறி வீற்றிருந்து எங்கள் மூவருடைய ராஜ்யத்தையுங் கைப்பற்றிப் பரிபாலித்து வருவீர்களாக. "தசரதனுடைய ராஜ்யத்தைக் கொடுக்க நீ ஆர்?" என்று கேட்க வேண்டாம். இந்த மிதிலாநகரம் எப்படித் தசரத மஹாராஜனுக்கு ஸ்வாதீநமோ, அப்படியே அயோத்யாபுரி எனக்கு ஸ்வாதீநம். ஆகையால் நான் தசரதனது ராஜ்யத்தையும் உங்களுக்குக் கொடுக்கத் தகும். ஆனது பற்றி இம்மூன்று ராஜ்யத்திலும் உங்களுக்கு ப்ரபுத்வம் உண்டென்பதற்கு ஸந்தேஹமில்லை. நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஸ்வாதீநர்களாயிருப்பவர்கள். நீங்கள் எல்லோரும் எங்களுக்கு ஹிதத்தை உபதேசித்து எங்களுக்குத் தகுந்தபடி எக்கார்யமாயினும் செய்து கொள்ளத் தகும்" என்றிருக்கிறது. தாதாசாரியரின் பதிப்பில், "தசரதசக்ரவர்த்திக்கு இம்மிதிலாநகரம் எவ்வாறுரிமையுள்ளதாயிற்றோ? அவ்வாறு அடியேனுக்கும், அயோத்தி மாநகருரிமையுள்ளதாயிற்று. ஆதலால், அடியேனுக்கும், தம்பி குசத்வஜனுக்கும், தசரதப் புரவலர் பெருமானுக்கும் நீயிரேவிதிப்பவர்களாதலால், எங்களுடைய மடங்கல் சுமந்த ஆதன மூன்றிலும் தேவர்கள் வீற்றிருந்து ஏவுதல் செய்மமின்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் ஆங்கிலப் பதிப்பில், "இந்த அற்புத இருக்கைகளில் அமர்வீராக. ஆட்சியில் என் ராஜ்ஜியத்திற்கும், தசரதனின் அயோத்திய நகருக்கு எந்த வேறுபாடும் இல்லை. எனவே, அனைத்தும் உரிய முறையில் நடைபெறும் வகையில் நீங்கள் செயல்படுவீராக" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரியின் ஆங்கிலப் பதிப்பில், "உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்ட இந்த இருக்கைகளுக்கு நீங்கள் தகுந்தவர்கள். என் நாடு மன்னன் தசரதனுடையதாகட்டும். என் அன்பும் அயோத்தியாபுரிக்கு நீள்கிறதுழ நான் உண்மையைச் சொல்கிறேன். புனிதமானவர்களே, தேவையானதைச் செய்வீராக" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "துறவிகளே, (உங்களுக்குச் சொந்தமான) இந்தச் சிறந்த அரியணைகளில் அமர்வீராக. இந்த நாடு எவ்வாறு தசரதனுடையதோ, அவ்வாறே அயோத்தியும் என்னுடையதாகும். தலைமைத்துவத்தில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். உங்களுக்குத் தகுந்த வகையில் நீங்கள் நடந்து கொள்வீராக" என்றிருக்கிறது.

வைதேஹ ஜனகன் {விதேஹ நாட்டு ஜனகன்}, இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போது ரகுநந்தனான ராஜ தசரதன் மகிழ்ச்சியடைந்தவனாக அந்த மஹீபதிக்கு {பூமியின் தலைவனான ஜனகனுக்கு} மறுமொழி கூறினான்:(17) "மிதிலேஷ்வரர்களும், சகோதரர்களுமான நீங்கள் இருவரும், அளவற்ற நற்குணங்கள் பொருந்தியவர்களாக இருக்கிறீர்கள். உங்களால் ரிஷிகளும், ராஜ சங்கத்தினரும் பூஜிக்கப்படுகின்றனர்.(18) பேரின்பம் அடைவீராக. நீங்கள் மங்கலமாக இருப்பீராக. எங்கள் ஆலயத்திற்கு நாங்கள் செல்கிறோம். சிராத்தகர்மங்களை {துணைச் சடங்குகளை} நான் விதிப்படி செய்வேன்" என்று சொன்னான் {தசரதன்}.(19)

அப்போது, பெரும்புகழ்பெற்றவனான ராஜா தசரதன், அந்த நரபதியின் {மனிதர்களின் தலைவனான ஜனகனின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, முனிவர்கள் இருவரையும் முன்னிட்டுக் கொண்டு புறப்பட்டுச் சென்றான்.(20) அந்த ராஜா {தசரதன்}, தன் நிலையத்திற்குச் சென்று முறைப்படி சிராத்தங்களைச் செய்து, அடுத்த விடியலில் எழுந்திருந்து உரிய நேரத்தில் உத்தமமான கோதானம் செய்தான்.(21)

நராதிபனான அந்த ராஜா {மனிதர்களின் தலைவனான தசரதன்} தன் புத்திரர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஒரு லக்ஷம் பசுக்களை தர்மத்துடன் பிராமணர்களுக்கு தத்தம் செய்தான் {கொடையளித்தான்}.(22) புருஷரிஷபனும், புத்ரவத்சலனுமான {மனிதர்களில் காளையும், மகன்களிடம் அன்பு கொண்டவனுமான} அந்த ரகுநந்தனன் {தசரதன்}, தன் புத்திரர்களுக்காக உத்தேசிக்கப்பட்ட கோதானத்தில், கொம்புகளில் பொன்கொப்பிகள் பூட்டப்பட்டவையும், நிரம்பியவையும் {பாலுடன் மடிகள் பெருத்தவையும்}, கன்றுகளுடன் கூடியவையும், {பால்கறப்பதற்கான} வெண்கலப் பாத்திரங்களுடன் கூடியவையுமான நான்கு லக்ஷம் பசுக்களைப் பலவிதக் கொடைகளுடன் {செல்வங்களுடன்} துவிஜர்களுக்கு {இருபிறப்பாளர்களுக்குக்} கொடையளித்தான்.(23,24) கோதானமளித்த பிறகு, சுதன்களால் {மகன்களால்} சூழப்பட்ட அந்த நிருபதி {தசரதன்}, லோகபாலர்களால் சூழப்பட்ட சௌம்யமான பிரஜாபதியை {பிரம்மனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(25)

பாலகாண்டம் சர்க்கம் – 72ல் உள்ள சுலோகங்கள் : 25

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை