Arrival of envoys | Bala-Kanda-Sarga-68 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனகன் அனுப்பிய செய்தியை அறிந்த தசரதன்; அமைச்சர்களுடன் மிதிலை செல்லத் தீர்மானித்தது...
ஜனகனால் தெளிவாக ஆணையிடப்பட்ட அந்தத் தூதர்கள், தங்கள் மார்க்கத்தில் {வழியில்} மூன்று ராத்திரிகள் தங்கினர். அவர்கள் களைத்துப் போன தங்கள் வாகனங்களுடன் {குதிரைகளுடன்} அயோத்தியாபுரிக்குள் பிரவேசித்தனர்.(1) ராஜவசனத்தின் {தசரதனின் அனுமதியின்} பேரில் அந்த {தசரத} ராஜனின் வசிப்பிடத்திற்குள் அவர்கள் பிரவேசித்தபோது, தெய்வீக மினுமினுப்புடன் கூடியவனும், விருத்தனும் {முதிர்ந்தவனும்}, நிருபனுமான தசரதனைக் கண்டனர்[1].(2)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில் இதற்கு முன்பு, "அவர்கள் அங்ஙனம் அந்தப் பட்டணஞ் சேர்ந்து அங்கு அரசன் மாளிகைக்குச் சென்று அவ்விடமிருக்கும் வாசற்காப்பவர்களை நோக்கி, "நாங்கள் ஜநக மஹாராஜனது தூதர்கள். இதை உங்களரசனுக்கு விரைவாகத் தெரிவியுங்கோள்" என்றுரைத்து நிற்க, அந்த த்வாரபாலகர்களும் தசரத மன்னவனுக்கு அவர்கள் வந்திருப்பதைத் தெரிவித்தனர். தூதர்கள் தம்மை ஜநக மஹாராஜன் அனுப்பினதாகச் சொல்லக் கேட்டுத் தசரதசக்ரவர்த்தி அவர்களை அழைத்துக் கொண்டு வரக் கட்டளையிட்டனன். அந்தத் தூதர்களும் வாசற்காப்பவர்களைப் பின்பற்றிச் சென்று அரசன் மாளிகைக்குப் போய்ச் சேர்ந்து அங்குத் தேவதைப் போல் விளங்குபவனும், வயது சென்றவனுமாகிய தசரத வேந்தனைக் கண்டனர்" என்றிருக்கிறது.
பதற்றம் நீங்கிய அந்தத் தூதர்கள் அனைவரும், தங்கள் கைகளைக் குவித்து அந்த ராஜனிடம் மதுரமான சொற்களையும், இணக்கமான வாக்கியங்களையும் சொன்னார்கள்[2]:(3) "மஹாராஜாவே, அக்னிஹோத்ரங்களில் எப்போதும் ஈடுபடுபவனான உன்னையும், உன்னுடைய உபாத்யாயர்களையும் {ஆசிரியர்களையும்}, புரோஹிதர்களையும், நீ உனக்கு முன்னிட்டுச் செல்பவர்களையும் {குடிமக்களையும்}, உன் நல்வாழ்வையும், குறைவற்ற உன் செழிப்பையும் மிதிலையின் ஜனக ராஜா மதுரமான நட்பு மொழியில் மீண்டும் மீண்டும் குசலம் {நலம்} விசாரிக்கிறான்.(4,5)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தசரதன், கைகேயியின் சூழ்ச்சியில் அகப்பட்டதால் அவனை மூடனென மதிப்பிட முடியாது. அஃது அவர்களது குடும்பத்திற்குள்ளான பனிப்போர். அவன் தன் சாதனைகளுக்காகப் பிரபலமாக இருந்தவன், அவன் தேவர்களுக்காகவும் போர் புரிந்திருக்கிறான். வால்மீகி இவை குறித்து விவரிக்கவில்லையெனினும், மற்ற கதைகளில் அவற்றைக் குறித்து அதிகம் சொல்லப்படுகிறது. இராமனின் துணிவு, துடுக்கு, வீரம் ஆகியவை சுட்டிக்காட்டப்படும்போதெல்லாம் தசரதனின் மகன் {தாசரதி} என்றே அவன் குறிப்பிடப்படுகிறான். இவ்வளவு சக்தி வாய்ந்த ஒருவனை எப்படி எதிர்கொள்வது என்பதை அறியாத அந்தத் தூதர்களின் பதற்றம் அவனைக் கண்டதும் நீங்கியது என இந்த வாக்கியத்தில் சொல்லப்படுகிறது" என்றிருக்கிறது.
கலங்காமல் குசலம் விசாரிக்கும் மிதிலாதிபனான வைதேஹன் {ஜனகன்}, கௌசிகரின் {விஷ்வாமித்ரரின்} அனுமதியுடன் உன்னிடம் இந்த வாக்கியத்தைச் சொல்கிறான்:(6) "என் ஆத்மஜை வீரியசுல்கமாகப் பூர்வத்தில் {என் மகள் சீதை வீரத்திற்கான கொடையாக முன்னர் என்னால்} பிரதிஜ்ஞை செய்யப்பட்டதும், வீரியமற்ற ராஜாக்கள் கோபமடைந்ததும், அவர்கள் புறமுதுகிட்டதும் நன்கறியப்பட்டதே.(7) இராஜாவே, விஷ்வாமித்ரரை முன்னிட்டு எதேச்சையாக {தற்செயலாக மிதிலை} வந்தவனும், வீரியமிக்கவனுமான உன் புத்திரன் அத்தகைய என் மகளை வென்றான்.(8) மஹாபாஹுவே {பெருந்தோள்களைக் கொண்ட தசரதா}, மஹாத்மாவான ராமன், மஹாஜனசபையில் திவ்யமான தனு ரத்தினத்தின் மத்தியை பங்கம் செய்தான் {மக்கள் கூட்டம் நிறைந்த சபையில் சிறந்த தெய்வீக வில்லை நடுவில் முறித்தான்}.(9)
வீரியசுல்கமான சீதையை அந்த மஹாத்மாவுக்கே நான் கொடுக்க வேண்டும். என் பிரதிஜ்ஞையை நான் காக்க விரும்புகிறேன். இதை அனுமதிப்பதே உனக்குத் தகும்.(10) மஹாராஜாவே, உபாத்யாயர்கள், புரோஹிதர்களை முன்னிட்டுக் கொண்டு சீக்கிரம் வருவாயாக. நீ மங்கலமாக இருப்பாயாக. இராகவர்களைக் காண்பதே உனக்குத் தகும்.(11) இராஜேந்திரா, என் பிரதிஜ்ஞையை நிவர்த்தி செய்வதே {நிறைவேற்றுவதே} உனக்குத் தகும். அவ்வகையில் நீ உன் புத்திரனைக் கண்டு மகிழ்ச்சி அடைவாய்" {என்று உனக்குச் சொல்லி அனுப்பினான் ஜனகன்}.(12) விஷ்வாமித்ரரின் அனுமதியின் பேரிலும், சதானந்தரின் ஆலோசனையின் பேரிலும் அந்த விதேஹாதிபதி இந்த மதுரமான வாக்கியத்தைச் சொல்லி அனுப்பினான்" {என்றனர் தூதர்கள்}.(13)
இராஜா {தசரதன்}, தூதர்களின் வாக்கியத்தைக் கேட்டுப் பரம மகிழ்ச்சியடைந்து வசிஷ்டரிடமும், வாமதேவரிடமும், மந்திரிகளிடமும் இவ்வாறு சொன்னான்:(14) "கௌசல்யையின் ஆனந்தத்தை அதிகரிப்பவன் {ராமன்}, குசிகபுத்திரரால் காக்கப்பட்டு, தம்பி லக்ஷ்மணனுடன் சேர்ந்து விதேஹத்தில் {விதேஹ நாட்டில்} வசித்து வருகிறான்.(15) காகுத்ஸ்தனின் வீரியத்தைக் கண்டவனும், மஹாத்மாவுமான ஜனகன், தன் மகளை {சீதையை மணமகளாக} ராகவனுக்கு {ராமனுக்குக்} கொடுக்க விரும்புகிறான்.(16) மஹாத்மா ஜனகன் சொன்ன நிகழ்வு உங்களுக்குப் பிடித்திருந்தால், காலத்தைக் கடத்தாமல் சீக்கிரமாக அந்த நகருக்கு {மிதிலாபுரிக்குச்} செல்வோம்" {என்றான் தசரதன்}.(17)
மஹாரிஷிகளுடன் கூடிய மந்திரிகள் அனைவரும், "இது நல்லது" என்றனர். மகிழ்ச்சியடைந்த {தசரத} ராஜாவும், "நாளை யாத்திரை செய்வோம் {பயணிப்போம்}" என்று தன் மந்திரிகளிடம் சொன்னான்.(18) சர்வ குணங்களையும் கொடையாகக் கொண்ட {ஜனகனின்} மந்திரிகள், நரேந்திரனின் {தசரதனின்} விருந்தோம்பலைப் பெற்று பரம மகிழ்ச்சியுடன் ராத்திரி முழுவதும் அங்கே {அயோத்தியில்} வசித்திருந்தனர்.(19)
பாலகாண்டம் சர்க்கம் – 68ல் உள்ள சுலோகங்கள் : 19
Previous | | Sanskrit | | English | | Next |